இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கும் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர்

இலங்கையின் நீதித்துறை குறித்து முதலைக்கண்ணீர் வடித்திருக்கின்றார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்தன சில்வா. சில விளக்கம், வியாக்கியானங்களையும் அவர் கொடுத்திருக்கின்றார். அவரது கருத்துக்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று மக்களுக்கு குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு தெரியவில்லை. அப்படி இருக்கின்றது அவரது விளக்கம்.

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சரிந்து செல்வதாக நீலிக்கண்ணீர் வடித்துள்ள அவர், "நீதி நிலை நாட்டப் படுவது மாத்திரம் அல்லாமல் நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்"" எனவும் தத்துவம் பேசியி ருக்கின்றார். அவரது இந்த வாசகத்தையே அவருக்குத் திரும்ப நினைவூட்டித் தாம் பிரதம நீதியரசர் பதவியை வகித்த காலத் தில் அந்தத் தத்துவத்தை சரிவரக் கைக்கொண்டாரா என்று அவரிடம் கேள்வி எழுப்ப விரும்புகின்றனர் தமிழர்கள்.

நாட்டின் நிறைவேற்றுத் துறையிடம் அதிகாரம் அளவு வரையறையின்றிக் குவிந்து கிடக்கின்றது. அதனால் எதேச் சாதிகாரப் போக்குத் தலைதூக்கியுள்ளது. நீதித்துறையின் உயர் அதிகாரிகளை நியமிப்பது முதற்கொண்டு சுதந்தரமாக, சுயாதீனமாக இயங்கவேண்டிய பல பதவிகள் வரை சகலவற் றுக்கும் தனக்கு விரும்பியவர்களையே தன்னிச்சைப்படி நிய மிக்கும் சர்வாதிகாரம் ஜனாதிபதியின் கைகளில் வீழ்ந்திருப் பதால் ஜனநாயக ஆட்சியின் வியாபகம் கேள்விக்கு உள்ளா கியிருக்கின்றது.

இந்த நிலைமையைப் போக்குவதற்காகவே அரசமைப் புக்கு 17 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக இணைந்து கொண்டு வந்து நிறைவேற்றின. ஆனால் தனக்குள்ள விசேட அதிகாரத்தை இலாவகமாகப் பயன்படுத்தி, அந்த 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பதன் மூலம் தமது எதேச்சாதிகார ஆளுகையைத் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நாட்டில் நீதியும், நியாயமும், நெறிமுறையான சட்ட ஆட் சியும், ஜனநாயகத்தின் உண்மையான வியாபகமும் மலர்ந் திருக்க வேண்டுமானால் அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் மேலும் தாமதப்படுத்தப்படாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. இதனை வலியுறுத்தும் விதத்தில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கூறும் கருத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் நியாயம் ஏதும் எம்மிடம் கிடையாது என்பதும் சரிதான்.

ஆனால், இலங்கையில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சரிந்து வருவதாக அவர் கவலைப்படுவதும், "நீதி நிலை நாட்டப்படுவது மாத்திரமல்ல, நீதி நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்." என அவர் தத்துவம் பேசு வதும்தான் சகித்துக் கொள்ளப்பட முடியாதவையாக இருக் கின்றன.

அதிர்ஷ்டவசமாக, அவர் அலங்கரித்த பிரதம நீதியரசர் பத வியில் இருப்பவரின் செயற்போக்கைப் பகிரங்கமாக விமர்சிப் பவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு இலங்கையில் இல்லை என்ற கவசம் அவருக்குக் கிட்டியமையால் அதை வைத்துக் கொண்டு அவர் ஆடவேண்டிய ஆட்டம் எல்லாம் ஆடி அரங் கேற்றிவிட்டுப் போய்விட்டார்.

இப்போது, அவர் முன்னர் வழங்கிய தீர்ப்புகள், உத்தரவுகள் குறித்து மீளாய்வு செய்யும் புதிய சட்டத்துறைப் போக்கு மலர்ந் திருக்கின்றது. நிதி, திட்டமிடல் அமைச்சு மற்றும் திறைசேரி ஆகியவற்றின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர விடயத்தில் அவர் கலைத்துக் கலைத்துக் கொடுத்த உத்தரவுகளும், பின்பு அவர் பதவியை விட்டு விலகியமையை அடுத்து, உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் கொண்ட ஆயம் அவரது முன்னைய உத் தரவுகளை ஆராய்ந்து, அதில் சிலவற்றை 6 1 என்ற அடிப் படையில் ரத்துச் செய்தமையும் மறக்கற்பாலவையல்ல.

இப்போது அவரது வேறு முக்கிய இரண்டு தீர்ப்புகள் தொடர்பில் லஞ்ச, ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டி ருக்கின்றன என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த இரு வழக்குகளில் ஒன்றின் வழக்குப் பதிவுகள் மாயமாக மறைந்துள்ளன என்றும் கூட உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆழிப்பேரலை அனர்த்தப் புனரமைப்புத் தொடர்பான பொதுக்கட்டமைப்பை செயலிழக்க வைத்தமை, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை ரத்துச் செய்தமை போன்ற முக் கிய தீர்ப்புகளை வழங்கிய பிரதம நீதியரசர் என்ற முறையில் இவர் விடயத்தில் தமிழர்களுக்குப் பெரும் ஆதங்கம் உண்டு.

அதுவும் முன்னைய நான்கு ஜனாதிபதிகளினால் சுமார் பத்தொன்பது ஆண்டுகளாக நீடித்து நடைமுறைப்படுத்தப் பட்ட தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் ஐக்கியத்தை ரத்துச் செய்து துண்டுபடுத்துகின்ற வழக்கை அவர் எவ்வாறு கையாண்டு தீர்ப்பு வழங்கினார், அதன் பின்னர் அந்த வழக்குத் தொடர்பில் அவர் எத்தகைய கருத்துக்களைப் பிரதிபலித்தார் என்பவற்றையெல்லாம் அவர் மறந்திருக்க மாட்டார் என்றே நம்புகின்றோம்.

வடக்கு கிழக்குப் பிரிப்பு தொடர்பான வழக்கில் தமிழர் தரப்பு தனது வாதத்தை முன்வைப்பதற்கே வாய்ப்பளிக்காமல் எதேச்சாதிகாரமாக வழக்கை முன்னெடுத்த முன்னாள் பிரதம நீதியரசர் இப்போது "நீதி நிலைநாட்டப்படுவது மாத்திமன்றி, நிலைநாட்டப் படுவது போல காட்டப்படவும் வேண்டும்" என வாய் பிளப்பதில் அர்த்தமில்லை. அந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த வழக்கில் குறைந்த பட்சம் தமிழர் தரப்பு தனது வாதத்தை முன்வைக்க அதை நீதிமன்றம் செவிமடுக்க ஒரு வாய்ப்பு அளித்திருந்தாலாவது அந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டதாகக் காட்டப்பட்டிருக்கும் என்பதே தமிழர் களின் பணிவான கருத்தாகும்.

இந்தத் தேசத்தில் சிங்களப் பண்பியல் கலாசாரத்தின் நீண்ட தொடர்ச்சியை அடிப்படையாக வைத்தே வடக்கு கிழக்கு மாகாணப் பிரிப்புக்கான தீர்ப்பைத் தாம் வழங்கினார் என்ற சாரப்பட பின்னர் குறிப்பிட்டதன் மூலம், தமக்கு அப் போது மனதில் ஆழப் பதிந்திருந்த உள் நோக்கத்தை வெளிப் படுத்தி, அந்தப் பிரிப்புக்காக அரசியல் இலாப உரிமையும் தமக் கேயுரியது என்ற தொனியில் தென்னிலங்கையிடமிருந்து அதைக் கோரும் வகையில் அவர் நடந்துகொண்டமையும் மறக் கக்கூடியதல்ல.

நீதித்துறை குறித்து அவர் இப்போது தத்துவம் பிளப்பது "யாரோ வேதம் ஓதுவது போல" "உருத்திராட்சப் பூனை போல" தோற்றுகின்றதே.......!

Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment