காலம் செய்த கோலம்

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களைத் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ஜெனரல் ஹவுஸுக்கு விருந்துபசாரத்துக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போர் தீவிரமடைந்திருந்த இறுதி இரண்டு வருடங்களினதும் ஆரம்பத்தில் விருந்துபசாரங்களின்போது ஜெனரல் பொன்சேகா வேதாளாம் ஒன்று புலியை மடக்கிப் பிடித்து வைத்திருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட மேலங்கியை அணிந்த வண்ணம் ஊடகவியலாளர்களுடன் போர் நிலைவரங்கள் பற்றி கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

2008 ஜனவரி விருந்துபசாரத்தின் நடுவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் போரை இலங்கை இராணுவத்தின் அடுத்த தளபதிக்கு விட்டுச்செல்லப் போவதில்லை என்றும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளாகவே போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிடப்போவதாகவும் சூளுரைத்தார். 2009 ஜனவரியில் ஜெனரல் ஹவுஸில் ஊடகவியலாளர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்துபசாரம் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியதன் பின்னர் இடம்பெற்றது. அந்த வைபவத்திலும் அதே மேலங்கியுடன் காணப்பட்ட ஜெனரல் பொன்சேகா அடுத்த இராணுவத் தளபதியிடம் போரை ஒப்படைக்கப்போவதில்லை என்று மீண்டும் சூளுரைத்ததுடன் அடுத்த தடவை விருந்துபசாரத்தின் போது தன்னை அந்த மேலங்கியுடன் காணமுடியாது என்றும் அதை இனிமேல் அணியப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.

2010 ஜனவரியில் அவர் ஊடகவியலாளர்களை ஜெனரல் ஹவுஸில் சந்திக்கக் கூடியதாக இருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிக் கட்சிகளின் பொது வேட்பாளராகக் கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றிலேயே ஊடகவியலாளர்களுக்கு அவர் விருந்துபசாரத்தை அளித்தார். வேதாளம் புலியை மடக்கிப் பிடித்துவைத்திருக்கும் உருவம் பொறித்த மேலங்கியுடன் ஜெனரலை கண்டிருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் ஹோட்டல் வைபவத்தில் கடந்த இருதடவையும் விருந்துபசாரங்களின் போது தாங்கள் கண்ட காட்சியையும் அவர் செய்த சூளுரையையும் நிச்சயமாக மனக்கண்முன் கொண்டுவந்திருப்பார்கள். ஜெனரல் பொன்சேகா தான் கூறியவாறே போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுவைக்காமல் தனது பதவிக்காலத்துக்குள்ளேயே அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஆனால், தனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதியாகப் பதவியேற்கக் கூடியவர் தன்னைக் கைது செய்து தடுத்துவைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிப்பார் என்று ஜெனரல் கனவிலும் நினைத்திருப்பாரா? சுமார் மூன்று தசாப்தகாலப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்த போர் வெற்றி நாயகன் என்று சிலமாதங்களுக்கு முன்னர் போற்றப்பட்ட அவர் பதவியில் இருந்தபோது மோசடிகளில் ஈடுபட்டதாகவும் சகலவற்றுக்கும் மேலாக இராணுவக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகவும் தற்போது குற்றஞ்சாட்டப்படுகிறார்.

நான்காவது ஈழப்போர் காலகட்டத்தில் தான் இலங்கையில் முன்னென்றும் இல்லாத வகையிலான படுமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல் போதல் மற்றும் நீதி விசாரணைகளுக்குப் புறம்பான கொலைகள் என்று இன்னோரன்ன கொடுமைகளினால் பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக நின்றன. தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நேர்ந்த கதியை அறியாது புலம்பிய அக்குடும்பங்களுக்கு சர்வதேச சமூகத்திடம் முறையிடுவதைத் தவிர வேறு மார்க்கம் எதுவுமேயிருக்கவில்லை. அதுவும் கூட பயன்தரவில்லை. இராணுவத்தினரால் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கணவர் எங்கே தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டறிய உதவுமாறு திருமதி அனோமா பொன்சேகா செய்தியாளர் மகாநாட்டில் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. (ஜெனரல் பொன்சேகா கொழும்பில் கடற்படை முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை மனைவியும் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவும் சந்தித்ததாகவும் பின்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.) தனது கணவரைக் கைது செய்யும் போது இராணுவ அதிகாரிகள் மூன்று தசாப்த காலப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் அவர் வகித்த பிரதான பாத்திரத்திற்கு மதிப்பளித்தாவது கண்ணியமாக நடத்தவில்லை என்று புலம்பிய திருமதி பொன்சேகா கணவர் கைது செய்யப்பட வில்லை, கடத்தப்பட்டார் என்று குறிப்பிட்டார். இதுவா ஜனநாயகம் என்று கேள்வி யெழுப்பிய அவர் "இன்று நான் துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அதேபோன்று நாளை ஏனைய பெண்களுக்கும் எனது நிலைமை ஏற்படக்கூடும். இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராட என்னுடன் அணிதிரளுங்கள் என்று தாய்க்குலத்துக்கு அறைகூவல் விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

2009 மே நடுப்பகுதியில் போர் முடிவடைந்து தென்னிலங்கையில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது கணவரை நாடு போற்றிப் புகழுவதைக் கண்டு பூரித்து நின்ற திருமதி பொன்சேகா ஒரு வருடகாலத்திற்குள் கணவருக்கும் தனக்கும் இந்த நிலைவருமென்று கனவிலும் நினைத்திருப்பாரா? போர் வெற்றிக்குப் பிறகு இலங்கையின் முதலாவது நான்கு நட்சத்திர ஜெனரலாக பதக்கம் சூட்டப்பட்ட ஜெனரல் பொன்சேகா இன்று தன்னைச் சூழ்ந்திருக்கும் இடர்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை எதிர்பார்த்து நிற்கும் நிலைமை! "நம்பிக்கைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த தன்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யுங்கள் என்று தேர்தல் பிரசாரங்களின் போது நாட்டு மக்களைக் கேட்ட ஜெனரல் பொன்சேகாவின் வாழ்வில் அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத "விபரீதமான மாற்றம் அல்லவா ஏற்பட்டிருக்கிறது. காலம் செய்த கோலம்!


தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment