தமிழர் எழுச்சி அரசியலில் விடுதலைப் புரட்சியை ஏற்படுத்திய லெப்.ராஜா (பரமதேவா)- மட்டு.மண்ணின் முதல் மாவீரன்!


1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். 1983 ம் ஆண்டு யூலை இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளையோர்களின் எழுச்சி, புரட்சிவாத உணர்வாக மாறியதன் விளைவில் பரமதேவா என்ற விடுதலை வீரனின் பயணம் ஒரு தளபதியாக, சிங்களப் படைகளை எதிர்த்துத்தாக்கும் களவீரனாக எம்மைக் காண வைத்தது.
சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் செயல்பட்டார்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் தாக்குதல் தளபதியான ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் பல இயக்கங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் மட்டக்களப்பில் புரட்சிவாத இளையோர்களின் புனிதப் பயணமாக அமைந்திருந்தன.
ஒரு போராளியாக, ஒரு விடுதலை வீரனாக, தமிழர் படையின் சிறப்பு மிக்க வீரனாக திகழ்ந்த பரமதேவா தாய் மண்ணில் தன்னைப் பெற்றெடுத்த தாயைப் பார்ப்பதற்கு முதல் எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கண்ணீருக்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தின் படைகள் மீது தாக்குதலை நடத்திவிட்டு தனது தாயைச் சந்திப்பேன் என்று செய்தி அனுப்பிவிட்டு தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.
ஒரு போராளியின் உருவாக்கம் மொழிப்பற்று, இனப்பற்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. சூழ்நிலையின் தாக்கத்துக்குள் இல்லாமல் சிறு வயது முதல் தன் இனத்தின் விடுதலையில் எழுந்தவர்கள், தனது குடும்பத்தின் விருப்போடு தமிழினத்தின் போராளியாகப் புறப்பட்டவர்களின் வரிசையில் மட்டக்களப்பில் முதல் விடுதலை வீரனாக களம்கண்ட காவிய நாயகன் லெப்.ராஜா என்பதில் விடுதலையை நேசிக்கும், விடுதலை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஏந்தப்பட்ட விடுதலை நெருப்பின் அடையாளமாகும்.
இவ்வாறு உணர்வான விடுதலைப் போராளியை தாயக விடுதலைக்கு ஈந்த அன்னையை எண்ணிப்பெருமிதம் கொள்வதோடு அணையாத விடுதலை நெருப்பாக மட்டக்களப்பில் எரிந்து கொண்டிருக்கும் லெப். ராஜா அவர்களின் வரலாற்றில் என் எழுதுகோலை ஊன்றுகின்றேன்.
தமிழர் தாயகம் மீதான நில அபகரிப்பு, ஆக்கரமிப்பு, தமிழின அழிப்பு, மொழிப் புறக்கணிப்பு என்பன தேசிய இன அடையாளத்தை அழிக்கும் செயலாக சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத அடக்குமுறைக்கு பதில் சொல்லும் நிலையில் மாறியபோது புறப்பட்ட இளையோர்களில் ஒருவராக பரமதேவாவின் தன்னலமற்ற தாயக விடுதலைப்பற்று வெளிப்படுத்தப்பட்டிருந்ததனால் ஒரு உண்மைப் போராளியை எமது மண் பெற்று பெருமைகொண்டது.
பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள் பரமதேவாவை ஒரு விடுதலைப் போராளியாக ஏற்றுக் கொண்டதை அன்றைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளிலிருந்து அறியமுடிந்தது.
1984 .09 .22 ம் நாள் அன்று களுவாஞ்சிக்குடி சிங்களகாவல் நிலைய அழிப்பில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன் வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில் தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கிழக்கின் பெரும் வீரனாக, தலைமைக் தளபதியாக செயலாற்றி விடுதலை இயக்கத்தை நடத்தக்கூடிய வல்லமை கொண்டவரான பரமதேவா பயணத்தில் தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்காது.
மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்தள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும் ஏனைய போராளிகளும் தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்திருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டன. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனையும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.
விடுதலைப் போராளிகளை பெருமையாக மக்கள் மதித்த காலப்பகுதியில் இரகசியமாக இத் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்ட போதும் அர்ப்பணிப்போடு அமைந்ததாக சிலரின் உதவியையும் பெற்று தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகினர். தாக்குதலுக்கான இடமும், காலமும் குறிக்கப்பட்ட நிலையில் போராளிகளும் குழுவாகக் பிரிக்கப்பட்டனர்.
மூன்று குழுக்களாகப் பிரிந்த போராளிகள் சந்திக்கும் இடமாக கிரான்குளம் ஊர் தெரிவு செய்யப்பட்டது. 1984 ம் ஆண்டு செப்டம்பர் 21 ம் நாள் இரவு குழுக்கள் மூன்றும் பிரிந்து தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் தீர்மானித்தனர். ஒரு குழு தோணி ஒன்றில் மட்டக்களப்பு வாவியில் பயணித்து ஆயுதங்களுடன் கிரான் குளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இரண்டாவது குழு, மூன்றாவது குழு மிதி வண்டியில் வேறு வேறு பாதைகள் ஊடக பயணித்து குறிப்பிட்ட இடத்தை அடைந்தனர். அன்று இரவு ஒரு ஆதரவாளரின் தென்னந்தோட்டத்தில் தங்கினர். 22 ம் நாள் பகல் உணவு எடுத்துக்கொண்ட பின் மாலை 5 மணியளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்திற்கமைய பி. பகல் 3 மணிக்கும் 4 மணிக்குமிடைப்பட்ட வேளையில் கிரான் குளத்திற்கும், குருக்கள் மடத்திற்குமிடையில் அம்பிளாந்துறை சந்திக்கு அருகாமையில் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து தாக்குதலுக்கு செல்லும் பயணத்தை ஆரம்பித்தனர்.
கல்முனை நெடுஞ்சாலையில் மட்டு நகரிலிருந்து 20 வது மைல்லில் அமைந்துள்ள களுவாஞ்சிக்குடியில் நிலைகொண்டிருந்த சிங்களக் காவல் துறையின் நிலையத்தைத் தாக்கியழித்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் அவசர மருத்துவ ஊர்தி உட்பட இரண்டு ஊர்திகள் வழிமறிக்கப்பட்டு அந்த ஊர்திகளில் போராளிகள் அனைவரும் தாக்குதலுக்காகச் சென்றனர்.
இத் தாக்குதலில் அனுபவமிக்க திருமலைத் மாவட்ட தளபதி லெப். கேணல் சந்தோசம், மூதூர்த் தளபதி மேஜர்.கணேஷ், ஆகியோரும் இடம் பெற்றது மேலும் சிறப்பான நிலையில் தாக்குதல் அணி இருந்ததைக் குறிப்பிட முடிகின்றது.
மாவட்டத்தில் தங்கியிருந்து செயல்பட்ட அனைத்து விடுதலைப் புலிப்போரளிகளும் இதில் பங்கெடுத்திருந்தனர். சரியாக பிற்பகல் 5 .30 மணியளவில் காவல் நிலையத்தினுள் பாய்ந்த விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்தபோது, எதிர் பார்த்ததற்கு மாறாக காவல் துறையினரின் விடுதியிலிருந்து போராளிகளை நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதனால் களநிலைமை மாறியிருந்தது.
ஏனெனில் போராளிகளுக்கு கிடைத்த தகவலின்படி மாலை 6 மணிக்கு பின்னர்தான் காவல்துறையினர் விடுதிகளுக்குள் திரும்புவார்கள் என்றும் அது வரையில் காவல் நிலையத்தினுள் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் என்பதால் பணி ஒய்வு பெறும் நேரத்தில் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆயுதங்களையுப் பெற்று வெற்றியுடன் திரும்பமுடியும் என்பது போராளிகளின் நிலைப்பாடாகும். ஆனால் சற்றும் எதிர்பாரத விதமாக நடந்த இச்சண்டையில் லெப்.ராஜா, வீரவேங்கை ரவி அவர்களின் வீரச்சாவுடன் சில போராளிகள் விழுப்புண்ணடைந்த நிலையில் ஒரு ஆயுதம் மாத்திரம் கைப்பற்றப்பட்டு போராளிகள் பின்வாங்கினர்.
இத் தாக்குதலில் எமக்கு ஏற்பட்ட இழப்பு வரலாற்றில் ஈடு செய்யமுடியாத இழப்பாக அமைந்து போனது. போராட்ட வரலாற்றில் பிற்பட்ட காலங்களின் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது அறியக் கூடியதாகயிருக்கின்றது. மண்ணின் விடுதலைக்காக மட்டக்களப்பில் எழுந்த தமிழ் தேசிய உணர்வின் அடையாளமான பரமதேவா தாய் மண்ணில் தாக்குதலில் வீழ்ந்தது தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக இருந்தது.
வீரவேங்கை ரவி மகிழடித்தீவு ஊரைச் சேர்ந்தவர். வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவனாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அரசியல் வேலையில் உற்சாகமாக செயல்பட்டவர். குடும்பத்தில் மூத்த மகனான வாமதேவன் என்ற ரவிக்கு ஆறு தங்கைகள் சகோதரிகளாக இருந்தனர். இவரின் இழப்பு குடும்பத்திற்கு மாத்திரமில்லாமல் ஊரக உணர்வுள்ள மக்களுக்கும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அன்று இளம் அரசியல் விடுதலைப் போராளி ஒருவரையும் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்திருந்தது.
இவர்கள் இருவரின் வீரச்சாவு செய்தியறிந்த மக்கள் எல்லோரும் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்த தவிப்போடு துயரம் நிறைந்தவர்களாக காணப்பட்டனர். தமிழர்களுடைய வரலாற்றில் மட்டக்களப்பில் பள்ளிக்கூட பருவத்திலிருந்து விடுதலைக்காக எழுந்த ஓர் உயர்வான போராளியான பரமதேவாவை ,ழந்து தாய் மண் தவித்தது. மட்டக்களப்பின் முதல் விடுதலைப் போராளியாக களமிறங்கிய வரலாற்று நாயகனின் சிந்தனைகள், செயல்பாடுகள் விடுதலைப் போராளிகளுக்குப் பாடமாக அமையப்பெற்றிருந்தன.
ஒவ்வொரு தமிழரும் வாழும்வரை போராளியாக வாழ்வதென்பது வரலாற்றில் எமது விடுதலையை வென்றெடுக்க வழிவகுக்கும். இந்த உறுதிதான் எமக்குத் தேவையாகும். இதைவிடுத்து விவேகமற்ற விமர்சனத்தை முன் வைப்பவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து பின்வாங்கி தம்மை அர்பணித்து தாய் மண்ணில் வீழ்ந்தவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவேண்டும்.
பணத்தாசை பிடித்து, ஆக்கிரமிப்பு வாதிகளின் பண உதவியுடன், பித்தலாட்டம் போட்டு, இணையதளம் நடத்துபவர்கள், போராளிகளை போற்றா விட்டாலும், தூற்றாமல் விலகிக் கொள்வதுதான் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு செய்யும் உதவியாகும்.
போற்றுவதற்கும், தூற்றுவதற்குமான தகுதியை இழந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்த் தேசிய விரோதிகள் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை அரங்கிலிருந்து வெளியேறி, ஒதுங்கி வாழ்ந்தாலே போதும் என்ற நிலையில் தமிழ் உணர்வாளர்கள் இருக்கின்றனர்.
பரமதேவாவின் தமிழ் உணர்வு, விடுதலை பெற்றவர்களாக தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற நிலையில் உயர்ந்து நின்றபோது இளவயதில் மாணவ பருவத்தில் இன விடுதலை வீரனாக மட்டக்களப்பில் பரமதேவாவைக் காணமுடிந்தது.
விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி, எழுச்சியில் வரலாறு தேட முற்படுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் ஆயுதப் போராட்டம் மட்டக்களப்பின் விடுதலைப் புரட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டு எழுத வேண்டிய நிலையுமுள்ளது. போராளியின் புனிதப் பயணம் என்பது இலட்சியத்தின் எல்லையில்தான் முடிவடையும்.
தடைகளையும் தன்னல மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு தடம் புரண்டு திரும்புவது போராளி என்ற நிலையிலிருந்து மாறிவிடும். இலட்சியத்தை நோக்கிப் புறப்பட்டவர்கள் எல்லாம் சிங்களப் பாராளுமன்றக் கதிரைகளுக்கு அடிபடும் நிலையில் போராட்டம் மாறியிருக்கின்ற இவ்வேளையில் புரட்சிவாதிகளையும், புனிதப் போராளிகளையும் எமது மக்களுக்கு இனங்காட்டி வருகிறோம்.
மாணவனாக போராட்டத்தில் பரமதேவா.
பரமதேவா, 1975 ம் ஆண்டுகளில் அனைத்துத் தமிழ்மக்களாலும் அறியப்பட்ட பெயராகும். இந்தப் பெயரின் பின்னால் இருந்தபலம் தமிழ் இளையோர்களை தாயக விடுதலை நோக்கிய உறுதியான பயணத்தில் இணைய வைத்திருந்தன. 1972 ம் ஆண்டு சிங்கள அரசின் புதிய அரசியலமைப்பு சட்டங்களின் உருவாக்கத்தில் மே 22 குடியரசு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தன.
சிறுபான்மை இனங்கள் என்று சொல்லப்படுகின்ற தமிழ்த் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்புக்கு இருந்த சட்டவிதியும் அகற்றப்பட்டதாக அரசியலமைப்பை உருவாக்கியிருந்தனர். இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர் அப்போதைய அமைச்சரும் லங்கா சம சமாஜக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர் டி .சில்வா அவர்களாகும். சமத்துவம் பேசுகின்றவர்கள் எல்லாம் பதவிக்கு வந்தவுடன் பேரினவாதத்திற்குள் ,ருந்து அரசியல் செய்வதையே சிறிலங்காவில் அன்று கண்டதுபோல் இன்றும் கண்டுகொண்டுடிருக்கின்றோம்.
1972 ல் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்வுமிக்க வரிகள் தமிழ் இளையோர்களைத் தட்டியெழுப்பியது மாத்திரமில்லாது அவரையும் சிங்களக் சிறைக்குள் தள்ளியது. அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் விடுதலை வேட்கை வீறுகொண்டு எழுந்ததனால் ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பதில் என்ன குறை? என்ற பாவலரின் வரிகளுக்கு அர்த்தத்தை உண்டுபண்ணும் விதமாக தமிழ் இளையோரின் எழுச்சியும் அமைந்திருந்தன.
மே 22 கரி நாளாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் அரசு அறிவித்திருந்த குடியரசு நாள் நிகழ்வுகளைப் புறக்கணித்து தமிழர் வாழ் நிலங்கள் எங்கும் எதிர்ப்பு முழக்கங்கள், எதிர்ப்பு பதாகைகள், கறுப்புக் கொடிகள் என்று சிங்கள அரசுக்கு புரியவைக்கும் நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மேற்கொண்டனர். இவற்றில் தமிழ் மாணவர்களின் பங்கு அளப்பரியதாக அமைந்திருந்தன.
தமிழ் மாணவர் பேரவை என்ற எழுச்சிமிகு அமைப்பின் உருவாக்கத்திற்கும் சிங்கள பேரினவாதத்தின் போக்கு காரணமாக இருந்தன. இவ்வாறான எழுச்சியின் அடையாளமாக, அத்திவாரமாக, விடுதலைப் புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமாக மட்டக்களப்பில் பரமதேவாவின் உணர்வு மிக்க எழுச்சி மாவட்டமெங்கும் தமிழ் மாணவர்களை தட்டி யெழுப்பியது. எழுச்சி கொண்ட இனமாக தமிழினம் மாறி விடுதலையில் ஓர் புரட்சியை ஏற்படுத்துவதற்கு பரமதேவா என்ற மாணவனின் போராட்டங்களும் தூங்கிக் கிடந்த தமிழர்களை நிமிர்ந்து நியாயம் கேட்கவைத்தது.
அற வழியின் கொள்கையில் அரசியலாக இருந்த தமிழ்த் தேசிய ,னத்தின் விடுதலையை அச்சமின்றி, உயிரை துச்சமாக எண்ணிப் பயணிக்கும் இளையோர்களின் கரங்களில் மாறுவதற்கு பரமதேவா போன்றவர்களின் விடுதலைப்பற்று தூண்டு கோலாகயிருந்தன.
பரமதேவா, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஆயுதப் போராட்ட எழுச்சிக்கு முதல் தொடக்கம் என்பதிலிருந்து எழுகின்ற விடுதலை இயக்கங்களின் தோற்றங்களுக்கு மத்தியிலும் தனித்துவமாக, தலை நிமிர்ந்து களம்காணப் புறப்பட்டவர்.
மேடையில் விடுதலைப் புரட்சிவாதம் பேசிய தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லாம் வீட்டில் குடும்ப வளர்ச்சியில் அரசியல் செய்த வேளையில் பரமதேவா போன்றவர்களின் புரட்சிவாத எண்ணங்கள் தங்கள் வழியை தீர்மானிக்க தமிழ் இளையோர்களை ஒருமுகப்படுத்தியதையும் காணமுடிந்தது.
இன்று இந்துக்கல்லுரியாக எம்முன் உயர்ந்து நிற்கின்ற மட்.கோட்டமுனை மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவனாக பரமதேவா, தமிழரின் பண்பாட்டு உடையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவனாகக் காணப்பட்டார். இவரின் ஆற்றலும், அறிவும், தமிழ் இனத்தின் மீது கொண்டபற்றும், பார்த்தவுடன் தெரிந்து கொள்ளுமளவுக்கு முகத்தில் மலர்ந்திருந்தது. ஓர் இளம் விடுதலை வீரனை மட்டக்களப்பு மக்கள் இனங்காணும் அளவுக்கு உயர்ந்த எண்ணங்களும் உறுதியும் பரமதேவாவிடம் நிறைந்து காணப்பட்டிருந்தன.
மாணவ பருவத்தில் பள்ளிக் கூடத்தில் பரமதேவா ஏற்படுத்திய புரட்சி, தமிழ், மாணவர்களை தட்டியெழுப்பியது மாத்திரமல்லாது,சிங்கள அரசு இயந்திரத்தையும் அச்சமடைய வைத்தது. மாணவனான பரமதேவாவின் உணர்வை முளையிலே கிள்ளியெறிய எண்ணியதின் விளைவில் ராஜன் செல்வநாயகத்தின் பங்கு அன்றிருந்தது. இதனால் பள்ளிக் கூடத்தினுள் கலகம் விளைவிக்கும் மாணவன் என்று பரமதேவாவை எந்தப் பள்ளிக் கூடத்திலும் படிக்கமுடியாதவாறு அதிபரை வைத்து வெளியேற்றினார்.
ஆனால் நிலைமைமாறி மாவட்டமெங்கும் மாணவர்கள் புறக்கணிப்பின் மூலம் எதிர்ப்பை தெரிவித்தனர். இப் போராட்டம் மட்டக்களப்பு கல்வித் திணைக்கள அதிகாரிகளை அதிர வைத்தது. சந்திப்புக்கள், பேச்சு வார்த்தைகள் என்று அதிகாரிகள் செயல்பட்டு மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவை அறிவித்தபோது அதிபர் திரு. வைத்தியநாதன் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தார். இம் முடிவு பரமதேவாவை சங்கடத்துக்குள்ளாக்கியது. ஏனென்றால் திறமைமிக்க அறிவியலாளரான திரு. வைத்தியநாதன் அவர்களின் இடமாற்றம் சக மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதால் தான் வெளியேறி வேறு பள்ளிக்கூடத்தில் பயில்வதற்கு பரமதேவா முடிவு எடுத்துச் செயல்பட்டார்.
பரமதேவா என்ற தமிழ் இளைஞனின் உணர்வு மிக்க எழுச்சி மட்டக்களப்பில் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புரட்சி மேலும் வளர்வதற்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. 33 ஆண்டு காலவிடுதலைப் புரட்சியின் 28 ஆண்டுகளுக்கு முன் விடுதலைக்காய் வீழ்ந்த விடுதலை வீரனைப் பற்றிய நினைவுகளில் மட்டக்களப்பில் கருவான புரட்சி வாதத்தின் விடுதலைப் புலிகளின் வித்தாக தாய் மண்ணில் வீழ்ந்த தமிழ் மறவனின் வரலாறு விடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பில் எழுதப்படும்போது எண்ணற்ற எழுச்சிமிகு இளையோர்கள் பற்றியும் எழுதவேண்டிய நிலையுள்ளது.
1972 ம் ஆண்டு தமிழ் மக்களின் விடுதலை வரலாற்றில் முக்கியமான ஆண்டாகவும் எடுத்துக்கொள்ள முடிகின்றது. ஏனெனில் இக்காலத்தில் இளையோர்களின் தீவிர எழுச்சியினால் அடிமைப்பட்ட தமிழர்களின் சார்பாக சிங்கள அரசுக்கு அடங்காப்பற்றுடன் கூடிய எதிர்ப்புகளும் காணப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் தமிழ் இளையோர்கள் விடுதலைப் புரட்சி வாதிகளாக மாறத்தொடங்கியதும் சிறைக்குள் தள்ளப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் விடுதலைப் போராளிகளுக்கான ஆதரவு மேலும் அதிகரித்துக்காணப்பட்டன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இளையோர்களிடையே ஏற்பட்ட விடுதலை உணர்வு, தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தன.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் முதல் தலைவராக திரு. அன்ரன் என்பவர் பணியிலிருந்தபோது. திரு.பொன்.வேணுதாஸ், திரு.மோகனச்சந்திரன், பாசி, துரைராசசிங்கம் போன்றவர்களின் செயல்பாடும் இணைந்ததாக காணப்பட்டன. இக்காலத்தில் மட்டக்களப்புத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையில் தெரிவாகி பின்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து மாவட்ட அரசியல் அதிகாரியாகச் செயல்பட்ட இராஜன் செல்வநாயகம் அவரின் தமிழ் விரோதப் போக்கு தமிழ் இளைஞர்களுக்கு எதிராகத் திரும்பியதனால், விடுதலை உணர்வுள்ள இளைஞர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருந்த சிங்கள காவல்துறையின் விசேட பிரிவினர் இவ்வாறான இளைஞர்களை கைது செய்யும் நோக்குடன் வீடுகளில் தேடுதலை நடத்தி பெற்றோருக்கு பெரும் இடையூறுகளை கொடுத்தனர். இந் நடவடிக்கைகளுக்கு பின்னால் இராஜன் செல்வநாயகத்தின் பங்கு பெரும் அளவில் ,ருந்ததை குறிப்பிடமுடிகின்றது.
தமிழர்களுடைய வரலாறறில் காட்டிக்கொடுக்கும் தேசிய விரோதிகள் வரலாறும் ,ணைந்தே ,ருந்து வந்துள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை என எல்லா இடங்களிலும் தொடர்ந்திருந்தன. இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. தன்னலமற்றவர்கள் மத்தியில் தன்னலமுள்ளவர்களின் செயல்பாடு அழிக்க, அழிக்க முளைப்பதுபோல் தொடர்வது விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதத்திற்கு உதவியாக அமைந்தன. இது எமது இனத்தின் சாபக்கேடு என்றே குறிப்பிடமுடிகின்றது.
விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்று அறியாதவர்கள் எல்லாம் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தும், விடுதலையை வைத்து அரசியல் நடத்திய தன்னல வாதிகளின் போக்கும், விடுதலைப் போராட்ட வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தன.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பில் பரமதேவா போன்ற தமிழ் இளைஞர்களின் பற்று பாரிய தாக்கத்தை சிங்கள அரச இயந்திரத்தில் ஏற்படுத்தியிருந்ததை குறிப்பிட முடிகின்றது. முள்ளிவாய்க்கால் ஊரில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் வரலாறு தேடும் பலருடைய செயல்பாடுகளுக்கு மத்தியில், பரமதேவா பற்றிய போராட்டப் பதிவை தமிழர் வரலாற்றில் வைப்பதற்கு முனைகின்ற வேளையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புரட்சி வாதிகளாக போர்க்கருவி ஏந்திய நிலையில் புறப்பட்ட முதல் விடுதலை வீரனாக பரமதேவா அவர்களையே குறிப்பிடமுடிகின்றது.
1977 ம் ஆண்டுத் தேர்தலில் பரமதேவா
தமிழீழ நாட்டின் மக்கள் ஆணைக்கான தேர்தலாக 1977 ம் ஆண்டுத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் தமிழ் இளைஞர்களின் பங்கு அதிகமாகவே காணப்பட்டது. மட்டக்களப்புத் தொகுதியில் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டபோது, மட்டக்களப்புத் தொகுதி தமிழ் இளைஞர்களின் அதிகப்படியான ஆதரவு கிடைக்கப்பெற்றிருந்தன.
மாணவனான பரமதேவா தொகுதியெங்கும் தேர்தல் கூட்டங்களில் உணர்வு பொங்க பேசியது தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு முழக்கமாக வெளிப்பட்டது. இக் காலப்பகுதியில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பல தமிழ் இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மக்களின் ஆதரவு பெற்றுக்கொடுக்கும் வகையில் மேடைகளிலும், வெளியிலும் பரப்புரையை மேற்கொண்டிருந்தனர். கொள்கை, இலட்சியம் என்பதில் பரமதேவா உட்பட்டவர்களின் நிலை நேரிய பாதையில் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பில் பொன்.வேணுதாஸ், மோகனச்சந்திரன், அன்ரன், வாசுதேவா, சிவஜெயம், தயாளன், குணாளன், சின்னாச்சி, யோகபதி, பூபாலபிள்ளை (பீ.டி), ஆரையம்பதி தவராஜா, செல்வேந்திரன் போன்றவர்களும்.
கல்குடாவில் பா.சின்னத்துரை, கி.துரைராசசிங்கம், வாகரை பிரான்சிஸ், வாழைச்சேனை யோகராஜா, நிமலன் சௌந்தரராஜன், ராஜ்மோகன் ஆகியோரும். பட்டிருப்பில், நடேசானந்தம், மண்டூர் மகேந்திரன்,சரவணபவான், அரசன், தம்பிராசா, பரமேஸ்வரன், பிரேம், இன்பராசா, தவம், உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ் மக்களின் விடுதலையை பெறுவது என்ற குறிக்கோளில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்பட்டதனால் மாவட்டம் எங்கும் வேல்முருகு, தமிழ்நேசன், பன்னிர்செல்வம், ரஞ்சன், நாகராஜா ஆகிய இளைஞர்களின் உணர்வுமிக்க செயல்பாடுகள் தமிழ் மக்களை தெளிவுபடுத்தியிருந்தன.
மாணவப்பருவத்திலிருந்து தனது இறுதிக்காலம் வரை தமிழ் மக்களின் விடுதலைக்காக களத்தில் பயணித்த பரமதேவா போன்றவர்களின் போராட்ட வரலாறு இன்றைய எதிர்கால இளைய சந்ததிக்கு பாடமாக அமைய வேண்டுமென்பது இக் கட்டுரையின் நோக்கமாகும், பிறப்பின் பயனை அடைந்துவிட்ட இந்தப் புனிதப் போராளிகள் விட்ட பணி தொடரவேண்டும்.
தாய் மண்ணில் பிறந்ததன்பின் தொடர்ந்த மாணவ, வாலிபப் பருவங்களை, தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த பரமதேவா போன்ற இளையோர்கள் எக்காலத்திலும் தமிழ்த் தேசிய இனத்தால் மறக்கப்படமுடியாத மாமனிதர்கள் என்பதை தமிழர் வரலாறு உணர்த்திக் கொண்டேயிருக்கும். மட்டடக்களப்பில் பரமதேவா தமிழ்த் தேசிய எழுச்சியின் ஆரம்ப வடிவம் என்பது அழியாத வரலாற்று பதிவாகும்.
தனித்து ஒரு குழு அமைத்து, களமாடப் புறப்பட்ட பரமதேவா,
1977 ம்ஆண்டு காலப்பகுதியில் இலங்கைத் தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களின் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களின் விடுதலையை பெறுவதற்கு உகந்தவழியை தெரிவு செய்யும் நிலையில், பரமதேவா எடுத்தமுடிவு ஆயுதங்களைப் பெறுவதற்காக அரச நிறுவனங்களிலிருந்து காசு பெறும் நடவடிக்கையாகும்.
இதற்காக பொத்துவில் ரஞ்சன், விஜி, வாமதேவன் ஆகியோர் குழுவாக இணைந்தனர். 1978 ம் ஆண்டு செங்கலடி ப .நோ .கூட்டுறவுச் சங்க கிராமிய வங்கியிலிருந்து காசை பறித்துக்கொள்ளும் நடவடிக்கை தாக்குதல் இலக்காகும். ,க் காசு மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான போர்கருவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் பரமதேவாவின் மனதில் பதிந்திருந்தது.
எவ்வித எதிர்கால வாழ்வு நோக்கமும் அற்ற ஒரு விடுதலைப் போராளியை பெற்றுக்கொண்ட தமிழ் மக்கள் குறுகிய காலத்தில் இழந்தது உறுதிமிக்க விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தடைகளில் ஒன்றாகவே கருத முடிந்தது.
தனித்துச் சிந்தித்து களமிறங்கிய பரமதேவா அவர்களின் திட்டத்தில் முதல் நடவடிக்கையொன்று மட்டக்களப்பு மண்ணில் நிறைவேற்றப்பட இருக்கின்ற நிலையில் செங்கலடியைப் பற்றிக் குறிப்பிடுகின்றபோது மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலையில் 10வது மைல் கல்லில் செங்கலடி அமைந்திருக்கின்றது. செங்கலடி கிராமிய வங்கிக்கு முன்பாக நெடுஞ்சாலையின் மறுபக்கத்தில் சாந்தி சாராய விடுதியும், அதற்கு அருகாமையில் சாரதா படமாளிகையும், அதனை அண்டியதாக எல்லை வீதியும் அமைந்திருக்கின்றன.
ஓரளவு சனநடமாட்டம் உள்ள இவ்விடத்தில் ஒரு நடவடிக்கையை பரமதேவா குழுவினர் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் பயன்படுத்திய மகளூர்ந்து ஓட்டுனராக வாமதேவன் இருந்தார். குறிப்பிட்டபடி நடவடிக்கை அந்தபோதும், எதிர்பாராத சம்பவம் ஒன்று இவர்கள் பிடிபடுவதற்கு காரணமாகவிருந்தன.
மட்டக்களப்பு - பதுளை நெடுஞ்சாலையில் பரமதேவா குழுவினரின் மகளுர்ந்து, பறித்தெடுத்த காசுடன் பயணித்த வேளையில் சாந்தி சாராய விடுதியில் சந்தர்ப்ப வசமாக தங்கியிருந்த சிங்களக் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் செங்கலடி கிராமிய வங்கியில் தென்பட்ட பதட்டத்தை விளங்கிக்கொண்டபின் பரமதேவா குழுவினரின் மகளூர்ந்தை தொடர்ந்து சென்று மகளூர்ந்தை நெருங்கிய வேளையில் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.
இதனால் பரமதேவா குழுவினரும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆனால் இத் தாக்குதலைத் தொடர்ந்து பரமதேவா விழுப்புண் அடைய மகளூர்ந்து நிறுத்தப்பட்டு இறங்கி ஓட முற்படும்போது ஓட்டுனர் வாமதேவன் மாத்திரம் தப்பிச்செல்ல பரமதேவா, விஜயசுந்தரம், ரஞ்சன் ஆகியோர் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 
இக்காலங்களில் மக்களால் பேசப்பட்ட கதாநாயகன் பரமதேவா, காலத்தால் அழியாத வரலாற்றுப் பதிவு ஒன்றை ஆரம்பித்து வைத்து, உணர்வுள்ள இளையோர்களை தமிழர் உரிமைக்காக தட்டியெழுப்பிய தன்னலமற்ற வீரன். இவனுடைய எழுச்சி, எண்ணற்ற இளையோர்களை களமாடத் தூண்டியது.

இந்த வரிசையில் மட்டக்களப்பில் மறத்தமிழ் வீரனாக, தன்மானத்துடன் எழுந்து, சிங்களப் படைகளுக்கு கெதிரான குண்டுத் தாக்குதலுக்கு சென்ற வேளையில் கைகளுக்குள்ளே குண்டுவெடித்ததால் விழுப்புண் அடைந்த நிலையில், இந்த அடையாளம் தன்னைக் காட்டிக்கொடுக்குமென்பதால் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற கல்லடிப்பால அடியில் ஓடுகின்ற மட்டக்களப்பு வாவியில் வீழ்ந்து முழ்கி தன்னை இழந்து தமிழ் மக்களின் விடுதலைப் போருக்கு ஆரம்பத்தில் அத்தியாயம் ஒன்றைப் படைத்திட்ட செந்தமிழ் வீரன் பெஞ்சமின் உட்பட்டவர்களை எண்ணிக்கொள்வதிலும், அதனை எழுத்தாக வடிப்பதிலும், பரமதேவா வரலாற்றோடு பதிவை ஒன்றிணைத்து தொடர்கின்றேன்.
சிங்களச் சிறையில் பரமதேவா
1978 ம் ஆண்டு பரமதேவா, ரஞ்சன், (லெப்.சைமன்) விஜயசுந்தரம், ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளையோர்கள் சிங்கள புலனாய்வுப் படையால் பிடித்து, சித்திரவதை செய்யப்பட்டு சிறைகளை எல்லாம் தமிழர்களின் அடக்குமுறைக் கூடங்களாக மாற்றிக்கொண்டிருந்தனர்.
விடுதலைக்காக போராளிகள் உருவாவதும், சிறைகளில் சித்திரவதை செயப்பட்டு, இருண்ட வாழ்க்கையில் மக்களுக்காக வாழ்வதும் தொடர்ந்த வண்ணம் தமிழர் தாயகமெங்கும் விடுதலை அலை எழுந்து கொண்டிருந்தன. மட்டக்களப்பு மண்ணில் உணர்வுடன் எழுந்த, உணர்ச்சி பாவலர் தனது பாட்டு வரிகளால் ஊட்டிய பற்று இளையோர்களை விடுதலைப் பற்றாளர்களாக மாற்றியிருந்தது.
ஒவ்வொரு அடக்கு முறையையும் சிங்களம் திணிக்கும்போது திரண்டெழும் மக்கள் சக்தி மலைபோல் எதிர் கொண்டது. அரச சட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அன்றைய ஜனாதிபதி து.சு.ஜெயவர்த்தன அவர்களின் பேரினவாத அரசியல் தமிழ் ,ளைஞர்களுக்கெதிராக அடக்கு முறைச்சட்டங்களை உருவாக்குவதற்கும், சிங்களச் சிறைகளில் விசாரணைகளின்றி, காலவரையற்ற சிறைவாசத்திற்குட்படுத்துவதும் தமிழின அடக்கு முறையை மேலும் வலுவாக்கியது.
இதனால் எண்ணற்ற இளையோர்கள் சிங்கள சிறைகளில் குவிந்திருந்தனர். ,வர்களில் ஒருவராக பரமதேவாவும் சிங்களச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். தாயகமெங்கும் ஏற்பட்ட எழுச்சி, சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறை, மேலும் இளையோர் கூட்டங்களை அணியணியாக விடுதலை ஒன்றையே நோக்காகக் கொண்டு பயணிக்கவைத்தன.
புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரங்கொண்ட அடக்குமுறை ஆட்சியமைப்பு எல்லாம் இணைந்ததாக தமிழ்மக்களை குறி வைத்த சட்டங்கள், தன்னாட்சி உரிமைக் கோட்பாட்டுக்கு விலங்கு போட்டு தமிழ் மக்களை அடக்கி ஆளப்புறப்பட்டதெல்லாம் தாயகமெங்கும் தமிழின எழுச்சியின் உச்சத்திற்கு இளைஞர்களை அழைத்துச்சென்றிருந்தன. தொடர்ந்து அடக்குமுறைக்கும், தமிழின அழிப்புக்கும் உச்சமாகமைந்த 1983 யூலை இன வன்முறையும், படுகொலைகளும் சிங்களப் பேரினவாதஅரசியலின் பௌத்த மேலாதிக்க கொள்கையை வெளிப்படுத்தன.
உலகிலே ஆச்சரியப்பட்ட விடயமாக சிங்களவர்கள் பௌத்தமதத்தைப் பின்பற்றிய நிகழ்வாக இருப்பதைக் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது. வக்கிரமும், வன்முறையும் கலந்து ஏனைய இனத்தவரையும், மதத்தவரையும் அழிக்கும் செயலானது பௌத்தத்திற்கு பெரிய இழுக்கை இலங்கைத் தீவில் ஏற்படுத்தியிருந்தது.
சிறைக்குள் அடைக்கப்படிருந்த தமிழ் அரசியல் போராளிகளை படுகொலை செய்யும் செயலானது உலகத்திலேயே மனிதாபிமானத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக எடுத்துக்கொண்டு, உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அமைந்த சம்பவமான சிறைப்படுகொலை உலக நாகரீகத்தைக் குழி தோண்டிப் புதைத்த நிலையிலிருந்தன. மூத்த போராளிகளான தங்கத்துரை, குட்டிமணி,போன்ற 52 தமிழ்ப் போராளிகளின் படுகொலையும், தப்பிய கைதிகள் மட்டக்களப்பு சிறைக்குள் மாற்றப்பட்டதான நிலையில் பரமதேவா போன்றோரின் சிறைவாசமும் தொடர்ந்திருந்தன.
1983.09.23 ம் நாள் மட்டக்களப்பு தமிழ் மக்களின் முழு ஆதரவோடு தகர்க்கப்பட்ட சிறையிலிருந்து தமிழ்ப் போராளிகள் வெளியேறிய போது பரமதேவா உட்பட சிலர் தாயக மண்ணில், பரந்த வெளிச்சத்தில், விடுதலை வானில் மறைக்கப்படாத ஒளியைத் தேடிய நிலையில் தமிழர் எழுச்சியின் புரட்சி விடுதலை வடிவமான மேதகு வே .பிரபாகரன் அவர்களின் உறுதிமிக்க விடுதலைப்பாதை அவர்களை பின்தொடரவைத்தன.
சிங்களப் பேரினவாதத்தைப் பொறுத்தவரையில் பிரபாகரன் அவர்களின் வீரம், தன்மானம் என்பன தமிழரைத் தலை நிமிர்ந்து வாழவைக்கும் என்ற எண்ணம், பரமதேவா அவர்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ,ணைய வைத்ததன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ,ந்தியாவில் முதல் பாசறையில் பயிற்சி பெறுவதற்கு பயணிக்கவைத்தன.
விடுதலைப் புலிகளின் பாசறையில் பரமதேவா
இலங்கைத் தீவில் மாபெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து 1983 ம் ஆண்டு இறுதிப் பகுதியிலிருந்து இந்திய அரசின் அழைப்பில் தமிழ் இளையோர்கள் அணிகள் படைத்துறை பயிற்சி பெறுவதற்காக படகின் மூலம் சென்று கொண்டிருந்தனர். இப் பயிற்சியை பெறுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட முதலாவது பயிற்சிப் பாசறையில் பரமதேவாவும் இணைந்திருந்தார்.
1972 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்த மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பாசி, மோகனச்சந்திரன், ஆகியோருடன் பொன். வேணுதாஸ் சரவணபவான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்.
1975 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலை எழுச்சியில் உணர்வுடன் எழுந்து ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்களின் முன்னணியில் திகழ்ந்த பரமதேவா, ரஞ்சன், தயாளன்,யோகபதி ஆகியோர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டத்திலிருந்து முதல் உறுப்பினரான பாசி.யோகன் அவர்களுடன் இணைந்ததாக போராளிகள் புறப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பின் முன்னணி வீரன் பரமதேவாவின் விடுதலை உணர்வு, எழுச்சிமிகு செயல்பாடுகள் என்பவற்றை அறிந்திருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் .பிரபாகரன் அவர்களுக்கு பரமதேவா விடுதலைப் புலிகளோடு இணைந்தது தனது உறுதியான விடுதலைப் பயணத்தில் கிழக்கிலிருந்து சாள்ஸ் அன்ரனியைத் தொடர்ந்த பலமாகவே எண்ணிப்பெருமிதம் கொண்டிருந்தார்.
தலைவரின் நெஞ்சினில் ஆழமாக வேரூன்றியிருந்த கிழக்கு போராளிகளில் பரமதேவா ஒருவர் என்பதை தலைவர் அவர்களின் எண்ணங்களின் வெளிப்பாட்டிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.
தாய் மண்ணில் விடுதலைப் புலிப் போராளியாகப் களத்தில் பரமதேவா
சாதாரண படகுப் பயணமூலம் தாய்த் தமிழகத்திலிருந்து தமிழீழத் தாய்மண்ணுக்கு வந்திருந்த பரமதேவா தனது பிறந்த ஊர் பயணத்தில் நடைப்பயணம் ஒன்றுக்காக காத்திருந்தார். 
ஆரம்ப காலங்களில் சாதாரண மீன் பிடிப் படகுகள் மூலமும்,கால் நடை மூலமும் மாவட்டங்களுக்கிடையிலான போக்கு வரவைப் போராளிகள் மேற்கொண்டிருந்தனர்.

யாழ்.மாவட்டத்திலிருந்து வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராளிகளோடு சிலகாலம் தங்கியிருந்த பாமதேவா முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தை தாக்கியழிக்கும் நடவடிக்கையில் முன்னணி வீரனாக களமிறங்கினார்.
விடுதலைப் புலிகளின் போராளிகளால் 05 .08 .1984 ம் ஆண்டு அன்று தாக்கியழிக்கப்பட்ட ஓட்டுச்சுட்டான் சிங்கள காவல் நிலையத்தில் சுமார் 30 விசேட பயிற்சி பெற்ற அதிரடிப்படையினர் உட்பட்ட 50 சிங்கள காவல் துறையினர் பணியிலிருந்தனர். முல்லைத்தீவின் முச்சந்தியில் அமைந்துள்ள ஓட்டுச்சுட்டான் பழமையான வரலாற்றை எமக்கு உணர்த்தும் பாரம்பரிய தாயகத்தின் புனித பூமியாகும். தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இவ்வூரிலிருந்து முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு, முத்தையன்கட்டு, நெடுங்கேணி போன்ற தமிழரின் ஊர்களுக்குள்ளும் செல்ல முடியும், இந்த ஊரின் அருகாமையில் பண்டாரவன்னியன் என்ற தமிழ் மன்னனின் கல்லறை கற்சிலை மடுவில் அமைந்துள்ளதையும் குறிப்பிடமுடியும்.
வீறுகொண்டெழுந்த வேங்கைகளின் பாய்ச்சலில் கிலிகொண்ட சிங்களப்படையினர் அழிக்கப்பட்ட படையினரை விட்டு நாலா புறமும் ஓடியபோது விடுதலைப் புலிகள் உள் நுழைந்து எராளமான நவீன போர்க்கருவிகளை அள்ளியெடுத்து வெளியேறினர்.
சிங்கள காவல் ஆய்வாளர் கணேமுல்ல உட்பட்ட 6 பேர் இத் தாக்குதலில் அழிக்கப்பட்டனர். விழுப்புண் அடைந்த சில போராளிகளுக்கு பரமதேவா முதல் உதவிப் பணிகளைத் செய்திருந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளுடன் பரமதேவா என்ற மட்டக்களப்பு மாவீரனும் இணைந்திருந்தார். தாக்குதலுக்கும், மருத்துவத்திற்குமாக கடமை உணர்த்தப்பட்ட பரமதேவா தனது பணியை செம்மையாக செய்திருந்தார்.
அள்ளப்பட்ட ஆயுதங்களில் சிலவற்றுடன் முல்லைத்தீவு மண்ணிலிருந்து நடைப்பயணமாகவும், கடல் பயணமாகவும் சில போராளிகளுடன் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டார். முல்லைத்தீவு, மணலாறு, தென்னமரவாடி, வெருகல் ஊர்களுடாக அவருடைய பயணம் அமைந்திருந்தது. அக்காலத்தில் விருப்புடன், புனிதப் பயணத்தில் இலட்சியத்திற்காக, உறுதியான கொள்கையில் பயணிக்கும் ஒவ்வொரு போராளிக்கும், தமிழீழ மெங்கும் தமிழ் ஊர்களைத் தாவிச்செல்வதும், அங்கு வாழும் மக்களை தரிசிப்பதும் புதிய அனுபவமாகும். ஒரு போராளியின் உள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வின் வெளிப்பாடகவும் இருந்ததனால் இப் பயணத்தை தமிழர் நிலங்களில் கால் பதித்துச் செல்லும் பாக்கியமாகவே கருதியிருந்தனர்.
ஒரு போராளியின் வாழ்க்கையில் தான் சார்ந்த இனத்தின் விடுதலையை தாங்கிச்செல்லும்போது. முழு இனத்தின் உறவோடு பயணிப்பதில் அவனின் இலட்சியப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்பன உண்மையின் வெளிப்பாடாகவே அமைந்துவிடுகின்றன. இவ்வாறு எமது மண்ணில் புனிதப் போராளியாகப் பயணித்தவர்களில் பரமதேவாவும் தமிழர் வரலாற்றில் விடுதலை வீரனாக, கண்முன்னே நிழலாக காட்சிதந்து கொண்டிருக்கின்றார்.
ஒரு தமிழன்னைக்கு, தாய் மண்ணில் பிறந்த பரமதேவா பாலகப்பருவம் தாண்டிய பள்ளிப் பருவத்தில் தமிழ் மக்களின் விடுதலையை தோள்மீது சுமந்து பயணித்து தமிழீழ அன்னையின் வீரப் புதல்வர்களில் ஒருவரானார்.
மட்டக்களப்பில் இராஜதுரை, அம்பாறையில் கனகரெட்ணம் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தை சிதைத்து தமிழர் அரசியலிலிருந்து மாறியபோது, கனகரெட்ணம் அவர்களின் மகனையும் அழைத்துக்கொண்டு களமாடப் புறப்பட்ட பரமதேவா மட்டக்களப்பு அரசியலில் பாரிய தாக்கத்தையும், உறுதியான விடுதலை சார்பாக ஏற்படுத்தியிருந்தார்.
அன்று அவருக்கு தோள் கொடுத்தவர்களாக காசி ஆனந்தன், பொன்.வேணுதாஸ், வணசிங்கா ஆசிரியர், சௌந்தரராஜன் ஆசிரியர், பத்திரிகையாளர் நித்தியானந்தன், வணபிதா சந்திரா பெர்னாண்டோ போன்றவர்களைத்தான் எம்மால் இனங்காணமுடிகிறது. தமிழர் அரசியலில் வேறுபலரும் தொடர்ந்திருந்தபோதும் உறுதியான விடுதலை, அரசியல் பயணத்தில் விலகாமல் சென்றவர்களாக பிற்காலத்தில் அரசியலில் மிளிர்ந்தவர்களை உயர்ந்தவர்களாக சொல்ல முடியவில்லை.
தமிழரின் அரசியல் பயணம், விடுதலைப் பயணமாக மாறிய வேளையில் மட்டக்களப்பில் உறுதியான அரசியல் எழுச்சியில் குளிர் காய்ந்து பதவியைப் பிடித்தவர்களும், அதைக்தக்கவைக்க தடம் புரண்டு அரசியல் நடத்தியவர்களையும், அவதானிக்க முடிந்தது.
பரமதேவா (லெப். ராஜா) என்ற மாவீரனின் வரலாற்றுப் பதிவில் சாதாரண சம்பவங்களாக அரசியலைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் எழுச்சி அரசியல் தொடங்கிய வேளையில் இவருடைய விடுதலை எழுச்சியும் மக்கள் மத்தியில், ஒரு புரட்சித் தீயை மூட்டியதால், வரலாறும் அரசியலோடு இணைந்ததாக பதியப் படவேண்டிய நிலையில் இருக்கின்றது.
,ன்றைய தமிழ் இளையோர்களுக்கெல்லாம் முன் மாதிரியான, எழுச்சி வீரனாக கூறக்கூடிய பரமதேவா (லெப் .ராஜா) என்ற தன்மானமிக்க, தமிழ் புரட்சியாளனின் வரலாறு, புதிய எழுச்சியை, புதிய அரசியலை, விடுதலைக் களத்தில் நிட்சயம் தோற்றுவிக்கும். மங்காது, மறையாது, புரட்சியாளர்களின் வரலாறு என்பதற்கமைய லெப். ராஜா (பரமதேவா) போன்றவர்களின் வரலாறும், காலம் காலமாக எமது மக்களின் சந்ததியோடு தொடர்ந்து செல்லும்.
விடுதலை அடையமட்டுமல்ல, விடுதலை பெற்ற பின்பும் இது தொடரும்.
மாசற்ற மறவனை பெற்றெடுத்த மட்டக்களப்பு மண் கண்ட வீரர்கள்பலர், இம் மண்ணில் களமாடி வீழ்ந்த 8000 க்கு மேற்பட்ட மாவீரர்களின் வரலாற்றின் ஆரம்பந்தான் பரமதேவா என்ற புரட்சி வீரனின் புதிய விடுதலை அத்தியாயம். எழுதப்படுகின்ற எமது போர்க்காவியத்தின் படைப்புகளில் மட்டக்களப்பின் தொடக்கத்தின் முதல் பக்கமாக பரமதேவா என்ற விடுதலைப் போராளியின் வரலாறு அமைந்திருக்கும்.
என்றும் எழுகதிர். 




Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment