பொன்சேகா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குழப்பம்


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை நாட்டில் பலத்த சர்ச்சைகளையும், பதற்றத்தையும் தோற்றுவித்திருக்கின்றது என்பது மறைக்கப்பட மறுக்கப்பட முடியாத உண்மை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பதினெட்டு லட்சத்துக்கும் கூடிய அதிகப்படியான வாக்குகளினால் வெற்றிபெற்றுவிட்டோம் என்ற அதீத நம்பிக்கை காரணமாக இறுமாப்புடன் அரசுத் தலைமை நடந்துகொள்வது உகந்ததல்ல. அப்படி செயற்பட எத்தனிப்பது முறையற்றது.

இவ்வளவு அதீத அதிகப்படியான வாக்குகளை நாம் பெற்றுள்ளோம் என்பதால் எங்களை எவருமே அசைக்கவே முடியாது எனக் கருதி அரசுத் தலைமை செயற்படுமானால், அத்தகைய செருக்குத்தனத்துக்கு மக்கள் உரிய "செக்மேட்' வைப்பதற்கும் தயங்கமாட்டார்கள் பின்நிற்கமாட்டார்கள் என்பதை அதிகாரபீடத்தில் உள்ளோர் உணர்ந்துகொள்ளத் தவறுதலாகாது.

அதற்கான சந்தர்ப்பத்துக்கு நாட்டு மக்கள் நீண்டகாலம் காத்திருக்கவேண்டியதில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே அவர்களுக்கு அத்தகைய அருமையான வாய்ப்பு காத்திருக்கின்றமையையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

இராணுவப் பொலிஸாரால் மடக்கிக் கொண்டுசெல்லப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என அரசுத் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், அவர் இழைத்த குற்றம் என்ன வென்பது தொடர்பில் தொடர்ந்து குழப்பமே நிலவுகின்றது. அவரைக் கைது செய்த அரசுத் தரப்புக்குள்ளிருந்தே ஒன்றுக் கொன்று வேறுபாடான கருத்துகளும், தகவல்களும் வெளி வருகின்றமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

இராணுவத் தளபதியாக இருந்தபோது, மோசடி நடவடிக்கைகளில் பொன்சேகா ஈடுபட்டார் என்கின்றது இராணுவ இணையத் தளம்.இராணுவச் சதிப் புரட்சிக்கு முயன்றார் என்றும், ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தவர்களையும் கொல்லச் சதி செய்தார் என்றும் பிற அதிகாரபூர்வ வட்டாரங்கள் சில கூறுகின்றன.

தேசியப் பாதுகாப்புச் சபையின் இரகசியங்களை எதிரணிக்கு வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டும் இப்போது அவர் மீது முன்வைக்கப்படுகின்றது.தவிரவும், நாட்டைக் காட்டிக்கொடுத்தார், விடுதலைப் புலிகளின் கைகளிலிருந்து நாட்டை மீட்ட படையினருக்குத் துரோக மிழைத்தார் என்றெல்லாம் கூட குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரில் தொடங்கி, பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல, தேசியப் பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல, இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, அமைச்சரவையின் பேச்சாளர்கள் என்று இவ்விடயத்தில் பலரும் பலவிதமான விடயங்களை முன்வைத்து வருகின்றனர். போதாக்குறைக்கு ஜனாதிபதியுடனும் அரசுடனும் ஒட்டிக்கொண்டு நிற்கும் விமல் வீரவன்ஸ போன்ற தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் கூட அவ்வப்போது புதிது புதிதாக வெல்லாம் குற்றச்சாட்டுகளை அவிழ்த்து விட்டபடி உள்ளனர்.

இதனால் குழப்பமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும். மேலும் ஜெனரல் பொன்சேகா இராணுவச் சட்டங்களின் கீழ், இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதற்காகவே இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகின்றது. அதுவும் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற ஒருவரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் இராணுவச் சட்டங்களின் கீழ் கைது செய்யமுடியும் என்றும் விளக் கப்படுகின்றது.

ஆனால் இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒரு முக்கிய அம்சத்தைச் சுட்டிக்காட்டுகின்றார்.அதாவது, இராணுவச் சட்டம் இராணுவ சேவையிலிருக் கும் அல்லது சேவையிலிருந்த ஒருவருக்கே பொருந்தும். கடந்த ஜூலை 15ஆம் திகதி இராணுவத் தளபதிப் பதவியிலிருந்து பொன்சேகா விலகி ஏற்கனவே ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. கடைசியாக அவர் வகித்த முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரி என்ற பதவித்தரம் இராணுவச் சட்டங்களுக்கு உட்பட்ட தல்ல. எனவே, அவரை இப்போது இராணுவச் சட்டங்களின் கீழ் கைது செய்ய முடியாது என ரணில் வாதாடுகின்றார்.

அத்தோடு "பாதுகாப்புக் கவுன்ஸில்' என்ற கட்டமைப்பு அரசமைப்புக்கு உட்பட்டு ஸ்தாபிக்கப்பட்டதல்ல. ஆகவே அதன் இரகசியங்களை எதிர்க்கட்சியினருக்குத் தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொன்சேகாவைக் கைது செய்யமுடியாது என்றும் ரணில் விக்கிரமசிங்க தமது வாதத்தை முன்வைக்கின்றார்.

பாதுகாப்புக் கவுன்ஸில் என்பது ஜனாதிபதி மட்டுமல்லாமல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் போன்ற அரசியல் பிரமுகர்களும் கலந்துகொள்ளும் கட்ட மைப்பாகும். அத்தகைய அரசியல்வாதிகள் இன்று ஆளும் தரப்பிலும் நாளை எதிர்க்கட்சிகளுக்கும் மாறக்கூடியவர்களாவர். அதற்கான அரசியல் உரிமைகள் அவர்களுக்கு உண்டு. அத்தகையோரைப் பாதுகாப்புக் கவுன்ஸிலில் வைத்துக்கொண்டு பாதுகாப்புக் கவுன்ஸில் இரகசியங்களை எதிரணியினருக்கு வெளிப்படுத்தி விட்டார் என்று ஓர் அதிகாரி மீது குற்றம் சுமத்துவது எவ்வளவு தூரம் வலிமையுடையது நியாயமானது என்பது சிந்திக்கத் தக்கதே.

மேலும், நாட்டுக்காகப் போராடிய படைகளையும் சிப்பாய்களையும் பொன்சேகா காட்டிக் கொடுத்து நாட்டுக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்றும் குற்றம் சுமத்தப்படுகின்றது.அப்படி அவர் குற்றம் இழைத்து விட்டார் என்று கூக்குரலிடுவதன் மூலம், சர்வதேசத்திடம் காட்டிக் கொடுக்கக்கூடிய பெரும் குற்றம் அல்லது குற்றங்கள் படைத் தரப்பினால் இழைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குற்றம் சுமத்துபவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும். பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் மூடிய அறைக்குள் இராணுவ நீதிமன்றத்தின் முன் நடக்காமல், பகிரங்கமாக நடக்குமானால் அந்த உண்மை கூட அம்பலமாகும். ஆனால் அப்படிவெளிப்படையாக விசாரணை செய்வதற்கான திராணி அரசுத் தரப்புக்கு இல்லை என்பதும் நிஜமே.

ஒட்டு மொத்தத்தில் ஜெனரல் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் முழுக் குழப்பங்களுக்கும் மூலவிடங்களாகவே உள்ளன என்பது அப்பட்டமானது.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment