தலைமுறைக்கான போராட்டம்

2009 இற்குப்பிந்திய ஈழஅரசியல் விடுதலைப்போராட்டம் தொடர்பான ஈழத்தமிழ் மக்களின் பொதுவான மனநிலை, ஒரு வெறுமை நிலைக்குள் இருக்கின்றது என்ற கருத்து நிலவுகின்றது. சிலநேரங்களில் வாழ்க்கை வெறுமை நிலைக்குள் போவது தவிர்க்க முடியாதது. விடுதலைப்போராட்ட வரலாற்றில் இழப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் வெறுமைகள்  ஏற்பட்டன. ஏதோ ஒரு முட்டுச்சந்தியில் நிற்பது போன்றதொரு நிலை ஏற்படும்.

சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றபோது  நம்பிக்கையான தளபதிகள், பொறுப்பாளர்கள்  காயமடைந்தோ அன்றி வீரச்சாவடைந்தோ விடும்போது ஒரு தளர்வு ஏற்படும். ஆனால் அதைத்தாண்டி செல்லவேண்டும் என்ற கட்டாய நிலை உடனடியாக  ஏற்படும். அப்போது பொருத்தமான தெரிவினூடாகவோ  மாற்றுத்திட்டத்தினூடாகவோ பெறப்பட்ட பல வெற்றிகள், அடைவுகள் விடுதலை வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.

தற்போது ஏற்பட்டிருக்கும் போராட்டப் பயணத்தின் வெறுமையை நிரப்புவதற்கான வழிவகைகள், கடந்து வந்த பாதையில்  அனுபவங்களாகப் பதியப்பட்டிருக்கின்றன.

தலைவர் போராட்டத்தை ஆரம்பித்தபோது, அதில் பயணித்த பலர் நம்பிக்கையற்று வெளியேறினர். இந்திய இராணுவத்துடன் சண்டைபிடிக்க தலைவர் முடிவெடுத்தபோது பல மூத்தபோராளிகள் இயலாமை மற்றும் துணிவின்மையால் வெளியேறினார்கள். நம்பிக்கையுடனும் துணிவுடனும் நின்ற போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்திற்கெதிரான போரை முன்னெடுத்து அதில் வெற்றியுமடைந்தார்.

போராட்டப்பயணத்தில் பல முக்கிய தளபதிகள், திருப்புமுனையில் இருந்தவர்கள் எனப்பலர் வீரச்சாவடைந்த போதும் இல்லாமல்போகும்போதும் ஏற்பட்ட வெறுமைகள் நிரப்பப்பட்டு போராட்டம் முன் நகர்ந்திருக்கின்றது.

முப்பது வருடப் போராட்டப்பயணத்தில் தலைவரின் ஆளுமையும் செயற்பாடும் நம்பிக்கையான தீர்மானங்களும் அதை முன்னெடுத்த வழிமுறைகளையும் கொண்டு தற்போதைய வெறுமையை நிரப்பி முன்நகரவேண்டும் என்பதே தற்போதிருக்கும் வழி.

எம்மிடம் இருப்பது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமே.  எனவே கடந்த காலத்து அனுபவங்களை உள்வாங்கி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வலுப்படுத்தி, வெறுமையை அகற்றவேண்டும் என்பது ஈழத்தமிழ்மக்களின் சிந்தனையில் இருக்கவேண்டிய முதன்மையான விடயம்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவமானது நடைமுறைப்படுத்தும் தலைமைத்துவப்பண்பைச்சார்ந்தது அன்று. மாற்றமேற்படுத்தும் தலைமைத்துவப்பண்பைச் சார்ந்தது.

அந்த ஆளுமையின் செயற்திறன் வெளிப்பாடுகளை, தீர்மானங்களை, தற்துணிவான  முடிவுகளை சிந்தனையில் நிரப்பும்போது வெறுமை நிலை அகலும்.  இனி என்னசெய்ய முடியும் என்ற சோர்வும் அகலும். அதுதான் தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கும் விடுதலை அரசியலுக்கும் தேவையானது.

இலக்குத் தெளிவாக இருக்கும் போது அதற்கான அடைவுப்பாதைகளை  வாழும் காலத்தின் தன்மைக்கேற்றவாறு வகுத்து முன்நோக்கிச் சென்று கொண்டிருக்கவேண்டும்.

தலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால்  குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம். மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில்  இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில்.

வாணன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment