பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டான். அந்த நெருக்குவாரங்களைத் தகர்த்து, அடுத்த கட்டத்திற்கு விடுதலைப்போரை முன்நகர்வதற்காகத் தமது உயிரைத் தற்கொடையாக்கி, வெற்றிக்கான பாதையைத் திறந்து விட்டதன் கதாநாயகர்கள் இந்தக் கரும்புலிகள். எனவேதான் கரும்புலிகள் “எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்” என தலைவர் அவர்கள் கரும்புலிகளைப் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார்.
உலக விடுதலைப் போராட்டங்களில், தற்கொடையாளர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள், கரும்புலிகளைத் தாக்குதலிற்குப் பயன்படுத்திய முறை தனித்துவமானதாகவே இருக்கின்றது. தாக்குதல் நடைபெறும் சமயங்களில் எதிரியின் மனோபலத்தை உடைக்க, எதிரியின் உதவிகள், விநியோகங்களைத் தடுக்க, தற்பாதுகாப்பை வழங்க, பாரிய கடல்வழி நகர்வுகளைச் செய்ய, தாக்குதல் அணிகளுக்கான தடைகளை உடைத்து முன்நகர்த்த என பலவழிமுறைகளில் கரும்புலிகள் தமது காத்திரமான பங்கினை வழங்கினர். ஒரு தனிப் படையணியாக அவர்களின் எழுச்சியும் வியாபகமும் எப்போதும் வியப்புக்குரியவை.
1987ம் ஆண்டு, யாழ் மாவட்டத்தின் பிரதேசசெயலர் பிரிவுகளில் ஒன்றான வடமராட்சி வடக்கை கைப்பற்றும் நோக்குடன் சிங்களப் படைத்தளபதி கொப்பேக்கடுவ தலைமையில் கடல்வழியாகத் தரையிறங்கிய சிறிலங்கா இராணுவம் |ஒப்பிறேசன் லிபரேசன்| என்ற பெயரில் வடமராட்சியின் பலபகுதிகளைக் கைப்பற்றி நிலைகொண்டது. இதில் ஒரு தொகுதி இராணுவம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில்; தரிந்திருந்தது. பாடசாலையில் அமைக்கப்பட்ட இராணுவமுகாமைத் தகர்ப்பதற்காகத் தயார்செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தில், கப்டன் மில்லர் தன்னையே கொடையாக்கி தாக்குதலை நடாத்தத் தயாரானார். யூலை மாதம் 5ம் திகதி வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் பாடசாலை வளாகத்தினுள் புகுந்கு கப்டன் மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நாற்பதிற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், எதிர்பாராத இத்தாக்குதலால் இராணுவத்தினரின் உளவுரண் கடுமையாகச் சிதைந்துபோனது. இத்தாக்குதலின் பின் வடமராட்சி படை நடவடிக்கையை சிங்கள இராணுவம் இடைநிறுத்தி வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக அதிகமான இராணுவத்தினரைப் பலியெடுத்த தாக்குதல் இது. இதுவே விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலாகப் பதிவுசெய்யப்பட்டது.
இத்தாக்குதலின் பெறுபேறு ஈழவிடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் கனதியான வகிபாகத் தன்மையை வெளிப்படுத்தியது. ஏனெனில் அதிகபலத்துடன் வந்து மோதும் ஒடுக்குமுறையாளனின் நாடிகளை ஒடுங்கச்செய்யும் அளவிற்கு எதிர்ப்பலப்பிரயோகம் செய்யவேண்டிய கட்டத்தில் அதி உயர் போர்வடிவமாக தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டது| இந்த கரும்புலித்தாக்குதல் உத்தியாகும். ஒரு தாக்குதலில் கடுமையாகப் போரிட்டு, பலபோராளிகளை இழந்து பெறவேண்டிய வெற்றியை, கரும்புலிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தி, குறுகிய இழப்புடன் பாரிய வெற்றியைப் பெறும் அதேவேளை, சிங்களப்படையின் மனோபலத்தைப் பலவீனப்படுத்தும் தன்மைகொண்டதாகக் காணப்பட்டது. மேலும் சிங்களத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைந்த இனம் தனது படையின் இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது ஈழக் களமுனையில் மிகவும் முக்கியமானதாகவிருந்தது. அத்தகைய உயரிய இலக்கினைக் கொண்ட கரும்புலிகள் போரியல், அரசியல் வெற்றிகள் மற்றும் மாற்றங்களுக்கான முதுகெலும்பாக விளங்கினார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் கரும்புலிகளாக உருவாகுவது என்பது மிகவும் கடினமானது. கடுமையான பயிற்சிகள், பரீட்சைகள், உளவியல் பரிசோதனைகள், நீண்டகாலக் காத்திருப்புக்கள் என பல கடினங்களைக் கடந்தே கரும்புலிகளாக உள்வாங்கப்பட்டனர். ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் இனவழிப்பும் இளைஞர்களை விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்கச் செய்தது. தியாக உணர்வுடன் இணைந்த இளைஞர்களின் அப்பழுக்கற்ற, தூய்மையான விடுதலையுணர்வு எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கான திடத்தைக் கொடுத்தது. விடுதலைக்காக எத்தகைய கடுமைகளைச் சந்தித்தாலும் ”எனது எதிர்காலச் சந்ததி சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழும்”; என்பதே அவர்களின் சுவாசமானது. அதுவே அவர்களை தற்கொடையாளர்களாகவும் உருவாக்கியது.
கரும்புலியாக வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளியினதும் உணர்வுகள் தியாகங்களை சில பக்கங்களில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நீண்ட சரிதம் இருக்கும். அதன் ஒவ்வொரு பக்கமும் அவர்களின் தியாகத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழம் என்ற இலட்சியம் மட்டுமே அவர்களின் சுவாசமாக இருக்கின்றது. குறிப்பாக கடற்கரும்புலிகளின் செயற்பாடுகளில் நிறைந்திருக்கும் அர்ப்பணிப்புணர்வும் மனஉறுதியும் பெரும் வியப்பிற்குரியவை. மிகமுக்கியமாக பெண்கரும்புலிகளின் பங்களிப்பு என்பது வியப்பானதாகவும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும்.
முதலாவது பெண்கரும்புலியான அங்கையற்கண்ணி, தாயின் துணையில்லாமல் இரவில் வெளியில் செல்லப் பயப்படும் மனநிலை கொண்டவாராக வாழ்ந்தவர். சிறிலங்காப் படையால் அவரது வாழ்;வியல் சூழலில் ஏற்பட்ட சம்பவங்கள் அவரைப் போராளியாக்கியது.
சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத்தால் நாளுக்கு நாள் துன்பங்களைச் சந்தித்து, கடலுக்குப் போனவர்கள் திரும்பி வருவார்களா? என ஏங்கியபடி வாழ்ந்த குடும்பங்களின் அழுகையையும், கண்ணீரையும் பார்த்த அங்கையற்கண்ணி சிங்களக் கடற்படையின் ஒரு கப்பலை தான் அழிக்கவேண்டும் என்று முடிவிற்கு வந்து அதற்காகத் தயாரானாள். கடுமையான நீரடி நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டு கரும்புலியாக உருவெடுத்து நின்ற அவளுக்கு காங்கேசன்துறையில் தரித்திருந்த இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்கான இலக்கு வழங்கப்படுகின்றது.
தாக்குதலுக்குத் தயாரானபின் வீட்டுக்குச் சென்று தாய், தந்தை சகோதரர்களுடன் பிரியப்போகும் தனது இறுதி மணித்துளிகளைச் கழித்தாள். சகோதரிகளிடம் நீங்கள் “நல்லாப் படிக்க வேணும்” எனக்கூறி விடைபெற்று வந்தாள்.
இறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனது தோழிகளிடம் “நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போறவைக்கு அம்மாவால சாப்பாடு குடுக்க ஏலும்” என்று கூறினாள். தனது குடும்பத்தையும் அதற்கு மேலாக தாய்நாட்டையும் நேசித்த அவளின் சில எடுத்துக்காட்டுக்கள் இவை.
தாக்குதல் தினத்தன்று கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை போராளிகள் உடன்சென்று வழியனுப்ப, அவர்களிடம் |இலக்கை அழிக்காமல் திரும்பமாட்டன்| எனக்கூறி பொருத்தியழிக்க வேண்டிய வெடிமருந்துடன் தனியே நீந்திச் சென்று, தனது இலக்கை அழித்து வீரச்சாவெய்தினாள் அந்தப் பெண்கரும்புலி. ஈழத்தின் முதலாவது பெண்கரும்புலி. இதுபோல எத்தனையோ கரும்புலிகள், எத்தனையோ தியாகங்கள். தங்களது குடும்பத்துடன் கழிக்கும் இறுதி நிமிடங்களில்கூட அவர்களிடம் இருக்கும் தெளிவும் உறுதியும் சாமானிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. வெற்றிக்காக அவர்கள் பட்ட கடினங்கள் வார்த்தைகளால் உணர்த்த முடியாதவை.
தனக்கான இலக்குக் கிடைக்கும்வரை மாதக்கணக்கில் கடற்பரப்பில் காத்திருந்த கரும்புலிகள் எத்தனை பேர். தங்களது இலக்கிற்காக அலைந்து திரிந்து திரும்பிவந்து, மீண்டும் மீண்டும் சென்று தமது இலக்கை அழிக்க உறுதியாகவும் தற்துணிவாகவும் செயற்பட்ட எத்தனையோ கரும்புலிகளின் ஈகங்களை இந்த விடுதலைப் போராட்டம் கொண்டிருக்கின்றது.
ஒரு சமயம், மிக முக்கியமான இலக்கு ஒன்றை அழிக்கும் பணியில் கரும்புலிப் போராளியொருவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, சிங்களப் புலனாய்வுப்படையால் சுற்றிவளைக்கப்படுகின்றான். புலனாய்வுப் படையின் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தப்பித்து ஓடத்தொடங்கினான். என்றாலும் அது கடினமானதாகவிருந்தது. ஒரு கட்டத்தில் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அக்கரும்புலி, அருகிலிருந்த ஒரு பேக்கரியின் பாண் போரணைக்குள் புகுந்து தன்னைக் கருக்கி அழித்துக் கொண்டான். பிறிதொரு சம்பவத்தில் திருகோணமலைக் கடற்பரப்பில் நடந்த மோதலில் காயத்துடன் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம், தன்னிடமிருந்து எதிரி தகவல்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகக் கட்டிலின் சட்டத்தில் தனது தலையை அடித்து வீரச்சாவடைந்தான் ஒரு கரும்புலிப் போராளி. இப்படியெல்லாம் தியாகத்தின் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய நாயகர்கள் இவர்கள்.
முதலாவது கரும்புலித் தாக்குதலை நடாத்தி விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிணாமத்திற்கு வித்திட்ட கப்டன் மில்லர் முதல் முள்ளிவாய்க்காலின் ஆரம்பம் வரை முன்னூற்றி இருபத்து இரண்டு கரும்புலிகள் வீரகாவியம் படைத்துள்ளனர். 1990ம் ஆண்டு அபித்தா, எடித்தாரா என்ற கட்டளைக் கப்பல்களைத் தகர்த்து முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடாத்திய மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் கரும்புலிகள் அணியின் ஆளுகை கடற்பரப்பிலும் ஆரம்பித்தது. பரந்த கடல்வெளியில் நவீன கட்டளைக் கப்பல்களுடன் தனது ஆக்கிரமிப்பை விரித்திருந்த சிறிலங்கா கடற்படையை துரத்தி அடித்தவர்கள் கடற்கரும்புலிகள். விடுதலைப்புலிகளுக்கான விநியோகங்களுக்கும், தமிழ் மீனவர்களின் சுதந்திரமான மீன்பிடிக்கும் காப்பரணாக விளங்கியது கடற்புலி. அந்தக் கடற்புலியின் வளர்ச்சிப் படிக்கட்டாக விளங்கியவர்கள் கடற்கரும்புலிகள். எத்தனையோ கட்டளைக் கப்பல்கள், நீருந்து விசைப்படகுகள், பீரங்கிக் கப்பல்களைத் தகர்த்து, சிறிலங்கா கடற்படையை ஈழக்கடல் எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்தார்கள். வித்தாகிப்போன கரும்புலிகளில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கடற்கரும்புலிகள்.
படிப்படியாகப் பரிணாமம் அடைந்த கரும்புலிகளின் அணி, விமானப்படைத் தளங்களை இலக்கு வைத்தது. கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசி, கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவித்த விமானங்களை அதன் இருப்பிடத்திலேயே அழிக்கத் தீர்மானித்து 1994ம் ஆண்டு பலாலி விமானத்தளத்திற்குள் நுழைந்த ஐந்து கரும்புலிகள் பெல்-212 உலங்கு வானூர்தியையும் பவள் கவச வாகனத்தையும் அழித்து புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தனர். இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டன. கரும்புலிகளின் உச்சகட்டச் சாதனையாக நடைபெற்ற இத்தாக்குதலில் சிறிலங்காவின் பொருண்மியவளம் ஏறத்தாழ முழுமையாகச் சிதைக்கப்பட்டது.
வெடிமருந்து நிரப்பிய வாகனத்துடன் இலக்கை அழிக்கப் புறப்பட கரும்புலிகளின் பயணம், படிப்படியாக கடலிலும், விமானப்படைத் தளங்களிலும் வியாபித்து, தாக்குதல் அணிகளாக உருவாக்கம் பெறுமளவிற்கு அவர்களின் பங்களிப்பு வளர்ந்து கொண்டே சென்றது. ஆட்லறிகள், ஆயுதக்களஞ்சியம், கட்டளைப்பீடம் என எல்லா இலக்கிலும் தமது உயிரை ஆயுதமாக்கினார்கள். ஒவ்வொரு தாக்குதலும் கரும்புலிகளின் அர்ப்பணிப்பில்தான் ஆரம்பிக்கும். தனித்தனியாகவும் குழுக்களாகவும் தமது இலக்கைத் தேடிச் சென்றார்கள்.
உலகில் எந்த ஆயுதத்தாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததும் எத்தகைய தொழில்நுட்பத்தாலும் தடுக்கப்பட முடியாததுமான கரும்புலிகளின் மனோதிடம்தான் எமது மக்களின் வலிமையான ஆயுதபலமாக இருந்து போராட்டத்தினை திடமாக முன்நகர்த்திச் செல்ல வழிவகுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தங்களது ஒவ்வொரு வெடிப்பினூடும் முன்நகர்த்திச் சென்ற கரும்புலிகளின் ஆன்மபலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத பலமாகத் திகழ்ந்தது.
போராளிகள்கூட பல தருணங்களில், தமது தியாகம் கள முனையில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எண்ணிய சந்தர்ப்பங்களில், தற்கொடையாளர்களாகச் செயற்படத் தவறுவதில்லை. உதாரணமாக ஓயாத அலைகள்-02 தாக்குதல் நடவடிக்கையின்போது பரந்தனில் இருந்து கிடைக்கும் உதவியைத் தடுக்கும் நோக்குடன், தளபதி பால்ராஜ் தலைமையில் உருவாக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியைத் தலைமைதாங்கிய லெப்.கேணல் செல்வி மற்றும் லெப்.கேணல் ஞானி ஆகியோரின் இடங்களில் தீவிர சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. முன்னேறிய இராணுவம் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த நிலைகளைச் சுற்றி வளைத்துவிட்டது. எதிரிக்குள் இருந்த அவர்கள் நிலைமையை உணர்ந்து ”நாங்கள் நிற்கும் அப்பகுதிக்கு ஷெல்லை அடியுங்கோ எங்களைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்தான் எதிரியை அழிக்கமுடியும்” எனக் கூறினர். அவர்கள் எதிரிக்குள் நின்று தமது தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்க அப்பகுதிக்குள் செறிவாக மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் எதிரி அழிக்கப்பட்டான். அதேவேளை அவர்களும் வீரச்சவைத் தழுவிக்கொண்டனர்.
பிறிதொரு சம்பவத்தில் மாங்குளம் ஒலுமடுவில் எமது நிலைகளை அழிக்க ராங்கிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. அதில் ஒரு ராங்கி எமது நிலைக்கருகில் வந்துவிட அந்த நிலையில் இருந்த கப்டன் அன்பழகன் தன்னுடன் நின்ற சகபோராளிகளை காப்புச்சூடு வழங்குமாறு கூறிவிட்டு, கைக்குண்டுடன் பாய்ந்து சென்று ராங்கியில் ஏறி குண்டைப்போட்டு ராங்கியை அழித்து தானும் வீரச்சாவடைந்தான். இப்படி பல சண்டைகளில் படையணிப் போராளிகள் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கரும்புலிகளைப் போன்று செயற்பட்டு தாக்குதலின் பிரதான வெற்றிக்காகத் தங்களை ஆகுதியாக்கினார்கள்.
ஈழவிடுதலைப் போராட்டம் இவ்வாறு பல தியாகங்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர்கள் தமது சுகங்களை துறந்து புனித இலட்சியப் பிரவாகத்திற்கு வித்திட்டார்கள். கரும்புலிப் போராளிகள்தான் இந்த இலக்கை அழிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அதைச் செய்து வீரச்சாவடைந்த சந்தர்ப்பங்கள் பல. அவர்கள் தங்களது சந்தோசமான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை. இன விடுதலைக்கு என்ன தேவையோ அதற்காக எந்த ஈகத்தைச் செய்யவேண்டுமோ அதை எந்த வடிவில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ததன் வெளிப்பாடாக இந்தப் போராட்டம் உயர்ந்து நின்றது. இன்றுவரை முகம் தெரியாமல் தம்மை தற்கொடையாக்கிய எத்தனை கரும்புலிகளின் தியாகம் பேசப்படாமல் இருக்கின்றது. போராளி என்பதற்கான எந்தவித பதிவும் இன்றி, கல்லறையோ, நினைவிடமோ இல்லாமல், இறந்துபோன செய்திகூட தெரிவிக்கப்;படாத மறைமுகக் கரும்புலிகளின் அர்ப்பணிப்பு மானிட நியதிகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் விளம்பரத்திற்காக ஈகம் புரியவில்லை. விடுதலைக்காக தமது அடையாளங்களைக்கூட மறைத்த உன்னத சீலர்கள்.
இலக்குடன் சேர்ந்து தம்மையும் சிதறவைத்து ஆகுதியான அந்த ஆத்மாக்களின் வித்துடல்கள் எமக்கு வருவதில்லை. ஆனால் அவர்களின் குருதி ஈழமண்ணோடு கலந்திருக்கின்றது. ஈழக்காற்றில் அவர்களின் சுவாசம் நிறைந்திருக்கின்றது. அவை எப்போதும் பிரித்தெடுக்க முடியாதவை. வணக்கத்துக்குரிய அவர்களின் தியாகம் இன்றைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைவுகூரப்பட வேண்டியது
அபிஷேகா
abishaka@gmail.com
0 கருத்துரைகள் :
Post a Comment