கூட்டமைப்பின் தீர்மானத்தில் இந்தியத் தலையீடு இருக்குமா?


"சபாஷ்! சரியான போட்டி" எனக் கூறுமளவுக்கு வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஆனாலும், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் இந்தியாவின் தலையீடுதான் இத்தேர்தல் பெறுபேறு என்ற தலைவிதியைத் தீர்மானிக்குமோ என்ற சாரப்பட அமைகிறது இந்த அரசியல் கண்ணோட்டம்.

ரங்க ஜெயசூரிய என்பவரால் எழுதப்பட்ட இந்த அரசியல் கண்ணோட்டம், "லக்பிம' பத்திரி கையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது.

இலங்கைக்குப் புதியதொரு ஜனாதிபதியைத் தெரிவுசெய்வது தொடர்பாகத் தேர்தலொன்றைச் சந்திக்க விருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் சர்வஜன வாக்குரிமையின் ஊடாக இதுவரையிலும் கிட்டாததொரு பலம் தமிழ் மக்களுக்குக் கிட்டியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களுக்கு உரிய வடமாகாணத்தில் மாத்திரம் கடந்த 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 70 ஆயிரமாகும். இதற்கு மேலதிகமாக நடந்து முடிந்த கிழக்கின் மாகாண சபைகளுக்கான தேர்தலோடு சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களுக் கமைய, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 82 ஆயிரமாகும். அவர்களுள் 5 இலட்சத்து 91 ஆயிரம் பேர் மேற்படி தேர்தலில் வாக்களித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பல்லினச் சமூகங்கள் வாழ்ந்தாலும் கூட, அவர்களுள் 40 வீதமானோர் தமிழர்களேயாவர். இவற்றுக்கமைய, இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்குகளின் பெறுமதி காரணமாக பெரும் பலத்தை ஈட்டிக் கொண்டுள்ளமை தெளிவான விடயமாகும்.

சுயநிர்ணய அரசியல் ஆனாலும், சர்வஜன வாக்குரிமையினூடாக உரிமையாகியுள்ள இப் பலத்தை வரலாறு முழுவதிலும் தமிழ் மக்கள் வீணடித்துக் கொண்டுள்ளனர் என கொள்ள முடிகிறது. சுதந்திரத்தின் பின்னர், சிலவேளை அதற்கு முன்னிருந்தே அதாவது 1932 இல் சர்வஜன வாக்குரிமை கிட்டிய காலகட்டத்திலிருந்தே தமிழர் அரசியல் செயற்பாடானது ஒரு விதத்திலான ஒரே இலக்கின் மீதே பதிந்திருந்துள்ளது. அதாவது சுயநிர்ணய இலக்கையே அது கொண்டிருந்தது.

1931 இல் தமிழ் பிரபு வர்க்கமானது, டொனமூர் யோசனையின் கீழ் இந் நாட்டில் முதற்தடவையாக நிறுவப்படவிருந்த அரச சபை ஒன்று தொடர்பான தேர்தலைப் பகிஷ்கரித்தது. சிறுபான்மை இனத் தலைவர்களின் உரிமைகள் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களச் சமுதாயத்தால் கபளீகரம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடுவது தொடர்பாக விசேடமானதொரு அரசியல் பிரதிநிதித்துவம் மீதான கோரிக்கையை முன்வைத்தே அவர்கள் அவ்விதம் நடந்து கொண்டனர்.

அன்றிலிருந்து இன்று வரையிலும் வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலானது சுயநிர்ணயம் மற்றும் சுய நிர்வாகத்தை வென்றெடுப்பது தொடர்பான இலக்கையே கொண்டிருந்துள்ளது. 1980 இன் தசாப்தத்திலிருந்து விடுதலைப் போராட்டத்தை தமது ஏகபோக உரிமையாக்கிக் கொண்டதோடு, அன்றிலிருந்தே தமிழர் தலைமைத்துவமானது, தமது அரசியல் உரிமைகளை, தமது வாழ்வாதார உரிமைகளுக்காகப் பரிமாற்றம் செய்து கொண்டது. அவ்விதமாகத் தமிழர்களது மையநிலை அரசியலின் ஓர் அத்தியாயம் விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர்ச்சியுடன் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் களமிறங்கியது, ஆயுத மேந்திய தமிழ் அரசியலின் முகமேயாகும். ஆனாலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தோல்வியை அடுத்துத் தமிழரின் மையநிலை அரசியலுக்குப் புத்துயிர் கிட்டியுள்ளது. இருந்தபோதிலும், விடுதலைப் புலிகள் அமைப்பு தோல்வியைத் தழுவி ஆறுமாத காலம் வரையில் கடந்து சென்றுள்ள இன்றைய நிலையிலும் கூட, தமிழர் அரசியலின் இப்புதிய தடம் தொடர்பாக இன்னமும் எந்தவொரு ஆயத்தமும் இல்லையென்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ் சமுதாயத்தினுள் அனைத்து மாற்றுக் கருத்தாளர்களையும் படுகொலை செய்துள்ள யுகமொன்றின் இறுதியிலும் கூட, மையநிலை தமிழர் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள தலைவிதி மிகத் தெளிவானதாகும்.

கூட்டமைப்புக்குள் குழப்பம்

இன்றைய அளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ((TNA))பிளவுகள் மற்றும் கருத்து மோதல்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அது, இயல்பானதே. விடுதலைக் கூட்டணி (TULF) ஈ.பி.ஆர்.எல்.எவ். (EPRLF) அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) மற்றும் ரெலோ (TELO) ஆகிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, விடுதலைப் புலிகள் அமைப்பினது உருவாக்கமாகும். விடுதலைப் புலிகள் அமைப்பு அற்றுப்போயுள்ள இன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் புதியதொரு அரசியல் செயற்பாட்டில் (Mission) தடம்பதிக்க வேண்டி நேரலாம். ஆனால், அதற்குப் பதிலாகக் கட்சியினுள் பிளவுகளையே இன்று காணமுடிகிறது. மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் பத்துப்பேரும் விடுதலைப்புலிகள் அமைப்பினால் உள்ளீர்த்துவிடப்பட்டவர்களேயாவர். அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உரிய எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்களல்லர்.

அண்மையில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது, கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகப் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவரான ஆர். சம்பந்தன் மற்றும் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கட்சி தொடர்ந்தும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரச் செயற்பாட்டை ஆழமாக அவதானிக்க வேண்டியுள்ளதெனவும் அதன் பின்னர் தீர்மானமொன்றுக்கு வரவேண்டியுள்ளதென்பதாகவும் வாதிட்டுக் கொண்டனர். ஆனாலும், கட்சியின் வேறொரு பிரிவினர், கட்சியின் தலைவர், இந்தியாவின் தீர்மானமொன்றுக்கு அமைய செயற்படுவது தொடர்பான கால அவகாசத்துக்காக மேற்கொள்ளும் தகிடுதத்தமே இதுவெனத் தெரிவித்துள்ளனர். ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அத்தரப்பானது ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி வேட்பாளரொருவரை நிறுத்தவேண்டியுள்ளதாக வாதிட்டது. அவ்விதம் வாதிட்டவர்களுள் அண்மையில் சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கமும் ஒருவராவார்.

மேலுமொரு பிரிவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டியுள்ளதெனவும் கருத்து வழங்கியுள்ளனர். இவர்களுள் முன்னிலை வகிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பம் ஆவார். எவ்வாறோ ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதென்பது தமிழர் அரசியல் தலைமைத்துவம் வரலாறு முழுமையிலும் நடத்திக் காட்டியுள்ளதொரு மடமைத்தனமாகும். ஆனால் இங்கு கவலைக்குரிய விடயமானது, சிலர் ஒருபோதும் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளாதிருப்பதேயாகும்.

நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் அண்மைய திகதியில் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது அச் செயலானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தாக்கத்தை ஏற்படுத்தக் காரணமாகியிருந்தது. அவரது தாய்க் கட்சியான ரெலோ அமைப்பு அவரது இந்த நடைமுறை தொடர்பாக விளக்கம் கோரி நின்றபோது, அதற்குப் பிரதிபலிப்பைத் தெரிவிக்கும் விதமாக அவர் அந்த அமைப்பின் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக் கொண்டுள்ளார்.

தெளிவற்ற நிலைமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இணக்கப்பாடொன்றை எவ்வாறு எட்டப்போகிறதென்பது தெளிவற்றதாகவே உள்ளது. இருந்தபோதிலும், கட்சியினுள் நிலவும் பலதரப்பட்ட கருத்தியல் வாதங்கள் அத்தகைய இணக்கப்பாடொன்று எட்டப்படுவதை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கி விட்டுள்ளன. வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர், கடந்த தினமொன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரை அரவணைத்து மகிழும் புகைப்படமொன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியின் முதற் கட்டப் பிரதிநிதிகள் என்ற ரீதியில், அன்றுவரையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்த மெனிக்பார்ம் அகதிமுகாம்களுக்குச் சென்று அவற்றைப் பார்வையிட்டனர். அத்தோடு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசு வழங்கியுள்ள வசதி வாய்ப்புகள் பற்றி அவர்கள் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் ஏற்படக்கூடிய உள்ளகப் பிளவுகள் தொடர்பான முன்னறிவிப்புக்கு ஒப்பானதே.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிஷோர் மற்றும் ஸ்ரீகாந்தா போன்றோர் அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா? என நாம் அவரிடம் வினவியபோது, ""நான் எப்போதுமே ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி நிற்பேன்'' என்பதாக கிஷோர் தெரிவித்தார்.

இவ்வளவுக்கும் சிவநாதன் கிஷோர், ஜெனரல் சரத் பொன்சேகாவினதும் நண்பரேயாவார். ஜெனரல் சரத் பொன்சேகா மட்டக்களப்பில் மேஜரொருவராக சேவையாற்றிய காலகட்டத்திலிருந்தே தாம் அவருடன் நட்புக் கொண்டிருந்ததாக சிவநாதன் கிஷோர் எம்மிடம் தெரிவித்தார். "பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா?'' என நாம் கிஷோவிடம் வினவியபோது, புதுடில்லி தலையிடலாம்"ஆனாலும் இருவருக்கு உதவிக் கரம் கொடுக்க இயலாதல்லவா'' என அவர் தெரிவித்தார்.இங்கு, ஜனதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ளும்போது, ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, நிலவும் பலதரப்பட்ட கருத்தியல் வாதங்களின் மத்தியில் ஏதேனும் ஒரு வெளிச்சக்தியின் அமையும் காத்திரமானதொரு தலையீடு இல்லாது கட்சியின் தலைமைத் துவத்தால் ஏனைய தரப்புகளை இணக்கப் பாடொன் றுக்கு இட்டுச் செல்வதென்பது சிரமத்துக்குரியது என்பதேயாகும்.

இந்தியச் சார்ப்புக்கான முக்கியத்துவம் இங்குதான் தலைதூக்குகிறது. புதுடில்லியானது ஏற்கனவே இந்நாட்டுத் தமிழர் அரசியல் நீரோட்டத்தினுள் தனது பலத்தை உறுதிப்படுத்தி வருகிறது. அதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பின் இழப்புக்குப் பின்னர் இலங்கையின் தமிழர் அரசியல் பாத்திரத்தினுள் பிரதான பாத்திரமொன்றை ஏற்று நடிப்பது தொடர்பாக புதுடில்லியானது தன்னைத் தயார்படுத்தி வருகிறது.

வடக்கின் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பாக, யுத்தத்தின் முடிவை அடுத்து இந்தியா அடிப்படையுதவி என்றவாறு நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. வடபுலத்து யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழுவினர் புல்மோட்டையில் அவசர மருத்துவச் சேவை மையமொன்றையும் இயங்கச் செய்திருந்தனர்.

இன்றைய அளவில் இந்திய இராணுவத்தின் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவொன்றும் வடபுலத்தில் செயற்படுகிறது. இவ்விதம் இந்தியாவானாது சலசலப்பெதையும் காட்டாது திரைக்குப் பின்னால் இருந்துகொண்டே தனது கருமத்தை நடத்திச் செல்கிறது. இது, நரசிம்மராவின் காலத்திலிருந்தே இந்தியாவினால் கொண்டு செல்லப்படும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் நிலவும் ஒருவிதத்திலான 'Soft Power' குறித்த சார்பு நிலையின் மேலுமொரு உதாரணமாகும்.

இன்றைய இந்தியாவென்பது, 1980இன் தசாப்தத்தில் போன்று பொருளாதாரத்தில் திறனற்றுப் போயிருந்த உள்ளகப் பொருளாதாரத்தில் கட்டுண்டிருந்த "பாஸ்கட் கேஸ்'பொருளாதாரத்தைக் கொண்டதல்ல.இந்தியப் பொருளாதாரமானது, 1992இல் அது திறந்துவிடப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து துரித வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இன்றைய அளவில் அது வேக வளர்ச்சியைக் காட்டி நிற்கும் உலகின் இரண்டாவது பொருளாதாரமாகும்.

சீனா இன்றைய அளவிலும் முன்னணி வகித்தாலும் கூட, இந்தியாவின் ஜனநாயகவாதம் மற்றும் தாராளமய ஜனநாயகவாத நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து பார்க்கும் சில ஆய்வாளர்கள், எதிர்காலத்தில் இந்தியாவானது பொருளதார ரீதியில் சீனாவை முந்திச் செல்லக்கூடுமென்பதாகவும் கூடக் கருத்து வழங்குகின் றனர்.

"வளர்த்த கடா" ஒழிப்பு
இந்தியாவானது இலங்கையின் யுத்தத்தில் நேரடித் தலையீடு என்றவாறு செயற்பட்டிருக்கவில்லைத்தான். ஆனாலும், இந்தியாவின் பச்சை விளக்குச் சமிஞ்ஞையொன்று இல்லாது இலங்கையின் இராணுவத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து விடும்விதமாக யுத்தம் புரிய முடிந்திருக்குமென வாதாடுவது கேலிக்குரியதாகும். அவ்விதம் செயற்பட்டுள்ள இந்தியா, தானே வளர்த்து உருவாக்கி உறுதுணையாக நின்று உதவியிருந்த "வளர்த்த கடாவை' இறுதியில் ஒழித்துவிட்டது. இன்று, இலங்கையின் தமிழர் அரசியலில் தீர்க்கமானதொரு மையமாகப் புதுடில்லி அமைந்துள்ளது. தற்போது அது, சிறுபான்மையினச் சமூகங்களின் உரிமைகள் தொடர்பான அரசியல் தீர்வொன்றை எட்டும் கருமம் தொடர்பாக இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுதிரட்டி வருகிறது.

இதற்கமைய, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் வசமிருக்கும் வாக்குப் பலத்தைச் சாதனமாக்கி அரசியல் தீர்வு தொடர்பாகப் பேரம் பேசும் வலுவொன்றாக அதைப் பயன்படுத்துவதற்கும் செயற்பட்டு வருகிறது.இச்செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழர் அரசியலின் தலையாய அரசியல் கட்சி) முக்கியமானதொரு கருவியாகிறது. இது, 2004ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 6 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்று 22 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

பதின் மூன்றாவது திருத்தம்

கடந்த சில வாரங்களுள் கொழும்பின் பிரதான அரசியல் நீரோட்டங்கள் இரண்டினதுமே பிரதிநிதிகள் தமிழ் மக்களது வாக்குகளைத் தம்சவப்படுத்திக் கொள்வதற்காக இந்தியா சென்று வந்துள்ளனர். அதன் முதற்கட்டமாக ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா புதுடில்லிக்குச் சென்று இந்திய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மற்றும் வெளியுறவுச் செயலாளரான நிருபமா ராவைச் சந்தித்துள்ளார். அங்கு, இந்தியப் பிரதிநிதிகளால் சரத் பொன்சேகாவிடம் எழுப்பப்பட்ட முக்கிய வினாவாகியிருந்தது, அவரால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வின் உரு எத்தகையது என்பதேயாகும். அதையடுத்து பஸில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் லலித் வீரதுங்க உள்ளடங்கிய ஜனாதிபதியின் உயர்மட்டக் குழு இந்தியா சென்று இந்தியத் தரப்போடு பேசியுள்ளது. அச்சமயம் இலங்கை ஜனாதிபதியின் உத்தேச அரசியல் தீர்வு யோசனை பற்றிய கருத்துகளே கோரப்பட்டுள்ளன. அதற்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதியின் ஆலோசகரான பஸில் ராஜபக்ஷ, "13 பிளஸ்' அரசியல் தீர்வொன்றே வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அதாவது, தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய நிறுவப்பட்டுள்ள மாகாணசபைகள் என்பதாகும். மேற்படி திருத்தத்தின் ஒருங்கிணைந்த பட்டியலுக்கு அமைந்த மத்திய அரசும் மாகாணசபைகளுமென்ற இரண்டுமே பொறுப்புக்கூறும் அதிகாரங்கள் உள்ளன. முக்கியமாக இது விடயத்தில் மேற்குறிப்பிட்ட பட்டியலின் சில அதிகாரங்கள் மட்டும் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுவது குறித்து அனைத்துக் கட்சி மாநாட்டுக் குழு மூலமாகவும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், ஜனாதிபதித் தேர்தல் பிரகடனப்படுத்தப்படும் வரையிலும் அது தொடர்பாக ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இங்கு முக்கியமானதொரு விடயத்தைக் குறிப்பிட்டாகவேண்டியுள்ளது. அதாவது, சிறுபான்மையினங்களின் பிரச்சினைகள் மற்றும் நல்லாட்சி தொடர்பாக இந்நாட்டில் பெரும்பாலும் தேர்தல்களின்போது மட்டுமே மேடைகளில் பேசப்படுவதால் அது, அந்தளவுக்குப் புதுமையானதோ ஆச்சரியப்படத்தக்கதோ அல்ல.எவ்வாறோ, ஜெனரல் சரத் பொன்சேகா அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் பயணிக்கவுள்ளார் என வாக்குறுதி வழங்கியுள்ளார். (ஆனாலும் அவருக்குக் காத்திரமான ஒத்துழைப்பை வழங்கிநிற்கும் கட்சியான ஜே.வி.பி. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு விரோதமானதாகும்.)அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, இந்திய அரசியல் தலைமைத்துவத்தைச் சந்தித்திருந்தார். அவரது அச்சந்திப்பின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பை வென்றெடுப்பதே முக்கிய நோக்காக இருந்துள்ளது.

இங்கு, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னணி வேட்பாளர்கள் இருவருக்குமே தமிழ் மக்களது வாக்குகள் இன்றியமையாதவை என்பது சந்தேகத்துக்கு இடமற்றதாகும். அந்த வாக்குகளை வென்றெடுக்க வேண்டுமானால், அவர்கள் உண்மையானதொரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டியுள்ளது. *

தமிழில் : சரா
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment