ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும்

இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியை கோட்பாட்டு அடிப்படையில் தங்களது பொது அரசியல் எதிரியாகக் கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேருவதை ஒரு பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றன. காலஞ்சென்ற பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயகா காலம் தொடங்கி அவரின் விதவை மனைவி திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மற்றும் மகள் திருமதி குமாரதுங்க காலகட்டம் ஊடாக இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலம்வரை அந்த நிலைமை தொடந்து கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இடையில் வந்த ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) ஆரம்பத்தில் பழைய இடதுசாரிக் கட்சிகளின் பாதையை நிராகரிப்பதாகக் கூறிக்கொண்டு தனியாக செயற்பட்டு வந்த போதிலும், பாராளுமன்ற அரசியலின் இயல்பான தன்மை காரணமாக நாளடைவில் தந்திரோபாயத்தை மாற்றுவதற்குத் தயங்கவில்லை.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் சில இடதுசாரிப் போக்குடைய கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் அமைத்துக் கொண்ட பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் 2004 ஆரம்பத்தில் ஜே.வி.பி. இணைந்து கொண்டதையடுத்து அந்தக் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்று பெயர் மாறிக் கொண்டது. 2004 ஏப்ரில் பொதுத் தேர்தலில் சுதந்திர முன்னணி வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்த போது ஜே.வி.பி.யின் தலைவர்களில் சிலரும் அமைச்சரவையில் அங்கம் வகித்தனர். ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவுடன் முரண்பட்டுக் கொண்டு ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போதிலும், சுதந்திர முன்னணி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. இடையில் 2005 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் ஜே.வி.பி.யினருக்கு எந்தவிதமான அசௌகரியமும் இருக்கவில்லை. அந்தக் கட்டத்தில் சுதந்திர முன்னணியில் ஜே.வி.பி.யினர் மீண்டும் இணைந்துகொள்ளவில்லையென்ற

போதிலும், ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் முன்னணியில் நின்று செயற்பட்டனர். அந்தத் தேர்தலில் தனது வெற்றிக்கு ஜே.வி.பி.யினர் முக்கிய காரணமாக இருந்தனர் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ அன்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க.வைத் தங்களது அரசியல் பரமஎதிரியாகக் கருதிய ஜே.வி.பி.யின் தலைவர்கள் மேற்குலக வல்லாதிக்க நாடுகளுக்குச் சார்பான அரசியல் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியதிகாரத்துக்கு வரவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர். ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமையிலான சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த ஜே.வி.பி.யினர் அந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முழுமையாக ஆதரிப்பதில் எந்தவிதமான சஞ்சலமும் இருக்கவில்லை. அரசாங்கம் போரை முழுமூச்சாகத் தீவிரப்படுத்துவதற்கான உந்துதலைக் கொடுத்தவர்களே தாங்கள்தான் என்று அவர்கள் உரிமையும் கோரிக் கொண்டனர். அரசாங்கத்துடன் கூடுதலான நெருக்கத்தைப் பேண வேண்டுமென்று விரும்பிய ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச போன்றவர்களின் போக்குக் காரணமாகக் கட்சி பிளவுபடவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இந்தக் கட்சிப் பிளவிற்குப் பிறகு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் எதிராக ஜே.வி.பி.யினர் முற்று முழுதாகவே திரும்பிவிட்டனர். இறுதியில் கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் ஐ.தே.க.வுடன் சேர்ந்து எதிரணிக் கட்சிகளின் பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்ததைக் கண்டோம். எந்த விக்கிரமசிங்கவை ஆட்சியதிகாரத்துக்கு வரவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி நின்றார்களோ அதே விக்கிரமசிங்கவுடன் ஒரே மேடையில் நின்று ஜே.வி.பி.யின் தலைவர்கள் ஜெனரலுக்காக வாக்குக் கேட்டார்கள். இலங்கை வரலாற்றில் முதற்தடவையாகப் பச்சைக் கொடிகளும் செங்கொடிகளும் ஒரே அரங்கில் அருகருகாகப் பறந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த போதிலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனியாகவே தங்கள் கட்சி போட்டியிடுமென்று தலைவர் சோமவன்ச அமரசிங்க உட்பட ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

ஆனால், இப்பொழுது அவர்கள் ஐ.தே.க.வுடன் சேர்ந்து ஜெனரல் பொன்சேகாவின் சின்னமான அன்னத்தின் கீழ் போட்டியிடுவதற்குத் தயாராயிருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியையடுத்து எதிரணிக் கட்சிகள் தடுமாற்றம் அடைந்திருக்கின்ற போதிலும் கூட, அவரின் கைதுக்கு எதிரான அரசியற் செயற்பாடுகளில் தொடர்ந்தும் தங்களது ஐக்கியத்தைப் பேணுகின்றனர். ஆனால், பொதுத் தேர்தல் விடயத்தில் அவர்கள் மத்தியில் கருத்தொருமிப்புக்கான வாய்ப்பைக்காண முடியவில்லை. தங்களது யானைச் சின்னத்திலேயே பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கடந்த வாரம் ஐ.தே.க.வினர் அவர்களது செயற்குழுவில் தீர்மானித்திருக்கிறார்கள். அதேவேளை, பொது முன்னணியொன்று அமைக்கப்பட்டு பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அதுதொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரத்தை செயற்குழு எதிர்க்கட்சித்தலைவர் விக்கிரமசிங்கவுக்கு அளித்திருக்கிறது.

ஐ.தே.க. தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த கட்சிகளின் மத்தியில் தொடர்ந்தும் இணக்கப்போக்கு பேணப்பட வேண்டுமென்பதை எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் பொதுத் தேர்தலுக்கான அணுகுமுறை தொடர்பில் கொண்டிருக்கும் முரண்பட்ட நிலைப்பாடுகள் அந்தத் தலைவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவையாக இல்லை.

தங்களது மணிச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டுமென்று ஏனைய எதிரணிக் கட்சிகளைக் கேட்கக் கூடிய அரசியல் அருகதை ஜே.வி.பி.க்கு இல்லை. ஆனால், ஐ.தே.க.வின் யானைச் சின்னத்தின் கீழ் தங்களால் போட்டியிட முடியாது என்பதை ஜே.வி.பி.யின் தலைவர்கள் பகிரங்கமாக அறிவிக்கவும் தவறவில்லை. இலங்கையில் மாறிக்கொண்டிருக்கும் அரசியல் கோலங்கள் மிகவும் விசித்திரமானவையாக இருக்கின்றன. பரமஎதிரியென்று கருதிய ஐ.தே.க.வுடன் சேர்ந்தாவது அடுத்த பாராளுமன்றத்தில் சில ஆசனங்களைப் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டிய பரிதாபகரமான அரசியல் சூழ்நிலையில் ஜே.வி.பி. இன்று இருப்பதைக் காண்கின்றோம். அதிகாரத்துக்கு வருவதற்கு அனுமதிக்கப்படக்கூடாதவர் என்று ஜே.வி.பி. தலைவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் கருதிய விக்கிரமசிங்கவின் தயவிலேயே அவர்களின் பாராளுமன்ற அரசியல் எதிர்காலம் தங்கியிருக்கின்ற நிலை! செஞ்சட்டையைத் தவிர ஜே.வி.பி.யினரிடம் நாம் எந்தவிதமான இடதுசாரிக் குணாதிசயத்தையும் கண்டதில்லை. நேரிய அரசியல் மார்க்கத்தைக் கடைப்பிடிக்காதவர்களின் சீரழிவுக்கு ஒரு பிந்திய உதாரணம் ஜே.வி.பி.!

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment