அடுத்த ஆண்டு இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண அரசாங்கம் தவறினால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அரசியல்தீர்வு ஒன்றை அடைவதற்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளதாக அவர் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டிருந்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எதுவுமே இப்போது முன்னெடுக்கப்படாத சூழலில், இந்த எச்சரிக்கை முக்கியமானதொன்றாகவே கருதப்படத்தக்கது.
ஏனென்றால், போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கழித்தும், தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான எந்த முன்முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திய பேச்சுக்கள் கூட, ஏதோ பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டது போலவே அமைந்துவிட்டது. உருப்படியான தீர்வு முயற்சிகளில் இருந்து விலகிச் சென்ற அந்தப் பேச்சுக்கள் முடங்கிப்போய் பலகாலமாகி விட்டது. மீளவும் இந்தப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்ட போதும், அவை பயனளிக்கவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேண்டும் என்பது அரசின் பிடிவாதமாக உள்ளது. தெரிவுக்குழுவுக்குத் தாம் வர முன்னர், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஓர் இணக்கப்பாட்டுக்கு அரசாங்கம் வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக உள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பொறுப்பில் இருந்து நழுவிச் செல்லவே விரும்புகிறது. ஒரு தீர்வை முன்வைத்து சிங்களத் தேசியவாத சக்திகளின் விரோதத்தை சம்பாதித்துக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தின் நகர்வுகள் அடுத்தடுத்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டே அமைந்துள்ளன. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டுள்ள போதும், தமது அரசியல் நலன்களை புறக்கணித்து இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு காண்பதற்கான துணிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இல்லை என்பது வெளிப்படையாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போயிருந்தால், சிலவேளை அவரிடம் அந்த துணிவு வந்திருக்கக் கூடும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பில் 18ஆவது திருத்தத்தைச் செய்து, அடுத்தமுறையும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடக் கூடிய சூழலை உருவாக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு அந்தத் துணிவு வருவது கடினமானதே. இன்னொரு பதவிக்காலம் பற்றிய எதிர்பார்ப்பும் கனவும், அரசியல்தீர்வு குறித்த துணிச்சலான முடிவை எடுக்க அவருக்கு தடையாக உள்ளது.
தமது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு சில காலங்களுக்கு முன்னர் வழங்கிய பேட்டியில் வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறைவேற்று அதிகாரம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எல்லாமே இருந்தும், தெரிவுக்குழு என்று இனப்பிரச்சினைத் தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம். தெரிவுக்குழுவில் வைத்து, 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான ஒரு கனவிலும் அரசாங்கம் உள்ளது. இதுவும் தெரிவுக்குழு என்ற பொறியை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கு ஒரு காரணம்.
தெரிவுக்குழுவில் பெரும்பாலும் ஆளும்கட்சி உறுப்பினர்களே இருக்கும் நிலையிலும், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களே அதிகமாக இருக்கின்ற சூழலிலும், தமிழருக்கு சாதகமான எந்தவொரு தீர்வையும் அதன் வழியாகப் பெற முடியாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அச்சம். இத்தகைய சூழலில் தான், அரசியல்தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு ஒன்று எட்டப்படும் என்ற உறுதிப்பாட்டைக் கொடுத்தே, அரசாங்கம் போரில் வெற்றி பெற்றது. ஆனால், அந்த உறுதிப்பாட்டை அரசாங்கம் காப்பாற்றவில்லை. காப்பாற்றவும் போவதில்லை. ஏனென்றால், அரசாங்கம் ஓர் அரசியல்தீர்வை எட்ட வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தால், அதை இந்த மூன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடித்திருக்கலாம். இதனால், அரசின் வாக்குறுதிகள் நம்பகத்துக்குரியதல்ல என்ற கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களிடம் உருவாகியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட அரசாங்கம், சூட்டோடு சூடாக ஓர் அரசியல்தீர்வு முயற்சியில் இறங்கியிருந்தால், தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் போர் வெற்றியின் பின்னர் தன்னையும் தனது அதிகாரத்தையும் பலப்படுத்திக் கொள்ளவே இந்தக் காலத்தைப் பயன்படுத்தியுள்ளது. இத்தகைய பின்னணியில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த உண்ணாவிரத எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ஓர் ஆண்டு காலக்கெடுவுக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காது போனால், அவரது உண்ணாவிரதப் போர் இடம்பெறுவது உறுதியாகவே இருக்கும் என்று நம்பலாம்.ஏனென்றால், ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராக, ஓர் அரசியல்கட்சியின் தலைவராக உள்ள அவர், இந்த எச்சரிக்கையை விடுத்து விட்டு சும்மாயிருந்து விடமுடியாது. அதேவேளை, அவரது இந்த முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் ஏற்கத் துணிவார்களா என்பது கேள்விக்குரியது. அதுபற்றி யாரும் இதுவரை வெளிப்படையாக கருத்துக் கூறவில்லை. எவ்வாறாயினும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்பதையும், தொடர்ந்து ஏமாறத் தயாரில்லை என்பதையும் வெளிப்படுத்தும் இத்தகையதொரு போராட்டம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது.
தமிழர்களின் ஆயுதப்போராட்டம் பயங்கரவாத முத்திரை மூலம் அடக்கப்பட்ட பின்னர், அந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் ஒரு நிகழ்வாக இத்தகைய உண்ணாவிரதம் அமையும். சாத்வீக ரீதியில் முன்னெடுக்கப்படத்தக்க எந்தவொரு போராட்டத்தையும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தைப் போல அரசாங்கத்தினால், இலகுவாக அடக்கிவிட முடியாது. அதுமட்டுமன்றி, விடுதலைப் புலிகளுக்கு கிடைக்காத சர்வதேச அரசியல் அங்கீகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பெற்றுள்ளது. அதன் தலைவர் ஒருவர், அரசியல்தீர்வுக்காக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக் கொண்டு சர்வதேச சமூகம் சும்மாயிருக்காது. ஷிரானி பண்டாரநாயக்கவை தலைமை நீதியரசர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச ரீதியாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பை விடவும், கடுமையான நெருக்கடி, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் ஏற்படுத்தப்படும்.
இப்போது ஏற்பட்டுள்ள மௌனத்தை – தேக்க நிலையை உடைப்பதற்கு நிச்சயமாக – கனமான தாக்கத்தை ஏற்படுத்தத்தக்க அரசியல் போராட்டம் ஒன்றே தமிழர் தரப்புக்குத் தேவைப்படுகிறது. இல்லையேல் காலம் இழுத்தடிக்கப்படுவதுடன், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வும் எட்டாத தொலைவுக்குச் சென்றுவிடக் கூடிய ஆபத்து உள்ளது. இந்தநிலையில், தமிழ் மக்களின் சார்பில் பேசும் சக்தியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்குமேயானால், அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா போன்ற பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும். அரசியல்தீர்வு ஒன்றுக்கு இந்த நாடுகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், அது இன்னும் வலிமையானதாக - அரசியல்தீர்வுக்கு அருகே தமிழர்களைக் கொண்டு சென்று விடத்தக்கதாக இருக்க வேண்டும். அதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முனைகளில் தனது போராட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உணர்ந்து கொண்டுள்ளார். அதேபோன்று கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள். இது தமிழர் தரப்பின் உச்சக்கட்ட வெறுப்பில் இருந்து - ஏமாற்றத்தில் இருந்து உருவாகியுள்ள சூழல். இதனை அரசாங்கம் எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை.
இதை சாதாரணமானதொரு எச்சரிக்கையாகக் கருதி புறமொதுக்கிக் கொண்டால், அதன் விளைவு அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதாகவே அமையும். ஏனென்றால், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அடைய முடியாத தீர்வைத் தருமாறு கேட்கவில்லை. தமிழீழத்தையோ தனிநாட்டையோ கேட்கவில்லை. நியாயமான – சாத்தியமான அரசியல்தீர்வு ஒன்றைக் கோரும் அவரது எதிர்பார்ப்பு தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரியது அல்ல. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை வன்முறை, பயங்கரவாதம் என்று காரணம் காட்டி ஒதுக்கித் தள்ளியது போன்று, இத்தகையதொரு போராட்டத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாது. ஏனென்றால், விடுதலைப் புலிகளை ஒழித்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதற்கு ஏதோ ஒருவகையில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகமும் காரணமாக இருந்தது. எனவே, சாத்வீகப் போராட்டம் ஒன்றை சர்வதேச சமூகம் ஒதுக்கி வைக்க முடியாது. ஆதரவு கொடுக்க வேண்டியிருக்கும். இப்படியொரு போராட்டம் நடந்தால், அது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களின் மற்றொரு எழுச்சியாக அமைந்து விடும். அதை அரசாங்கத்தினால் அடக்கவும் முடியாது, அடக்காமல் இருக்கவும் முடியாது.
அவ்வாறு அடக்கப்பட்டால், வன்முறையாக வெடிக்கும் ஆபத்தும் உருவாகும். எனவே, கத்திமேல் நடக்கும் ஒரு பயணத்துக்கு தயாராவதை விட வேறு தெரிவு ஒன்று அரசுக்கு இருக்க முடியாது. தமிழர்கள் இன்னொரு போராட்டத்துக்குத் தயாராக முன்னர், அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பது தான் புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும். அத்தகைய அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் துணியுமா என்ற கேள்விக்கான விடையை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
கட்டுரையாளர் கே. சஞ்சயன் - இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment