
மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச பிரதேச செயலர் பிரிவில் அமைந்த வளமான கிராமம்தான் பண்டிவிரிச்சான் எனும் தமிழ் கிராமம். அந்தக் கிராமத்தையே பூர்வ பூமியாக கொண்டு வாழ்ந்த பல விவாசயக் குடும்பங்களில் ஒன்று இராசநாயகம் குடும்பம். இராசநாயகம், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நாள் முழுவதும் தோட்டத்தில் வேலை செய்கின்ற ஒரு விவசாயி. 1986.10.15 அன்றும் என்றைக்கும் போல அதிகாலையிலேயே தனது தோட்டத்திற்குச் சென்றிருந்தார். வழமையாக, மதிய உணவை அவரது பிள்ளைகள் தோட்டத்திற்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். அன்றும் அதேபோலதான் மதிய உணவிற்காக காத்திருந்தார்.
வழமைபோல, மதியம் பாடசாலை முடித்து வீடு திரும்பிய மரிய எனஸ்ரினும் அவளது சகோதரியும் தோட்டத்தில் இருந்த தந்தைக்கு உணவை எடுத்துக் கொண்டு சென்றனர். இராசநாயகமும் பக்கத்து தோட்டத்தில் இருந்த பிரான்சிஸ்சும் உணவைப் பகிர்ந்து உண்டபின், கதைத்துக் கொண்டு ஓய்வாக தேட்டத்து மர நிழலில் உட்கார்ந்து இருந்தனர். சிறுமிகள் இருவரும், பெரியவர்களுக்க அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களின் தோட்டப்பகுதியை நோக்கி வந்த சிறிலங்கா இராணுவத்தினர் திடீரென சுற்றி வளைத்துக் கொண்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டனர். அங்கிருந்த நால்வரையும் காரணம் ஏதுமின்றி அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். வயோதிபரான ஜோசப் பிரான்சிஸ்சை பலமான சித்திரவதையின் பின்னர், கதறக் கதற வெட்டிக் கொலை செய்தனர். சிறுமி மரிய எனஸ்ரினாவை மோசமாகத் துன்புறுத்தி, மிருகத்தனமாக அவளது மார்பகங்களை வெட்டி எறிந்தனர். சற்று நேரம்வரை சந்தோஷமாய் கதைத்துக் கொண்டிருந்த அந்த நால்வரும் குற்றுயிரும் குலையுயிருமாக வலி தாளாது துடித்துக் கொண்டிருக்க, கொலைகார இராணுவம் அந்த இடத்தை விட்டு வெளியேறியது.
உருக்குலைந்த நிலையில் இருந்த அவர்களை, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டபோது, ஜோசப் பிரான்சிஸ் பிணமாகக் கிடந்தார். மருத்துவமனையை நெருங்க முன்னர் மரிய எனஸ்ரினின் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. மற்றைய இருவரும் தீவிர சிகிச்சையில் உயிர் தப்பினர்.
ஜோசப் பிரான்சிஸ்சின் உடல் சம்வம் நடைபெற்ற அதே இடத்திலும் மரிய எனஸ்ரின் உடல் மடு சேமக்காலையிலும் அடக்கம் செய்யப்பட்டது. சிங்கள இராணுவத்தின் இந்தப் படுகொலையால் பீதியடைந்த கிராமமக்கள் அப்பகுதியில் இருந்து வேறு இடங்களுக்குப் பாதுகாப்பு தேடி நகர்ந்தனர். கிராமம் சுடுகாடுபோல் இருண்டு போனது.
சிங்கள இராணுவத்தின் கொலை வெறிக்கு இரையாகிப் போன இந்த அப்பாவிகளை நினைவு கூறும் இந்நாளில் உயிரிழந்த அனைத்து மக்களுக்குமாக ஒரு நிமிடம் வணங்கவோம்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தங்களின் கருத்துக்களை பின்னுட்டலில் சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் இந்நாளில் கொல்லப்பட்ட விபரங்கள் இருப்பின் அவற்றையும் பின்னுட்டலில் சேர்த்து சிங்களத்தின் கோரசம்பவங்களை வெளிக்கொணர உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
0 கருத்துரைகள் :
Post a Comment