வழக்கம்போலவே, அடுத்த ஆண்டிலும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக அதிகரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது, இது உறுதியாகியுள்ளது.கடந்த ஆண்டில் கோத்தாபய ராஜபக்ஸவின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடே, மற்றெல்லா அமைச்சுக்களையும் விட அதிகமானதாக இருந்தது. இம்முறையும் அதேநிலை தான் தொடரப் போகிறது.
அடுத்த ஆண்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 29 ஆயிரம் கோடி ரூபாவாக இருக்கப் போகிறது. 133 ஆயிரத்து 500 கோடி ரூபா அரசின் மொத்த செலவினமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் 21.72 வீதத்தை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சே விழுங்கிக் கொள்ளப் போகிறது. கடந்த ஆண்டில் இந்த அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இது 6 ஆயிரம் கோடி ரூபா அதிகமாகும். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 25 வீதத்துக்கும் அதிகமான நிதி இம்முறை கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சேர்த்தே இந்த நிதி ஒதுக்கீடு என்று, அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கான மிகை ஒதுக்கீடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக நியாயப்படுத்தி வருகிறது. ஆனாலும் அடுத்த ஆண்டில் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்படவுள்ள 29 ஆயிரம் கோடி ரூபாவில், 24 ஆயிரத்து 810 கோடி ரூபாவையும் விழுங்கிக் கொள்ளப்போவது பாதுகாப்பு அமைச்சு மட்டும் தான். இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படை, பொலிஸ், கடலோரக்காவல் படை ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடே இதுவாகும்.
போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகப் போகின்றன.
ஆனாலும் அரசாங்கம், பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.
போருக்குப் பின்னர் படைபலத்தைக் கட்டியெழுப்புவதிலேயே அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
போரின் போது, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கடனாக வாங்கப்பட்டன. அவற்றுக்கான வட்டியையும் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதாக அரசாங்கம் நியாயம் கற்பித்து வருகிறது. ஒரு வகையில் இது சரியானதாகவே இருந்தாலும், பாதுகாப்புக்கான இந்த மிகை நிதி ஒதுக்கீடு எந்தளவு காலத்துக்கு நீளப்போகிறது என்று அரசாங்கம் ஒருபோதும் விபரித்ததில்லை. போர் நடந்து கொண்டிருந்த போது, கடனுக்கு ஆயதங்களை வாங்கிக் குவித்த போது, இப்படியான நிலை ஏற்படும் என்று அரசாங்கத்துக்கு தெரியாமல் போயிருக்காது. அப்போது, போர் முடிந்ததும், பாதுகாப்புக்காக செலவிடும் நிதியை அபிவிருத்திக்காக செலவிடுவோம், இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்றெல்லாம் அரசாங்கம் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் தான், பட்ட கடனைக் கொடுக்க வேண்டும், போருக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட இராணுவத்தை பாதுகாக்க வேண்டும் என்று நியாயம் சொல்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், போரைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த போது பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட, போர் முடிவுக்கு வந்த பின்னர் ஒதுக்கப்படும் நிதியே மிகமிக அதிகமானது.
இந்தக் கேள்வி வலுப்பெற்ற போது தான், நகர அபிவிருத்தி அமைச்சையும் கோத்தாபய ராஜபக்ஸவின் கையில் கொடுத்து, எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.
ஆனால், போருக்குப் பின்னர், படைக்கட்டுமானங்களுக்கு அரசாங்கம் பெருமளவில் நிதியை ஒதுக்கி வருகிறது என்பதே உண்மை.
கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 14 வீதமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 25 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, போக்குவரத்து அமைச்சு போன்ற நாட்டின் முக்கியமான அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டில் அரசாங்கம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதிலிருந்து அரசாங்கம் நாட்டை வளப்படுத்தும் நோக்கில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடவில்லை என்பது உறுதியாகிறது. அவ்வாறான எண்ணம் இருந்திருந்தால், படைக்கட்டுமானங்கள் மீது செலுத்தும் கவனத்தை அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் செலுத்தியிருக்கும். ஆனால், அரசாங்கமோ தனது படைவளத்தை இன்னும் எப்படிப் பலப்படுத்தலாம் என்பதிலேயே கருத்தாக உள்ளது.
கடற்படைத் தளபதியாக அண்மையில் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே, ஆழ்கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்துவதற்கு ஐந்து ஆழ்கடல் ரோந்துப் படகுகளை வாங்கப் போவதாகவும், அதற்கான பேச்சுக்கள் நடப்பதாகவும் கூறியுள்ளார். இப்போது, இலங்கைக் கடற்படையிடம் ஆறு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் உள்ளன. அவை எதுவுமே கழித்து ஒதுக்கப்பட வேண்டிய நிலையை அடைந்து விடவில்லை. கடற்புலிகளின் அச்சுறுத்தல் இருந்த போதே, இந்த ஆறு ஆழ்கடல் ரோந்துப் படகுகளை வைத்துத் தான் இலங்கையின் கடற்பிராந்தியத்தை பாதுகாத்தது இலங்கைக் கடற்படை. இப்போது கடற்புலிகளின் அச்சுறுத்தல் இல்லா விட்டாலும் கூட, ஆறு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் போதாது, இன்னும் ஐந்து வேண்டும் என்று கூறியுள்ளார் கடற்படைத் தளபதி.
அரசாங்கத்துக்கும் சரி, பாதுகாப்பு உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கும் சரி ஆயுததளபாடங்களை வாங்கிக் குவிப்பது ஒரு இயல்பான நோய் போலாகி விட்டது.
பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகள் அவசியமற்ற திட்டங்களுக்கும் தாராளமாகவே பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு கடற்படை வாங்கத் திட்டமிட்டுள்ள ஆழ்கடல் ரோந்துப் படகுகள் ஒரு உதாரணம்.
இன்னொரு உதாரணம், இலங்கை விமானப்படைக்கு வாங்கப்படவுள்ள 14 எம்.ஐ-17 ஹெலிகொப்டர்கள்.
இலங்கை விமானப்படையிடம் தற்போது போதியளவு ஹெலிகள் இருந்தாலும், இராணுவ தளபாடங்களை வாங்கப் பயன்படுத்தலாம் என்ற நிபந்தனையுடன் ரஸ்யா கொடுக்க முன்வந்த கடனில் தான் இந்த ஹெலிகள் வாங்கப்படவுள்ளன. இந்த ஹெலிகளுக்கு இப்போது ஒன்றும் அவசரமில்லை. இவற்றை வாங்குவதால், இலங்கையின் கடன் சுமை தான் அதிகரிக்கப் போகிறது.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய பல விவகாரங்கள் இருந்தாலும், அரசாங்கம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாதுகாப்புக்கு கோடி கோடியாக கொட்டிக் கொண்டேயிருக்கிறது, படைக்கட்டுமானங்களின் பலப்படுத்தலை எப்போது அரசாங்கம் கைவிடுகிறதோ அப்போது தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும். அதுவரை பாதுகாப்புக்கான இந்த மிகை ஒதுக்கீடுகளை அரசாங்கம் நினைத்தாலும் கூட கட்டுப்படுத்த முடியாது.
கட்டுரையாளர் தொல்காப்பியன் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment