ஏமாற்றாதே ஏமாறாதே!

'தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரில் இணைய ஆயத்தமில்லை' என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறிய விடயமானது மேலும் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக அமைகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது பல தமிழ் அரசியல் கட்சிகளின் கோர்வையாகும்.கட்சிரீதியாக பல வேறுபட்ட கருத்துக்கள் நிலவலாம். இருப்பினும்,தமிழரின் எதிர்கால தேசிய நலன்களை நோக்கி நகருவதையே இலக்காக கொண்ட இக்கோர்வைக்கட்சிகள் வேறுபாடுகளை இரண்டாம் பட்சமாக தள்ளிவைத்து விட்டு ஓர் அணியின்கீழ் இணைந்தன. இந்த இணைவு தமிழ்மக்கள் மத்தியில் பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு, தமிழ்மக்கள் ஏகமனதாகவும் ஏற்றுக்கொண்டு வெற்றிபெற வைத்தனர்.

ஒரு கோர்வையில் தமிழ் அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்த போதும், தேர்தல் காலங்களில் அந்தக் கோர்வையினுள் 'கடிபாடு' இருந்தன என்பதற்கு மறுப்பில்லை. வேட்பாளர்களிடையே தனித்தனி முரண்பாடுகள், பிரதேச வேறுபாடுகள், சாதித்துவம், உட்கட்சிப் பேதங்கள், இப்படி ஏராளமாக இருந்தபோதிலும் தமிழ்மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தத்தமது விருப்பிற்கமைய வாக்களித்தார்கள். வழங்கப்பட்ட வாக்குகள் யாவும் சின்னத்திற்கு(வீடு) போடப்பட்டன. விருப்புவாக்குகளில் 'குத்துவெட்டுகளும்' முரண்பாடுகளும் இருந்தன.

தேர்தல் வெற்றிகளின் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் திசைமாறாமல் தேசியத்தை நோக்கிய நகர்விலே உறுதியாக இருந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பீடங்கள் இருந்தாலும் முற்று முழுதான முடிவை எடுக்கும் ஆளுமை தமிழீழ புலிகளிடமே இருந்தது. அதை எதிர்க்கமுடியாத சூழ்நிலையில் மௌனமாக தலைமைப்பீடம் இருந்தது. அப்போது தலைக்கு சுமைகளும் இல்லை. சர்ச்சைகளும் இல்லை.

அனைத்துமே 'பிரம்போடு இருக்கும் பெரியையாவிடம்' இருந்தது. இப்போது தலையை பிய்த்துக் கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்த போதிலும் தடம் மாறாமல் செல்ல வேண்டுமென்பதே அனைத்து தமிழ்மக்களின் எண்ணமாகும்.புளொட் தலைவர் சித்தார்த்தனின் கருத்தை நோக்குமிடத்து அடிப்படையில் தமிழ்மக்களின் தேசிய நலனில் அக்கறை இல்லை என்பது புலனாகிறது.

அதாவது, 'இனிமேல் ஆயுதப்போராட்டமில்லை' எனக்கூறியதும், வேறுவழியிலான தீர்வு எது என்று சொல்லப்படாமையானது சிங்களத்தினுள் தமிழரின் தேசிய வாதத்தை ஜீரணமடையவைக்கும் நிலையையே தெளிவாகக் காட்டுகிறது. இதன் வெளிப்பாடே தமிழினத்தின் முதல் எதிரியான மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிப்பது ஆகும்.

சித்தார்த்தனைப் பொறுத்தவரையில் ஏனையவரோடு ஒப்பிடுகையில் இலங்கை அரசியலின் யதார்த்த நிலைகளை மிக நீண்டகாலமாக(தர்மலிங்கம் பா.ம.உறுப்பினரின் மகன் என்ற வகையில்) அறிந்தும் புரிந்தும் கொண்டவராவார். அதனால் சிங்களத்தலைமைகள் நிச்சயம் ஏமாற்றும் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்தவர் என்ற அடிப்படையில் அதாவது மஹிந்த ராஜபக்ச காலை வாருவார் என தெரிந்திருந்தும் ஆதரவு கொடுக்க முனைவது பின்னணியில் சுயநலம் தொக்கி நிற்பதைக் காட்டுகிறது. அதற்கான ஒரு நொண்டிச்சாட்டாக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரின் கீழ் இணைய மறுப்பதாகும்.

தன்னையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றும் வித்தகர்கள் காலத்துக்கு காலம் நம்மவர்கள் மத்தியில் உருவாகுவது தமிழருக்கிட்ட சாபமாகும்.

எனவே, இப்போதும் காலம் போகவில்லை. முடிவை மாற்ற அவகாசமுண்டு. 'விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழும்' நிலைக்கு வராமல் சித்தார்த்தன் தமிழினத்திற்கு தேவை என்ற வகையில் தன்னைத்தானே சிங்களத்தின் கபடங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டும் .

'ஏமாற்றாதே ஏமாறாதே'

மலையூர் பண்ணாகத்தான்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment