வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை: திட்டவட்டமாக கூறுகிறார் ஜனாதிபதி

வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், "உதயன்", "சுடர்ஒளி' நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார்.

வடக்கு கிழக்குத் தமிழர்கள் தங்களது ஜனாதிபதியைத் தாங்களும் சேர்ந்து தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவே தாம் ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டி நடத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடனான உரையாடலின் போது ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நான் பேச்சு நடத்தவேண்டும் என்பதை ஏற்கிறேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர்களோடு பூர்வாங்கத் தொடர்பாடல்களை நான் ஆரம்பித்துள்ளேன். குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான உங்களின் கருத்து ஏற்கமுடியாதது.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள்.

கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது. நான் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது ஒரு வாக்குறுதியளித்தேன். அதன்படி, தமிழர் ஒருவரை மாகாண முதலமைச்சராக்கினேன். அதனால் நான் எதிர்கொண்ட எதிர்ப்புகள் சொல்லி மாளாதவை. முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று ஒரு கூட்டமே பொங்கி எழுந்தது. எனினும், எனது முடிவில் உறுதியாக இருந்து அதனைச் செய்தேன். அப்படி எப்போதும் செயற்பட முடியாது.

ஒரு பிரதேசத்துக்கு ஒருவரும் தனியுரிமை கோர முடியாது. இன்று கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினர். அவர்கள் இங்கு (கொழும்பில்) இருபத்தியேழு வீதத்தினராகக் குறைந்துவிட்டனர். அதற்காக அவர்கள் இன்று ஊர்வலம் நடத்தவில்லை. போராட்டம் செய்யவில்லை. எல்லா இடத்திலும் எல்லோரும் கலந்து வாழ அனுமதிப்பதே சரியானது முறையானது.

ஆகவே, காலாவதியாகிப்போன வடக்கு கிழக்கு இணைப்பை விடுத்து வேறு விடயங்கள் பற்றிப் பேசலாம். இப்படி ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் அண்மையில் இலங்கை சென்றிருந்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் முடிந்தவுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:

இந்த ஜனாதிபதித் தேர்தலை எந்தவித வன்முறையும், குழப்பங்களுமின்றி நடத்துவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். பிஸ்டல் குழுக்களோ, பிற வன்முறை அணிகளோ தலைகாட்ட நாம் இடமளிக்க மாட்டோம். ஆனாலும் எந்தச் சம்பவம் நடந்தாலும் ஒரு கல்லெறி இடம்பெற்றாலும் முழுக் குற்றச்சாட்டையும் அரசுத் தலைமை மீது சுமத்துவதே இங்கு வழமையாக உள்ளது. நானும் இத்தகைய பல அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுதான் இந்த மட்டத்துக்கு வந்துள்ளேன்.

1977 இல் ஐ.தே.கட்சி அரசு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. என்றாலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள்ளேயே புதிய தேர்தலை நடத்துவதற்குக் கோரி நாம் (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர்) வீதிக்கு இறங்கிப் போராடத் தொடங்கினோம். ஆகவே, தேர்தல்கள் அவசியமானவை.

இத் தேர்தல் சாதாரணமானதாக, நீதி, நேர்மையானதாக நடக்க ஊடகவியலாளர்களான நீங்கள் உதவவேண்டும். பக்கச்சார்பாக நடக்காமல் நடுநிலையோடு செயற்படுங்கள். இங்கு நாடு ஒன்று இருந்தால்தான் நாம் அனைவரும் கௌரவமாக வாழ முடியும். எனவே வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளித்து அடங்கிப் போய்விட முடியாது.

வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த தடவை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போயிற்று எனக் குற்றம் சுமத்தி வருகின்றார்கள். அதன் காரணமாக, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எப்போது நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக அதை நடத்தி, அந்த மக்களுக்கும் அந்த வாய்ப்பை அளித்து, அவர்களும் சேர்ந்து ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு வகை செய்யும் விதத்திலேயே இத் தேர்தல் பிரகடனத்தை நான் வெளியிட்டேன்.

இதற்காக எனது பதவிக் கலத்தில் இரண்டு ஆண்டுகளைத் தியாகம் செய்யவும் நான் முன்வந்துள்ளேன் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று குரல் எழுப்புகின்றார்கள். அது நான் தனித்துச் செய்யும் விடயம் அல்ல.

அதுபோலவே சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் விவகாரமும். நாடாளுமன்றத்தில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டே இவற்றைச் செய்யமுடியும். நாடாளுமன்றுக்குப் பதில் கூறுபவராகவே அரசுத் தலைவர் இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பமுமாகும். அந்த முறைமையை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

எவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தாலும், வர முன்னர் கொடுத்த வாக்குறுதிப்படி, அந்த முறைமையை ஒழிப்பது என்பது கஷ்டமானதே. அடுத்த ஜனாதிபதிப் பதவிக்குப் பிறகு எனக்கும் அரசியலில் இடம் இல்லாமல் போய்விடலாம்.

எனவே, இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கு நான் எதிரானவன் என்று யாரும் யோசிக்காதீர்கள். இது நாம் எல்லோரும் சேர்ந்தே செய்யவேண்டிய விவகாரம். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு, உதவி என்பனவும் இதற்கு எனக்கு அவசியம். நாம் கடந்த தேர்தலின்போது அளித்த "மஹிந்த சிந்தனை" உறுதிமொழியில் அநேகமானவற்றை நிறைவு செய்துள்ளோம்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பொன்சேகா வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. எதிரணி வேட்பாளராக அவர் வருவாராயின், கையை விரித்து அரவணைத்து அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வெளிநாட்டில் இருக்கும் தங்களின் பிரஜைகளுக்குத் தேர்தலின்போது பங்குபற்றி வாக்களிக்கும் உரிமை சில நாடுகளில் உள்ளது. நாங்களும் அது பற்றிச் சிந்திக்கலாம். அதற்கான சட்டங்கள் ஆக்கப்படவேண்டும். இம்முறை தேர்தலுக்கு அது சரிவராது. காலம் பிந்திவிட்டது. எதிர்காலத்தில் அது குறித்துச் சிந்திக்கலாம். வெளிநாடுகளில் வதியும் சுமார் இருபது லட்சம் இலங்கையர்களும், தாம்தாம் வதியும் நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்குச் சென்று வாக்களிக்கக்கூடிய ஒரு முறைமை குறித்து நாம் ஆராயலாம். என்றார் ஜனாதிபதி.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment