எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்: இரா. சம்பந்தன்

அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறு. எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவுடன் யுத்தச் சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை.

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருமலையிலுள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைரட்ணசிங்கம் தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மேலும் பேசிய ஆர். சம்பந்தன் கூறியதாவது,

நாங்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம், மாவட்ட ரீதியாக மக்களால் முன்மொழியப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக எமது கட்சியின் உயர்பீடம் கொழும்பிலே வரும், செவ்வாய், புதன்கிழமை கூடி பிரதிநிதிகளை உறுதிசெய்யவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக எமது கட்சியை விட்டு மக்களைப் பிரிக்க அரசு பல்வேறு சதிகளை செய்துவருகிறது. அதனையிட்டு நாம் கவலையடையவில்லை. நாம் எமது மக்களின் கோரிக்கையில் உறுதியாகவுள்ளோம். நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.

நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம். அந்தக் காலத்தில் 94 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்பட்டு விட்டன.

ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியினரும் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு இணங்கவேண்டும் என்பது முடிவாகியிருந்தது, ஆனாலும் அவை துரதிஷ்டவசமாக கைகூடவில்லை. ஆனாலும் நாம் மக்களின் கோரிக்கையை அரசியல் உரிமைகளைத் தாரை வார்த்து ஒருபோதும் செல்ல மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்திச் செல்லவில்லை.

இந்தியாவில், பிரான்ஸில், சுவிட்சர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள். அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுயநிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.

அவற்றைப் பெற்றுக்கொள்ள நாம் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சாத்வீகமாக போராடவும் தயங்கமாட்டோம். சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்.

தந்தை செல்வா ஒரு காலத்தில் தெரிவித்தார், தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் சிங்களத் தலைமைகள் இந்த நாட்டில் தோன்றவில்லை. ஆனால் அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

நான் இங்கு வர முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசித்தான் வந்தேன். இத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒற்றுமையாகவுள்ளோம். அண்மையில் கல்முனையில் என்னை முஸ்லிம் மக்கள் கௌரவித்தார்கள். இது தந்தை செல்வாவினால் வளர்த்து வரப்பட்ட இக் கட்சியின் கொள்கைக்கு கிடைத்த பாராட்டாகும்.

இன்று ஜனாதிபதி சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளார். அதனால், ஜனாதிபதி ஆட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று எமது தமிழ்பேசும் மக்களும் முழுமையான வாக்களிப்பைச் செய்து மக்களின் அந்த அதிகாரத்தை தரவேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளை கோரிக்கைகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடம் உரத்துக் கேட்க முடியும், நீங்கள் அளிக்கும் அதிகப்படியான வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வித உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நீங்கள் தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும். அரசின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது. அதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை கடந்த தேர்தலில் காட்டியுள்ளனர்.

இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன், ""விவேகமாக ஆளும் கட்சியுடன் சேர்ந்துதான் அடிமைகளாகி என்றாலும் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என எவராவது சிந்தித்தால் அது தவறான வழியாகும்'' நாம் கடும் போக்கைச் சிந்திக்காமல் தொடர்ந்து செயற்பட்டு எமது தீர்வை பெறுவோம், அதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. இருந்த பிராபாகரனை காப்பாற்ற வாக்கில்லாத சம்மந்தர் இப்ப பத்து பிரபாகரன் பற்றி கதைக்க என்ன தகுதி இருக்கின்றது. இவருக்கு பிராபாகரன் என்ற பெயரை உச்சரிக்கவே தகுதி இல்லை என்பதை இந்தியாவின் கைப்பொம்மையான சம்மந்தர் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete