இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் நிலையில் பெரும் மாற்றம்

ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி

இலங்கை இழைத்த போர்க்குற்றம் குறித்து சூடு பறக்கப் பேசி வந்த அமெரிக்கா தற்போது தனது நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இலங்கை நமக்கு தேவை என்ற புதிய மந்திரத்தை வெளியுறவுக்கான செனட் கமிட்டியின் அறிக்கை உச்சரிப்பதால், இலங்கை குறித்த தனது நிலையை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து விட்டது அமெரிக்கா.
ஜனாதிபதி தேர்தலில் பெரும் சிக்கலை சந்தித்து வரும் ராஜபக்சவுக்கு அமெரிக்காவின் இந்த முடிவு பெரும் உற்சாகத்தையும், வலுவையும் அளிப்பதாக அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை படையினர் இழைத்த போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்கான கமிட்டி, இலங்கையை கடுமையாக குற்றம் சாட்டி முன்பு அறிக்கை சமர்ப்பித்தது.

குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய இருவரும் கடுமையான போர்க்குற்றங்களைப் புரி்ந்ததாக அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அவசரம் அவசரமாக ஒரு விசாரணைக் கமிட்டியை அறிவித்தார் மகிந்தா ராஜபக்ச. மேலும், சமீபத்தில் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்கு விஜயம் செய்தபோது அவரை விசாரிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கடைசி நிமிடத்தில் பொன்சேகாவை அமெரிக்கா விசாரிக்கவில்லை.

பொன்சேகாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு விட்டதாக கூட பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல கோத்தபாயவும் கூட அமெரிக்காவிடம் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டார் என்று கூறப்பட்டது.

இலங்கை நமக்கு அவசியம்.

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரி தலைமையிலான அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில், இலங்கை நமக்கு அவசியமான நாடு. அதன் மீதான போர்க்குற்றங்களை நாம் வலியுறுத்தினால், விசாரணைக்கு உட்படுத்தினால், கடுமையான நிலையை மேற்கொண்டால் அந்த நாட்டை நாம் இழக்க நேரிடும்.

தெற்காசியாவில் குறிப்பாக வங்கக் கடல் பிரதேசத்தில் இலங்கையின் தேவை நமக்கு முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தனது இலங்கை நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது அமெரிக்கா. அதாவது, போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் அப்படியே அமுக்கி விட அது தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

கெர்ரி தலைமையிலான வெளியுறவு விவகார கமிட்டி அமெரிக்க அரசிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை அடுத்த வாரம் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் அறிக்கையின் விபரத்தை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையுடன் தீவிரமான போதல் போக்கைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. தெற்காசியாவிலும், இந்தியப் பெருங்கடல் பிரதேசத்திலும் அமெரிக்காவின் நலன் பாதிக்கப்பட்டு விட இது காரணமாக அமைந்து விடக் கூடாது.

இலங்கையில் போர் முடிந்து விட்டது. மிகப் பெரிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகள் இயக்கத்தைத்தான் இலங்கைப் படையினர் அழித்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான உலகப் போரின் ஒரு பகுதியாகவே இதை கருத வேண்டும்.

ராஜபக்ச சகோதரர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ராஜபக்ச சகோதர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த நெருக்குதல்களையும் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பு ஒன்றினை அழித்துள்ளனர். எனவே இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

மனிதாபிமான விவகாரங்கள், கவலைகளை நாம் புறக்கணித்து விடத் தேவையில்லை. அவையும் முக்கியமானவைதான். இருப்பினும் போர்க்குற்றம் என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இலங்கையுடன் மோதுவது தேவையில்லை.

உண்மை நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசு நடத்திய விதம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் கூட, மீள்குடியேற்ற நடவடிக்கைள், சீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் அந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிர்மாணப் பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன. இதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையுடன் வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான உறவுகளையும் அமெரிக்கா வலுப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அமைதி நிரந்தரமாக அமெரிக்கா உதவ வேண்டும். அதற்கு மோதல் போக்கு சரியானதாக இருக்காது.

அமெரிக்கா - இலங்கை இடையிலான மோதல் முற்றினால், இலங்கை மேற்கத்திய நாடுகள் அல்லாத பிற நாடுகளை நோக்கிச் செல்லக் கூடும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.

இதற்கு மாறாக இலங்கையுடன் இணக்கமாக செயல்பட்டு, இலங்கையின் வளர்ச்சி, அமைதிக்கு ஆக்கபூர்வமாக அமெரிக்கா உதவ வேண்டும்.

அதேசமயத்தில் வடக்கு இலங்கை மக்கள் வளர்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ வழி செய்யவும் இலங்கைக்கு அமெரிக்கா வழி காட்டி உதவ வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி.

அமெரிக்க செனட் கமிட்டியின் இந்த அறிக்கை பெரும் திருப்பத்தையும், தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அரசு இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டால் இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலை அப்படியே தலைகீழாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா வலியுறுத்தாமல் அப்படியே விட்டு விடலாம்.

மேலும், அமெரிக்காவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் மீதான போக்கையும் அமெரிக்கா சற்று தீவிரப்படுத்தக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் அமெரிக்க இணைச்சர் ரொபர்ட் பிளேக் கொழும்பு செல்கிறார். தமிழர்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக இலங்கையை கண்டிப்புடன் வலியுறுத்தவே அவர் வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

ஆனால் தற்போதைய புதிய அறிக்கை மூலம் அவரது வருகை ஒரு சம்பிரதாய நிகழ்வாகவே இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், நிச்சயமாக அவர் ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டுச் செல்வார் என்றும் தெரிகிறது.

ராஜபக்ச தரப்பு உற்சாகம்.

அமெரிக்க செனட் கமிட்டியின் இந்த புதிய அறிக்கை ராஜபக்சவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாம்.

பொன்சேகா என்ற பலம் வாய்ந்த நபரை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்க செனட் கமிட்டியின் முடிவு தனது நிலை சரிதான் என்பதை ஒப்புக் கொள்வதாக அமையும் என ராஜபக்ச தரப்பு கருதுகிறது.

இது இலங்கை வாக்காளர்கள் மத்தியிலும் எதிரொலிக்கும், அது தனக்கு சாதகமாகவே முடியும் எனவும் ராஜபக்ச தரப்பு கருதுகிறது.

இந்த அறிக்கையை வைத்து பொன்சேகா சவால்களை சமாளிக்க முடியும் எனவும் ராஜபக்ச அரசு கருதுகிறதாம்.

Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment