வேட்பாளர் நியமனம் தொடர்பாக தமிழ்க்கூட்டமைப்பு இந்தவாரம் தீர்மானம் ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை

பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வடக்கு,கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் இரகசிய சந்திப்புகளிலும் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்ற போதும் இந்த வாரம் நடுப்பகுதியிலேயே உறுதியான நிலைப்பாடு வெளியிடப்படுமென்று தெரியவருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர்கள் வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பிலான மாவட்ட ரீதியிலான கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் இரண்டொரு தினங்களில் தீர்மானிக்கப்படுமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

அதேநேரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் எவரை நியமிப்பது என்பது தொடர்பாகத் தேர்தல் நியமனக்குழுஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய், புதன்கிழமைகளில் அவர்கள் கூடி ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் தேர்தல் நியமனக்குழுவில் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தேர்தல் நியமனக்குழுவினரே பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவோர் தொடர்பாகக் கூடி ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை வெளியிடுவார்கள் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி நிலைப்பாடு இந்த வாரம் நடுப்பகுதியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன் கருதி செயற்படுகின்ற ஏனைய அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் ஒன்றுபட்டு செயற்படுவதையே நாம் விரும்புகின்றோம். அது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடனான சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு உடன்பாடும் காணப்படவில்லை.

எம்முடன் இணைந்து செயற்பட முன்வருகின்ற எவருடனும் நாம் ஒன்றுபட்டுத் தமிழ் மக்களின் நலன்கருதிச் செயற்பட தயாராகவேயுள்ளோம்.அதேநேரம் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட (முன்னாள்) பாராளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் எமது கட்சியின் கோட்பாடுகளை மீறி ஜனாதிபதித் தேர்தலில் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளனர்.

கட்சியின் கட்டுக்கோப்பை மீறிச்செயற்பட்ட இவர்களை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தன்

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுடன் தேர்தல் உடன்பாடு தொடர்பாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்)த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதுதமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமல்ல ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் தேர்தல் உடன்பாடு தொடர்பாகச் சந்திப்புகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம்.தேர்தல் உடன்பாடு என்பதற்கு அப்பால் எதிர்காலத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான ஐக்கியத்துடன் செயற்படும் ஜனநாயகச் செயற்பாடே அவசியமாகும்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான உடன்பாடு என்பது தற்காலிகமான ஒன்றாகும். ஆனால் எமது மக்களின் அரசியல் உரிமைகளை முழுமையாக வென்றெடுப்பதற்கான ஒருமித்த கருத்துள்ள நிலைப்பாட்டை அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும். இதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா) தலைவர் தி.ஸ்ரீதரன் எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாகத் தெரிவிக்கையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.வடக்கின் தற்போதைய அரசியல் சூழலுக்கு எற்பவும் கிழக்கின் நிலைமைகளுக்கு ஏற்பவும் நாம் செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரான இரா.துரைரட்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.அதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், செல்வி க.தங்கேஸ்வரி, த.கனகசபை ஆகியோர் இம்முறையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை திருகோணமலை மாவட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராய பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், துரைரெட்ணசிங்கம் ஆகியோர் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment