யுத்த வெற்றிக்கான உரிமைக்கு போட்டி போடும் தரப்புகள்!


பொது எதிரிகளான புலிகள் மீதும் அவர்களை ஆதரித்து நின்ற அச்சமூகத்தின் மீதும் மிகக் கொடூரமாக அடக்கு முறையை ஏவிவிடுவதில் ஒன்றுபட்ட தெற்கின் "தேசப் பற்றாளர்கள்" இப்போது கன்னை பிரிந்து அதிகாரத்துக் காக அடிபடத் தயாராகி விட்டார்கள்.

இப்போதைய முறுகல் தீவிரமடையுமானால், கடந்த மே மாதத்தில் யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்தவரை அரங் கேறிய பெருங் கொடூரங்கள் பற்றிய உண்மைகள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம். கூட்டுச் சேர்ந்து குரூரம் புரிந்தவர்கள் அணி பிரிந்தால், புதை யுண்ட இரகசியங்கள் அம்பலத்துக்கு வரத் தொடங்கும் என்று நம்புவதில் தப்பில்லையல்லவா?

விடுதலைப் புலிகளுக்கு மேலான இராணுவ வெற்றி யில் அரசியல் குளிர்காய எத்தனித்த ஜனாதிபதி மஹிந் தருக்கு, அந்த வெற்றி மீதான விவகாரத்தில் உரிமையில் பங்கு கோருபவர்களே ஜனாதிபதியின் அரசியல் செல்வாக் கிலும் பங்கு கேட்பவர்களாகப் போட்டி போடத் தயாராகி விட்டனர்.

இது தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம் தான். தெற்கில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய சமயத் தில் இதுவும் சேர்ந்து அரசியல் கலகலப்பை உண்டுபண்ணி நிற்பது புதிய போக்குத்தான்.

அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என்று இரு பக் கங்களாலும் பேசப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி யும், முப்படைகளின் தற்போதைய சிரேஷ்ட அதிகாரியு மான ஜெனரல் சரத் பொன்சேகா தாம் அரசியலுக்குள் நுழைவது பெரும்பாலும் உறுதி என்பதைக் கோடிகாட்டி விட்டார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா அங்கு பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் ஆற்றிய உரையும்

அங்கிருந்தபடி, தாய்லாந்தில் தங்கி நின்ற எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் அவர் நீண்ட நேரம் உரையாடினார் என்று வெளியான செய்தியும்

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்கு நுழைவாரா என்று கேள்வி எழுப்பி வந்தோரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன.

"இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. தமிழ் மக்கள் வாழ்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகக் கூடிய சூழலை ஏற்படுத் தும் நிலைமைக்கு நாம் பங்களிக்கக் கூடாது. நாடு பிழை யான பாதையில் செல்லவும் நாம் அனுமதிக்க முடியாது. அப்படி நடக்குமானால் எனது சீருடையைக் களைந்து விட்டு, அந்த நிலைமையைச் சரிப்படுத்த நான் தயார்.!"

இப்படி மேற்படி நிகழ்வில் பங்குகொண்ட அமெ ரிக்க வாழ் இலங்கைச் சமூகத்தின் பலத்த கரகோஷத் துக்கு மத்தியில் அறிவித்திருக்கிறார் ஜெனரல் பொன்சேகா.

இதை, தென்னிலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் அதிகாரக் கட்டமைப்பில் தற்போது வரை திடீ ரென ஓரங்கட்டப்பட்ட ஜெனரல் பொன்சேகா, ஜனாதி பதியின் அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிராக மாற் றாக தமது தனிப்பட்ட அரசியல் வாழ்வைத் தொடக்கு வதற்குத் தயாராகிவிட்டார் என்பதற்குக் கட்டியம் கூறும் அறிவிப்பாகக் கருதமுடியும்.

இதில், முக்கியம் என்னவென்றால் இதுவரை, எதிர்க் கட்சித் தரப்புகளிலிருந்து ஆள்களைப் பிரித்துத் தன்பக் கம் இழுத்து, அதன் மூலம் எதிர்க்கட்சிகளைப் பலவீனப் படுத்துவதுடன் தமது அரசுத் தலைமையைப் பலப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அடுத்த ஜனாதிபதித் தேர் தல் மற்றும் பொதுத் தேர்தல் வரப் போகின்றது என்றதும் நிலைமை மாறிப்போயிருப்பதுதான்.

இப்போதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரக் கட்டமைப்பில் உயர் பதவியிலும், அந்தஸ்தி லும் இருந்து காரியமாற்றி, அதன்மூலம் செல்வாக்குப் பெற்ற ஒருவரை புலிகளைத் தோற்கடித்த இராணுவத் தளபதி எனத் தென்னிலங்கையால் மெச்சப்படும் பிரமுகரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையாக இதுவரை பணியாற்றிய ஒரு மூத்த படை அதிகாரியை அவருக்கு எதிரான துரும்புச்சீட்டாக எதிரணிகள் தூக்கிப் போடும் காய் நகர்த்தலை முன்னெடுத்திருப்பதுதான் முக்கிய திருப்பம்.

சிறுபான்மையினரான தமிழர்களை ஓரங்கட்டுவதன் மூலம் தென்னிலங்கையில் பேரினவாதிகளான சிங்கள வர்களிடம் ஆதரவையும், செல்வாக்கையும் தக்கவைத்து அதன்மூலம் தமது அரசியலை வெற்றிகரமாக நடத் தலாம் என்ற ஒரே நம்பிக்கையில் தனது கடையை விரித் திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அதே வழியில் வந்து "செக் மேட்" போட்டு, தடுத்து நிறுத் தவே, முன்னாள் இராணுவத் தளபதியை முன்னால் கொண்டுவந்து தள்ளியிருக்கின்றன தென்னிலங்கைத் தரப்புகள்.

இந்தச் சவாலைச் சந்திப்பதற்காக சமாளிப்பதற்காக "பழைய குருடி கதவைத் திறவடி!" என்ற பாணியில் தமிழர்கள் பக்கமும் தமது ஆதரவுக் கரங்களைத் திருப்ப வேண்டிய இக்கட்டுக்குள் வந்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடையே இப் போது உருவாகியுள்ள போட்டாபோட்டி முறுகல் நிலை, இதுவரை தாம் உதாசீனம் செய்து, புறக்கணித்து, ஒதுக் கிய தமிழர்கள்பால் வேறு வழியின்றிக் கை நீட்ட வேண் டிய கட்டாயத்தை அவற்றுக்கு உருவாக்கி நிற்கின்றது. இதுதான் காலத்தின் கோலம் என்பதா?

நன்றி : யாழ்.உதயன் ஆசிரியர் தலைப்பு

Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment