அண்மைய காலங்களில் அதிபர் மகிந்த ராசபக்சவின் வெளியுறவு கொள்கை மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது போல் கொழும்பிலிருந்து வெளிவரும் கட்டுரைகள் நோக்கப்படுகின்றன. நடைபெற்று வரும் அனைத்துலக நாடுகளின் போக்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அண்மைய சிறிலங்காதேசியவாத ஆய்வாளர்கள் மத்தியில் வெளியுறவு கொள்கை குறித்த பெரும் ஆதங்கங்களை ஏற்படுத்தி வருவதையே இது எடுத்துக் காட்டுகிறது. இந்த மாற்றங்கங்களுக்கு உரிய பதில் நடவடிக்கைகள் குறித்த தேடுதல்களின் வெளிப்பாடே இவ்வாறான கொழும்பு கட்டுரைகளின் அடிப்படை நோக்காகும்.
அதேவேளை தமிழர்களின் தேசிய இனத்தின் கட்டமைப்பை சிதைப்பதிலும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்வதிலும் சிறிலங்காவின் விவகாரங்களில் அனைத்துலக தலையீட்டை தவிர்ப்பதிலும் மிகப்பெரிய பிரயத்தனங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.
பொதுவான இரு நாடுகளின் இராசதந்திரிகள் சந்திப்பில் தமது நாடுகளிற்கு இடையே உள்ள ஒற்றுமைகள். ஒருமித்த கொள்கைகள். பொருளாதார விட்டு கொடுப்புகள் இவற்றைத் தொடர்ந்து உடன்படிக்கைகள் என்பன முக்கியத்துவம் பெறுவது பொதுவான விடயமாகும்.
ஆனால் சிறிலங்கா இராசதந்திரிகளோ தமது நாட்டின் ஒரு இனத்திற்கு எதிராக தாம் கொண்ட இன அழிப்பு கொள்கையை பாதுகாப்பதிலும், நியாயப்படுத்துவதிலும். அந்த இனத்தை பயங்கரவாத போக்குடைய இனமாக காட்டுவதிலும் தான் முக்கிய கவனம் செலுத்துகின்றனர்.
இதற்கு ஏற்றாற்போல ஒரு யுத்த களத்திற்கு ஈடாக அனைத்துலக மட்டத்தில் பரந்து விரிந்த போர்க்களம் திறக்கப்பட்டுள்ளது. இராசதந்திர ஆயுதங்கள் கொண்டு முழு மடிப்பில் சிறிலங்கா அரச தரப்புக்கு பலச்சேர்ப்புகள் இடம் பெற்று வருகிறன. இந்த நிலையை கடந்த சில வாரங்களாக வெளிவரும் செய்திகளை ஆதாரமாக கொண்டு சிறிலங்கா அரசு எத்தகைய நியாயங்களை தம்பக்கத்தில் கொண்டுள்ளனர் என்பதை இக்கட்டுரை வெளிக்கொணர முயல்கிறது.
அதேவேளை தமிழர்களின் விவகாரம் அனைத்துலக இராசதந்திர அரங்கில் புதிய பரிமாணம் எடுக்கிறது என்பது மறுக்கப்பட முடியாது உள்ளது. தகுந்த வெளிப்படையான சனநாயக அரச முறை செயற்பாடுகள் அற்ற நிலையில் எவ்வாறு பல்வேறு தமிழினத்திற்கு சாதகமான அனைத்துலக அரசியல் சூழ்நிலைகள் கை நழுவிப் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
சிறிலங்கா தரப்பு தம்பக்க நியாயங்களாக பலவிடயங்களை எடுத்த காட்டுகின்றது
1.அடிப்படையில் சிறிய நாடுகளின் ஆழுகைக்குள் உட்பட்ட விவகாரங்களில் இதர பெரிய நாடுகளோ அல்லது அனைத்துலக அமைப்புகளோ தலையிட கூடாது என்பது.
:-இதற்கு சீனா ரஷ்ய நாடுகளின் ஆதரவு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் மேலை தேய நாடுகளால் மனித உரிமை குற்றசாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட நாடுகளிடமும், அமெரிக்க எதிர்ப்பு போக்கை உடைய நாடுகளிடம் ஆதரவு திரட்டுவதிலும் சிறிலங்காகவனம் செலுத்துகிறது. குறிப்பாக ஆபிரிக்க, அராபிய நாடுகளில் சிறிய வலிமை குன்றிய நாடுகள் அணிசேரா கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் என பலவற்றில் மிக அண்மையில் புதிய தூதரகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சுகளுடன் தொடர்ச்சியான பேச்சுகள் இடம் பெற்ற வருகின்றன.
2. சிறிலங்கா ஒரு பல்லின சமூகங்களை கொண்ட நாடு இங்கே எந்த ஒரு இனமும் எந்தப் பகுதியையும் உரிமை கோர முடியாது என்ற வாதம்.
:- இது அனைத்துலக அரங்கிலும் உள்நாட்டு அரங்கிலும் மிகவும் கவனமாக வலியுறுத்தப்படுகின்றது அனைத்துலக அரங்கில் இலங்கை ஒரு சிறிய தீவு இங்கே பல்லின மக்களும் கூடிவாழும் சாத்திய கூறுகளே அதிகம் உள்ளது. பிரிவினை என்பது பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு மனக்கருத்து 2009 மேயில் இருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆகவே தற்பொழுது பிரிவினையை சமூகங்கள் சிறிது சிறிதாக மறந்து வருகின்றன என்பதாகும்.
அதே வேளை உள்நாட்டிலே எல்லோரும் இணைந்து வாழ வேண்டும் என்ற வகையில் தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களை பிரித்து துண்டு துண்டுகளாக ஆக்கி இராணுவ முகாம்களையும் சிங்கள குடியேற்ற திட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. புத்தவிகாரைகள் ஆங்காங்கே அமைக்கப்படுவது கூட சிங்கள சமூகத்தினர் வடக்க கிழக்கு கிராமங்களை அன்னிய நிலம் என்ற எண்ணம் கொள்ள கூடாது என்பதற்காகவும். சிங்கள சமூகத்தினர் தாமாக முன் வந்து குடியேற கூடிய சௌகரிய மனோபலத்தை உருவாக்கவதும் ஆகும்.
3. இனங்கள் மன்னித்து இணங்கி வாழ மேலும் ஆண்டுகள் தேவை என்பது
:-சிறீலங்காவின் அரசியல் நிலைமைகளில் அதிருப்தி கொண்டுள்ள அனைத்துலக மட்டத்தில் செல்வாக்குள்ள நாடுகளிடம் இருந்து நிலைமையை சுதாகரித்து கொண்டு செல்வதற்கு இந்த பிற்போடும் தந்திரம் மிகவும் வழமையான சாணக்கியமாக சிறிலங்கா அதிகாரிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். தமது குடியேற்ற திட்ட நடவடிக்கைகள் நிறைவேறும் வரை இந்த பிற்போடும் தந்திரத்தை கொண்டு செல்ல கூடிய நிலைமையை இவர்களால் உருவாக்க முடியும்.
4. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் அரசக்கு மறைமுக ஆதரவு கொண்டுள்ளனர் என்பது.
:-அவ்வப்போது இடம் பெறும் விவாதங்களிலும் சந்திப்பகளிலும் பேட்டிகளிலும் சிறிலங்காதரப்பு அதிகாரிகளும், அல்லது அதிகாரிகளால் ஊட்டம் பெற்றவர்களும் தமிழ் மக்கள் மத்தியிலே இன்னமும் அரசுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை பல்வேறு வகைகளிலே எடுத்து கூறுகின்றனர். இது எத்தனை சத விகிதம் என்பதை விட இவர்கள் புலிகள் அல்லாத தமிழர்கள் என்று நியாயம் கற்பிக்கின்றனர்.
மேலைத்தேய அரசியல் தத்துவாளர்கள் அரசியல் கடைமைப்பாடு குறித்த வியாக்கியனத்தில் ஒரு அரசின் எல்லைக்குள் வாழும் மக்கள் தமது அரசின் ஆட்சியை இருவகையில் ஏற்று கொள்வதாக கருதுகின்றனர். ஒன்று வெளிப்படையான ஏற்று கொள்கை (explicit consent) இது ஆட்சி அதிகாரத்தை வெளிப்படையாக ஏற்று கொள்வதுடன் அந்த ஆட்சியில் கிடைக்ககூடிய சுதந்திரங்களை அனுபவிப்பதாயும் கொள்ளலாம்.
இரண்டாவதானது மறைமுகமாக தாம் வாழும் அரசியல் ஆட்சியினை ஏற்று கொள்வதாகும் (tacit consent) இது ஒரு அரசின் ஆட்சி எல்லைக்குள் வாழும் அனைத்து மனிதர்களும் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஏற்று கொள்பவர்களாகவே கருதப்படுவர். ஆந்த நாட்டினூடே பயணம் செய்பவர்கள் கூட அந்நாட்டின் ஆட்சியை ஏற்பவர்களாகவே கருதப்படுவர்.
மேற்குறித்தவகையான மேலைத்தேய அரசியல் தத்துவத்தின் ஊடாக சிறிலங்காஅரசு தனது எல்லைக்குள் வாழும் தமிழ் மக்கள் மறைமுகமாக தம்மை ஏற்று கொள்கின்றனர் என்றால் எந்த ஒரு மேலைத்தேய நாடுகளும் இல்லை என்று வாதிடப்போவதில்லை.
5.அனைத்துலக தமிழர்களை பயங்கரவாத குழுக்களாக சித்தரித்தலும். உள்நாட்டு தமிழர்களை பயங்கரவாத மனோநிலையிலிருந்து இன்னமும் விடுபடாதவர்களாக சித்தரித்தலும்.
:-அனைத்துலக கருத்தரங்குகளிலும் பேருரைகளிலும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் உட்பட இதர அதிகாரிகள் என எல்லோரும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. புலிகள் அல்லாத தமிழர்களிடம் தமக்கு மறைமுக ஆதரவு உண்டு என்று கூறும் அவ்வேளை ஒட்டு மொத்த தமிழினத்தின் பேரில் பயங்கரவாத முத்திரை குத்துவது மட்டும் தவிர்க்கப்படுவதில்லை.
அத்துடன் தேவைக்கேற்ப வடக்கு கிழக்கு அரசியலில் புலம் பெயந்தவர்கள் தலையிடகூடாது என்று கூறுவதும். புலம் பெயர்தவர்கள் உள்நாட்டு அபிவிருத்திக்கு பொருளாதார முதலீடுகளை செய்யவேண்டும் என்று கூறுவதும் வெளிநாட்டு தமிழர்களை எட்ட வைத்து நன்மை பெறும் தந்திரமாக இருக்க, வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறியவர்கள் அகதிகள் அல்ல இவர்கள் சுகபோக வாழ்வை நாடி சென்றவர்கள் என்று பிரட்டிபோடுவதற்கும். உள்நாட்டில் வாழும் தமிழர்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதற்கும் இந்த பயங்கரவாத முத்திரை மிகவும் உபயோகமாக படுகிறது.
6. அரசியல் சட்ட திருத்தங்களை அழித்தலும், உருவாக்கலும்.
:-பேரினவாத பெரும்பான்மை சனநாயகத்தில் சட்டங்களை உருவாக்கவதுவும் தமது கொள்கைகளுக்கு ஒத்துபோகாத சட்டங்களை இல்லாது ஒழிப்பதுவும் சுதந்திர காலத்திலிருந்து இடையறாது இடம் பெற்று வருகின்றது.
பெயரளவில் மேலை நாடுகளின் யாப்பை ஒத்தது என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பை கூறிகொள்வதனால் இதர இனங்களின் அடையாள ஒழிப்பை அனைத்து சமூகங்களின் நலன் என்ற வகையில் சித்தரிப்பதற்கு சௌகரியமானதாகும்.
சிறிலங்காவில் எந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து போராடினாலும் இதர தேசிய இனங்கள் அவர்கள் போராடிய சட்டத்தினாலேயே உள்வாங்கப்பட்டதாகவே வரலாறு. உதாரணமாக எண்பதுகளில் ஆறாவது திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய அரசியல் கட்சிகள் பின்பு ஆறாவது திருத்தசட்டத்தை ஏற்று கொண்டு அதனாலேயே உள்வாங்கப்பட்ட நிலையை இன்று காணலாம். அத்துடன் நீதித்துறையும் அரச இயற்கை நிலையும் (state of nature) அரசாங்கப் பேரினவாத போக்கின் மகிழ்ச்சியில் ஒன்றிணைவதால் இதர தேசிய இனங்களின் தனித்துவத்தை அழிப்பது இலகுவாக அமைந்து வருகின்றது.
7. அபிவிருத்தி புள்ளி விபரங்கள்
:- உள்நாட்டில் தமிழ் மக்கள் எந்தவித அரச கரிசனையையும் தம்மீது காட்டப்படுவதில்லை என்று கூறிக்கொண்டாலும் அபிவிருத்தி, மீன்பிடி, காடழிப்பு, புனர்வாழ்வு, என அனைத்து விடயங்களும் எண்ணிக்கை வழுவாது மனப்பாடம் செய்யப்பட்டது போல அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா பல்வேறு புள்ளிவிபரங்களை மிகவும் அச்சொட்டாக முன்வைப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறது.
இந்த ஒப்பேற்றல் பல்வேறு இராசதந்திரிகளாலும் ஆலோசனை குழு உறுப்பினர்களாலும் அவ்வப்போது பேருரைகளில் ஆச்சரியத்துடன் கவனத்தில் கொள்வதை காண கூடியதாக உள்ளது.
இதனை சிறிலங்காஅரசு இதர இனங்கள் மீதான தனது கரிசனையையும். நாட்டை மீள கட்டி எழுப்புவதில் தமது ஆர்வமிக்க செயற்பாடுகளை வெளிக்காட்டுவதாக எடுத்துகாட்ட முயல்கிறது. ஆனால் மறுபுறத்தில் உள்நாட்டில் தமிழ் மக்களை நடுக்காட்டில் கொண்டு சென்று கவிழ்த்து கொட்டிவிட்டுள்ளது.
8. குடியேற்றதிட்டத்தை துரிதப்படுத்துதலும் மீள்குடியேற்ற அறிக்கைகளும்
:- யுத்தத்தின் பின்னர் சிறிலங்கா அரசினால் வகுக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று ஒவ்வொரு தமிழ் கிராமங்களுடனும் மிக அண்டிய பகுதிகளில் இராணுவ தளங்களை அமைத்து கொள்வது, அத்துடன் அந்த இராணுவ தளங்களில் உள்ள சிப்பாய்களின் குடும்பங்களை இராணுவதளத்திற்குள்ளோ அல்லது அருகாமையிலோ குடியேற்றி விடுவது என்பதாகும்.
இதன் மூலம் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர்களுக்கு பதிலாக தமிழர்களின் செறிவைக் குறைப்பது திட்டமிட்ட வகையில் நடைமுறைப் படுத்தப்படுவதை பல்வேறு சமூக ஆர்வலர்களும் நிறுவனங்களும் கவனத்தில் கொண்டுள்ளனர்.
9. கொழம்பு நகர வாதம்
:-பல்வேறு பொது விவாதங்களிலும் சிறிலங்காதரப்பினர் குறிப்பிடும் இன்னுமோர் விடயம் கொழும்பு நகரைப் பாருங்கள் இங்கே தமிழர்களும் சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் இது போல் நாடுமுழுவதும் ஏன் வாழக்கூடாது என்பதாகும்.
இலங்கைத்தீவினுள் எவர் நுழையவோ அல்லது தீவைவிட்டு வெளியேறவோ வேண்டுமாயின் இத்தீவில் கொழும்பை விட்டால் வேறு எந்த வகையிலும் எவரும் நகர முடியாதுள்ளது. தமது இனத்தின் அரைப்பகுதியினர் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு தமது சொந்த ஊர்களில் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் வேறு தெரிவுகள் அற்ற தமிழ் மக்களின் அகதி முகாமாக கொழும்பை பார்க்க கூடியதாக உள்ளது.
பல்வேறு நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகளுடன் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கும் தமது புலம் பெயர் உறவகளுடன் சேர்ந்து கொள்வதற்கும் 1983 ஜீலை படுகொலைகள் காலத்திலிருந்து அத்தனை கொலைகள் கொள்ளைகள் மிரட்டல்கள் எல்லாவற்றிற்கும் மத்தியில் தமிழ் மக்களால் கொழும்பு ஓர் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று பலாலி விமான நிலையம் ஓர் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்படுமாயின் கொழும்பு வியாபார நிலையங்கள்யாவும் குட்டிச்சுவராக போய்விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் இலங்கைத்தீவின் தென்பகுதி நோக்கி தமிழ் மக்கள் செல்வதற்கு காரணம் இராணுவ அடாவடி வாழ்விலிருந்து விடுபடுவதற்குமாகும்.
10 இந்தியா குறித்த கொள்கை
கொழும்பு ஆய்வாளர்களும் ஊடகங்களும் இந்தியா மீது நம்பிக்கை கொண்ட பார்வையில் என்றும் இருந்ததில்லை. இந்திய காங்கிரஸ் கட்சி எவ்வளவு தான் தமிழீழ போராட்டத்தை நசுக்குவதற்கு உதவிகள் செய்தாலும். அதனை இந்திய நலன் என்ற கோணத்திலேயே வைத்து பார்க்கின்றனர். ஆனால் தமிழர் தரப்போ இந்தியாவின் கொள்கையில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது இதற்கு தெற்காசிய நாடுகளில் சீன தலையீடே காரணம் என பலர் மெட்டையாக கூறிவிடப்பார்க்கின்றனர்.
ஆனால் இந்தியாவின் தென் மாநிலங்களில் இடம்பெற்றுவரும் பெரும் அரசியல் மாற்றமே காங்கிரஸ் கட்சியை பெருமளவுக்கான மனமாற்றத்திற்கு காரணமாக உளளதாகவே கருத வேண்டி உள்ளது. கொழும்பு ஆய்வாளர்கள் இதனை நன்கு அறிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் இந்திய கொள்கை குறித்த மாற்றத்தை மிக மும்முரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை மையமாக கொண்டு தென்மாநிலங்களை உதாசீனம் செய்து வடமாநிலங்களில் செல்வாக்கைப் பெற்று கொள்ளும் நோக்குடன் ஆரிய திராவிட வேறுபாடுகளுடாகவும், புத்த மதத்தின் சிந்தனைகளை பற்றி பேசுவதன் ஊடாகவும் சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை அமைத்து கொள்ளும் சில திட்டங்களும் வகுக்கப்படுகிறது.
இதற்கு ஏற்றாற் போல் வியாபார ஒப்பந்தங்களை இனவாத நோக்குடன் வடஇந்திய கம்பனிகளுடன் உடன்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கும் ஊக்குவிக்கப்படுகிறது சிறிலங்காவின் இனஅழிப்பு போக்கை சுட்டிகாட்டும் எந்த தென் மாநில கட்சிகளையும் குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஈழத்தமிழர்களை கொன்று குவித்து கொண்டிருந்த காலம் தொட்டே கோமாளிகளாகவும், கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களாகவும் சித்தரித்து தமிழ் நாட்டு அரசியலை தரமற்ற சனநாயகமாக சிறிலங்காஅரசு சித்தரித்து வருகிறது.
இதன் மூலம் அனைத்துலக மட்டத்திலும் இந்தியமட்டத்திலும் தென் மாநிலங்களின் காத்திரத்தன்மையை குறைப்பது முக்கிய தந்திர மெனலாம்.
தொடரும்……
*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk
புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment