இலங்கையில் வலுவடையும் சீனாவின் பிடி; பார்த்திருக்கும் பாரதத்தின் பரிதாப நிலை!

மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் விலாங்கு போல காரியத்தைக் கனகச்சிதமாக நகர்த்துகின்றது இலங்கை இந்திய, சீன விவகாரங்களில்.இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்துடன் தொப்புள்கொடி உறவு கொண்டுள்ள இலங்கைத் தமிழரைக் கைவிட்டு இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறப் போனால் அவர்களைக் காட்டிக் கொடுத்து கொழும்பை அரவணைத்துப் போனது புதுடில்லி.

உறவாலும், உணர்வாலும் தனது தமிழக மக்களுடன் ஒன்றுபட்ட இலங்கைத் தமிழர்களை விட, அயல்தேச ஆட்சித் தரப்பின் நல்லுறவே முக்கியமானது எனக் கருதி, செயற்பட்ட புதுடில்லிக்கு கொழும்பு நல்ல "மறுத்தான்' அடி கொடுத்திருப்பதான செய்திகள் இப்போது வெளியாகியிருக்கின்றன.

இலங்கையில் யுத்தத்தின் பின்னரான நடைமுறைத் திட்டங்களில் தனது பங்கு,பணி பிரதானமானது என இந்தியா கருதிக் கொண்டிருக்க, புதுடில்லியை உதாசீனப் படுத்தி, புறந்தள்ளிவிட்டு, அதன் எதிர்ச்சக்தியான சீனாவுடன் கைகோர்க்கின்றது கொழும்பு என்ற செய்தி இப் போது புதுடில்லியின் காதில் நாரசமாய் விழுந்திருக்கும் எனக் கருதலாம்.

இலங்கைத் தமிழர்களின் மீள்குடியமர்வு, அபிவிருத்தி போன்றவற்றுக்கு உதவ இந்தியா முன்வந்து அதற்கான எத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, கொழும்போ இந்தியாவைப் புறந்தள்ளிவிட்டு சீனாவுக்கு வெற்றிலை வைத்து அழைத்துக் கொண்டிருக்கின்றது.
சீனாவுடன் இவ்விடயங்களில் கொழும்பு அவசர அவசரமாகச் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் பல் வேறு சந்தேகங்களைக் கிளப்புவனவாக உள்ளன.

ஒன்று இந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபா, உயர்ந்த வட்டி வீதத்தில் கண்மூடித் தனமாக சீனாவிடமிருந்து கடனாகப் பெறப்படுகின்றது.

அடுத்தது எல்லை மீறிய செலவின முரண்பாடுகள் இந்தத் திட்டங்களில் உள்ள ஊழல், முறைகேடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் போன்றவை தொடர்பான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன.

பளையிலிருந்து காங்கேசன்துறை வரையான 56 கிலோ மீற்றர் தூர ரயில்பாதை மறுசீரமைப்புக்கு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ மீற்றர் தூரப் பாதை அமைப்புக்கு 45 கோடி 60 லட்சம் ரூபா சராசரியாகச் செலவாகவுள்ளது.

அதேநேரம், ஓமந்தை முதல் பளை வரையான 92 கிலோ மீற்றர் தூர ரயில் பாதை மறுசீரமைப்புக்கு 2 ஆயி ரத்து 100 கோடி ரூபாவே செலவிடப்படுகின்றது. அதாவது அங்கு ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதை அமைப்புக்கான சராசரிச் செலவு சுமார் 22 கோடி ரூபாதான்!

இது ஒன்றே, இந்தத் திட்டங்களை அவசர அவசரமாக அடுத்த முப்பது மாத காலத்துள் பூர்த்திசெய்து தருமாறு வற்புறுத்தி, வேகமாகக் கேள்விப்பத்திரங்களைப்பெற்று, பணி உத்தரவுகளை வழங்குகின்ற அரசின் சூழ்ச்சியின் பின்னால் புதைந்து கிடக்கும் ஊழல், மோசடித் திட்டங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானது.

இந்தத் திட்டங்களுக்கான கடன், உயர் வட்டியுடன் சீனாவிடமிருந்தே பெறப்பட்டிருக்கின்றது. அது மாத் திரமல்ல, இத்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பும் அவசரப்பட்டு சீன நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

அதுவும், யுத்தத்தின் பின்னரான இந்த ரயில் பாதைகள் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியவற்றுக்கான சீன ஒப்பந்தப்படி, இந்த ஒப்பந்தப் பணிகளை ஆற்றுவதற்காக சுமார் இருபத்தியையாயிரம் சீனர்களே இலங்கை வருவர் என்று கூறப்படுகின்றது.

ஆக, வடக்கு கிழக்குத் தமிழர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களுக்குரிய நிதி சீனாவிடமிருந்தே உயர்ந்த வட்டிக்குக் கடனாகப் பெறப்படுகின்றது. அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் சீன நிறுவனங்களுக்கே வழங்கப்படவுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துகையில் இங்கு எழும் வேலைவாய்ப்புகளுக்கும் சீனர்களே இங்கு வருவிக்கப்பட வுள்ளனர். அவர்களுக்கே இந்த மறுசீரமைப்பு, அபிவிருத்தித் திட்டங்களின் கீழான வேலை வாய்ப்புகள் கிட்டும். பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு அல்ல.

ஆக, சீனாவிடமிருந்து பெறப்படும் கடன் மூலம் நாடும் மக்களும் பெரும் கடனாளியாக, கடனை வழங்கி வட்டியையும் அறவிடும் சீனா தனது ஆதிக்கத்தையும் இலங்கைக்குள் மேலும் பலப்படுத்தி இறுக்கப் போகின்றது.

இலங்கையின் புத்தளம் நிலக்கரி மின்திட்டம், அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித்திட்டம், அம்பாந்தோட்டை விமான நிலையம், மாத்தறை கதிர்காமம் ரயில் பாதை சீரமைப்பு, தெற்கின் கடுகதி வீதிப் பாதை எனப் பிரதான திட்டங்களை எல்லாம் தனது கைக்குள் போட்டுக்கொண்டு சீனா ஒவ்வொன்றாகக் கபளீகரம் செய்து வருகின்றது. இப்போது யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு மறுவாழ்வு மற்றும் அபிவிருத்திப் பணிகளையும் தனது சூழ்ச்சித் திட்டத்துக்குள் அது மெல்ல வளைத்துப் பிடித்துக்கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

இந்தியா என்ன செய்யும்? பாவம்! பார்த்துக் கொண் டிருப்பதைத் தவிர!
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. already india lead by mafia leaders+pansabi they wiil robe the counry altil last minit then they run italy hi..hi..

    ReplyDelete