தாகம் தீரா நினைவுகள்


"யாழ். கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தின் ஆரம்பம்.மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்"

 *பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் மற்றும்  சிறைகளில் உள் ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

*புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்ப டும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

*இடைக்கால அரசு நிறுவப்படும்வரை "புனர்வாழ்வு'' என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

*வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் புதிதாகத் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

*ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, பாடசாலைகள், தமிழ்க் கிராமங்கள் ஆகியவற்றில் உள்ள இராணுவ மற்றும் பொலிஸ் நிலைகள் மூடப்படல் வேண்டும்.

எமது அரசியல் தலை விதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்? பேரினவாத சிங்கள அரசு மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்கமாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையி லேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர் மானித்துள்ளோம். ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்க வில்லையானால் நாம் இந்தியப் படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம்.எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக் கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப் படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசு ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்திய அரசு எடுத்துக்கொண்ட முயற் சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை''

04.08.1987 அன்று சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில்  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உதிர்த்த வார்த்தைகள் இவை.

ஆனாலும் இந்த நம்பிக்கையை இந்தியா துளியேனும் காப்பாற்றவில்லை. தமிழர்களின் பாதுகாப்புக் கவசங்களாக விளங்கிய ஆயுதங்களை களைவதில் காட்டிய அக்கறையை அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் காட்ட மறுத்தது. இலங்கை இராணுவத்தை விடவும் வெறித் தனமான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியது.

எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மீது பிடிப்பு அதிகம். அவர்கள் இலங்கையை நேசிப் பதை விடவும் இந்தியா மீதான நேசிப்பையே அதிகம் கொண்டிருந்தனர். அதனாற்றான் இலங்கை வானொலியை விடவும் இந்திய ஆகாசவாணியின் செய்திகளையே நம்பியிருக்கத் தொடங்கினர். தமிழர்களுக்கு ஒரு தீர்வு வருமாக இருந்தால் அது இந்தியாவால் மட்டுமே சாத்தியம் என்பது அநேகரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை மெய்ப்பிப்பது போல இந்தியாவும் சில காரியங்களில் இறங்கியிருந்தது. தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்குதல், அந்தக் குழுக்களுக்கான தளங்களை தமிழகத்தில் அமைத்துக் கொடுத்தல், நிதி உதவி செய்தல் என்று இந்தியாவின் "அக்கறைகள்' ஈழத் தமிழர்களை ஆனந்தக் கடலுக்குள் இறக்கிவிட்டன. இந்திய அக்கறையின் உச்சக்கட்டமாக, இலங்கை அரசின் பொருளாதாரத் தடையால் ஈழமக்கள் பட்டினிச் சாவை எதிர் கொண்டிருந்த சமயத்தில், "ஒப்ரேசன் பூமாலை' என்ற பெயரில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வானதிர எங்கும் பறந்த "மிராஜ்' விமானங்கள் ஆங்காங்கே உணவுப் பொட்டலங்களை வீசி, "இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நடந்தால் நாம் சும்மா இருக்க மாட்டோம்'' என்ற செய்தியை இலங்கை அரசுக்குச் சொல்லிப்போயின. அதன்பின் அரண்டுபோன இலங்கை இந்தியாவிடம் சரணாகதியடைந்தது.

இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழர் பகுதிகளுக்குள் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவம், பெரும் படைத்தளங்களுக்குள் முடங்கிக்கொள்ள இந்திய ஜவான்களின் பிரசன்னம் நிகழ்ந்தது.

வந்தவர்களை ஆராத்தி எடுத்து மகிழ்ந்தனர் தமிழர்கள். தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மகிழாமல் இருக்கமுடியுமா? ஆனாலும் புலிகளுக்கு இந்தியாவின் உண்மை முகம் நன்றாகவே தெரிந்திருந்தது. மக்களின் நம்பிக்கையோ வேறு விதமாக இருந்தது. தன் கோர முகத்தை மறைக்க இந்தியா பூசியிருக்கும் அரிதாரத்தை, இயல்பாகவே அழிந்துபோக வைக்க புலிகள் எடுத்த முடிவுதான் ஆயுத ஒப்படைப்பு.

ஆயுதங்கள் அற்ற புலிகளோடும், பாதுகாப்பு இழந்த மக்களோடும் சீண்டி விளையாடத் தொடங்கியது இந்தியா. தாம் முன்வைத்த அரைகுறைத் தீர்வை தமிழர்கள் விழுங்கியே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றது. மெல்ல மெல்ல அதன் அரிதாரப்பூச்சு அழியத் தொடங்கியது. இந்தியாவின் கடைவாயில் துருத்திக்கொண்டிருக்கும் வேட்டைப் பற்களையும் மக்கள் உணரச் செய்வதற்காக புலிகள் இன்னொரு போராட்ட வடிவத்துக்கு புகுந்தனர்.

உலகத்துக்கே அஹிம்சையை போதித்ததாக மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவை அதே அஹிம்சையை ஆயுதமாக வைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என புலிகள் நம்பினர். தலைவரின் தீர்மானத்துக்கு செயல் கொடுத்தவன்தான் படுகாயம் அடைந்திருந்தான்.

இந்தியாவின் கோரமுகத்தைக் கிழிக்க 25 வருடங்களுக்கு முன்னர் இதேநாளில் (15.09.1987) நல்லூரின் வீதியில் உண்ணா நோன்பு யாகத்தில் ஆகுதியாக தன்னை ஈடுபடுத்துவதற்காக மேடையில் ஏறினான் திலீபன். அஹிம்சையின் அனலில் வேகத் தொடங்கியது பாரதம்.

தீர்க்க தரிசனம் மிக்க 5 கோரிக்கைகளை முன்வைத்து திலீபனின் பட்டினிப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. பாரதத்தில் ஆட்சியில் இருந்த நேருவின் பேரன் திலீபனின் தியாகத்தை கண்டும் காணாதவர் போல தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார். நல்லூரின் வீதியில் எப்படியும் காந்திய தேசத்துக்கு அஹிம்சையை கற்பித்து, மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற கனவுடன் திலீபன் ஒவ்வொருநாளும் அணுஅணுவாக செத்துக்கொண்டிருந்தான். தன்னை உருக்கி பிறருக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தியாக ஒவ்வொரு கணத்திலும் உருகிக்கொண்டே இருந்தான்.

அருவியாக பெருகத்தொடங்கிற்று. கூடியிருந்த மக்கள் கண்களில் விழி நீர். வானமும் ஊரெழு மைந்தனின் உயிர்கொடையை நினைத்து ஓ என்று கண்ணீரைப் பொழியத் தொடங்கியது பெருமழையாக. கொட்டும் மழையிலும் திலீபனின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தேசமெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நல்லூரில் குவியத் தொடங்கினர்.

"திலீபா எங்களை விட்டுப் போய்விடாதே''

"இந்திய தேசமே! எங்களுக்காக உயிர்க்கொடை செய்தபடியிருக்கும் எங்கள் பிள்ளையைக் காப்பாற்று'' பல்லாயிரக்கணக்கான மக்களின் இந்த வேண்டுதல்களை காலால் நசுக்கியது அதிகாரம். இந்தியாவின் காந்திய முகத்தை அர்த்தமிழக்கச் செய்துவிட்டு, உண்ணாநோன்பின் 12 ஆவது நாளில் (26.09.1987) பகல் 10.48 மணிக்கு தன் கடைசி உயிர்த் துளியையும் உதறிவிட்டு விண்ணேறினான் திலீபன்.

"புலிகள் ஆயுதங்களின் மீது மட்டுமே காதல் கொண்ட தீவிரவாதிகள்'' என்ற கருத்தியலை, திலீபனின் பன்னிரு நாள் பட்டினிப் போராட்டம் தலைகீழாக மாற்றியிருந்தது. மக்களுக்காக எத்தகைய வடிவங்களிலும் போராடி தங்கள் உயிர்களை ஈகையாக்குவதற்கு புலிகள் தயார் என்ற செய்தியை திலீபனின் சாவு உலகெங்கும் விதைத்தது.

மரணித்த பின்னும் தன் உடல் கூட வீணாகக் கூடாது என்பதில் திலீபன் உறுதியாக இருந்தான். திலீபனின் கோரிக்கையின் படி மருத்துவ பீடத்துக்கு  ஒப்படைக்கப்பட்டது. அவனின் சாவுக்குப் பின்னர் "எங்களை இந்தியாவே காப்பாற்றும்'' என்ற மக்களின் நம்பிக்கை தகர்ந்து போனது. தன்னை மூடியிருந்த எல்லா மாயத் திரைகளும் விலக்கப்பட்டுவிட, தன் கொலைகார முகத்தோடு வெளிப்பட்டது இந்தியா. "இத்தனை நாளும் எங்களின் மீட்பர் என்று நம்பியது ஒரு இரத்தக்காட்டேரியைத் தான்'' என்ற உண்மையை திலீபனின் மரணம் மக்களுக்கு உறைக்கவைத்தது.
  
அதன் பின் மக்களின் ஆதரவோடு உலகின் வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக களமாடி வென்றார்கள் புலிகள். அதன் பின்னும் ஒவ்வொரு போராளியும் திலீபனின் கனவுகளை சுமந்துகொண்டிருந்தார்கள்.

"யாழ். கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கிறதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தின் ஆரம்பம்.மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்'' என்று அடிக்கடி திலீபன் தன் சக போராளிகளிடமும் மக்களிடமும் தனக்குள் இருக்கும் கனவை விபரிப்பதுண்டு. அந்தக் கனவை சரியாக நான்கு வருடங்கள் கழித்து திலீபன் உயிர் நீத்த நாளில் நனவாக்கினர் புலிகள். நூற்றாண்டுக் கணக்கில் அந்நியர்களின் குறியீடாக நிமிர்ந்து நின்ற கோட்டையில் புலிக்கொடி பறந்தது.

ஆயினும் திலீபன் யாகத்தில் ஆகுதியாகி 25 வருடங்கள் கழிந்த பின்னரும்கூட அவனது கோரிக்கைகள் எந்தவொரு ஆட்சியாளராலும் நிறைவேற்றப்படவேயில்லை. இந்தக் கோரிக்கைகள் இன்னமும் ஆத்மசாந்தி அடையாமல் அலைந்துகொண்டே இருக்கின்றன.

"நிறைவேற்றப்பட முடியாததேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதன் ஊடாக  சமாதான நடவடிக்கைகளை  குழப்புவதே புலிகளின் வாடிக்கை. திலீபனின் கோரிக்கைகளும் அப்படியானவையே 'என்று இன்றைக்கும் கிளிப்பிள்ளை போல் சொல்லிக்கொண்டிருக்கும் "அதிகார அடிவருடிகளும்' இருக்கவே செய்கிறார்கள்.

ஆனால் அவனது கோரிக்கைகளில் இருந்த தீர்க்க தரிசனமும், அவசியத்தன்மையும் இப்போது தெரிகிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் அறுவடையாலேயே  கிழக்கில் தமிழர்களால் ஆட்சியமைக்க முடியாமல் போயுள்ளது. அதிகரித்த படைத்தரப்பின் பிரசன்னத்தால் தமிழினம் தொடர்ந்தும் அழுந்திக்கொண்டே இருக்கிறது.

அரசியல் கைதிகள் விடுதலை நாள் எதுவென்று தெரியாமல் இன்னமும் சிறைப்பறவைகளாக்கப்பட்டு கூண்டுகளுக்குள்ளேயே அடித்துக்கொலை செய்யப்படுகிறார்கள். பாடசாலைகள், ஆலயங்கள்,கிராமங்கள் என்பன உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் படைத்தரப்பால் விழுங்கப்பட்டு வருகின்றன.

ஒட்டுக்குழுக்களிடம் மறைந்திருக்கும் ஆயுதங்கள் களையப்படவேயில்லை துப்பாக்கி முனைகள் இன்னமும் மக்களைக் குறிவைத்தபடியேதான். தாகமடங்கா நினைவுகளாக அலைதலுக்கு உள்ளாகின்றன திலீபனின் கோரிக்கைகள். அவையே மக்களின் மனங்களிலும், அவனுக்கான அஞ்லிப்புகளையும் உற்பத்திசெய்கின்றன. ஆயிரம் ஆயிரம் காலங்களுக்கு நல்லூரின் வீதியில் நடந்த யாகத்தில் ஆகுதியானவனின் நாமத்தை தமிழ் மக்கள் உச்சரித்துக்கொண்டிருப்பார்கள்.   

ஆதங்கன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment