பொங்கலில் பொங்கும் சிந்தனை


இன்று தைத்திங்களின் முதல் நாள். தைப்பொங்கல் திருநாள்.மார்கழிப் பெண்ணுக்கு விடை கொடுத்து, தைப் பாவை எனும் தையல் மெல்ல நடைபோடத் தொடங்கும் முதல் நாளும் இதுவே. தமிழர்களின் ஆண்டுக்கணக்கான "திருவள்ளுவர் ஆண்டு' தொடங்கும் முதல் நாளும் கூட இதுதான்.

தமிழர்களின் திருநாள் கொண்டாட்டங்களுள் முக்கியமானது தைப்பொங்கல். சாதி,மதம், இனம் தாண்டி, இயற்கையோடு இயைந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் திருநாளும் இதுவே.வாழ்வியல் சிறப்பும், அறிவியல் கருத்தும் பொதிந்து கிடக்கும் ஒரு பண்டிகை நாள் இதுவென்றால் அது மிகையாகாது.

இயற்கையின் இயக்கத்தின் உட்சூட்சுமத்தை அறிவியல் ரீதியாக உணர்ந்து, "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்!' என்ற உணர்வெழுச்சியுடன் தமிழர்கள் வழமையாக அனுஷ்டிக்கும் கொண்டாட்ட நாள் இது.

அவனியின் அசைவியக்கத்துக்கு மூலமும் முதலும் ஆதவனே: அவனின்றி அருணனின்றி அணுவும் அசையாது என்பது அறிவியல் உண்மை.சக்தியின் மூலமும் உறைவிடமும் உதயனே. உலகின் உயிர்ப்புக்கும், உயிர் வாழ்வுக்கும் உறுதுணை அவனே.

ஆதவனின் அந்தச் சக்தியை உலகில் பதிப்பவை பச்சைத் தாவரங்கள்தாம். சூரிய சக்தியைத் தொகுத்து விளைச்சலாக அவனிக்குத் தருபவை இந்தப் பச்சையங்களே. உலகின் உணவுச் சங்கிலி இந்த ஒளித்தொகுப்பில் இருந்துதான் தொடங்குகின்றது. இந்த விஞ்ஞானத்தைத் தனது மெஞ்ஞானத்தால் உணர்ந்த தமிழன், அந்த இயற்கையின் தத்துவத்தை உணர்ந்து, ஏத்தி, மகிழ்வதற்காகத் தேர்ந்ததே பொங்கல் திருநாள்.சூரிய சக்தியின் வலுவை பச்சைத் தாவரங்கள் மூலமாக விளைச்சலாக்கித் தானியவடிவில் நமக்குத் தருவது உழவு.

சக்தியின் மூலமான சூரியனையும், அந்த சூரிய சக்தியை உலகுக்குப் பெற்றுத் தரும் உழவுத் தொழிலையும், அந்த ஆதவனின் அருட்கொடை நெற்குவியலாகக் கிட்டும் பேறையும் விதந்து, மகிழ்ந்து, விளைச்சல் வேளையில் அவன் கொண்டாடத் தேர்ந்ததே பொங்கல் பெரு விழா.

சூரியன் தனு இராசியிலிருந்து மகர இராசிக்கு நுழைவதையே "மகர சங்கிராந்தி' என்கிறோம். அன்று தான் தைப்பாவை பிறக்கின்றாள். அன்றுதான் சூரிய பகவான் வடக்கு நோக்கி சஞ்சரிக்கத் தொடங்குகின்றான். இதனை "உத்தராயணம்' என்று கூறுகின்றோம். அது இன்று இந்தப் பொங்கல் திருநாளன்று மீண்டும் தொடங்குகின்றது.

இன்று பொங்கல் என்றால் நேற்றுப் போகித் திருநாள். "பழையன கழிதலும், புதியன புகுதலும்' போகித் திருநாளின் உள்ளார்ந்தம். அந்தப் போகி நேற்றுப் போயிற்று. இன்று பொங்கல்.நேற்றுக் கழிந்தது எது? இன்று புகுவது யாது? போகி டு போனது எது? பொங்கலோடு வருவது எது? என்பவை நியாயமான வினாக்களே.

"தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். புதிய தடத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் சூரிய பகவானின் ரதம் நல்வழியைக் காட்டும் என்பது நம்பிக்கை.

இத்தகைய பல தைகள் தமிழர் தம் வாழ்வில் வந்து போயின. அவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை வைத்துக் காத்திருந்து ஏமாந்ததுதான் அவர்கள் வாழ்வில் மிச்சம்.போரழிவும், பேரழிவும் அவர்களைச் சின்னாபின்னமாக்கிச் சிதைத்தழித்துத் துவம்சம் செய்து துவளவைத்து விட்டன. நம்பிக்கைகள் எல்லாம் இறுதியில் கனவாய், கதையாய், கானல்நீராய்த் தகர்ந்து போயின. அடிமைத் தனமும் விடியல் இல்லாத வாழ்வும் சாசுவதம் என்றாயிற்று. தொலைந்துபோன கண்ணியத்தை கௌரவத்தை மீட்போம் என்ற நம்பிக்கை சிதைந்துபோய் கூனிக் குறுகிப்போய் நிற்கின்றது நம் தமிழினம்.

என்றாலும், இத்தகைய துன்ப துயரங்களுக்காக நாம் அடங்கிப் போய்விட முடியாது. பற்றிப்பிடித்து, வாழ்வில் மீண்டெழுந்து உயர்வதற்கு ஒரு சிறு துரும்பு நம்பிக்கை ஒளிக்கீற்றாகக் கிட்டாதா என்று பார்த்திருப்பது காத்திருப்பது உயிர்ப்பின் உன்னதம்.தமிழர் தம் வாழ்விலும் அத்தகைய ஓர் ஒளிக்கீற்று வாய்ப்பு கிட்டியிருக்கின்றது. இந்தப் பேரவலத்தைத் தமிழர் மீது சுமத்திய திணித்த அதிகாரத் தரப்பை ஒழுங்கு படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பத்தை வாழ்வியல் நமக்குத் தந்திருக்கின்றது. அதுவும் கூட, பேரவலத்தை ஏற்படுத்திய துன்ப, துயர இழப்புகளை நீண்ட காலம் சுமந்து தவிக்க விட்டுவிட்டு வரலாறு அதை நமக்குத் தரவில்லை. குறுகிய காலத்திலேயே அந்தச் சந்தர்ப்பம் கிட்டியிருப்பது அதிசயமானதே.

ஒவ்வொரு விளைவுக்கும், எதிர்விளைவுண்டு என் பது இயற்கையின் நியதி. எமக்குப் பேரழிவுகளை, பேரிழப்புகளை, பெரு நாசங்களைத் தந்து நின்ற விளைவுகளுக்குப் பதில் கூறும் தீர்ப்பு நாள் பதில் விளைவுக்கான நாள் இன்னும் பன்னிரண்டு தினங்களில் நமக்குக் கிட்டியிருப்பது இழப்பிலும் சிறு நம்பிக்கையைத் தரும் துளிர்ப்பே. அதை இயன்றவரை சரியாக, தந்திரோபாயமாக, புத்தி சாதுரியமாக, சாணக்கியமாகப் பயன்படுத்துவது நம்மைப் பொறுத்தது. ஊர் சேர்ந்து இழுத்தால்தான் தேர் அசையும் என்பதைப் புரிந்து, இந்தச் சிதைவின் பின்னரும் ஒன்றிணைந்து சாதிக்க முயல்வோமாக. அதுவே நமது தைப்பொங்கல் சிந்தனையாக பிரக்ஞையாக பிரதிக்ஞையாக அமையட்டும்!
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment