ஈழத்தமிழர்களின் கூட்டிணைவான அரசியல் போராட்ட ஆண்டு - 2010

காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சியோட்டத்தில் கடந்துவிட்ட 2009ம் வருடம் மறக்க முடியாத வரலாற்று வடுக்களையும், வேதனைகளையும், ஈழத்தமிழனம் சந்தித்த ஆண்டாகப் பதிவு செய்துள்ளது. 2010ம் வருடத்தில் இனவிடுதலைக் கனவைச் சுமந்து, தொடரும் வேதனைகளுடனும் எதிர்காலம் பற்றிய அச்சம் கலந்த நம்பிக்கையுடனும் காலெடுத்து வைக்கின்றது ஈழத்தமிழினம். இந்த ஆண்டை பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றக்கூடிய வகையில் ஒன்றிணைந்து அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது அவசியமானது. எனவே 2010ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் கூட்டிணைவான அரசியல் போராட்ட ஆண்டாக பிரகடனப்படுத்துவது பொருத்தமானது.

இலங்கைத்தீவில் ஈழத்தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையை அடைவதற்கான ஆயுதப்போராட்டத்தை பல நாடுகளின் துணைகொண்டு சிங்களம் போரிட்டதன் காரணமாக ஆயுதப்போராட்டப் பாதை மௌனிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ்மக்களின் ஆயுதப்போராட்ட பின்னடைவு என்பது தமிழ்மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கான பேரம் பேசும் வலுவை பலவீனப்படுத்தியுள்ளது. என்றாலும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் விவாகாரத்தையும், தமிழ்மக்களின் வாக்குகளையும் ஆயுதமாகப் பயன்படுத்தி, ஒன்றிணைந்த செயற்றிட்டங்களினூடாக தற்போதைய அரசியல் சூழலை வென்று தனது விடுதலையை நோக்கிய நகர்வை செய்ய தமிழினம் திடசங்கர்ப்பத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்படுவதே இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டுள்ள தமிழ் இனத்தின் அரசியல் விடுதலைக்குப் பலம் சேர்க்கும்.

இந்தச் சூழலில் தமிழ்மக்களும், தமிழ் தேசியத்தை பற்றியிருக்கும் அரசியல்வாதிகளும், உணர்வாளர்களும், ஊடகங்களும், கட்டுரையாளர்களும், சமூகப் பெரியோர்களும் தமிழ் பேசும் மக்களை சிதறவிடாமல் ஒன்றிணைத்து ஒரே கருத்தியல் ஊடாக நகர்த்தி, தமிழ்பேசும் மக்களின் தாயக விடுதலை கனவை நனவாக்க பாடுபட வேண்டும். அந்த ஒன்றிணைத்த செயற்பாடானது தாயக விடுதலை நோக்கிய பயணத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களுக்கும், இராணுவ அட்டூழியங்களினால் கொல்லப்பட்ட பொதுமக்களிற்கும், துன்பங்களையும் வேதனைகளையும் பாரிய இழப்புக்களையும் சந்தித்து நிற்கும் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கும், அரசியல் விடுதலைக்கும் மிகவும் அத்தியாவசியமானதாகும்.

தமிழ் மக்களின் தாயக விடுதலைப் போராட்டத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குப் பிற்பட்டகாலம் முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்கு பிற்பட்டகாலம் என இரண்டு கட்டங்களாகப் பிரித்து பார்க்கலாம். வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு பிற்பட்டகாலம் என்பது பெருவாரியான தமிழ்மக்களின் ஒன்றிணைந்த சிந்தனைக் கருத்தினடிப்படையில் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டு முனைப்புப் பெற்று, ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கை பலம்பெற்றிருந்த காலம். முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்கு பிந்தைய காலம் என்பது அரசியல் அடிப்படைகளை பாதுகாத்து அகதிகளாகவும், சிறைப்படுத்தப்பட்டும், பொருளாதரத்தையும் வளங்களையும் இழந்து கையேந்து நிலையிலிருக்கும் மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீள குடியமர்த்தியும், புனர்வாழ்வளித்தும், அவர்களை வளப்படுத்தியும் விடுதலைச் சிந்தனையை வலுப்படுத்தியும் தாயக விடுதலையை நோக்கி மீள நகர அவர்களை ஒழுங்குபடுத்தியும் செயற்படவேண்டிய கட்டாயத்தைக் காலம் கொடுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்கான காரணங்களை ஆய்வு செய்து விமர்சித்துக் கொண்டிருப்பதை தவிர்த்து விட்டு, பின்னடைவுக்கான காரணங்களை படிப்பினையாக கொண்டு எதிர்காலத்தில் தாயகத்தின் அரசியல் பொருளாதார விடுதலைக்கான பாதையை சரியாக திட்டமிட்டு செயற்படுவதே காலத்திற்கு பொருத்தமானதாகும்.

இந்த வருடத்தில் ஈழத்தமிழர்களின் போராட்ட பாதையை சரியாக முடிவெடுத்து தாயக மக்களும், புலம்பெயர் மக்களும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய தலையான பணிகளில் சில :

• மனித உரிமை மீறல் விடயத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று ஈழத்தமிழ்மக்களின் அழிவிற்கு காரணமானவர்களை தண்டித்தல்.

• ஜனாதிபதித் தேர்தலில் பிரதானப்பட்;டிருக்கும் தமிழ்மக்களின் வாக்குகளை சரியாக பயன்படுத்தல்.

• வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தை பற்றியிருக்கும் தமிழ்பேசும் வேட்பாளர்களை தெரிவு செய்து ஒற்றுமையையும் பலத்தையும நிரூபித்தல்

• நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவுதற்கு ஒன்றிணைந்து பெருவாரியான ஆதரவை கொடுத்து அரசியல் கோட்பாட்டிற்கு வலுச்சேர்த்தல்

மனித உரிமை மீறல் விடயத்தினூடான அணுகுமுறை!
ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கையானது மே 17ல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமைச் சட்டதிட்டங்களைப் புறந்தள்ளி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் யுத்தத்தை முன்னெடுத்த ராஜபக்ச அரசு, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் மனிதப்பேரழிவிற்கு காரணமாகியது. சர்வதேச யுத்த சட்ட நடைமுறைகளை மீறி சிறிலங்கா யுத்தத்ததை முன்னெடுத்ததானது ஜ.நா சபையின் சர்வதேச மனித உரிமை விசாரணைக்கான தீர்மானம் வாக்கெடுப்பு வரையில் கொண்டு சென்று விட்டது. வாக்கெடுப்பில் சிறிலங்கா உருவாக்கிய வெற்றியானது பிராந்திய அரசியல் நலன் சார்ந்ததாக இருந்தாலும் சிறிலங்கா அரசானது மிக மோசமாக மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் பத்து நாடுகளில் ஒன்றாக அண்மையில் கணிக்கப்பட்டது என்பது சிறிலங்கா தொடர்பான சர்வதேசத்தின் பொது நிலைப்பாட்டை வெளிக்காட்டுகின்றது. இந்த விடயத்தை சரியாக கையாண்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இன அழிப்பை மேற்கொண்டும், வன்னியிலிருந்த மக்களின் தொகையை குறைவாக காட்டி இரண்டு வருடங்களாக போதுமான உணவுகளை அனுப்பாமல் அம்மக்களை பட்டினிச்சாவிற்கு இட்டுச்சென்றதற்கும் காரணமான ராஜபக்ச அரசை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இதனூடாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரசு என சர்வதேசத்தால் சொல்லப்படும் சிறிலங்கா அரசு ஒரு இனத்திற்கு ஏற்படுத்திய மனிதப் படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அந்த அரசிற்குக் கீழ் தமிழ்மக்கள் வாழமுடியாது என்பதை நியாயப்படுத்த வேண்டும். சிறிலங்கா அரசை தனிமைப்படுத்துவதனூடாக பொருளாதாரத்தடை, நிதிசலுகைகளை வழங்காது செய்து, தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை சர்வதேசம் அங்கீகரித்து வழிவிடுவதற்கான அழுத்தங்கள் உருவாகக்கூடிய நிலைமையை சர்வதேச அளவில் ஏற்படுத்தல் வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துவது ஊடான அணுகுமுறை!
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களில் யார் ஒருவர் வந்தாலும் ஏதாவது அரசியல் உரிமையும் நியாயமும் கிடைக்கும் என எதிர்பார்ப்பது படுமுட்டாள்தனமானதாகும். எனினும் இந்த இரண்டு யுத்தக்குற்றவாளிகளில் யாரை தோல்வி பெறச் செய்து, அவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதன் மூலம் தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டத்தின் அரசியல் பரிமாணத்தை மெருகூட்டலாம் என்ற அடிப்படையிலேயே சிந்திக்க வேண்டியுள்ளது. இத்தேர்தல் வெற்றியில் பிரதானப்பட்டிருக்கும் தமிழ்மக்களின் வாக்குகளை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பில் பலவிதமான வாதப்பிரதிவாதங்களும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்சித் தீர்மானங்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்மக்கள் தேர்தலில் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகளாக முன்வைக்கப்படுபவை,

• ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பது
• தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துதல்
• தமிழ்த்தேசியம் சார்பாக குரல் கொடுக்கும் கலாநிதி விக்கிரமாகு கருணாரட்ன அவர்களுக்கு வாக்களிப்பது

இவை மூன்றுமே ஒரே நோக்கத்தைக் கொண்ட பல்முறை அணுகுமுறையாகும். அத்துடன் இத்தேர்தலில் சிங்கள மக்கள் தங்களுக்குள் தாங்களே மோதிக்கொள்ளட்டும் நாங்கள் வெளியில் நின்று தேர்தலில் அக்கறை இல்லாதவர்களாக காட்டிக்கொள்வதால் சிங்களதேசத்தின் தேர்தலாகவே இது கருதப்படும். இதனூடாக தமிழ்மக்களின் ஒற்றுமையையும், ஒத்தகருத்தையும், அரசியல் நிலைப்பாட்டையும் வெளிக்காட்டலாம் என்றும் மாவீரர் கனவை நனவாக்கலாம் என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களாவன மேற்குறிப்பிட்ட மூன்று நிலைப்பாட்டிற்கும் வலுச்சேர்ப்பதற்கான பொதுவான காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. இந்த வாதம் எதிர்;வரும் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியத்துவப்பட்;டிருக்கும் தமிழ்; மக்களின் வாக்குகளை பயனற்ற நிலைக்கே கொண்டு செல்லும்.

மேற்குறிப்பிட்ட இந்நிலைப்பாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஆலோசனை வழங்குவதும் வழிகாட்டுவதும்; ராஜபக்ச அவர்களின் வெற்றிக்கு படிக்கட்டுகள் அமைத்துக் கொடுப்பதாகவே இருக்கும். இது ஜனநாயக ஆட்சித் தலைவன் என்ற பெயரால் தமிழ்மக்கள் மீது ராஜபக்ச மேற்கொண்ட இனப்படுகொலையினால் கோபமடைந்துள்ள தமிழ்மக்கள் அவருக்கெதிராக வாக்குகளைப் பிரயோகித்து அவரைத் தண்டிக்க முற்படுவதனைக் குழப்பி, மகிந்த ராஜபக்ச அவர்களை காப்பாற்றும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும். அதைவிடுத்து தமிழினத்தின் ஒற்றுமைiயும், ஒத்தகருத்தையும் வெளிப்படுத்தலாம் என்று கற்பிதம் செய்வதெல்லாம் வெற்று வார்ததைகளேயொழிய தற்போதைய அரசியல் சூழலில் ஈழத்தமிழினத்திற்கு பயனைத்தராது.

அத்துடன் மீண்டும் ராஜபக்ச பதவிக்கு வருவதால் தமிழ்மக்கள் மீது யுத்தத்தை முன்னெடுத்து, புலிகளை அழித்து தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை நிர்மூலமாக்குவதற்காக செயற்பட்ட ராஜபக்ச அவர்களின் அரசு, கடந்த காலத்தில் மேற்கொண்ட அதே அணுகுமுறைகளை கையாளலாம் என்றோ! அல்லது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவார் என்றோ! கூறமுடியாது. கடந்த காலத்தில் ராஜபக்ச அவர்களும் அவர்களின் அரசும் தங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்காக உலகின் பல்வேறுபட்ட முரண்பட்ட சக்திகளைக்கூட ராஜதந்திர ரீதியாக கையாண்டு வெற்றி பெற்றன. அத்தகைய ராஜதந்திர அணுகுமுறையினை யுத்தம் நடைபெறாத தற்போதைய சூழலில், ராஜபக்ச அவர்கள் தனக்கு சார்பாக மாற்றியமைத்து செயற்படமாட்டார் என குறைத்து மதிப்பிட முடியாது.

சர்வதேச சமூகம் ராஜபக்ச அவர்களின் அரசு மேற்கொண்ட இனஅழிப்பு தொடர்பாகத் தங்களின் இயலுமைக்குள்; எடுக்கக்கூடிய முயற்சிகளை எடுத்துவிட்டு அதற்கான வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் அடுத்த நகர்வை எடுக்க தீர்மானிக்கும். ஆனால் மாற்றம் ஏற்படாத பட்சத்தில் 'அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை' என்பதைப்போல ஆட்சியாளர்கள் மத்தியில் கூட்டு வருமே ஒழிய சர்வதேசம் தொடர்ந்து முரண்பட்ட போக்கை கடைப்பிடிக்கும் என்று கூற முடியாது. உதாரணமாக அண்மையில் இலங்கையுடனான முரண்பட்ட அரசியல் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கை மாற்றமடைந்துள்ளதானது அதை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. இதேபோல் மேற்குலக வெளியுறவுக்கொள்கைகள் மாற்றமடையாது என்று சொல்லவும் முடியாது.

சிறிலங்கா அரசுக்குப் பொருளாதார ரீதியாக பாரிய உதவிகளைச் செய்யும் சீனா, தனக்கு சார்பாக மாற்றக்கூடிய வகையில் ராஜதந்திர ரீதியாக செயற்படுகின்றது. எனவே இந்தப்போக்கால் அதிருப்தியுறும் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் வெளியுறவுக் கொள்கைகள் இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் அரசியல் தீர்விற்கு சார்பாக அமைய வாய்ப்புள்ளது எனவும் கற்பிதங்கள் சொல்லப்படுகின்றன. இலங்கை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக செயற்பட்டால் என்ன ஆபத்துக்கள் வரும் என்பதை சிறிலங்காவின் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்திராதவர்களா? தற்போது இந்தியாவிற்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சம்பூர் அனல்மின் நிலையம், மன்னார் எண்ணைவள ஆய்வு போன்ற பல பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதியளித்து இந்தியாவை அணைத்துச் செல்லும் நகர்வுகளை சிறிலங்கா அரசு செய்வதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. ராஜபக்ச அவர்களைப் பொறுத்தவரை தனது வெற்றிக்காகவும் தனது குடும்ப அரசியல், கட்சி அரசியல் இருப்பை பாதுகாக்கவும் எந்த எல்லைவரையும் செல்வதற்கு தயாராக உள்ளார் என்பது போலவே அவரது அரசியல் நகர்வுகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

அதேவேளை ராஜபக்சவிற்கு எதிராக வாக்களிப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை பார்த்தால் சிங்களப் பேரினவாத தேரில் ஏறி நின்று தமிழ்மக்களின் மீது பாரிய இனஅழிப்பைக் கட்டவிழ்த்து விட்ட ராஜபக்சவை பழிதீர்க்கவேண்டியது முதன்மையானதாகும். அதற்கு தேவையான ஆவணங்கள் தெளிவாக சர்வதேச மனித உரிமைச்சபையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக சனல் 04 வெளியிட்ட காணொளி ஆவணம், மக்கள் பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்திய செய்மதிப் புகைப்படம் மிக முக்கியமானவை. அத்துடன் வன்னிப்பகுதியில் போர் நடைபெற்ற போது அங்கு 70,000 ஆயிரம் மக்களே உள்ளனர் என அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் 250,000க்கும் மேற்பட்ட மக்கள் வன்னிப் பகுதியில் உள்ளனர் என தெரிவித்தபோதும் அதை மறுதலித்து மக்கள் தொகை புள்ளிவிபரத்தை குறைவாகக் காட்டி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் உயிர் வாழ்விற்கு தேவையான அளவு அடிப்படை உணவையும் வழங்க மறுத்தது. மேற்குறிப்பிட்டவை ராஜபக்ச அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் என அமெரிக்காவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் ராஜபக்சவின் அரசியல் ரீதியான நகர்வுகளை ஒப்புநோக்கின், வடக்கு கிழக்கை சட்டரீதியாக சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தைக் கொண்டு பிரித்த சம்பவத்திற்கு பிரதான பங்கையாற்றியவர் என்பதுடன் இலங்கைத்தீவில் வாழும் ஏனைய தேசிய இனங்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் தங்களது இனத்தை அடையாளப்படுத்தும் பெயர்கள், சின்னங்களை கட்சிகளில் வைத்திருப்பதை இல்லாமல் செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த்தேசியக் கட்சிகளை வலுவிழக்கச்செய்ய வடக்கு கிழக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல்களின் சிங்களப் பெரும்பான்மையினத்தின் கட்சி சின்னத்தில் தமிழ் ஒட்டுக்கட்சிகளைப் போட்டியிட வைத்ததினூடாக தமிழ் தேசியம் என ஒன்று நாட்டில் இல்லை என வெளிப்படுத்தி இலங்கை ஒரு பௌத்த சிங்கள பேரினவாத ஆதிக்கத்தினுள் ஒரு கலப்புத் தேசிய நாடு என்ற கருத்துருவாக்கத்தை செய்தவர், தமிழினத்தை பாரிய அழிவுக்குள்ளாக்கி விட்டு தமிழ்தேசிய அடையாளங்களை சிதைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து கொண்டு செல்கின்றார் இந்த ராஜபக்ச அவர்கள்.

சிவாஜிலிங்கம் அவர்கள் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு மாறாக ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தீர்மானித்ததும், இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகள், அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ்மக்களை எம்மால் கோரமுடியாது எனவே தேர்தலை பகிஷ்;கரிப்போம் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழக் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவும், மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதும், இவை போன்ற அனைத்தும் மகிந்த ராஜபக்ச அவர்களை ஆட்சியில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகளாகவும், தமிழ்மக்களை அரசியல் சூனியத்திற்குள் கொண்டு செல்லும் அரசியல் சித்து விளையாட்டாகவுமே உணரப்படவேண்டும். அத்துடன் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்;கு வந்தால் அரைகுறையான அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதனூடாக தன்னை ஒரு வெள்ளைச்சட்டையணிந்த கனவானாக காட்டி, இறுதியாக தமிழ்மக்களின் இனப்படுகொலை விடயமும் பூசி மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களை அழிக்க ஆணையிட்டவனை ஆட்சிப்பதவியில் இருந்து அப்புறப்படுத்தி, பழிதீர்க்க தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை பயன்படுத்தப் போகின்றார்களா? அல்லது தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டத்தை அழித்து மிகப்பாரிய மனிதபேரவலத்தை தந்த ராஜபக்சவை பதவியில் அமர்த்தக்கூடிய வகையில் வாக்குகளை பயன்படுத்தப்போகின்றார்களா? என்பதே அவர்களின் முன் உள்ள கேள்வி. ராஜபக்ச அவர்களை தோற்கடிக்கப்பதனூடாக இனஅழிவிற்கு காரணமான சிங்களத் தலைமைகள் பாதுகாப்பற்ற அரசியல் சூழலுக்குள் தள்ளப்படுவாதற்கான சூழலை தமிழ் வாக்காளர்களால் ஏற்படுத்த முடியும். அத்துடன் ராஜபக்ச அரசிற்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசிய விரோத போக்குடைய தமிழ் வாழ்வரசியல் அடிமை அரசியல்வாதிகளுக்கும் பாடம் புகட்டலாம். ஆதலினால் தமிழ்மக்கள் வாக்குகளை வீணடிக்காமல் ராஜபக்சவை பழிதீர்க்க வாக்களிக்கப் போகின்றார்களா? இல்லையா? என சரியாக சிந்தித்து செயற்பட வேண்டியது முக்கியமானதாகும்.

நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவனூடான அணுகுமுறை!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்மக்களின் அரசியல் பலத்தையும் ஒற்றுமையையும் தனி அடையாளத்தையும் நிரூபிக்கும் தேர்தலாகும். தமிழ்பேசும் மக்கள் வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் தேசியத்தைப் பின்பற்றி செயற்படும் வேட்பாளர்களை தெரிவுசெய்தல் மிகவும் முக்கியமானதாகும். இதனூடாக தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் உட்பட எல்லோருக்கும் தெளிவாக தெரியப்படுத்தலாம். இந்த தேர்தலின் முடிவானது தமிழ் தேசியம் என்ற கருத்தின் வலிமையைத் தீர்மானிக்கும் தேர்தலாகும். சிங்களப் பேரினவாதிகள் காலம் காலமாக தமிழ்மக்களின் அரசியல் தனித்துவத்தை சிதைக்க தமிழ் தேசிய விரோத சக்திகளை தென்னிலங்கைச் சிங்களத்தின் கட்சிச் சின்னங்களில் போட்டியிட செய்து தமிழ் தேசியம் என்பதெல்லாம் மாயை என்ற கருத்தை வலியுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அதற்கு முத்தாய்ப்பாகச் செய்யப்பட்ட தேர்தல்களே கிழக்கு மாகாணம் மற்றும் யாழ் மாநகரசபை, வவுனியா நகரசபை தேர்தல்கள் ஆகும். இந்த அபாயகரமான நிலையை தமிழ்பேசும் மக்கள் தெளிவாக புரிந்து செயற்படவேண்டும். சிறுபான்மையினங்களின் அடையாளங்களை அழித்து சிங்களப் பெருந்தேசிய வாதத்திற்குள் சிறுபான்மையினங்களை கரைக்கும் சிங்களத்தின் அரசியல் நகர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் தனித்துவமாக தேசியத்தை காப்பாற்றும் பொறுப்பை உணர்ந்து செயற்படும் தேர்தல் இதுவாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதினூடான அணுகுமுறை!
தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் நடைமுறை அரசை நடாத்தி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தனது ஆட்சிப்பரப்பிற்கு வெளியே தனது செயற்பாடுகளை அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களிற்கமைவாக ஜனநாயக வழிகளில் முன்னெடுக்க உருவாக்கவிருக்கும் அமைப்பே நாடு கடந்த தமிழீழ அரசாகும். இதன் உருவாக்க வேலைகள் முடிவுற்று ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த அரசை அமைப்பதற்கான தேர்தல்கள் புலம்பெயர் தேசங்களில் நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த அரசின் செயற்பாடுகளை முடக்கவேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகின்றது. குறிப்பாக அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசின் இணைப்பாளரைக் கைது செய்யும் கோரிக்கையை அமெரிக்காவின் றெபேட் பிளேக் அவர்களிடம் சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்தது. ஆனால் அவரை கைது செய்வதை விடுத்து அவருடன் பேசுமாறு அறிவுரைக்கப்பட்டது என்பது தமிழ்மக்களின் அரசியல் செயற்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் கருத்தாகவே பார்க்க முடியும். எனவே புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முழுமையாக பங்குபற்றி, நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்து சிறந்த முறையில் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசை அடையப் பாடுபடவேண்டும். மிகச்சிறந்த வாய்ப்பை நழுவவிடாது நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கி செயற்படுத்தும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திற்குண்டு.

மலரும் புதிய ஆண்டில் தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பிரதானப்பட்டிருக்கும் நான்கு விடயங்களிலும் சரியாக சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களை சரியான திசையில் நகர்த்த வேண்டிய பெறுப்புமிக்கவர்கள் சாணக்கியமாகவும் புத்தி சாதுர்யமாகவும் செயற்பட்டு தமிழ் பேசும் மக்களின் அரசியல் விடுதலையை பிரகாசமாக்க, அனைவரும் தங்களின் பேதமைகளை களைந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து செயற்பட்டு கூட்டிணைவான அரசியல் போராட்டத்தை வெல்ல செயற்படுவோம் என பிறக்கும் புத்தாண்டில் உறுதிபூணுவோம்.

அபிஷேகா : abishaka@gmail.com
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment