குருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசியல்வியாபாரிகள்


இலங்கை இந்திய கூட்டுச்சதித்திட்டத்தின் ஆலாபனைகள் தொடங்கிவிட்டன. இலங்கைக்கான ஊர்வலத்திருவிழா முடித்துவிட்டு வந்த இந்தியத் தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களை, மூலமூர்த்தியே நேரில் சென்று வரவேற்று கலந்துரையாடி, வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாடும் நடாத்திமுடித்துவிட்டார். இதனூடாக இலங்கை மக்கள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்திய மூலமூர்த்தியான கருணாநிதி, தன் சாதனைப்பட்டியலையும் சேர்த்தே நிரப்பியுள்ளார். 'ஊர் அழ ஊமையன் விசிலடித்தது' போல தங்களது வழமையான கூத்தை நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு.

இவர்களது பயண அடைவின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக ஐம்பத்தியெட்டாயிரம் பேர் குடியேற்றபடுவார்கள் என்ற உறுதிமொழியை இலங்கை அதிபர் ராஜபக்ச வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 11600 குடும்பங்களே குடியமர்த்தப்படுவதாக கருத்தில் கொள்வோமாக இருந்தால் ஏற்கனவே யாழ்ப்பாணம்,வவுனியா, மன்னார், திருகோணமலை ,மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து வன்னி வந்து திரும்பிபோக முடியாது அகப்பட்டுக்கொண்ட மக்களும் மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களில் உறவினர்களால் வந்து பொறுப்பேற்கக்கூடிய குடும்பங்களும் தான் இதில் உள்ளடக்கக்கூடிய வாய்ப்புள்ளதே தவிர, வன்னிப்பகுதி மக்களல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜநா, ஜரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்கைத்தேய நாடுகளும் மனிதஉரிமை அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் மக்கள் குடியேற்றம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்த வண்ணமுள்ளனர். அதேவேளை ஜீ.பி.எஸ் வரிச்சலுகை விடயத்தில் மேற்கைத்தேய நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும் இலங்கை அரசு, தற்போது இந்தியாவின் துணையை நாடியிருப்பதும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருந்த இந்தியாவும் வாய்ப்பை பயன்படுத்தியிருப்பதன் எதிரொலிதான் இலங்கை அதிபரின் அழைப்புக்கடிதமும் இந்திய சட்ட மன்ற உறுப்பினர்களின் திடீர் விஜயமும் ஆகும்.

வவுனியாவின் முகாமிலுள்ள எனது உறவினருடன் கதைக்கும்போது, இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தீர்களா? உங்களுடன் கதைத்தார்களா? பார்த்தார்களா? என வினாவினேன். அதற்கு அவர் முகாமிலுள்ள பாடசாலையில் இறங்கிவிட்டுப் போனார்களாம், எங்களை போகவிடவில்லை ஏற்கனவே ஆசிரியர்கள் குறிப்பிட்ட பொதுமக்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர் அவர்களுடனேயே பேசிவிட்டுச் சென்றனர்' என்றார். 'கெலிகொப்டர் மேலால் பறந்து போச்சுது, நாங்கள் அண்ணாந்து பாத்துக் கொண்டு நின்றம் அவ்வளவுதான்' என்ற அவரது விரக்தியான பதிலில் அங்கு நடந்ததை தெளிவாக அறிய முடிந்தது. குறுகிய நேரத்திற்குள் இப்படித்தான் இந்திய தமிழ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறையகதிமுகாம்களில் காட்சியளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக முகாம்களை கண்காணித்து வரும் மனித உரிமை ஆணையமும், பராமரித்துவரும் ஜநாவின் அமைப்புகளும் முகாம் நிலவரம் தொடர்பாக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசின் செல்லப்பிள்ளைகளாக சென்ற (செத்தவீட்டுக்குச் சென்றவனை தாரை தம்பட்டை, சிவப்புக்கம்பள விரிப்பு, மாலை மரியாதைகள் என வரவேற்க, தங்களுக்குரிய பாணியிலேயே ஏற்றுக் கொண்ட இவர்கள்தான் ஈழத்தமிழர்களிற்காக கண்ணீர் விடுவதைதவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறிய மூலமூர்த்தியின் அரசியல் பின்பற்றிகள்). 'உண்மை நிலமைகளை நேரில் கண்டறியும் குழுவின்' காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் அவர்கள், 'போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமனங்களுக்கமைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன' என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.(நக்கினார் நாவிழந்தார் என்பது இதைத்தானோ)

ஒரு நாடு தனது பிரஜைகளை சிறையகதிமுகாமில் வைத்தருப்பதற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் முகாம்களிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளையும் கிட்டத்தட்ட இதேபோன்று கடுமையான விதிமுறைகளுடன் கையாளும் தன்மையை ஒப்பிட்டுத்தான் அப்படிக்கூறினாரோ தெரியவில்லை.

முகாம் நிலவரம் தொடர்பாக நற்சான்றிதழ் கொடுத்தது மட்டுமல்லாமல் உண்மை நிலையறியச்சென்ற குழுவின் எந்த இந்திய தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை.(ஊடகத்திற்கு பேட்டிகளை வழங்கக்கூடாது என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின், இலங்கையின் அன்புக்கட்டளையோ!). மாறாக அரசாங்கத்திற்குச் சார்பான அறிக்கைகளை தயாரிப்பதிலும் தங்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்ததாக காட்டுவதிலேயேயும்தான் அக்கறையுடன் இருக்கின்றனர். சர்வதேச அழுத்தத்தை பொருட்படுத்தாத இலங்கை, ஜீ.பி.எஸ் வரிச்சலுகை தொடர்பான சர்வதேசத்தின் எதிர்ப்பு நிலையின்மையினைக் கையாள்வதற்காகவே, திடீரென இந்திய தமிழ் சட்டமன்ற உறுப்பினர்களை வரவழைத்ததுடன் 11600 குடும்பங்களை குடியேற்றப்போவாதாக கூறியதானது இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு திரைமறைவு அரசியல் நகர்வின் ஆரம்பம்தான் என்பது அப்பட்டமாக வெளிவருகின்றது.

'போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்? இந்தியா தான் போரை நடத்தியது. தமிழகம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிக்க காரணமாக இருக்கப் போகிறீர்கள்' என்று குரலெழுப்பியதனூடாக எந்த நிலையிலேயும் தனது உரிமைக்கான கோரிக்கைகளை, தனது நியாயத்தை, தனது அரசியல் அபிலாசைகள் பற்றி, எவர் முன்னும் பேச தயங்காத, தேச விடுதலை தொடர்பான நீண்ட அரசியல் பார்வையுள்ள மக்கள் சமூகம் தான் ஈழத்தமிழர்கள் என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்கும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதால் தமிழனுக்கு எந்த தீர்வையும் திணிக்கலாம் அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எவரேனும், குறிப்பாக இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் நினைப்பார்களேயானால், அவர்களுக்கு ஈழத்தமிழ் சமூகம் பாடம் புகட்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.

தாயாக தாகம் தீரும் வரையிலும் நீறு பூத்த நெருப்பாக அரசியல் விடுதலையை, இதயத்தில் சுமந்திருக்கும் சமூகம்தான் ஈழத்தமிழன் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பதே இங்கு புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.


ஈழநேசன் இணையத்தளத்திற்காக
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

5 கருத்துரைகள் :

  1. இவர்களாலா விடிவு கிடைக்கப்போகிறது. என் தமிழ் மண்ணுக்கு...,எல்லாம் ஆறு கோடி தமிழர்களை சமாதானப்படுத்த நடத்தப்படும் நாடகம்.

    இதை எனது வலைப்பக்கத்தில் இட்டுக்கொள்கிறேன்.நன்றி!

    ReplyDelete
  2. நன்றிகள் எதிர்க்கட்சி,
    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மட்டுமல்ல, உங்களுடைய வலைப்பூவில் இணைத்துக் கொண்டமைக்கும்.
    தன் இனத்தின் குருதியிலும் சதையிலும் அரசியல் செய்யும் இந்த வியாபாரிகளை, தமிழ் மக்கள் எப்போது ஓரம் கட்டுகிறார்களோ, அன்றைக்கு எம்மினம் தலைநிமிரும்.

    ReplyDelete
  3. யார் இங்கே உண்மை பேசுகின்றார்கள்? 58 ஆயிரம் என்பது என்ன கணக்கு? யார் சொன்ன கணக்கு? கலைஞர் சொல்கிறார் இன்னும் 15 நாட்களில் அவர்கள் மீள்குடியமர்த்தபடுவார்கள் என்று. ஆனால் இலங்கையின் ஊடகத்துறை அமைச்சரோ (யாப்பா) அந்த கணக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். இவர்கள் கணக்கு பாடம் படிக்க எம் இன மக்கள்தானா கிடைத்தார்கள்? சொல் ஒன்று, செயல் ஒன்று என்பதையே தனது கொள்கையாக வைத்து இருக்கிறது இலங்கை அரசும், அதன் அமைச்சர்களும்.... என்று எம் மக்களுக்கு விடிவு காலம் வரும்? காலம்தான் பதில் சொல்லுமா அல்லது நாம் காலத்தை பதில் சொல்ல வைக்க வேண்டுமா?

    வேதனையுடன்
    சதீஷ்மூர்த்தி

    ReplyDelete
  4. pona naaigal nakki vittu varum enbathu namakku theriyum.thozhar muthukkumar thiikkuliththapothe karuna engira karunanithikkaga paadupatta thiruma pattri anaivarum kaaththirunthathe kevalam.

    ReplyDelete
  5. அன்புள்ள வலைப்பதிவு நடத்துனருக்கு,

    எமது தளத்தில் வெளியாகும் கட்டுரைகளை உங்கள் வலைப்பதிவில் 'மூலக் கட்டுரை வெளியான தளத்தின் பெயரோடும் எழுதியவரின் பெயரோடும்' வெளியிடுவதற்கு நன்றி. நிறையப் பேர் அப்படிச் செய்வதில்லை. பலதரப்பினரிடமும் ஆக்கங்கள் போய்ச் சேர்வது எமக்குச் சம்மதமே.

    ஆனால் மூலக் கட்டுரைக்கான இணைப்பையும் ஓரிடத்தில் (அடியில் எழுதப்படும் குறிப்பில்) கொடுப்பது சாலச் சிறந்தது. அவ்விணைப்பின் வழியே தளத்துக்கு வருகை தருபவர்களுக்கு அத்தளம் அறிமுகமாவதுடன் அங்கிருக்கும் ஏனைய படைப்புக்களையும் வாசிக்கும் வாயப்புக் கிடைக்குமல்லவா?

    இதைக் கவனத்திற் கொள்வீர்களென நம்புகிறேன்.

    நன்றி.

    ReplyDelete