17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தவறியதால் ஏற்பட்டுள்ள விபரீதங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டிய பிரசார நடவடிக்கைகளின்போது அரசுத் தரப்பினால் அரச சொத்துகள் தவறாகத் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலைமை எல்லையை மீறி வருகின்றது.

இது விடயத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரியவர வில்லை.நாட்டின் பல பாகங்களிலும் தேர்தல் சட்டத்துக்கு மாறாக ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர்களின் சுவரொட்டிகள், பதாகைகள், "கட் அவுட்"டுகள் போன்றவற்றை அகற்றச் செய்வதிலும் மெத்தனப் போக்கும் உதாசீனத் தடிப்பும் வெளிப்படையாகவே தென்படுகின்றன. இந்த விளம்பரச் சுவரொட்டிகளை அகற்றும் விடயம் தொடர்பாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சம்பந் தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு உரிய அறிவுறுத்தல்களைக் கடிதங்களில் அனுப்பி விட்டார். ஆனால் அத்தோடு அவரது பணி முடிந்து விட்டது என்பது போல விடயம் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றது. அவரது கடிதமும் அதில் உள்ள உத்தரவும் வெறும் எழுத்துடன் அடங்கிப் போய்விட்டன. பிரதான பொலிஸ் நிலையங்களுக்கு பக்கத்திலேயே வேட்பாளர்களின் பிரமாண்டமான "கட் அவுட்"டுகள் பெரும் உயரத்துக்கு எழுந்து நிற்பதைப் பார்க்கும்போது இந்த நாட்டின் சட்டத்தை எண்ணி, அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

இதற்கு அப்பால் பொதுச் சொத்துகளைத் தமது தேர்தல் பிரசாரத்துக்கு அதிகளவில் அரசுத் தரப்பு பயன் படுத்தி வருகின்றமை தொடர்பான பல்வேறு தகவல்களைத் தேர்தலைக் கண்காணிக்கும் சுயாதீனக் குழுக்களே பகிரங்கப்படுத்தி, அம்பலப்படுத்தி வருகின்றன. அரச, பொதுத்துறை ஊழியர்கள் பலர் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசாரத்துக்காகக் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றார்கள். வெளிநாட்டுத் தூதரகங்களில் அரசின் ஊழியர்களாகப் பணிபுரியும் பல இராஜதந்திரிகள் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதற்காக விசேட மாகக் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆனால் இவற்றைத் தடுத்து நிறுத்த வக்கற்றவராகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் செய்வதறியாது நிற்கின்றார் என்பது வெளிப்படையானது.தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டும் நிவாரணமும், நீதியும் கிட்டாது என்று கருதி, இந்த ஜனாதிபதித் தேர்தலில் "எங்கள் தேசிய முன்னணி" என்ற கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் உயர்நீதிமன் றத்திடம் போயிருக்கின்றார். அடிப்படை உரிமைகள் மீறல் மனு மூலம்! தேர்தல் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணையாளர் பொறுப் பேற்று முன்னெடுக்கையில், அதில் இடையில் உயர்நீதி மன்றம் தலையிட்டு நீதி செய்ய முன்வருமா, இத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் 27 நாள்களே இருக்கையில் அதற்கிடையில் இவ்விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு, நீதி பெற்றுத்தர அல்லது நீதியை நிலை நாட்ட வாய்ப்புகள் உண்டா என்பவையெல்லாம் இனித்தான் தெரியவரவேண்டும்.

எது, எப்படியோ, இத்தகைய தேர்தல் குளறுபடிக ளுக்கு மத்தியில் விடயங்களைச் சீர்செய்ய முடியாத இக் கட்டு நிலைமை ஏற்பட்டமைக்குப் பிரதான காரணம் அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் முழு அளவில் நடை முறைப்படுத்தப்படாமைதான் என்பது சகலருக்கும் தெரிந்த விவகாரம்தான். இந்தக் காரணத்தால்தான் தமது தேர்தல் பிரசாரத்தின்போது அதற்குப் பாதிப்பு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்று கருதித்தான் அரச மைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தவிடாமல் இக்கட்டுகளைப் போட்டு, அதற்குத் தடை ஏற்படுத்திவந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அந்த 17 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடை முறைப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் சில ஆண்டுகளுக்கு முன்னரே அரசமைப்புக் கவுன்ஸில் இயங்கத் தொடங்கியிருக்கும். அதன்மூலம் தேர்தல், பொலிஸ், நீதிச்சேவை, பொதுச் சேவை ஆகியவற்றைக் கண்காணித்து வழிநடத்துவதற்கு, அரசுத் தலைமையில் தங்கியிராத சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படத் தொடங்கியிருக்கும். அவற்றினால் தேர்தலும், பொலிஸ் நடவடிக்கைகளும், பொதுச்சேவைச் செயற்பாடுகளும் கூட சுதந்திரமாக சுயாதீனமாக கண்காணிக்கப்பட்டு வழிநடத்தப்டும் நிலை ஏற்பட்டிருக்கும். தேர்தல் பிரசாரத்துக்கு அரசுத் தலைமை அல்லது அதிகாரத் தரப்பு அரச சொத்துகளையும் பொலிஸ் துறையையும் தனக்கு வசதியான சார்பான முறையில் பயன்படுத்தி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்கின்றது என்ற குற்றச்சாட்டே எழுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

எல்லாம், அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்துகொண்ட எதேச்சாதிகாரப் போக்கின் விளைவால் வந்த விபரீதங்கள்தான்.........!
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment