மேஜர் வீமனின் இறுதிச்சண்டை

1998 ம் ஆண்டு, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பைத் துண்டாடத் தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருந்தது சிங்களப்படை. மாங்குளச் சந்தியைக் கைப்பற்றுவதற்காகப் பல பகுதிகளால் புதிய போர் முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது. மறுபுறம், புலியணியும் புதிய முனைகளில் முன்னேறிய இராணுவத்தின் மீது உக்கிரமான மறிப்புத் தாக்குதலை முன்னெடுத்தது.

ஆனால், தினசரி வீரச்சாவும், காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால், படையணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் காயப்பட்டு, காயம் ஆறி (முழுமையாகக் குணமடைவதற்கு முன்) களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர். அதில் சிலர் வீரச்சாவடைந்து கூட இருக்கின்றனர். நிர்வாகத்திலிருந்தும் முடிந்தளவிற்கு ஆட்குறைப்புச் செய்து, லைன் போட்டு மறிப்புச் சண்டை செய்வதற்காக ஆட்கள் அனுப்பப்பட்டனர். அப்படியும் ஆட்பற்றாக்குறை தொடர, தென் -தமிழீழத்திலிருந்து மேலதிகமாக படையணிகள் உதவிக்கு அழைக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 600 பேரைக் கொண்ட படையணியை வாகரையில் இருந்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாகரையில் இருந்து மூதூரைத் தாண்டி மூதூருக்கும் கிண்ணியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உப்பாற்றுக்கு அணிகள் வந்துவிட்டது, உப்பாற்றில் இருந்து புறப்பட்டு இரண்டு நாட்களில் பேராற்றுக்கு வந்துவிடும். பேராற்றில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து வன்னிக்கு வண்டியேறுவார்கள். அந்த இரண்டு நாட்களும் அணிகளுக்கான உணவு வசதிகளைச் செய்து கொடுத்து பாதுகாப்பாக வைத்திருந்து வண்டி ஏற்றி விடும்  பொறுப்பு திருகோணமலை மாவட்ட அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்குரிய ஒழுங்குகளைச் செய்து விட்டு தயாராயிருக்க, அணிகளும் வந்து சேர்ந்தன (வாகரையில் இருந்து நான்கு இரவுகள் நடந்து பேராற்றுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்).  இனி கடற்புலிகளின் படகுகள் வரும் இடத்திற்குக் கொண்டு சென்று அனுப்பும் வேலைகளை செய்தால் சரி என்றிருந்தனர்.

மறுநாள் தலைவரிடத்தில் இருந்து செய்தி வந்தது. அணிகளை ஏற்றுவதற்கான சாதகமான சூழல் இல்லாததால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு அணிகளை அங்கேயே வைத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைக்கின்றது.

அணிகளை வைத்திருப்பதில் மாவட்ட அணிக்குச் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் உணவு! அதுவும் 600 பேருக்கு எப்படிச் சமாளிப்பது? அன்றைய காலகட்டத்தில், பேராற்றில் இருந்த மாவட்ட அணி எதிர்கொண்ட கடினமான விடயங்களில் ஒன்று உணவு. அப்போது அங்கு 30 பேர் வரைதான் மாவட்ட அணியாக இருந்தது. அவர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய உணவே இருப்பில் இருக்கும். (பொதுவாக அரிசி, மா, பருப்பு, மீன்ரின், சோயாமீற், கிறீம் கிறேக்கர் பிஸ்கற் போன்றவற்றை மரங்களின் மேல் பரண் அமைத்து பாதுகாத்து வைப்பார்கள்) திருகோணமலை, குச்சவெளி, சாம்பல்தீவு, கும்புறுப்பிட்டிப் பகுதியில் உள்ள சில ஆதரவாளர்களின் துணையுடன் சிறுகச் சிறுக சேகரிக்கும் உணவுகளே அங்கிருப்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

அதை வைத்து 600 பேரைச் சமாளிக்க முடியாது. அதேவேளை திடீரென அவ்வளவு பேருக்கும் அதுவும் 600 பேரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உணவு என்று பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அதிகபட்சம் கஞ்சி அல்லது சோற்றுக்கு அரிசி இருந்தால் சரி. அதுகூடக் இருப்பில் இல்லை என்பதால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குச் சென்று உணவுப் பொருட்கள் எடுத்து வருவதற்கான ஒழுங்குகளைச் செய்யத் தீர்மானித்தனர்.

அதைவிட, பிரதான சிக்கல் என்னவெனில் வாகரையில் இருந்து அணிகள் வரும்போது கொழும்பு வீதி, பன்குளம் வீதியைக் கடந்தே வரவேண்டும். பெரிய படையணிகள்  வீதியைக்கடக்கும் போது தடையங்கள் விழுவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இராணுவம் தடயங்களை அவதானித்து, அணிகள் நகர்ந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்வான். உடனே கடற்படையை உசார்ப்படுத்தி விடுவான்.

கடற்படையின் கடற்கலன்கள் விடுதலைப்புலிகளின் படகுகளை எதிர்பார்த்து புல்மோட்டைக் கடற்பரப்பில் தரித்திருக்கும். படையணிகள் வன்னிக்கு ஏற்றப்படாதவிடத்து அணிகள் பேராறு, திரியாயை அண்மித்த பகுதிகளிலே இருக்கும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

இந்தவேளையில் சிங்களப்படையினர் இரண்டு விடயங்களில்; கவனத்தைச் செலுத்துவர். ஓன்று அணிகளை கடலில் அல்லது தரையில் சேதப்படுத்துவதனூடாக வன்னிக்கான ஆளணி உதவி கிடைக்காமல் செய்வது அல்லது செல்லவிடாமல் தடுப்பது. இரண்டு, தமது கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து உணவுகள் போகவிடாமல் செய்வதற்கான கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வது.

இந்த நேரத்தில் எப்படியும் உணவை எடுத்தேயாகவேணும் என்ற காட்டாய நிலையை உணர்ந்த வீமன் (குச்சவெளியைப் பிறப்பிடமாகக் கொண்டவன்), தான் குச்சவெளிக்குச் சென்று உணவை எடுத்துவருவதாகக் கூறினார். குச்சவெளியின் எல்லா இடங்களும் வீமனுக்கு அத்துப்படி. அதுமட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தின் மூலை முடுக்குகள் கூட அவனுக்கு அத்துப்படி.

வீமன், ஒரு சிறந்த வழிகாட்டி, ஜீ.பி.எஸ், கொம்பாஸ் எல்லாத்தையும் தனது மனத்திரையில் பதிந்து வைத்திருப்பதைப் போல, சொல்லும் இடங்களிற்குக் கூட்டிச் செல்லும் நினைவுத்திறனுடைய ஒருவன். எங்கு இராணுவம் அம்புஸ் போடுவான்? ஆமி எங்கயிருந்து இறங்கினால் எந்தப்பாதையால் வருவான்? அப்போது எங்கே சென்றால் இராணுவத்தின் சுற்றி வளைப்பிற்குள் அகப்படாமல் இருக்கலாம்? என அறிந்தவன். காட்டிற்குள் சல்லடை போட்ட போதும், இராணுவத்தின் முற்றுகைக்குள் அகப்படாமல் தண்ணி காட்டியவர்களில் ஒருவன்.

குச்சவெளிக்கிராமத்தில் உள்ள ஆதரவாளர்கள் சிலருடன் வீமனுக்கு தொடர்பிருந்தது. விறகு பொறுக்குவதற்காக அல்லது கரைச்சியில் மீன் பிடிப்பதற்காக வருவதைப்போல் வந்து வீமனைச் சந்தித்து பலவிதமான தகவல்களையும் பரிமாறிச் செல்கின்றவர்கள். அவர்களே உணவுப்பொருட்களை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் உதவிகளையும் செய்கின்றவர்கள். அவர்களிடம் அரிசி, மா, சீனி, பருப்பு, உப்பு போன்ற அத்தியாவசியமான உணவுப் பொருட்களை ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொண்டான்.  அவை ஒழுங்குபடுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய வீமன் குறிப்பிட்ட போராளிகளை அழைத்துக் கொண்டு அவற்றை எடுப்பதற்காகச் சென்றான்.

காட்டிலிருந்து குச்சவெளி குடிமனைப்பகுதிக்குச் செல்லுவதற்கிடையில் கரைச்சி சதுப்புநில நீரேரியுடன் கூடிய வெளி உள்ளது. வெட்டையில் இருந்து நகரும் போது எதிரி தாக்கினால் பாதுகாப்பு எடுக்கமுடியாது.

அதைவிட்டால் நகருவதற்கு வாய்ப்பாக வேறுபாதைகள் இருக்கவில்லை. அதனால் ஆபத்தை எதிர்கொள்ளத் தயங்கவில்லை. சிங்களப்படைகளின் பதுங்கித்தாக்குதலை எதிர் கொள்ளத் தயாரான நிலையில் அணிகள் கரைச்சிக்குள் இறங்கி நகர்ந்து சென்றன.

வீமன் அவதானித்தபடி அணிகளைக் கூட்டிக்கொண்டு சென்றான். இராணுவத்தின் அசைவுகளை அவதானித்து, எதிரி பதுங்கித்தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்பான இடங்களை தவிர்த்து கரைச்சியைத்தாண்டி ஊர்மனைக்குள் சென்று சாமான்களை எடுத்துவிட்டான்.

ஓரளவு திருப்தியுடன் முகாம் நோக்கித்  திரும்பினார்கள்.  சாமான் எடுக்கச் செல்லும் போது முன்னுக்குச் சென்ற வீமன் திரும்பி வரும்போது அணிகளை அனுப்பி விட்டு பின்னால் வந்து கொண்டிருந்தான். இருட்டில் அசைவு கேட்டு நாய்கள் குரைக்கத் தொடங்கிவிட்டன. சமான்களைச் சுமந்தபடி போராளிகளும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள்.

ஊர்மனையின் எல்லையோரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த இராணுவம் திடீர் பதுங்கித்தாக்குதலை மேற்கொண்டான். சுதாகரித்துக் கொண்ட அணிகள், உணவு மூட்டைகளைப் போட்டுவிட்டு எதிர்த்தாக்குதலை தொடுத்தன. இராணுவத்தின் சிறிய அணியே பதுங்கித்தாக்குதலை மேற்கொண்டதால் புலியணிகள் கடுமையான எதிர்த்தாக்குதலைத் தொடுத்ததாலோ அன்றி இராணுவத்திற்கு இழப்புக்கள் ஏற்பட்டதோ என்னவோ இராணுவத்தின் தாக்குதல் சற்று நேரத்தில் நின்று விட்டது. போராளிகளிற்கு சேதம் ஏற்படவில்லை. மீண்டும் உணவுச்சாமான்களை எடுத்துக் கொண்டு வேகமாக திரும்பிக் கொண்டிருந்தனர்.

கரைச்சி வெட்டை வந்ததும் நான் கரையில் நிற்கின்றேன். நீங்கள் கரைச்சியைக் கடந்து செல்லுங்கள். பின்னர் வருகின்றேன் என்று வீமன் சொன்னதும் ஒரு போராளி ‘ஏன் நீங்களும் வாங்கோவன்’ எனக்கேட்டான். அதற்கு வீமன்; “அம்புஸ் போட்ட ஆமி, எப்படியும் மேலதிகமாக வேற ரீமையும் கூட்டிக்கொண்டு பின்னாலை தேடிக் கொண்டு வருவான். எங்களுக்கு இருக்கிறது கொஞ்ச நேரம், நீங்கள் வேகமாகக் கடவுங்கோ, பாதுகாப்பான பகுதிக்குள் நீங்க போனவுடன, நாங்கள் வருகிறம். தண்ணீக்கில வைச்சு அடிச்சா ஒருத்தரும் ஒன்டும் செய்ய இயலாது” எனக்கூறிவிட்டு, தன்னுடன் இரண்டு போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மீதியாட்களை விரைவாக செல்லும்படி கூறியனுப்பினான். அங்கு நின்று சாப்பாட்டுச் சாமான்களுடன் சென்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்கினான்.

அணிகளும் கரைச்சிக்குள் இறங்கி சென்று கொண்டிருந்தன. பாரமான சாமான்கள், சதுப்பு நிலமான கரைச்சி நீரேரி, சாமான் நிறையுடன் காலை வைச்சால் கால் கணுக்கால் வரை புதைஞ்சு போகும். சாமானை வைக்கவும் முடியாது. மாற்றித் தூக்குவதற்கும் ஆட்கள் இல்லை. அத்தனை கடினங்களையும் சமாளித்துக் கொண்டு அணிகள் நீரேரியில் நடுப்பகுதிக்கு சென்று கொண்டிருக்கையில், வீமன் நின்ற இடத்தில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமானது. வீமன் கணித்தவாறே அந்தப்பகுதியை நோக்கி இராணுவத்தினர் பின்தொடர்ந்து வர, அவர்கள் மீது எதிர்பாராத தாக்குதலைத் தொடங்கினார்கள்.

வீமன் அணி, உணவு தூக்கிச் சென்ற அணிகள் மீது இராணுவம் தாக்குதலை மேற்கொள்ளாத வண்ணம் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இவர்களோ மூவர், எதிரியினர் பலர். என்றாலும் அணிகள் பாதுகாக்கப்படவேண்டும். உணவுப் பொருட்கள் போய்ச் சேரவேண்டும் என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து போரிட்டனர்.

அணிகளும் ஒருவாறு சமாளித்து கரைச்சியைத் தாண்டி மறுகரைக்கு வந்து விட்டன. கரையில் வந்தவர்கள் மறுகரையில் நடந்து கொண்டிருந்த துப்பாக்கி வெடிச்சத்தத்தின் வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய இக்கட்டான நிலை. இராணுவத்துடன் தீவிரமான மோதலை வீமன் அணி தொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதை துப்பாக்கியில் இருந்து வெளிவந்த வெளிச்சங்கள் உறுதிப்படுத்தின. சிறிது நேரத்தின் பின் துப்பாக்கிச் சண்டை நின்றுவிட்டது.

மறுகரையில் வீமன் அணியின் வருகைக்காகக் காத்திருந்தனர் ஏனைய போராளிகள். எதிரியை ஏமாற்றிவிட்டு பக்கவாட்டால் தப்பி வருவார் என்ற நம்பிக்கையிருந்தது. கரைச்சியின் கரைகளில் ஆங்காங்கு பிரிந்து நின்று நிலமட்டத்தில் தலையை வைத்து நிலவு வெளிச்சத்தில் தண்ணீர் மட்டத்தில் எங்காவது ஆள்வருவது தெரிகின்றதா? எனப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நீண்ட நேரமாக எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் யாரும் வரவில்லை. மேஐர் வீமனும் அவருடன்  நின்ற இருவரும் வீரச்சாவடைந்து விட்டனர் என்பதை அதிகாலை புலரும்போது உணரமுடிந்தது. உணவுப் பொருட்களைப் பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு, அந்த மண்ணோடு கலந்துவிட்டார்கள்.

காலையில் அணிகள் தங்கியிருந்த பகுதிக்கு உணவுப் பொருட்களை கொண்டு வந்து சேர்த்தபோது, சாமான் வந்து விட்டது என்று அணி வீரர்களின் கண்களின் ஒரு புத்துயிர் ஏற்பட்டது. அதேவேளை “என்ன சண்டைபிடிச்சே எங்களுக்குச் சாமான் கொண்டுவந்தனீங்கள்;, ஒரே வெடிச்சத்தமாயிருந்தது. யாருக்கும் பிரச்சனையா?” எனக் கேட்டனர். மூவரின் வீரச்சாவைச் சொன்னபோது, அந்த இடம் ஒரு பாரிய அமைதிக்குள் மூழ்கிப்போனது. ‘எங்களுக்கு உணவு தர மூன்று உயிர்களின் தியாகமா!’ என்ற மனவோட்டத்தை இறுகிப்போன அவர்களின் முகங்களில் இருந்து புரியக்கூடியவாறு இருந்தது. ஜெயசிக்குறு வெற்றிக்காகப் பின்புலத்தில் நடைபெற்ற பல தியாகங்களில் இதுவும் ஒன்று.

நினைவழியாத்தடங்கள் -02Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment