ஐக்கியப்பட்ட தமிழர் தலைமை தேர்தல் மூலம் தெரிவாகவேண்டும்

இது பொதுத் தேர்தல் காலம்.இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை மிக முக்கியமான காலகட்டம் இது.இலங்கைத் தீவில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் வரலாற்றுத் திருப்பு முனையில் இப்போது நிற்கின்றது.

இலங்கைத் தீவில் ஆட்சியதிகாரம் பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியிலிருந்து விடுபட்டு தென்னிலங்கைச் சிங்களப் பெரும்பான்மையிடம் கைமாறிய பின்னர், தங்களின் வரலாற்று ரீதியான உரிமைகளை நீதி நியாயமான அபிலாசைகளை கௌரவமான வாழ் நிலையை வேண்டி பல்வேறு வழிகளிலும் இலங்கைத் தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் மூர்க்கத்தனமாக முறியடிக்கப்பட்ட ஒரு நெருக்கடியான சமய சந்தர்ப்பம் இது.

தமிழர்களினாலே முதல் மூன்று தசாப்தங்கள் அஹிம்சை வழியில் அறநெறிப் பாதையில் காந்திய மார்க்கத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களும் அடுத்த மூன்று தசாப்தங்களும் அறநெறியிலும் ஆயுத வழியிலும் நடத்தப்பட்ட இரு துருவமயப்பட்ட போராட்டங்களாலும் பெரும்பான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் ஆட்சி அதிகாரத்தினால் ஆயுத அதிகார வலிமை கொண்டு அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு பின்புலத்திலே பொதுத்தேர்தல் என்ற முக்கிய நிகழ்வு இப்போது அரங்கேறப்போகின்றது.

தமிழர்கள் மத்தியில் ஐக்கியப்பட்டு ஒருமைப்பட்டு கிடந்த அரசியல் சக்திகள் இப்போது சின்னா பின்னமாகிச் சிதறிக்கிடக்கும் ஒரு சூழலில் இந்தப் பொதுத் தேர்தல் தமிழர் தாயகம் மீதும் திணிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் பெருவெற்றியீட்டி தமிழர் தேசம் உட்பட்ட முழு இலங்கைத் தீவு மீதுமே தன்னுடைய மேலாதிக்க அதிகாரத்தை வலிமையாகத் தூக்கி நிலை நிறுத்தியுள்ள அதிபர் மஹிந்த ராஜபக்ஷ , இந்தப் பொதுத் தேர்தலின் பின்னர் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தேசிய இனப் பூசலுக்குதீர்வுத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போகின் றார் என்று அறிவித்திருக்கின்றார்.

தமிழர்களுக்கு நியாயமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் விருப்பமும் மன எண்ணமும் அவருக்கு இல்லா விட்டாலும் சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றுவதற்காக வேனும் அத்தகைய திட்டம் என்ற பெயரில் ஏதேனும் உப்புச் சப்பற்ற ஒரு கட்டமைப்பை அவர் பிரேரிப்பார் என்பது எதிர்பார்க்கப்படுகின்ற விடயம்தான்.

இந்தப் பின்புலத்தளத்தில்தான் இப்போதைய பொதுத் தேர்தல் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாகின்றது.சிறுபான்மையினரான தமிழ் பேசும் மக்களைப் புறக்கணித்து, ஒதுக்கி இலங்கைத் தீவின் இரண்டாந்தரப் பிரசைகளாக்கும் பிரதான இரு சட்டங்கள் 1972 இலும் 1978 இலும் கொண்டுவரப்பட்டன.

இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் அரசமைப்பு என்ற பெயரில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ தலைமையிலான அரசினாலும், பின்னர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான அரசினாலும் சிறுபான்மையினத்தவர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளைப் புறக்கணித்து அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் புதிய அரசமைப்புக்கள் என்ற பெயரில் ஒரு தலைப்பட்சமாகக் கொண்டு வரப்பட்டு தமிழர்கள் தலை மீதும் வல்வந்தமாகத் திணிக்கப்பட்ட அந்தச் சட்டங்களை அப்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு நின்று எதிர்த்தன. தமிழர்களின் இசைவின்றி இணக்கமின்றி அவர்களின் தலைமீது பெரும்பான்மைச் சிங்களவர்களினால் அச்சட்டங்கள் பலவந்தமாகத் திணிக்கப்பட்டன என்பதை உலகுக்கு சர்வதேச சமூகத்துக்கு உறுதியாக வெளிப்படுத்த அப்போதைய தமிழ்த் தலைமைகள் தவறவில்லை.

இப்போதும் கூட, தான் விரும்பும்தான் பிச்சை போல தமிழர்களுக்குத் தூக்கி வீசும்திட்டம் ஒன்றை அதிகாரப் பகிர்வு வடிவமாகச் சர்வதேசத்துக்குக் காட்டிகொண்டு வருவதன் மூலம் தன்னை நியாயவாதியாக வெளிப்படுத்திக் கொள்ள மஹிந்த நிர்வாகம் எத்தனிக்கும் என்பது எதிர்பார்க்கப்படுவதே.

நீர்த்துப்போன உப்புச்சப்பற்ற தனது தீர்வுத் திட்ட யோசனையை நடைமுறைக்குக் கொண்டு வரவும் அதற்குத் தமிழர்களின் ஆதரவும் கூட இருக்கின்றது என்று உலகுக்கு காட்டவும் தமிழர் தரப்பில் சில எம்.பிக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்குத் தேவைப்படும் இச்சமயத்திலேயே இத்தேர்தல் வந்திருக்கின்றது.

இந்தப் பொதுத்தேர்தலில் தற்சமயம் சிங்கள மக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்குக் கொண்டிருக்கும் மஹிந்த தரப்புக்கு குறைந்த பட்சம் 130 எம்.பிக்களாவது கிட்டுவர் எனப் பொதுவாகக் கணக்கிடப்படுகின்றது.

அதுதான் நிலைமை என்றால் தீர்வுத்திட்டம் என்ற பெயரில் தாம் முன்னெடுக்கும் யோசனைக்கு ஏற்ப அரசமைப்பை மாற்றுவதற்கும் அந்த யோசனைத் திட்டத்துக்கு தமிழர்களின் ஆதரவு உள்ளதாக சகலருக்குக் காட்டுவதற்கும் தமிழ் எம்.பிக்களை வலை வீசிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் அரசுத் தரப்புக்கு ஏற்படும் என்பது இலகுவாகவே புரிந்து கொள்ளத் தக்கதே.

1972,1978 அரசமைப்புகள் நிறைவேற்றப்பட்ட போது தமிழ் தலைமைகள் உறுதியாக நின்று தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ்மக்களின் உள்ளக்கிடக்கையை உண்மை நிலையை வெளிப்படுத்தியமை போல இப்போதும் தமிழர்கள் தரப்பில் உறுதியான தெளிவான ஐக்கியப்பட்ட அரசியல் தலைமை இத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது தெரிவுசெய்யப்படுவது தமிழர் சமூகத்தைப் பொறுத்தவரை காலத்தின் கட்டாயம் ஆகின்றது. இதற்காகத் தான் ஐக்கியப்பட்ட கட்டமைப்பு ரீதியாக ஒருங்கமைந்த சரியான அரசியல் தலைமைத்துவம் கொண்ட தமிழர் பிரதிநிதிகளைத் தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

விலைபோகும் அரசியல் தலைமைகளையும், சுயேச்சைக் குழுக்கள், உதிரிகள் என்று சமூகத்தைப் பலவீனப்படுத்தும் எண்ணத்துடன் சாதி, தொழில் வகைப்பாடு என்ற அடிப்படைகளை வைத்துக்கொண்டு தேர்தல் களத்துக்கு வருவோரையும், நிராகரித்து ஒதுக்கவேண்டிய கட்டாய தேவை தமிழர்களுக்கு உண்டு.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment