அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்


மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான் அவர் திகழ்கிறார்
அதிசயமாக என்ற வார்த்தை ஏன் எழுதினேன் என்பதற்கு காரணமும் இருக்கின்றது. உண்மையில் அவர் ஒரு பேரதிசயம்தான். அவருடைய வாழ்வு முழுதும் நாம் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் லட்சம் பாடங்கள் பரவிக் கிடக்கின்றன.
மற்றவர்களுக்கு கற்பிப்பதற்காகவோ, மற்றவர்கள் தன்னை பின்பற்ற வேண்டும் என்றோ பேராடப் போனவர் அவர் அல்ல. அவர் மிகமிக இயல்பாக, அதிலும் மிக உண்மையாக தனது இலட்சியத்துக்காக தான் தேர்ந்தெடுத்த தான் நம்பிய பாதையில் சஞ்சலம் சிறிதும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பவர்.
அவருடைய வாழ்வில் இருந்து இன்றைய பொழுதில் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள அல்லது பெற்றுக்கொள்ள வேண்டிய இடம் எதுவென்றால் ‘அங்கீகாரத்துக்காக மட்டும் எதையும் செய்யாத ஒரு செயற்பாடு’ என்பதாகும்.
உயிரினங்கள் அனைத்தினதும் மிகமுக்கியமான செயல்முறையே உயிர் வாழ்வதற்கான போராட்டம் ஆகும். உணவு தேடுவது, காலநிலைகளின் தாக்கத்திலிருந்து தம்மை காத்துக்கொள்ள எத்தனிப்பது, தேவை கருதி இடம்பெயர்வது என்று அனைத்தையுமே தமது வாழ்வை, தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளாகவே அனைத்து உயிரினங்களும் செய்கின்றன.
இவற்றை செய்வதற்கு அவற்றுக்கு யாரும் கற்பிப்பது இல்லை. மனிதனுக்கு உயிர்வாழ்தலுக்கு அடுத்தாக அங்கீகாரம் என்பது மிகமுக்கியமான ஒன்றாக எப்போதுமே இருந்துவந்து கொண்டிருக்கிறது. தனக்கான அங்கீகாரம், தனக்கான அடையாளம், தனது கருத்துக்கான அங்கீகாரம் என்று அங்கீகாரத்துக்காகவே மனிதம் ஓய்வு ஒழிச்சல் இல்லாத செயற்பாடுகளை செய்துவந்து கொண்டிருக்கிறது.
இன்றைய தமிழ் அரசியல் என்பது 2009 க்கு பிறகு முழுக்கவே அங்கீகாரத்துக்காக மட்டுமே நடைபெறும் ஒருவித மாயவிளையாட்டுபோல இருக்கின்றது. முதலில் மக்களிடம் அங்கீகாரம் பெற்ற பின்னரே போராட்டமோ,அரசியலோ எதுவுமே செய்வோம் என்ற நிலைப்பாட்டையே மிகக் கூடுதலானவர்களிடம் காணக் கிடைக்கிறது.
அங்கீகாரம் என்ற மாயமானை பிடிப்பதற்கான செயற்பாடுகளாகவே இன்றைய தமிழ் சமூக செயற்பாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கான பதில் முழுதையும் தனது போராட்டம் முழுதும் தேசியத்தலைவர் கொண்டிருப்பதை இவர்கள் உள்வாங்கத் தவறியது ஏன் என்றுதான் தெரியவில்லை.
தேசியத்தலைவரின் போராட்ட ஆரம்பத்தை பாருங்கள். மிகச்சிறிய வயதிலேயே அவரை சுற்றி நிகழும் சம்பவங்களை நேரில் பார்த்தும், பாதிக்கப்பட்டவர்களின் உடைந்து நொருங்கிய குரல்களை கேட்டும் வளர்ந்த அவருக்குள் தன்னை சுற்றி அநீதியும், கொடுமையும் நிகழ்த்தப்படுவதாக உணர்ந்துகொள்ளப்படுகிறது.
இது அவருடைய நான்கு வயதிலிருந்தே நிகழ்கின்றது. தேசியத்தலைவரின் நான்காவது வயதில் 58ம் ஆண்டு, இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளும், தாக்குதல்களும் நிகழுகின்றது.
அந்த காலப்பகுதியில் தலைவரின் தந்தையாரின் உத்தியோகம் காரணமாக அவரின் குடும்பம் தென் தமிழீழ நகரமான மட்டக்களப்பின் தாமரைக்கேணி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் வசித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த அன்னப்பாக்கியம் என்ற பெண்ணின் கணவரான செல்லத்துரை என்பவரும் இந்த 58ல் தமிழர்களுக்கு எதிரான கொலைவெறியாட்டத்தில் 26.05.1958 ல் பதுளைபகுதியில் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.
கணவனை சிங்கள பேரினவாத வெறியாட்டத்துக்கு பறிகொடுத்த அந்தப் பெண்மணி தினமும் தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை அம்மாவுடன் தனது கவலைகளை கதைப்பதை கேட்டுகேட்டு அதற்குள்ளாகவே அவரின் சிறுவயது வளர்ந்தது.
இதற்குள்ளாக பாணந்துறையில் எரித்து தார் பீப்பாவுக்குள் போடப்பட்ட அர்ச்சகரின் மனைவி சொன்ன கதை என்று ஆயிரம் சம்பவங்கள் அவரை பாதித்திருந்தன. அதன்பின்னர் அவர் சொந்தஊர் திரும்பிய பின்னரும் இந்த சம்பவங்களே அவரை எந்நேரமும் ஆக்கிரமித்திருந்தன.
இதற்கான தீர்வு என்ன?நான் பேசும் மொழி மூலம் நானும் எனது மக்களும் இனம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுவதை எப்படி நிறுத்தலாம்?தினமும் அஞ்சிவாழும் அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க என்ன செய்யலாம்? போன்ற கேள்விகளே அவர் படிக்கும் காலத்திலும் அவருக்குள் மீண்டும் மீண்டும் எழுந்து கேள்விகளாகின.
அவர் இதற்காகவே தேடினார். தனக்கு கிடைத்த புத்தகங்கள், நண்பர்கள், பாடசாலைத் தோழர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் இதற்கான பதிலை தேடினார். ஏறத்தாழ அவரின் 14 வயதிலேயே அவருக்கு தனது இலட்சியம் பற்றியும் அதனை அடைவதற்கான போராட்டபாதை பற்றியும் தெளிவாகி இருந்தது.
தேசியத்தலைவர் அவர்கள் இதனைப்பற்றி 1994ம் ஆண்டு தமிழீழ கலை, பண்பாட்டு பிரிவால் வெளியிடப்படும் இதழான வெளிச்சம் (சித்திரை-வைகாசி மாதத்துக்கான) புத்தகத்தில் மிகவும் தெளிவாகவே கூறயிருந்தார்.
இதனை அவரது வார்த்தையிலே தருகின்றேன். “14 வயதிலே இனத்தின் விடுதலைக்காக போராட வேண்டும் என்று நான் துடித்த துடிப்பு இருக்கிறதே அது அன்றைய எனது வயதொத்த சிறுவர்களின் அன்றாட வாழ்விலிருந்து மாறுபட்டதாகவே இருந்தது” என்கிறார் தேசியத்தலைவர்.
வரலாறு மிகவும் வீரியமானது. அது இப்படியான பொழுது ஒன்றுக்காகவே சிலரை தெரிவுசெய்து அதனூடாகவே எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்களினூடாகவே வரலாறு முன்னகர்கிறது. அவர்களே வரலாற்றின் நாயகர்கள் ஆகிறார்கள்.
தேசியத்தலைவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்தவுடன் இதனை யாரும் அங்கீகரிக்க வேண்டும் என்றோ தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ காத்துக்கொண்டிருந்தவரல்ல. விடுதலை என்பது தனது மக்களுக்கு மிகமிக முக்கியமாக தேவை என்பதை உணர்ந்தவுடனேயே அதற்கான பாதையை தேர்ந்தெடுத்த சத்தியமானவர் அவர்.
அவர் போராட புறப்பட்ட 72லிருந்து இன்றுவரை அவருக்கு தெரிந்தது எல்லாம் விடுதலைக்காக ஏதாவது செய்வதுதான். யாருடயை பதிலுக்காகவும், ஒப்புதலுக்காகவும் ஒருபோதும் காத்திருந்தது கிடையாது. அவர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் இலட்சியக் கனலுடனும் கட்டிவளர்த்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு மிகப்பாரிய உடைவை 79ல் சந்தித்தது.
குழப்பவாதிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை பிரித்து எடுத்தார்கள். மிகுதியாக தலைவருடன் நின்றவர்களிலும் பலர் மனச்சோர்வு அடைந்து தலைவரை விட்டு பிரிந்து தமது பழைய படிப்புகளை தொடரவும் சொந்த வேலைகளுக்கும் சென்ற அந்த பொழுதில் ஏறத்தாழ ஒரு கை விரலில் அடங்கக்கூடிய உறுப்பினர்களே தலைவருடன் நின்றிருந்தார்கள்.
அப்படியான ஒரு பொழுதில் அவரை கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு முன்பாக கண்டபோது அப்போதும் அவர் எந்தவித சோர்வும் மனக்குழப்பமும் இன்றி சிங்களத்துக்கு எதிரான போராட்டம் பற்றியே கதைத்தது இன்றும் நினைவில் நிற்கிறது.
அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் நெஞ்சுக்குள் நிற்கிறது.“இப்ப என்னுடன் இருக்கிறவங்கள் விட்டுவிட்டு போனாலும்கூட நான் தனித்து நின்றுதன்னும் எங்கள் மக்களின் விடுதலைக்காக ஏதும் செய்துதான். போவேன்” என்றார்.
இந்த உறுதியும் விடுதலையின்மேல் கொண்ட சமரசம் அற்ற பற்றும் அவர் தனித்துநின்றபோதிலும்,அவர் கடற்படை,விமானப்படை கொண்ட மரபுவழிப்படைகளைகொண்டிருந்தபோதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.
அவருக்கு தெரிந்ததெல்லாம் விடுதலை. அதற்காக தன்னால் இயன்றதை செய்வது. மேலும் அவர் விடுதலை இத்தனை வருடங்களில் சாத்தியமாகும் என்றோ இத்தனை வருடங்களில் தமிழீழம் பெறலாம் என்றோ கற்பனைகளில் மிதந்தவரும் அல்ல.
இப்போதைய எனது வேலை விடுதலைக்கு போராடுவது. அதனை மெதுமெதுவாக நகர்த்துவதுதான் இப்போதைய போராட்டமுறை என்பதில் உறுதியானவர் அவர். 80களின் ஆரம்பத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வேலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் தலைவர் திடீர் திடீர் என புதிதாக சேர இருக்கும் உறுப்பினர்களுடன் தானேசென்று கதைக்கும் வழமையை கொண்டிருந்தார்.
அச்சுவேலி நவக்கிரியைச் சேர்ந்த ஒரு மாணவன் புதிதாக இணைவதற்காக இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருடன் கதைத்து வந்துகொண்டிருந்தார். இந்த மாணவனை உள்வாங்குவதற்கான ஆரம்ப கதைப்புகள் எல்லாம் முடிந்த ஒருநாள் தலைவர் தானே அந்த மாணவனை சந்திப்தற்கு நேரம் குறித்து இடமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்தநாளில் அந்த மாணவனும் அவனை அமைப்பில் சேர்ப்பதற்காக கதைத்துக்கொண்டிருக்கும் இயக்க உறுப்பினரும் தலைவரை சந்திக்கிறார்கள். கதைத்து கொண்டிருக்கும்போது தலைவர் அந்த புதிய மாணவனை பார்த்து கேட்டார். “எத்தனை வருடத்தில் தமிழீழம் கிடைக்கும் என்று இவர் சொல்லி உங்களை இயக்கத்தில் சேர்த்தார்” என்றார்.
அந்த மாணவனும் “ 4 வருடமும் ஆகலாம் 40 வருடமும் ஆகலாம் என்று சொன்னவர்” என்று சொன்னான். உடனே தலைவர் “இல்லை, இவன் ஒரு பூஜ்ஜியத்தை விட்டுவிட்டான். 40 வருடமும் ஆகும். 400 வருடமும் ஆகலாம். இப்ப நாளைக்கே விடுதலை கிடைக்கும் என்று நினைத்து வரவேண்டாம். அடுத்த தலைமுறையிலும் அது முடியாமல் போகலாம்” என்றார்.
திரும்பவும் அந்த மாணவன் கேட்டான் “விடுதலை எப்போது கிடைக்கும் என்று உறுதியாக உங்களால் சொல்லமுடியாதா?”என்று அதற்கு தலைவர் சொன்னார்.
”விடுதலை என்பது தனித்து எங்களுடைய போராட்டமல்ல. விடுதலை இயக்கத்தின் வளர்ச்சி, எங்கள் மக்களின் எழுச்சி, சிங்கள தேசத்தின் வீழ்ச்சி, தமிழகத்தின் ஆதரவு, சர்வதேசத்தின் ஆதரவு இவை எல்லாம் சேர்ந்து வரும்போதுதான் விடுதலையும் வரும்” என்று சொன்னார்.
அவர் இன்றோ நாளையோ விடுதலை எடுத்து தருவேன் என்று வார்த்தைகளை சொல்லிக்கொண்டு போராட்டக்களத்துக்கு வந்தவர் அல்ல. அவரின் இந்த பிறந்ததினத்தில் ‘சரியான செயற்பாடுகள் செய்துகொண்டே போகும்போது அங்கீகாரம் கிடைத்தே தீரும்’ என்பதை அவரின் வரலாற்றினூடாக புரிந்துகொள்வோம்.
அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்பது அவரின் செயற்பாடுகளின் விளைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டது. அவர் போராடப் புறப்பட்டது 70களின் ஆரம்பத்தில். அவருக்கான ஓரளவு சிறிது அங்கீகாரம் கிடைத்ததோ 1985களில். பாருங்கள்.13 வருடங்கள் எந்தவித அங்கீகாரமும் இன்றி எந்தவித சளைப்புமின்றி போராடிய அவரின் தவம் எத்தனை உயர்ந்தது.
இந்த உயர்ந்த புரட்சிக்குணமே அவரை தேசியத்தலைவராக பல லட்சம் மக்களின் மனங்களுக்குள் எழுந்துநிற்க வைத்தது. அவரின் இந்த பிறந்ததினத்தில் இதனையே ஒரு பிரகடனமாக கொள்ளுவோம்.
அங்கீகாரம் கிடைத்த பின்னரே செயற்பாடுகளை செய்வோம் என்று நினைப்பது ஒருபோதும் செயற்பாட்டை செய்யவே விடாது என்றும், அது,’நீந்தப் பழகிய பின்னரே நீருக்குள் இறங்குவது போலானது’ என்றும் கற்றுக்கொள்ளுவோம்.
ச.ச.முத்து
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. அவருக்கு தெரிந்ததெல்லாம் விடுதலை. அதற்காக தன்னால் இயன்றதை செய்வது. மேலும் அவர் விடுதலை இத்தனை வருடங்களில் சாத்தியமாகும் என்றோ இத்தனை வருடங்களில் தமிழீழம் பெறலாம் என்றோ கற்பனைகளில் மிதந்தவரும் அல்ல.

    ReplyDelete