சரத் பொன்சேகா இலங்கையின் ஜனாதிபதியானால்?....

இத்தலைப்பில் இக்கட்டுரை வரையமுற்படுகையில் 'நரி சுரிக்குள் மாட்டுப்படுவது' போன்ற நிலை ஏற்படலாமென துலாம்பரமாக தெரிந்தாலும் சில அஜீரணங்களை முன்கூட்டியே 'துப்பி' த் தான் ஆகவேண்டிய பொறுப்பில் உள்ளதை உணரமுடிகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியானால் தென்னிலங்கை மக்களின் விருப்பத்திற்கு அமைவாக தொடர் நெருக்குவாரங்களை வழங்குவதைத்தவிர, சுட்டி உரைப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்காது. அவரின் வழமையான நிகழ்ச்சிநிரலிலே கட்சிகளைப் பிரித்தல் அல்லது ஒழித்தல், அமைச்சர்கள் அதிகரிப்பு, அத்துமீறல்கள், சிங்கள பௌத்த பேரினவாதம், தேர்தலுக்காக விடுபட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் அடங்கலாக சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்த ஊடகவியலாளர்களை கைதுசெய்தல் போன்றவை மேலும் விஸ்தரிக்கப்படலாம்.

இலங்கை அரசியல் யாப்பின்படி இருமுறைக்குமேல் ஜனாதிபதியாக முடியாதென்ற அடிப்படையில் ஜனாதிபதி முறை மகிந்தவால் அவரின் பதவிக் காலத்துக்குள் ஒழிக்கப்படும்.

புதுமுகம் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதி வரவானது எப்படியிருக்கும் என்பதுதான் 'மகுடத்திற்குள் புழுத்த' நிலைக்கு ஒப்பானதாகும். இருப்பினும் நேர்மையாக சிலவற்றை சொல்லித்தான் ஆகவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சரத் பொன்சேகா செய்துகொண்ட 10 அம்ச கோரிக்கையானது எந்த ஒரு நடுநிலமை அமைப்பின் மத்தியஸ்தத்துடனும் நடைபெறவில்லை. இதனால் ஒப்பந்தம் மீறப்படுவதானது சிங்களத்தைப் பொறுத்தவரையில் வழமையான நடவடிக்கை என்பதால் சரத் பொன்சேகாவும் விதிவிலக்காக இருக்க முடியாது.

10 அம்ச ஒப்பந்தம் மீறப்படுவதானது தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அதிர்ச்சிதரும் செயலாகவும் இருக்க மாட்டாது. சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுமிடத்து அவரும் சிங்களப் பேரினவாத குட்டைக்குள் இறங்குவாரென்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை அல்லது முழுவதுமே கைவிடப்படலாம். இதனால் சரத் பொன்சேகா ஜனாதிபதியாகிய ஒருசில மாதங்களுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு - சரத் பொன்சேகா கூட்டு உடைந்துவிட வாய்ப்புண்டு. இந்த உண்மைகளை மிகத் தெளிவாக முன்கூட்டியே தெரிந்திருப்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே.

இருப்பினும் இவற்றை அறிந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒப்பந்தம் செய்வதற்கான பிரதான காரணங்கள் யாதெனில், அப்பாவி வன்னிப்பொதுமக்களை அழித்த மகிந்தாவை பதவியிலிருந்து இறக்குதல் ஆகும். மேலும் கடந்த காலங்களைப்போன்று தமிழ்த் தலைவர்களை ஏமாற்றிவிட்டு தமிழர் பிரச்சனைகளை மூடியிட்டு மூடிவிட இப்போது முடியாததாகும். ஏனெனில் ஈழ மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை நோக்கிய கோரிக்கைகள் யாவும் தமிழீழ விடுதலைப்புலிகளால் இப்போது சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சரத் பொன்சேகாவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்துகொண்ட ஒப்பந்தமானது ஒரு 'திரை மறைவான' மத்தியஸ்தத் தன்மையை சர்வதேசம் வகித்திருக்கின்றதென்பதை சிங்களம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

10 அம்சக் கோரிக்கைகளின் அனுகூலங்கள் சரத் பொன்சேகாவால் தமிழ்மக்களுக்கு மறுக்கப்படுவதானது, இலங்கைத்தமிழருக்கான 'தனி இராச்சியத்தை' உருவாக்குவதற்கான படிக்கட்டாக மாறலாம். இந்த நிலையில் மகிந்தா ஜனாதிபதியாகும் போது சர்வதேசத்திற்கு தமிழரின் உரிமை மறுப்புக்கள் பெரிதாகத் தென்படாமல் வழமையான சிங்களத்தின் நிலைப்பாட்டுக்குள் அமைந்துவிடும்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாகி ஏமாற்றும் பட்சத்தில் சிங்களத்தின் வழமையான ஏமாற்று வித்தைக்கு மேலும் ஒரு புதிய வடிவத்தை, புதிய பரிணாமத்தை பெற்றுக்கொண்டு இன்னமும் ஆழமாக சர்வதேசத்தினுள் ஸ்திரப்படுத்தப்படும்.

ஒட்டுமொத்தமாக நோக்கின், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரத் பொன்சேகாவுக்கான ஆதரவு தமிழருக்கான 10 அம்சக் கோரிக்கைகளை அவர் நிட்சயமாக நிறைவேற்றுவாரென்று நம்பிக்கை கொண்டு தமிழ்மக்கள் அவருக்கான வாக்குகளை வழங்காமல், எதிர்காலத்தமிழ்மக்களின் தாயக இறைமை கொண்ட 'தனியரசு' நிறுவ இருப்பதை நோக்காகக் கொண்டு தமிழ்மக்கள் வாக்களித்தாக வேண்டும்.

அதாவது,

தமிழ்மக்களின் வாக்குகளால் சரத் பொன்சேகாவின் வெற்றி நிச்சயிக்கப்படல் வேண்டும்!

வழமைபோல் சரத் பொன்சேகாவும், பேரினவாத சிங்களமும் இணைந்து ஏமாற்ற முனைந்தால்

அதுவே தமிழ்மக்களின் விரைவான விடியலுக்கு வழிவகுக்கும்!

தசக்கிரீவன்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. திறமையான ஆய்வு. அந்த 10 அம்சங்களும் எவை? எந்த சர்வதேசம் ஏன் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும்? நீங்கள் கூறுவது போல் வன்னி மக்களை அடித்த மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது சரி. அதற்கு இந்த 10 அம்சங்களுக்கம் என்ன தொடர்பு. முடிந்தல் விளக்கம் தரவும்.

    ReplyDelete