'சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சி முறை ஒன்று மீண்டும் எழுகின்றது' - உலகு கவனிக்க வேண்டும் என்கிறார் பிரித்தானிய கொள்கை வகுப்பாளர்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது அனைத்துலக சமூகத்தால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததன் மூலம் நாட்டின் விருப்பத்தைத் தான் பூர்த்தி செய்தார் என சிறிலங்கா குடியரசு அதிபர் கடந்த வியாழக்கிழமை, நாட்டின் சுதந்திர நாள் அன்று கூறியிருந்தார்.

“வெளிநாடுகளுடனான உறவுகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும்” எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதே சமயத்தில், குடியரசு அதிபர் தேர்தலைத் தொடர்ந்து எதிரணி ஆதரவாளர்களும் ஊடகங்களின் பிரதிநிதிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் [Amnesty International and Human Rights Watch] ஆகியன அண்மையில் அறிக்கையிட்டுள்ளன.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தனது முன்னாள் தளபதியைத் தோற்கடித்து மகிந்த ராஜபக்ச பெரும் வெற்றி பெற்றார். ஆனால், அது முறைகேடான தேர்தல் என எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று கூறுகிறார் அனைத்துலக நெருக்கடிக் குழுவின் சிறிலங்கா திட்டப் பணிப்பாளர் அலன் கீனன் [Alan Keenan, Sri Lanka project director at the International Crisis Group].

“தேர்தல் சமயங்களில் தம்மை எதிர்க்கத் துணிந்தவர்களைப் பழிவாங்குவது சிறிலங்காவின் நீண்ட காலப் பாரம்பரியமாக இருக்கின்றது” எனச் சொல்கிறார் அவர். “பல தசாப்தங்களாக இப்படி நிகழ்ந்து வருகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

2005-இல் பதவியைப் பொறுப்பேற்றது முதல் ராஜபக்சவின் ஆட்சியுடன் இணைந்தே சிறிலங்கா அரசின் நகர்வுகளும் அமைந்துள்ளன எனச் சொல்கிறார், பிரித்தானியாவின் கொள்கை வகுப்பு இல்லமான சதம்-இல் ஆசியப் பிரிவில் பணியாற்றும் சாருலதா ஹொக் [Charu Lata Hogg, associate fellow in the Asia program of British think tank Chatham House].

“2005-இல் ராஜபக்ச முதன் முதலில் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து சிறிலங்கா அரசு மீதான விமர்சனங்கள் அனைத்தும் கடும் எதிர் தாக்குதலுக்கு உள்ளாவது அதிகரித்து வந்துள்ளது. இதன் மூலம் நாம் பார்க்கக் கூடியது என்னவென்றால், சர்வாதிகார ஆட்சிமுறை ஒன்று அங்கு மீண்டும் எழுகின்றது என்பதைத் தான்” என்றார் சாருலதா ஹொக்.

இவ்வாறு எழுதியுள்ளார் ஜேர்மனிய மனிதார்ந்த விவகார ஆய்வாளரான Sabina Casagrande. அதனை இங்கு புதினப்பலகை-க்காகத் தமிழாக்கம் செய்தவர் ரி. ரேணுபிறேம்.

Sabina Casagrande தொடர்ந்து எழுதியுள்ளதாவது:

கைவிடப்பட்ட வாக்குறுதிகள்

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படும் என்றும், குடியரசுத் தேர்தல் பரப்புரையின் போது ராஜபக்ச வாக்குறுதி அளித்திருந்தார்.

கடந்த சில வருடங்களில் எதிரணி அரசியல் பரப்புரையாளர்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

“உண்மை என்னவென்றால், தேர்தலுக்கு முன்னர் ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகள் எல்லாம் ஒரு சிட்டிகை அளவு உப்பை அப்படியே உதறித் தள்ளுவது போன்று காற்றோடு போய்விடும் என்பது தான். ஏனெனில் எந்த ஒரு உண்மையான விசாரணைகளும் அரசின் உயர் பதவிகளில் இருப்பவகளை நோக்கி எழக் கூடிய நிலையே காணப்படுகிறது. எனவே இத்தகைய விசாரணைகளின் மூலம் உண்மையான பயன் கிடைக்கும் என எதிர்பார்ப்பதற்கு சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு” என அடுக்குகிறார் ஹொக்.

தேர்தல் பழிவாங்கல்கள் தொடர்பான சிறிலங்காவின் வரலாறு எப்படி இருந்த போதிலும், இந்த முறை அதற்கான உண்மையான காரணங்கள் எதுவும் அங்கில்லை எனக் குறிப்பிடுகிறார் சாம் சபிரி. அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய–பசுபிக் பிராந்திய இயக்குநர் அவர் [Sam Zafiri, Amnesty International's Asia Pacific director]. தமிழ்ப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்ட பின்னர், நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டிய சட்டபூர்வ அரசியல் தேவை ராஜபக்சவிற்கு உள்ளது என்பது அவரது கருத்து.

“அந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தக்கூடிய, எதிர்பார்க்கப்படாத மிக அரிய சந்தர்ப்பம் ஒன்று அவருக்குக் கிடைத்துள்ளது. நாங்கள் மனித உரிமைகளை ஆர்வமாக ஏற்றுக் கொள்வோம் என சிறிலங்கா தெரிவிக்க வேண்டிய தருணம் இது. அதற்குப் பதிலாக ராஜபக்ச தனது சர்வாதிகாரத்தை இன்னும் வலுவாக நிலைநாட்டுகிறார். இது உண்மையிலேயே எச்சரிக்கைக்குரியது” என விளக்கினார் சாம் சபிரி.

வலுவான அனைத்துலக முயற்சிகள் தேவை

சிறிலங்காவின் கடந்த கால மனித உரிமைகள் நிலைமைகள் பற்றி மேற்கு நாடுகள் நுணுகி ஆராய்ந்து வந்தாலும் இந்த விடயத்தில் அவை இன்னும் அதிகமாகச் செயலாற்றுவதற்கான வலு அவற்றிடம் இருக்கிறது என்கிறார் ஹொக்.

“செயற்படுத்தக்கூடிய வகிபாகம் ஒன்று அனைத்துலக சமூகத்திடம் இருக்கிறது. அதனால் சிறிலங்கா மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். ஆனால், இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், அதனைச் செய்வதற்கு அனைத்துலக சமூகத்திடம் விருப்பமும் பற்றுறுதியும் இருக்கிறதா என்பதுதான்” என மேலும் கூறுகிறார் அவர்.

மேற்குடனான தனது சட்டபூர்வ உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது சிறிலங்கா எனச் சொல்லும் ஹொக், வர்த்தகத்துடன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான உதவிகள் இரண்டுமே அதன் மீது அழுத்தங்களைக் கொடுப்பதற்கு உதவும் எனவும் கருதுகிறார்.

“ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் சிறிலங்காவிற்கு ஆழமான உறவு தேவையாக இருக்கிறது. சிறிலங்காவில் காணப்படும் மனித உரிமைகள் நிலைமையில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடிய வகையில், தம்மில் தங்கி இருக்கும் சிறிலங்காவின் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடிய ஆற்றல் மேற்கு நாடுகளுக்கு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் ஹொக்.

ஆனால், மேற்கு நாடுகளும், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புக்களும் சிறிலங்காவில் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரையறைகள் உள்ளன எனக் கீனன் சொல்கிறார். இருந்தாலும், வருடாந்தம் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் பல மில்லியன் டொலர் நிதி உதவி இந்த விடயத்தில் கவனத்திற்குரியது என்கிறார் அவர்.

“நான் நினைக்கிறேன், மேற்கு நாடுகளின் அரசுகளும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றனவும் தமது முயற்சிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டால் சிறிலங்கா அரசின் நடத்தை மீது பெருமளவில் செல்வாக்குச் செலுத்த முடியும் என்று” எனச் சொல்கிறார் கீனன்.

அதே சமயத்தில், சிறிலங்கா மீது பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான செல்வாக்கைக் கொண்டுள்ள ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளையும் ஒருங்கிணைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

“துரதிர்ஷ்டவசமாக, அந்த நாடுகளும் அமைப்புக்களும் - சிறிலங்கா அரசுடன் சேர்ந்து பிரச்சனைகளை இருதரப்பாக அணுகுவதற்கே விருப்பப்படுகின்றன. சிறிலங்கா அரசின் கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய வகையிலான ஒன்றிணைக்கப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வதில்லை.

உதாரணமாக தாம் கொடுக்கும் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது தொடர்பில் நிதி வழங்கும் நாடுகளும் அனைத்துலக நிதி நிறுவனங்களும் இன்னும் இறுக்கமாகத் தமது ஒப்பந்தகளில் வலியுறுத்த முடியும்.

அவர்கள் சொல்ல வேண்டும் -- இதோ பாருங்கள் உங்களுக்கு நிதி தருவதில் எமக்க மகிழ்ச்சி தான். ஆனால், உறுதியான மற்றும் நிலைத்திருக்கக் கூடிய பயனை மக்களுக்கு தரும் வழிவகைகளுக்குத் தான் எங்களால் பணம் தர முடியும் என்று” என அடுக்குகிறார் கீனன்.

தொடரும் வன்முறைகள்

அடுத்த மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அடுத்து வரும் மாதங்களில் எதிரணி அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றம் ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவது இன்னும் அதிகரிக்கும் என்பதை ஹொக், கீனன் இருவருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

“பொது மக்கள் சமூகத்திலும் எதிரணியினர் மத்தியிலும் நாட்டிலுள்ள கருத்து முரண்பாட்டாளர்கள் மத்தியிலும் தேவையான அளவு பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் உண்மையான போட்டி எழாமல் உறுதிப்படுத்துவதே அவர்களின் (அரசாங்கத் தரப்பினர்) எண்ணம். அதனால் தான் இப்போதிருந்தே சர்வாதிகாரக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்கிறார் ஹொக்.

ஆனால், அனைத்துலக சமூகம் இந்த நிலைமைக்கு எதிராகச் செயற்பட முடியும் எனச் சொல்கிறார் கீனன்.

“இவை ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல; சிறிலங்காவின் சனநாயகப் பாரம்பரியம் ஆழமானதும் நிண்டதுமான போதும், அது இப்போது மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது; சனநாயக உலக சமூகத்தில் தானும் ஒரு உறுப்பினர் என்கிற நிலையை, சிறிலங்கா அரசின் தற்போதைய நடவடிக்கைகள் இன்னும் பலவீனப்படுத்தும் -- இது போன்று தம்மால் முடிந்த காத்திரமான, உறுதியான செய்திகளை மேற்கு நாடுகள் பகிரங்கமாகவோ தனிப்பட்ட ரீதியிலோ தொடர்ந்து சிறிலங்காவிற்கு வழங்க வேண்டும்” என்கிறார் கீனன்

ரி.ரேணுபிரேம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment