கழிந்து போகும் துன்பியல் ஆண்டு


இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் முன்னெப் போதும் இல்லாத மிக மோசமான மிகக் கொடூரமான மிகக் கோரமான போரியல் பேரழிவுகளையும் நாசங்களையும் தந்த 2009 ஆம் ஆண்டு இன்றுடன் கழிகின்றது. வரலாற்றுப் பதிவில் ஈழத் தமிழர்களின் ஆன்மாவில் நிரந்தர வடுவை ஆழமாகப் பொறித்துவிட்டு நீங்கும் கொடூர ஆண்டாக இது நம்மை விட்டு இன்றுடன் விடை பெறுகின்றது.

அத்துடன் இரண்டாவது மிலேனியத்தின் முடிவின் பின் முதலாவது தசாப்தத்தின் கடைசி நாளும் இன்று தான். 2000 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம், இன்று 2009 டிசெம்பர் 31 ஆம் திகதி வரையான இந்த தசாப்த காலம் தமிழர்கள் வாழ்வில் ஏற்றமும் இறக் கமுமாக, நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் தந்து பயனற்றுக் கழிவது கண்கூடு.இந்தத் தசாப்த காலம் புதிய மிலேனியத்தோடு பிறந்தபோது தமிழர் தேசம் பெரும் போர் எனும் அக்கினிச் சுவாலைக்குள் சிக்குண்டு கிடந்தது. எனினும், உரிமைத் தாகம் என்ற உறுதியும், நம்பிக்கையும், திடசங்கற்பமும், பற்றுறு தியும் தமிழர்தம் மனதில் அன்று நிறைந்திருந்தன அந்தப் போரியல் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் கூட.
எனினும், அந்தத் தசாப்தத்தின் மூன்றாவது ஆண்டு பிறந்தபோது 2002 ஆம் ஆண்டின் தோற்றத்தோடு அமைதியுடன் கூடிய கௌரவ வாழ்வுக்கான வாய்ப்புக்கு, சாத்தியத்துக்கு ஒரு சிறிய ஒளிக்கீற்று, சமாதான முயற்சியின் பெயரால் தோற்றியபோது ஈழத் தமிழர்கள் நன்கு மகிழ்ந்துதான் போனார்கள்.

ஆனால் அந்த சமரச எத்தனங்களும், சமாதான முயற்சிகளும் 2006 மத்தியுடன் கானல்நீராக மாறியபோது ஈழத் தமிழர்களின் வாழ்வு பேரவலமாயிற்று; பேரழிவே முடிவு என்றாயிற்று. தமிழ்த் தேசியம் எழுச்சி கொண்டு, வளர்ச்சி பெற்று, சுயநிர்ணயத்துக்கான ஆயுதப் போராட்டமாக வடிவம் எடுத்த தமிழ் மக்களின் புரட்சிகரமான அரசியல் வரலாற்றை முற்றாகப் புரட்டிப்போட்டு, அடிமை வாழ்வே இனி சாசுவதம் என்ற நிலையை நிஜமாக்கி, யதார்த்தபூர்வமாக்கிவிட்டு எம்மை விட்டுப் போகிறது மிலேனியம் நூற்றாண்டின் முதலாவது தசாப்தத்தின் கடைசி ஆண்டு.

இந்தத் தசாப்தம் பிறந்தபோது தமிழர் தாயகம் பெரும் போர் என்ற கொடூர அக்கினிச் சுவாலைக்குள் சிக்குண்டு கிடந்த போதிலும், அந்த அனர்த்தங்களை எதிர்கொள்ளும் உறுதி அச்சமயம் தமிழர் தாயகத்துக்குத் திடமாகவே இருந்தது.

ஆனால் இன்று, அந்தத் தசாப்தத்தின் முடிவில் போரரக்கனின் கொடூரம் தன் கைவரிசையைக் காட்டி ஓய்ந்து விட்டது. யுத்தம் என்ற நாசகாரத் தீ தமிழர் தாயகம் முழுவதையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கிவிட்டு அணையத் தொடங்கிவிட்டது. அந்தக் கொடூர நெருப்பில் ஈழத் தமிழர்களின் உரிமை வாழ்வுக்கான உயிர்ப்பும், துடிப்பும், தளராத வேணவாவும், எழுச்சித் திறனும் கூடத் தீய்ந்து அடங்கி, நீறு பூத்துப் போயிருப்பதுதான் வேதனைக்குரிய மிகக் கவலைக்குரிய விடயமாகும்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். 2010 என்ற புத்தாண்டு நாளை பிறந்தாலும் தமிழர் தம் வாழ்வில் ஆண்டின் தைப்பிறப்பு இன்னும் 14 நாள்கள் கழித்து, தைப்பொங்கல் தினத்தன்றே வருகின்றது.

புதிய ஆண்டின் தை பிறக்கும் போதாவது வழி பிறக்காதா என்ற ஏக்கத்துடன், வழமைபோல வழிமேல் விழி வைத்துத் தமிழர்கள் காத்திருக்கின்றார்கள்.

அதுவும் முன்னெப்போதும் வரலாற்றில் சந்தித்தேயிராத பேரழிவுகளையும், போரழிவுகளையும், பேரவலங்களையும் சந்தித்து அதன் துன்பச் சுமைகளில் மூழ்கியபடி பற்றுக் கோடு கிடைக்காதா என்று பார்த்திருக்கின்றார்கள் அவர்கள்.

தண்ணீரில் மூழ்கித் தத்தளிப்பவன் ஒரு சிறு துரும்பைப் பற்றியாவது மேலெழுந்து நீரில் மிதந்து மூச்சுக் காற்றை உள்ளெடுக்க முயல்வது போல, இன்று பற்றுக் கோடு தேடிப்பார்த்துத் துடித்து ஏங்கியிருக்கும் தமிழினத்துக்கு தை பிறந்த கையோடு வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல் என்ற சிறிய வாய்ப்புக் கிட்டியிருக்கின்றது.

இந்தத் தேர்தலும் அதன் முடிவும் தமிழர்களுக்கு நிம்மதியான நிலையான, நிரந்தரமான அமைதிமிக்க ஒரு வாழ்வியல் சந்தர்ப்பத்தைத் தந்துவிடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெளிவான விடயம்தான்.

ஆனால், நீருக்குள் மூழ்கி, சுவாசிக்க முடியாமல் தடு மாறிக் கொண்டிருப்பவனுக்கு, நீரின் மேல் வந்து மூச்சு விடுவதற்கு ஓர் இடைக்கால சந்தர்ப்பத்தையாவது வாய்ப்பையாவது தரக்கூடிய விளைவை இந்தத் தேர்தலும் அதன் முடிவும் வழங்கக்கூடும்.

போரழிவில் துவண்டு கிடக்கும் தமிழினத்துக்கு எதிர்காலத்தைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறும் ஒரு பொருத்தமான சந்தர்ப்பமாக இத் தேர்தலைப் பயன்படுத்துவதுதான் உசிதமானது; தந்தி ரோபாயமானது.

அதைக்கூடச் செய்ய விடாது, குழப்பும் விதத்தில் தமிழர்களின் தலைமைகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சில தற்குறிகள், கோடரிக் காம்புகள் செயற்படுகின்றமை, போர் எனும் பெரும் நெருப்பில் தீய்ந்து போய்க் கிடக்கும் தமிழினத்தைத் தொடர்ந்தும் நிரந்தர அடிமைத் தனத்துக்குள் ஆழ்த்தும் செயற்பாட்டுக்கே உதவும். இதை அவர்கள் புரிந்துகொண்டு திருந்துவார்களா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..............!
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment