’அல்பிரட் தங்கராசா துரையப்பா’ ஈழத்தமிழர்களின் வரலாற்றில் அழிக்கமுடியாத பெயர். தமிழ்ஈழத்தின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணநகரத்தினை நவீனமயப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் முழுப்பங்கினை வகித்தவர். யாழ்ப்பாணநகரத்தின் பல இடங்களிலும் காணப்படும் தமிழ்ச்சான்றோர்களின் அழகுமிகு சிலைகளும் நகரத்தின் நடுவே உயர்ந்து நிற்கும் திராவிட சிற்பக்கலையுடன் கூடிய நவீனசந்தைக் கட்டிடம் உட்பட யாழ்ப்பாணத்தின் பொதுவிளையாட்டரங்கான ‘யாழ் துரையப்பா ஸ்ரேடியம்’ மற்றும் திறந்தவெளி அரங்கு என்பவற்றை நிர்மாணித்த பெருமைக்குரிய நகரமுதல்வர் இவரேயாவர். அத்துடன் வரலாற்றுசிறப்புமிக்க யாழ்ப்பாண பொதுநூலகத்தை முதன்முதல் திறந்துவைத்த முதல்வரும் இவர்தான். இவருடைய காலத்தில் தான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
1960 மார்ச் மற்றும் யூலை மாதங்களில் நடந்த பொதுத்தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு தமிழ்க்காங்கிரஸ் தலைவரான ஜி.ஜி எனப்பட்ட காங்கேசர் பொன்னம்பலத்தை தோற்கடித்து யாழ்ப்பாண தொகுதியின் பாராளுமன்றஉறுப்பினராக பதவி வகித்தவர். இளம்சட்டத்தரணியான இவர் சுயேட்சையாக போட்டியிட்டே இராணிவழக்குரைஞரும் மிகப்புகழ்பெற்ற குற்றவியல் சட்டத்தரணியுமான ஜி.ஜி.பொன்னம்பலத்தை மட்டுமல்ல அன்று வீசிய தமிழரசுக்கட்சி அலையிலும் அதன்வேட்பாளரான கதிரவேற்பிள்ளையையும் ஒருங்கே தோற்க்கடித்த தனிநபர் என்ற பெருமைக்குரியவர். துரையப்பாவின் மனைவி ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மருமகள் என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
1960 மார்ச் 19 இல் முதன்முதலாக யாழ்ப்பாணத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்ட இவர் அன்று சிறுபான்மை பலத்துடன் இருந்த டட்லிசெனநாயக்காவின் ஜக்கியதேசியக்கட்சிக்கு ஆதரவுவழங்கினார். இதன்மூலம் மார்ச்23 ஜக்கிய தேசியக்கட்சியை ஆளுங்கட்சியாகவும் டட்லிசெனநாயக்காவை பிரதமராக்கவும் வழிவகுத்தார். அதாவது தனது ஒற்றைவாக்கினாலே ஒரு அரசாங்கத்தையே அமைக்க முன நின்ற King Maker இவர் என அன்று போற்றப்பட்டார். ஆனால் அடுத்த மாதமே 1960 ஏப்ரல் 22ந் திகதி நடைபெற்ற டட்லி செனநாயக்காவின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் சிம்மாசனப் பிரசங்கத்தின்போது தமிழரசுக்கட்சியுடன் இணைந்து டட்லியின் அரசுக்கெதிராக வாக்களித்தார். இதன்மூலம் டட்லி அரசாங்கத்தை தோற்க்கடிக்க இவரும் காரணமானார். மீண்டும் 1960 யூலைமாதம் நடந்த 5வது பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். இம்முறை முதன்முறையாக அரசியலுக்கு வந்தவர்தான் பண்டாரநாயக்காவின் விதவை மனைவியான ஸ்ரீறிமாவே பண்டாரநாயக்கா ஆவர். 1960யூலையில் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீறிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றுக்கொண்டார். அன்று ஸ்ரீறிமாவோவிற்கு தனதுஆதரவை வழங்கியதன் மூலம் அவரது நண்பராகவும் அவரது தீவிரவிசுவாசியாகவும் துரையப்பா மாறினார். 1961இல் தமிழினத்தின் பெயரால் தமிழரசுக்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட யாழ்கச்சேரி சத்தியாக்கிரக போராட்டத்திலும் தனதுதொண்டர்களுடன் இவர் கலந்துகொண்டார்.
1960 யூலை முதல் 1975 யூலை 27இல் தான் இறக்கும்வரை அக்கட்சி யினதும் ஸ்ரீறிமாவோவினது உண்மையான தோழமையுடன் அவரின் ஆதரவாளராக விளங்கினார். இந்நிலையில் 1970மே மாதம் 27ந்திகதி நடந்த 7வது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டார். எனினும் வெறுமனே இரட்டை இலக்கமான 56 வாக்குகள் வித்தியாசத்தில் அன்றைய தமிழரசுக்கட்சி வேட்பாளரான F.X.மார்ட்டினிடம் வெற்றிவாய்பை இழந்தார். எனினும் பிரதானவேட்பாளரும் தன்னுடன் தீராப்பகை கொண்டிருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தைவிட ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று மீண்டும் தனது மக்கள் ஆதரவினை நிருபித்தார்.
வாக்காளர்தொகை 34.865
கு.ஓ.மார்ட்டின் (தமிழரசுக்கட்சி) 8848
அல்பிரட் துரையப்பா (சுயேட்சை) 8792
ஜி.ஜி.பொன்னம்பலம் (தமிழ்க்காங்கிரஸ்) 7222
மொத்தவாக்குகள் 24.938
மேலதிகவாக்குகள் 756
இந்துப்பல்கலைக்கழகத்திற்காக வாதாடிய ஜி.ஜி.பொன்னம்பலத்திற்கு எதிராக கத்தோலிக்கரான மார்ட்டினை நிறுத்துவதன் மூலம் 1965 – 1970இல் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வாக்குகளை மதரீதியாக பிரிக்கவும் 1960 – 1965வரை பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய திரு.அல்பிரட்துரையப்பாவின் வெற்றிவாய்பை தடுக்கவும் என இரட்டைநோக்குடன் தமிழரசுக்கட்சி முற்பட்டது. இதற்காக யாழ்ப்பாணத்தில் என்றுமேயில்லாத மதரீதியானதும் சமூகரீதியுமான காழ்ப்புணர்வுகளை மார்ட்டினின் நியமனம் மூலம் அம்மக்களிடையே ஏற்படுத்த முயன்றது. இதற்கான விலையை அடுத்துவந்த ஒருவருடத்திலேயே அவர்கள் கொடுக்கநேர்ந்தது. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அமைத்த குடியரசு அரசியல் நிர்ணயசபையை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்திற்கமைய பகிஸ்கரிக்கமறுத்த F.X.மார்ட்டினை 15.7.1971இல் இவர்களே கட்சியை விட்டு வெளியேற்ற நேர்ந்தது. வேலியில்போன ஓணானை மடியில் கட்டிய கதையாக இச்செய்தி அன்று வர்ணிக்கப்பட்டது.
இதே மார்ட்டின் 1972மே22இல் ஸ்ரீலங்காவின் முதலாவது குடியரசு அரசியல்அமைப்புக்கு ஆதரவளித்த தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் நல்லூர் அருளம்பலம் வட்டுக்கோட்டை தியாகராசா யாழ்ப்பாண நியமனஉறுப்பினர் MC சுப்பிரமணியம் நியமனஉறுப்பினர் குமாரசூரியர் மட்டக்களப்பு இரண்டாவது உறுப்பினர் இராஜன்செல்வநாயகம் என்பவர்களுடன் இணைந்ததன் மூலம் தமிழரசுக்கட்சியின் முகத்தில் கரிபூசினார். இவர்களிற்கு எதிராக துரோகிப்பட்டங்களை சூட்டிய அன்றைய தமிழரசுக்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்களும் மேற்படி அரசியலமைப்பிற்கு ஆதரவாக பின்நாட்களில் சத்தியப்பிரமாணம் எடுத்து பாராளுமன்றம் சென்றமை ஈழத்தமிழர்க ளின் வரலாற்றில் நாம்காணும் மாபெரும் துரோகத்தனமாகும்.
1974இல் யாழ்ப்பாணபல்கலைக்கழக திறப்புவிழாவில்
அல்பிரட்துரையப்பாவும் ஸ்ரீறிமாவோபண்டாரநாயக்காவும்
1970பொதுத்தேர்தலில்; தனது பதவியை மயிரிழையில் தவறவிட்ட துரையப்பா உடனடியாக கிடைத்த சந்தர்ப்பத்தில் யாழ் மாநகரசபை நிர்வாகசபை உறுப்பினரானார். அப்பொழுது முதல்வராகவிருந்த திரு நாகராஜா முன்னால் முதல்வாரன துரைராசாவுடனான போட்டியினால்; தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தனக்கிருந்த பொதுமக்கள மற்றும் ஏனையமாநகரசபை உறுப்பினர்களின் பலத்த ஆதரவுடன் 22.04.1971 யாழ்மாநகர முதல்வரானார். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர முதல்வராக இவர் பதவியேற்றதும் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் யாழ்ப்பாண மாநகரம் மிளிர்ந்துகொண்டது.
இக்காலத்தில்தான் ‘சைக்கிள்பிறக்கிராசி’ என பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட இவர் காலைமுதல் நண்பகல்வரை யாழ் நீதிமன்றத்தில் ஏழைமக்களிற்காக இலவசமாக வழக்காடுவதிலும் பிற்பகலில் மாநகரசபை மேயருக்கான தனது கடமைகளையும் மேற்கொள்ளலானார். வீதியோரங்களில் நிறுத்தப்படும் வாகனங் களிற்கான கட்டணம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் அறவிடப்பட்டது இக்காலத்தில்தான். இதன்பின்பே கொழும்பிலும் இம்முறை அமுலிற்குவந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் மாநகரசபைக்கான வருமானத்தை சமயோசிதமாக உயர்த்திய இவர் மறுபுறம் யாழ்நகரை அழகுபடுத்துவதிலும் அதிககரிசனை காட்டினார்.
இவருடைய அன்றைய நிர்வாகத்திறனை பின்னையநாட்களில் SMG என அழைக்கப்பட்ட பத்திரிகையாசிரியரான கோபாலரத்தினம் தனது அனுபவங்களினை தொகுத்து எழுதிய ‘பத்திரிகைத்துறையில் அரை நூற்றாண்டு’ என்னும் நுலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘அல்பிரட் தங்கராசா துரையப்பா கெட்டிக்காரமேயர் என்று பெயர்எடுத்தவர். இவரையார் பாராளுமன்றம் போவதற்கு தேர்தலில் போட்டியிடச்சொன்னார்கள் என யாழ்ப்பாணமக்களே பேசிக்கொண்ட காலமுமிருந்தது.’ இவ்வாறு வசீகரமுள்ள யாழ்ப்பாண மேயராகவே இவர் அன்று விளங்கினார். இக்காலத்தில் யாழ் கூட்டுறவு சங்கத்தலைவராகவும் துரையப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் யாழ்ப்பாணநகரத்தின் இருபெரும் பதவிகளை சமகாலத்தில் வகிக்கும் வாய்ப்பைப்பெற்றார். எனினும் சாதாரணமனிதரும் அணுகக்கூடிய சாமானிய மனிதராகவே இவர் நடந்தகொண்டார். இதனால் யாழ்நகரத்தில் வசித்த மக்களின் அபிமானத்தைப்பெற்ற மக்கள்மேயராக இவர் அன்று விளங்கினார். இவர் சுடப்பட்டார் என அறிந்தவுடன் ஆவேசத்துடன் யாழ் வைத்திசாலையை முற்றுகையிட்ட மக்களின்மூலம் இவரது மக்கள்அதரவு பகிரங்கமானது.
யாழ்மாநகரமேயர் என்கிற வகையிலும் தனிப்பட்டமுறையிலும் பல சிறப்புகளுடன் நடமாடிய துரையப்பா இரண்டுபாரம்பரிய தமிழ்க்கட்சிகளின் இடைவிடாத நெருக்குதல் காரணமாக புகலிடம்தேடியோ அல்லது தனது விசுவாசமான நட்பு பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரத்தில் நம்பிக்கை வைத்தோ ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகினார். அன்றைய தபால்தந்திஅமைச்சர் செல்லையா குமாரசூரியருடன் போட்டி போட்டுக் கோண்டு அக்கட்சியை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் அதிககரிசனை காட்டினார்;. தன்னை எவ்விதகட்சி அடிப்படையுமில்லாமல் பாராளுமன்றஉறுப்பினராகவும் மாநகரசபை உறுப்பின ராகவும் சுயேட்சையாகவே மக்கள் தெரிவுசெய்தனர். என்பதை மறந்து தமிழர்விரோத செயல்களினை முன்னிறுத்திய இனவாத ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு இவர் வழங்கியஆதரவு பெரும்பாலான தமிழ்மக்களின் சீற்றத்திற்குள்ளாகியது. நகரமுதல்வர் அல்லது கட்சியின் நீண்டகால ஆதரவாளர் என்பதால் ஸ்ரீறிமாவோவின் அரசாங்ககட்சியுடனும் அதன் உயர்மட்டத் தலைவர்களுடனான இவருடைய தொடர்புகளும் இவ்வாறான செயல்களும்; சாதாரணமானவையே. ஆனால் இவரோ மேயர் என்ற பதவியை ஏற்பதற்கு முன்பிருந்தே கொழும்பிலிருந்து வரும் மந்திரிகளையும் அதிகாரிகளையும் இவற்றிற்கு மேலாக திருப்திப்படுத்தமுற்பட்டார். இதற்காக குறிப்பிட்ட சிலநடனதாரகைகளையும் பயன்படுத்த முற்ப்பட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதனைவிட இவரது சகஉறுப்பினர்களில் ஒருவர் யாழ் நகரசண்டியனாகவும் தன்னினச்சேர்க்கையாளராகவும் யாழ்ப்பாண மக்களால் இனம் காணப்பட்டார்.
1970 தேர்தல்காலங்களில்; தன்னை இடைவிடாது தாக்கிய தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் பத்திரிகையை பழிதீர்கமுயன்றார். தமிழரசுக்கட்சியின் தலைசிறந்த பேச்சாளராக விளங்கி கருத்துவேற்றுமை கொண்டு அதிலிருந்து விலகிய புதுமைலோலன் என்ற கந்தசாமியை ஆசிரியராகக் கொண்டு ‘அலையோசை’ பத்திரிகையை வெளியிடலானார். இதன்மூலம் தமிழரசுக் கட்சியினரையும் குறிப்பாககூறினால் தனிப்பட்டரீதியில் அதன் தளபதியென புகழ்ந்துரைக்கப்பட்ட அமிர்தலிங்கத்தையும் அவர் குடும்பஉறுப்பினர்க ளையும் இப்பத்திரிகை தரம்தாழ்ந்து தாக்கியதாக இன்றும் பலர் கூறுகின்றனர்.
தமிழ்மாணவரின் உயர்கல்வியினை சிதைக்கும்நோக்கில் இனரீதியான தரப்படுத்தல்கொள்கையினை சட்டமாக்கியது ஸ்ரீறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகும். அக்கட்சிக்கு தீவிரஆதரவளித்தமை ஒருபுறமும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்து அதன்மூலம் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தமுற்பட்டமையும் இவர்மீதான குற்றச்சாட்டு களாகியது. இக்காரணிகளால் தமிழ்மொழி அல்லது தமிழர் எனும் இனப்பற்றின் ஊடாக தமிழ் மாணவருக்கு எதிரான தரப்படுத்தல் கண்டு உருவாகிய தீவிரவாத அமைப்பான தமிழ்மாணவர் பேரவையின் முதன் நிலைக்குறியாக துரையப்பா இனம்காணப்பட்டார். இதன்காரணமாக 1971மார்ச் அவருடைய காரிலும் 1972ஆகஸ்டில் அவருடையகாணிவேலும் 1972 டிசம்பரில் கொய்யாத் தோட்டவீட்டிலுமாக மாணவர்பேரவையினரால் அவர் குறிவைக்கப்பட்டார். இத்தனை குண்டுத்தாக்குதலிலும் அதிஸ்டவசமாக உயிhதப்பிக்கொண்டார். எனினும் தனதுநிலையை மாற்றிக் கொள்ளாமல் மேலும் மேலும் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான தனது ஆதரவை நல்கிவந்தார்.
1973 மார்ச் 12இல் சத்தியசீலனின் கைதுடன் ஓய்விற்குவந்த மாணவர்பேரவையின் செயற்பாடுகளின் பின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாணக்கிளை அலுவலகத்;தை அன்றைய சுகாதாரஅமைச்சரும் அப்புத்தளை பாராளுமன்ற உறுப்பினரான W.A.P ஆரியதாஸாவினை அழைத்து திறந்துவைத்தார். இதன்மூலம் தனது சிங்கள அரசவிசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினார். 1974 ஜனவரி 10ந்திகதி இரவு தமிழாராய்சி மகாநாட்டில் சிங்கள இனவெறியன் சந்திரசேகரா என்ற பொலிஸ் அதிகாரியின் தான் தோன்றித்தனமான செயற்பாட்டினால் விளைந்த அசம்பாவிதங்களிற்கு இவர் துணைபோனதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்படிகாரணிகளால் துரையப்பா அழிக்கப்படவேண்டியவர் என்பது பெரும்பான்மையான குடாநாட்டுமக்களினது விருப்பமாகியது.சந்திரசேகரா யாழப்பாணத் தைவிட்டு மாறிச்சென்றிருந்த நிலையில்; 1975 மார்ச்சில் இல் ஈழம் திரும்பியிருந்த தலைவர் பிரபாகரன் எண்ணத்தில் உதித்த கருதுகோளான ‘எதிரியைவிட துரோகியே ஆபத்தானவன்’ என்பதற்கிணங்க யாழ்ப்பாண மேயராகவும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராகவும் விளங்கிய துரையப்பாவின் வாழ்வு ‘வல்வெட்டித்துறை’ யில் இருந்து வந்த இருவரினால் முடித்துவைக்கப்பட்டது. இவ்வாறே தமிழ்ஈழ விடுதலைப் போராட்டவரலாற்றில் ‘துரையப்பாவின் முடிவு’ முதன்மையாகியது.
வருணகுலத்தான் பார்வையில்
0 கருத்துரைகள் :
Post a Comment