“எல்லாவற்றையும் இழந்து விட்டோம்; யாராவது கொஞ்சம் உதவினால் நிமிர்ந்து விடுவோம்”

கிளிநொச்சியின் பரந்து விரிந்த வயல் நிலங்கள் இன்று காடு பற்றிக் கிடக்கின்றன. கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருந்த ஆடுகளும் மாடுகளும் காணமல்போய் விட்டன.

உழவு இயந்திரங்கள், உந்துருளிகள் அனைத்தும் மாயமாகி விட்டன. கட்டங்களும் வீடுகளும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு கற்குவியல்கள் ஆக்கப்பட்டு விட்டன.

போரால் இடம்பெயர்ந்தவர்கள் அங்கே கொண்டு வந்து விடப்பட்டுள்ள நிலையில், அவர்களது பழைய வாழ்வின் மிகச் சொற்பமே அவர்களுக்காக விட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறு எழுதியிருக்கின்றார் அமெரிக்க ஊடகவியலாளரான Krishan Francis. கிளிநொச்சிப் பயணத்திற்குப் பின்னான தனது செய்திக் குறிப்பில் அவர் மேலும் எழுதியுள்ளதாவது:

போர் முடிந்து எட்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமிக்க தளமாக முன்னர் விளங்கிய கிளிநொச்சியில் மக்கள் மீள்குடியமர்வுக்காகக் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்கள்.

“எங்கள் நிலத்திற்குத் திரும்பி வந்திருப்பதில் எமக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை” எனச் சொல்கிறார் 66 வயதான சுப்பிரமணியம் முத்துராசு.

“விவசாயத்தைத் தொடங்க வேண்டும். ஆனால் எந்த வளங்களும் எங்களிடம் இல்லை, வெறுங்கையோடு இங்கே குந்திக் கொண்டிருக்கிறோம்” என விளக்கினார் அவர்.

கிளிநொச்சியின் கிராமம் ஒன்றில் முத்துராசு முன்னர் நன்றாக நெற் செய்கையில் ஈடுபட்டிருந்தார். கால்நடைகளும் அவரிடம் கணிசமாக இருந்தன. ஆனால், இப்போது வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

போரால் கணவனை இழந்துவிட்ட தனது மகளையும் அவளது 5 குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டிய சோகத்திற்கு மத்தியில் அவரது நிலை பரிதாபகரமாக உள்ளது.

சொந்த இடங்களுக்குத் திரும்பி உள்ள மக்களை அவர்களது சிக்கலில் இருந்து காப்பதற்காக உலர் உணவுப் பொருட்களும் பணமும் உதவியாக வழங்கப்படுகின்றது என்று அரசு கூறுகின்றது. ஆனால் அவை எவையும் போதியளவானவையாக இல்லை.

“இது ஒரு ஏழை நாடு என்பதை நீங்கள் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். சொந்த இடத்திற்குத் திரும்பிச் செல்லும் போது மக்களுக்கு எல்லாவற்றையுமே ஒரேயடியாகக் கொடுத்துவிட முடியாது” எனச் சொல்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே. போரால் இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பொறுப்பான அதிகாரியாக அரசால் நியமிக்கப்பட்டுள்ள படை ஆள் அவர்.

மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி அரச தலைவர் தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், போர் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று வருவதற்கான அரிய வாய்ப்பு Associated Press செய்தியாளருக்கு வழங்கப்பட்டது.

பெரும்பான்மைச் சிங்களவர்களால் போர் வெற்றியின் நாயகர்களாகக் கருதப்படும் இரு வேட்பாளர்களுமே தமிழர்களின் வாக்குகளைக் குறிவைத்துச் செயற்படுகிறார்கள். போரின் பின்னர் தமது வாழ்க்கையை அவர்கள் விரும்பியபடி மீளக் கட்டி எழுப்புவதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர்கள் இருவரும் தமிழர்களுக்கு வாக்குறுதிகள் வழங்குகின்றார்கள்.

சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசிற்கும் தனிநாடு கேட்டுப் போராடிய தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களால் கடந்த கால் நூற்றாண்டு காலமாக இந்து சமுத்திரத்தின் முத்தான இந்தத் தீவு நுகரப்பட்டு வந்துள்ளது.

காடு சார்ந்த பெரும் பிரதேசத்தை போராளிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். காவல்துறை, நீதிமன்றம், வங்கிகள் என ஒரு நிழல் அரசையே அவர்கள் அங்கு நடத்தி வந்தார்கள். கிளிநொச்சியை அவர்கள் தமது நிர்வாகத் தலைநகரம் போன்றே பயன்படுத்தி வந்தார்கள்.

போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் பொருளாதாரம் மிக நீண்ட காலமாகவே நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது. எரிபொருள், எரிவாயு முதற்கொண்டு சிமெந்து வரைக்கும் அனைத்தையும் அந்தப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கு அரசு தடை வித்திருந்தது.

அப்படி இருந்த போதும் விவசாயம் அங்கு அமோகமாக இருந்தது. சில தனியார் நிறுவனங்கள் ஒருவாறு தமது கடைகளை நடத்தி வந்தன. சிறிய தொழிற்சாலைகள் சவற்காரம் மற்றும் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றைத் தயாரித்து வந்தன.

கடந்த ஜனவரி மாதத்தில் அரச படைகள் அந்தப் பிரதேசத்தை ஆக்கிரமித்த போது இவை அனைத்துமே அடியோடு காணாமல் போயின.

பொதுமக்களில் சிலர் கிளிநொச்சியில் இருந்து செல்லும் போது தமது பெறுமதிமிக்க பொருட்களுடன் உந்துருளிகளையும் ஒருவாறு எடுத்துச் சென்றனர். ஆனால் படையினரின் தாக்குதல்கள் அவர்களைத் துரத்திய போது, கிட்டத்தட்ட அனைத்துமே அவர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டுவிட்டன.

புலிகளின் வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்திருந்தவர்கள், தமது சேமிப்பு முழுவதும் அழிந்து போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்களின் படி, கடைசி மாதங்களில் நிகழ்ந்த சண்டைகளில் 7,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 300,000 வரையான தமிழர்கள் அரசினால் உருவாக்கப்பட்ட தடுப்பு முகாம்களுக்குச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அத்துடன் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு அரசின் அனுமதி வேண்டி அவர்கள் காத்திருந்தார்கள்.

கிளிநொச்சி நகர் தற்போது படையினரால் சூழப்பட்ட பழைய காலக் கோட்டை போன்று காட்சி அளிக்கின்றது. ஒவ்வொரு நூறு மீற்றர் இடைவெளியிலும் சிறிதும் பெரிதுமாகப் படை முகாம்கள் எங்கும் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன. படை ஆட்கள் வீதிகளில் காவல் சுற்றி வருகிறார்கள்.

மாவீரர்களின் நினைவிடங்களில் எல்லாம் சிறிலங்காப் படையினரின் போர்ச் சின்னங்கள் பதிலீடு செய்யப்பட்டுள்ளன.

சேதங்கள் இல்லாத கட்டடம் ஒன்று தானும் அங்கில்லை. வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஏனெனில் போருக்கு முன்னர் அங்கு வசித்த 120,000 பேரில் வெறும் 8,000 பேரே சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள்.

அரசின் தடுப்பு முகாம்களில் இருந்தவர்களில் 70 வீதம் மக்கள் ஒன்றில் தமது சொந்த இடங்களுக்கோ அல்லது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளுக்கோ சென்று விட்டார்கள் என்று மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார்.

சிலர் இடைத் தங்கல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தமது இடங்களுக்குத் திரும்புவதற்கு முன்னதாக அந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றி துப்புரவு செய்ய வேண்டி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

சொந்த இடங்களுக்குத் திரும்புவர்களுக்கு அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் 250 டொலர் (25,000 ரூபாய்) நிதி, 6 மாதங்களுக்கான உலர் உணவு, 12 தகரங்கள், கூரை விரிப்புக்கள் என்பன அடங்கிய உதவித் தொகுதியை வழங்குகின்றது.

கிளிநொச்சியின் கிராமங்களுக்குத் திரும்பி உள்ள மக்களை மழையிலும் வெய்யிலிலும் இருந்து பாதுகாப்பதற்கான தற்காலிகக் கூடாரங்களை களிமண் மற்றும் காட்டுத் தடிகளைக் கொண்டு உருவாக்குவதற்கு படை ஆட்கள் உதவி செய்கிறார்கள். காணிகளையும் கிணறுகளையும் மக்கள் துப்புரவு செய்வதற்கும் அவர்கள் உதவுகிறார்கள்.

விவசாய நிலங்களைத் துப்புரவு செய்து பயிர்ச் செய்கையைத் தொடங்குவதற்கான முதலீடுகளுக்கோ அல்லது வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கோ - தமக்குத் தரப்படும் மீள்குடியமர்வு உதவிகள் போதுமானவையாக இல்லை என்று சொந்த இடங்களுக்குத் திரும்பி உள்ளவர்கள் கூறுகின்றார்கள்.

தெற்கு கிளிநொச்சியில் உள்ள புளியங்குளம் கிராமத்தில், தனக்குத் தரப்பட்ட தகரங்களைக் கொண்டு தற்காலிகக் கொட்டகை ஒன்றை அமைத்திருக்கும் ராமையா ராஜமணி கேட்கிறார், “எங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இது போதுமானதா?” என்று.

விவசாயத்தைத் தொடங்குவதற்காக வழங்கப்படும் 250 டொலர் நிதி உதவியில் 150 டொலர் உதவியே தனக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறுகின்றார். அவரது இரண்டு ஏக்கர் நிலத்தை உழுவதற்கே அதைப் போன்று இரண்டு மடங்கு பணம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“மீள்குடியமர்வுகளை எப்படி மேற்கொள்வது என்பது தொடர்பான வழிகாட்டி வரைபடம் எதுவும் அரசிடம் இல்லை” என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரா சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தமிழர்களின் நிலங்களை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்றும் இடம்பெயர்ந்தவர்களுக்கு அனைத்துலகத் தொண்டு நிறுவனங்கள் உதவுவதை அரசு தொடர்ந்து தடுத்து வருகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் கூட உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு அரசு தயாராக இல்லை என்று கூறுகின்றார் மேஜர் ஜெனரல் குணரத்னே.

“பயங்கரவாதத்தின் எச்சங்கள் அல்லது கிருமிகள் கிராமங்களுக்குள் மீண்டும் ஊடுருவுவதை நாங்கள் தடுக்க வேண்டி இருக்கின்றது” என்கிறார் அவர். ஆனால், மக்களுக்கு முடிந்த வரையில் உதவுவதற்கு அரசு முயற்சி செய்து வருவதாக அவர் கூறுகின்றார்.

மக்கள் தமது நிலங்களை உழுவதற்குத் தனது உழவு இயந்திரங்களைக் கொடுத்து வருவதாகவும் விதை நெல்லை இலவசமாக வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட கிராமங்களில், உணவுப் பொருட்களையும் சுகாதாரத்திற்குத் தேவையான பொருட்களையும் ஐ. நா. விநியோகிக்கின்றது எனக் கூறுகின்றார் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகப் பேச்சாளர் சுலக்க்ஷனி பெரேரா.

“மக்களின் மீள் வருகை நிலையானதாக இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு வருமானம் தரும் வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்னமும் முக்கிய பிரச்சினையாகவே இருந்து வருகின்றது” எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

தமது இடங்களுக்குத் திரும்பி உள்ளவர்களில் சிலர் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தாமாகவே முயற்சிக்கிறார்கள்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 50 வயது ராமசாமி கந்தசாமியின் இழப்பு மிகப் பெரியது. ஒரு காலத்தில் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். அவரிடம் வெள்ளாடுகள், மாடுகள், செம்மறிகள் என 600 கால்நடைகள் இருந்தன. எல்லாவற்றையும் அவர் இப்போது இழந்து நிற்கிறார்.

அவருக்குஏற்பட்ட அந்த இழப்பு 40,000 டொலர்களுக்கும் அதிகமானது. அது கற்பனை கூடச் செய்து பார்க்கமுடியாத இழப்பு என நொந்து கொள்கிறார் அவர்.

அரசு வழங்கிய நிதியில் தான் வாங்கி வந்த பணியாரங்கள், தேயிலை, சிகரெட்டுக்கள் என்பவற்றை விற்பதற்காக தனது முன்னைய உணவு விடுதி இருந்த இடத்தில் ஒரு சின்ன தற்காலிகக் கொட்டில் அமைத்திருக்கிறார் கந்தசாமி.

“நாங்கள் எல்லாவற்றையுமே இழந்து விட்டோம். ஆனால் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்” என்கிறார் அவர் நம்பிக்கையுடன். “யாராவது கொஞ்சம் உதவி செய்தால் நான் நிமிர்ந்துவிடுவேன்” என ஒலிக்கிறது அவரது குரல்.

ரி.ரேணுபிரேம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment