சாவீட்டில் கொட்டி மேளம் தட்டித் தாலி கட்டும் முதல்வர் கருணாநிதி

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்” “கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம் வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார்.

சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது முதல்வர் கருணாநிதி டில்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இப்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல் படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல், யார் விபீஷணன் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதல்வர் கருணாநிதியை விபீஷணன், எட்டப்பன், காக்கைவன்னியன் ஆகியோரது மொத்த உருவம் எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

முதலில் எட்டாவது உலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறும் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே வெறுமனே “உலகத்தமிழ் மாநாடு” என அறிவித்தார். இப்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 24 முதல் 27 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது சாவீட்டில் கொட்டு மேளம் தட்டித் தாலி கட்டின கதையாக இருக்கிறது!

ஐந்து தடவை முதலமைச்சராக இருந்த போது வராத தமிழ்ப் பற்று இப்போது முதல்வர் கருணாநிதிக்கு பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. தண்ணீரில் மூழ்கினவன் ; துரும்பைப் பிடித்தாவது கரைசேர நினைப்பது போல துருப்பிடித்துப்போன தனது படிமத்தைத் துலக்கவும் – தமிழினத் தலைவர் அல்லர் தமிழினக் கொலைஞர் – என்ற வரலாற்றுப் பழியைப் போக்கவும் இந்த உலகத்தமிழர் செம்மொழி மாநாடு உதவும் என முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ், தமிழர் என்ற உணர்வு முதல்வர் கருணாநிதியால் அமைச்சர் பதவிகளாக, கோபாலபுரங்களாக மாற்றப்பட்டு விட்டன. பதவி ஆசை காரணமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ மக்களையும் சிங்கள பேரினவாதத்துக்குக் காட்டிக் கொடுத்து விட்டார்.

தமிழ்மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, மனிதச்சங்கிலி, பதவி விலகல், உண்ணாநோன்பு, பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என நீண்ட நாடகத்தை அரங்கேற்றி சிங்கள – பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்குத் துணைபோனார்!

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், ராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

அண்மையில் ஒரு திமுக – காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அதில் அரசியல் குளிர் காய நினைத்தார். ஆனால் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம். ஆரோன் 'இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என இனவெறி பிடித்த ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் 'நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம் அனைத்துலக தரத்தில் சிறப்பாகவே உள்ளது' என்று திருவாய்மலர்ந்து வதை முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களது வெந்த நெஞசங்களில் வேலைப் பாய்ச்சினார்!

யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர். பாலுவிற்கு வலம்புரி இதழ் 'சனீஸ்வரன்' என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் செய்தியாளர்களிடம் “இலங்கையும் - தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும் தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தார்.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்ற குழுவினர், திருமாவளவன் நீங்கலாக, நவீன ஹிட்லர் மகிந்த ராஜபக்சவின் குருதி நனைந்த கைகளைக் குலுக்கிப், பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி, பரிசுகள் பெற்று ஈழத்தமிழர்களை அவமானப்படுத்தித் திரும்பினார்கள்.

ஆனால் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் அவரைப் பாராட்டித் தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். 'இலங்கைத் தமிழருக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர்!' என்ற மலிவான அரசியல் பரப்புரை செய்து மகிழ்ந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு பழம்பாடல் நினைவுக்கு வருகிறது. அது முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாவோ – நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

ஆலமரத்தைப் பலாமரமாகச் செய்தல் முடியுமோ? நேராக்குவதற்கு இயலாத நாயினது வளைந்த வாலை தேராக நிமிர்த்த முடியுமோ? கருமை நிறமுடைய காகத்தை கிளியைப் போலும் பேசும்படியாகச் செய்வித்தல் ஆமோ? கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயலுமோ? ஆகாது என்பதாம்.

இப்போது நடைபெற இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனவரி 2011 ல் நடத்தலாம் என உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களின் வேண்டுகோளை முதல்வர் சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டிப் புறந்தள்ளி விட்டார்.

இதனை அடுத்து உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும் முனைவர் வா.செ. குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி மாநாட்டை நடத்த மெத்தப் பாடுபடுகிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு வெளியே வலை வீசி இருக்கிறார். இதில் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.

“தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இலங்கையில் தமிழர் அரசியல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்துப் பலத்த விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், நான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது வில்லங்கமான காரியம். எனது நிலைப்பாடு குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.

உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும்.
செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும் அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்று சிவத்தம்பி கூறியிருந்தார்.

ஆனால் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதைத் தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சிவத்தம்பி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனது குத்துக் கரணத்தை நியாயப்படுத்தத் தான் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னது கிடையாது அப்படியாக யாரும் பொருள் கொண்டிருந்தால் தனது சொற்பதத்தில் உள்ள குறைபாடு காரணம் எனத் தமிழறிஞர் சிவத்தம்பி சமாளிக்கிறார்.

எமது முந்திய அறிக்கையில் கூறியிருந்ததை மீண்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்குச் சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை.

ஏன் தமிழ்நாட்டில் தமிழில் ஒரு தந்தி கூட அடிக்க முடியாது. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.

முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

எனவே தமிழீழ மக்கள் விடுதலை பெற்றுப் பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!

முதல்வர் கருணாநிதியின் அழுத்தத்துக்கோ இழுப்புக்கோ பேராசிரியர் சிவத்தம்பி வளைந்து கொடுத்துத் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம்.

"தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்"
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. சாட்டையடி பதிவு
    இப்படிக்கு
    கையாலாகத தமிழ நாட்டு தமிழன்

    ReplyDelete