பிரபாகரனியமும் ஈழத்தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டமும்!

ஈழத்தமிழ்மக்களின் விடுதலையை மட்டுமே தன்வாழ்வின் இலட்சியமாக வரிந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். தலைவரது போராட்ட தலைமைத்துவ வல்லமையின் காரணப்பெயராக கூறப்படும் 'பிரபாகரனியம்'தான் தமிழ்மக்களது விடுதலைப்போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்து கொண்டிருப்பது. தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தில் பிரபாகரனியத்தின் தோற்றம், மறைவு அல்லது பிற்பட்டகாலம், முற்பட்டகாலம் என்ற கற்பிதங்கள் எல்லாம் வெறும் மடமைத்தனமான சிந்தனையே ஒழிய என்றென்றும் தமிழினத்தினுடைய விடுதலைப்போராட்ட அசைவியக்கத்தின் உருவாக்க மையமாக இருக்கும் 'பிரபாகரனியம்'தான் அவர்களை எக்காலத்திலும் வழிநடத்தும் 'இயக்கவிசை' என்பது மறுக்கமுடியாத உண்மை.

எனவே பிரபாகரனியம் என்பது சிறு பொருள் கோடலுள்ள சொல் அல்ல. தமிழினத்தின் தன்மானத்தை, போரிடும் ஆற்றலை, அரசியல் மதிநுட்பத்தை, விலைபோகாத தன்மையை, பற்று உறுதியை, கொள்கை வழுவாப்பண்பை, இலட்சியத்திற்காக மரணிக்கும் வீரத்தியாகத்தின் உன்னதத்தை, தீர்க்கமான அரசியல் போராட்ட ஆளுமையை தமிழினத்திற்குள் வெளிக்கொணர்ந்து, உருவாக்கி, விதைத்து, வளர்த்த இந்த பிரபாகரனியம் இன்றும் என்றும் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தில் இரண்டறக்கலந்து வழிநடத்திக் கொண்டேயிருக்கும்.

தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை அமைதிவழியில் முன்னெடுத்த தந்தை செல்வா அவர்கள் 'தமிழ்மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். ஆரம்பத்தில் அகிம்சை வழியில் உரிமை கேட்ட தமிழினத்தின், அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஒரு திசையற்ற அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டது. அப்போது தந்தை செல்வா அவர்கள் கூறியது போலவே கடவுளாக வந்து தமிழினத்தின் கௌரவமான அரசியல் விடுதலையை சிறுவயது முதலே சுமந்து செம்மையாக வழிநடத்தி, அதன் வழிபற்றி பிறழ்வில்லாது, பற்று உறுதியுடன் செயற்பட்டவர் தலைவர் பிரபாகரன்.

பிறப்பிலேயே தலைமைத்துப் பண்பைக் கொண்ட தலைவராக(உhயசளைஅயவiஉ டநயனநசளாip) பிறந்தவர் தான் பிரபாகரன். இவரைப்போன்ற பண்புடனமைந்த தலைவர்கள் இருந்தாலும், மறைந்தாலும் அவர்களது சிந்தனையும் செயற்பாடும் மிகச்சிறந்த வழிகாட்டும் தன்மையைக் கொண்டவை. அப்படிப்பட்ட ஒன்றுதான் பிரபாகரனியமும். இது தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆத்மா. இன்று அதன் இயக்கவிசை சுற்று வட்டத்தில் சுழன்றவர்கள், அறியப்பட்டவர்கள்தான் இப்போதும் தமிழ்மக்களின் விடுதலை தொடர்பில் சரியான வழிபற்றி நடக்கின்றனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் சக்திக்கு மேம்பட்ட வல்லாதிக்க சக்திகளின் அழுத்தங்கள் இருந்த போதிலும் கொள்கையிலிருந்து வழுவாது அதை முன்னெடுத்தவர். தலைமைக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களினால் விடுதலைப்போராட்டம் திசைமாறி, ஈழவிடுதலைக் கருத்தியலே இல்லாமல் போயிருக்கக்;கூடிய வாய்ப்புகளிருந்தும் அந்தச் சமயங்களில் எல்லாம் கொள்கை மாறாமல் உறுதியாக தொடர்ந்து போராடி, ஈழவிடுதலைப் போராட்ட சிந்தனை மாறாமல் வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்.

'தலைவர் பிரபாகரன் மக்களையும் போராட்டத்தையும் முள்ளிவாய்க்கால் காரிருளில் கைவிட்டுவிட்டு முடிவுரை எழுதாமல் மறைந்து போனார்' என சிலர் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர். சுயநலத்திற்காக புலித்தோல் போத்தியிருந்த இப்படிப்பட்டவர்களின் சாயம் இப்போதாவது வெளிப்படுவது நன்மை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலைவர் அவர்கள் 2006 மாவீரர் தின உரையில் 'விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் சமூகம் முன்னெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்' மேலும் இறுதிக்காலத்தில் போர் உக்கிரமடைந்த போது விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளாராக கே.பி பத்மநாதன் அவர்களை நியமித்து 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய வடிவில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அடுத்த கட்ட போராட்ட வழிமுறையை காட்டாமலா தலைவர் அவர்கள் 'மறைந்தார்'. அதுமட்டுமில்லாமல் 'இனஅழிப்பு' விடயத்தை சரியாக கையாண்டு சிங்களப்பேரினவாத அரசுடன் வாழமுடியாது என்பதனூடாக இலங்கைத்தீவில் தமிழ்மக்களின் அரசியல் உரிமையை நிலைநாட்டி, அடுத்தகட்டப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வாய்ப்பில்லாமலா உள்ளது! முள்ளிவாய்க்கால் வரை வீரத்துடன் போராடி கொண்ட கொள்கைக்காகவும், விலைபோகாமலும், வீரமரணமடைந்த அத்தனை போராளிகளும் தங்களின் வீரமரணத்தினூடாக ஒரு செய்தியும் சொல்லவில்லையா? என்பதை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயக வழியில் அரசியல் விடுதலைப்போராட்டத்தை நகர்த்த தமிழ்த்தேசியத்தை வழிபற்றும் தமிழ்க்கட்சிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைத்ததானது இன்னொரு வகையான வடிவமே. சிலவேளை ஆயுதப்பொறிமுறை பின்னடைவைச் சந்தித்தாலும் இரண்டாவது பொறியமைப்பு தமிழ்மக்களின் விடுதலையை கொண்டு நடாத்தும் என்பதில் தலைவருக்கு தெளிவிருந்தது. அடுத்தகட்டத்திற்கு நகர்வதற்காக தலைவரின் சிந்தனையில் உருவெடுத்த இந்த இரண்டாவது பொறியமைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்க பாடுபடவேண்டும். என்றாலும் தெளிவில்லாதவர்களும், தலைவர் பிரபாகரனை காழ்ப்புணர்வுடன் பார்க்கும் குறிப்பிட்ட சிலரும் 'பிரபாகரனியம்' தோற்றுப்போனதொன்றாகவே காட்டமுனைகின்றனர். அதிலிருந்து விடுபட்டு புதியதொருவகை காலத்திற்குள் தமிழ்மக்களின் போராட்டம் நகர்த்தப்படுகின்றது என்ற தொனியைக் காட்டி தமிழ்மக்களின் போராட்டத்தின் மூன்றாவது காலகட்டம் (ஆதாவது பிரபாகரனியத்திற்கு பின்) என்ற சிந்தனையை புகுத்த நினைக்கின்றனர்.

பிரபாகரனியத்தின் இயக்கவிசை சுழற்சியால் அறியப்பட்ட இவர்கள் தங்கள் அறிவை பொருத்தமாக பயன்படுத்தினால் அதுவே தமிழ்மக்களுக்குப் பயன்தரும். எனவே அறிவை பயன்படுத்தி தமிழ்மக்களின் விடுதலையை அழிவின் பக்கம் கொண்டுசெல்லாமல் ஆக்கபூர்வமாக இரண்டாவது பொறிமுறையிலிருந்து விடுதலைப்போராட்டத்தைச் சரியாக நகர்த்த வழிகாட்டுவதும், கருத்துத் தெரிவிப்பதும் தான் அறிவும் தெளிவும்.

தமிழினத்திடம் அரசியல் வெற்றிடமும்; சிந்தனைச்சிதைவும் ஏற்பட்டுள்ளது, ஆளுமைக் குலைவுள்ள தலைமைத்துவமற்ற சமூகமாக தமிழ்ச்சமூகம் உள்ளது, வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஒரு அவமானம் என்று கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றன. அதுவே அவர்களின் அறிவு-தெளிவு-துணிவு என கற்பிதப்படுத்தப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்கு பின் கருத்துக்கூறும் இவர்கள் அதற்கு முன் பிரபாகரனியத்தின் துதிபாடுதலையே கொள்கையாக கொண்டிருந்தவர்கள் என்பதை மறுக்கமுடியாது. தமிழ்மக்களின் அரசியல் செயற்பாட்டுக்கு தேவையான அறிவும் தெளிவும் துணிவும் தமிழ்மக்களின் அரசியல் விடுதலைப்போராட்டத்திற்கு அறிவையும் தெளிவையும் கொண்டு பலம் சேர்க்கவும் அதை நோக்கிய நகர்வை துணிவாக செய்வதற்கும் தேவையே ஒழிய தற்போதைய அரசியல் நகர்வுகள் மீது சேறுபூசுவதற்கும் வசைபாடுவதற்குமல்ல.

அத்துடன் குழாயடிச் சண்டையை ஏற்படுத்துவது போன்று பொருத்தமற்ற விவாதங்களையும் கருத்துருவாக்கங்கங்களையும் ஏற்படுத்துவதில் குறியாகக் கொண்டு செயற்படுவதை தவிர்க்கவேண்டும். தமிழினத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் செயற்பாடுகள் மீது விதண்டாவாத கருத்துக்களை சொல்லிக் கொண்டிருப்பதால்தான் ஆபத்துக்களும் தமிழ்மக்களிடம் நம்பிக்கையீனமும் ஒற்றுமைக்குலைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர, தமிழ் மக்கள் அடுத்தகட்டமாக தமது போராடத்தை நகர்த்திச்செல்வதற்கான முனைப்புகளையும் செயற்பாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

அத்துடன் தலைவர் அவர்களது சிந்தனைகளையும் ஆளுமையான கருத்துக்களையும் வழிபற்றி செயல்வழி செயற்பட சிந்திக்கும் தன்மையுள்ள மிகப்பெரிய இளைஞர் சக்தியும், தமிழ்த்தேசியத்தின்பால் உழைக்கக்கூடிய புத்தியீவிகளும், மக்களும், உணர்வாளர்களும் ஒன்றுபட்டு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போதுள்ள அரசியல் சூழலில் தமிழ்மக்களின் அரசியல் போராட்ட நகர்வை ஆபத்துக்குள்ளாக்காமல், தமிழ்மக்களின் அரசியல் நகர்வுகளுக்குச் சிறிது சிறிதாகப் பலத்தைச் சேர்க்கும் அரசியல் செயற்பாடுகளை வீணே விமர்சித்துக் கொண்டிருக்காமல் எல்லோரும் சேர்ந்து வடம்பிடித்து விடுதலைத் தேரை சரியான வழியில் கொண்டு செல்ல வேண்டும். முக்கியமாக தமிழ்மக்கள் தமக்கிடையில் வீண் விமர்சனங்களை தெரிவிப்பது எந்தப்பயனையும் தராது. தமிழர்கள் தொடர்பில் அக்கறை செலுத்ததேவையில்லை என்பதை போன்று 'அவர்களே அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள் எனவே இனி அவர்களைப்பற்றி பெரிதாக அக்கறை கொள்ளத்தேவையில்லை' என மற்றவர்களின் குறிப்பாக சிங்களத்திடம் நகைப்பிற்கிடமாக்காமல் செயற்படுவதே தமிழினத்தின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும். முதலில் தமிழ்மக்களின் அரசியல் தலைமைகளையும் அரசியல் நகர்வுகளையும் பலவீனப்படுத்தும் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதை விடுத்து, சரியான கருத்துகளில் காலத்திற்குப் பொருத்தமாக சொல்ல வேண்டிய கருத்துக்களைச் சரியாக சொல்வதே எமது நாட்டிற்கும் மக்களிற்கும் நாம் செய்யும் கடமை.

உலக வரலாற்றில் பின்பற்றப்படும் பல தத்துவங்கள் இன்றும் பலரால் பின்பற்றப்படுகின்றது.. அதுபோலவே தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டத்தை எந்தக்காலத்திலும் வழிநடத்தும் தன்மை; 'பிரபாகரனியத்திற்கு' உண்டு என்பதுடன் அதுவே தமிழ்மக்களின் அரசியல் போராட்டத்தின் செயலுக்கமும் நம்பிக்கையும் தெளிவும் உள்ள தத்துவவடிவம். தமிழ்மக்களின் அரசியல் விடுதலையானது 'பிரபாகரனியம்' என்ற தத்துவத்திற்குள் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி விடுதலை நோக்கி செயல்பட்டு அரசியல் விடுதலையை அடைவது மட்டுமே தமிழ் மக்களின் முன் உள்ள கடமை. எனவே தமிழ்மக்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் இணையத்தளங்கள், ஏனைய ஊடகங்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு பொருத்தமான கருத்துக்களை வழங்குவதுடன் பொய்யான கருத்துக்களையும் வக்கிரம் நிறைந்த சொற்களையும் தவிர்த்து சரியான பாதையில் தமிழ்மக்களை வழிநடத்துவார்கள் என நம்புவோம்.

அபிஷேகா (abishaka@gmail.com)


01/10/10
Share on Google Plus

About அபிஷேகா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
  Blogger Comment
  Facebook Comment

17 கருத்துரைகள் :

 1. What happened is, Praba killed all people "who can think of their own or who had different ideas than Praba" so others started worshipping praba for survival, and now when Praba was eliminated, these worshippers cannot do or don't know what to do and now are going after the next Powerful persons..
  This is what Praba sowed

  ReplyDelete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. ஏனெனில் பிரபாகரன் ஒரு செயல் வீரன். எதையாவது செய்யாது விட்டால் நாடு தன்னை மறந்துவிடும் என்று நம்பிய நெப்போலியனைப் போன்ற இயல்புடைய ஒருவர். அவருடைய எழுச்சியின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி வரைக்கும் அவர் அப்படித்தான் வாழ்ந்தார். அவருக்கு உறங்குகாலம் என்பதெல்லாம் கிடையாது. தலை மறைவாக இருந்தாலும் அவர் சும்மாயிருக்க மாட்டார். அவருடைய இந்த சதா செயற்படும் பண்புதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏனைய விடுதலை இயக்கங்களை விடவும் இராணுவ ரீதியாக பலமுடையதாக மாற்றியது. எனவே பிரபாகரன் இயல்பில் ஒரு செயல் வீரன். உறங்கு நிலையற்ற ஒரு செயல் வீரன். அப்படிப்பட்ட ஒருவர் மே 17-ற்குப் பின்னர் இத்தனை மாதங்களாக செயற்படாமல் இருக்கிறார் என்றால் அது அவருடைய இயல்பிற்கு மாறானது. தவிர பிரபாகரன் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதை ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் கூட, அவர் அப்படி தப்பிச் செல்லமுன்பு வயதான தனது பெற்றோரையும் தப்ப வைத்திருப்பார். அவர்களை எங்காவது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு முன்கூட்டியே அனுப்பி வைத்திருப்பார். அல்லது தன்னுடன் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் முடிவில் என்ன நடந்தது? அவருடைய முதிய பெற்றோர் அவருடைய 'எதிரிகளிடம்' கையளிக்கப்படும் ஒரு பரிதாபகரமான நிலையே வந்தது. இது அவருடைய இறுதிக்கட்டம் எந்தளவுக்கு நெருக்கடியானதாக இருந்தது என்பதையே காட்டுகிறது. இவை தவிர மேலும் ஒரு விளக்கமும் உண்டு. அவருடைய முன்னாள் சகாவும் பின்னாளில் அவரிடமிருந்து பிரிந்து சென்று தற்பொழுது அவரை விமர்சிப்பவருமாகிய திரு.ராகவன் கூறியது அதாவது ஒரு மரபு ரீதியிலான அரசாங்கம் இவ்வளவு பெரிய பொய்யை தொடர்ச்சியாகக் கூற முடியாது என்பது. அதுவும் இந்தத் தகவல் யுகத்தில் சொன்ன பொய்யை தொடர்ந்தும் அழுத்திச் சொல்வது என்பது கடினம். எனவே திரு.பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதே மெய்யானது.

  ReplyDelete
 5. அதை ஒப்புக்கொள்ள மறுக்கும் எல்லா விசுவாசிகளும் முதலாவதாக அவருடைய இயல்பை அறியாது அவரை அவமதிக்கிறார்கள். இரண்டாவதாக ஈழத்தமிழ் அரசியல் அவரோடு தேங்கி நின்று விடவேண்டும் என்று விரும்புகிறார்கள். அடுத்ததாக அவருடைய பாணியிலான போராட்ட வடிவத்தை தொடர விரும்புவோர் பற்றி பார்க்கலாம். இவர்களும் ஏறக்குறைய பிரபாகரனின் உடலையும் அவரது கோட்பாடுகளையும் மம்மியாக்கம் செய்து பேண முற்படுகிறார்கள் எனலாம். ஏனெனில் நிலவும் ஒரு துருவ உலக ஒழுங்கின்படி பிரபாகரனின் பாணி எனப்படுவது காலங்கடந்ததாகி விட்டது. இந்நிலையில் பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து பேணமுற்படும் எல்லாரும் இறந்தகாலத்திலேயே சீவித்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை. இனியுமொரு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அளவிற்கு ஈழத்தமிழர்கள் குறிப்பாக வன்னி மக்கள் களைத்தும், சலித்தும், வெறுத்தும், இடிந்தும் போய்விட்டார்கள். மிகச் சிறிய இனமாகிய ஈழத்தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தின் சாணக்கியமற்ற மற்றும் தீர்க்க தரிசனமற்ற போக்குகளால் தமது வல்லமைக்கு மீறி அசாதாரணமான அசாத்தியமான தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஒரு சிறிய இனத்திற்கு இருக்கக்கூடிய புறவயமான பௌதீக வரையறைகளை மீறிச்சாதிக்கப்பட்ட அனைத்து பெருஞ் செயல்களுக்கும் அதிகமதிகம் அகவயப்பட்ட விளக்கங்களையே கொடுக்க முடியும். அதிலும் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த ஒரு சிறிய சனத்தொகையே (இது கனடாவில் புலம்பெயர்நது வாழும் சனத்தொகைக்கு ஏறக்குறைய சமம்) முழு ஈழத்தமிழினத்துக்குமான போரை எதிர் கொண்டது. தியாகம் செய்ததும், காயப்பட்டதும், அவமானப்பட்டதும், பசிகிடந்ததும், பதுங்குகுழிக்கும் தறப்பாள் கூடாரத்துக்கும் இடையே ஈரூடகமாக கிழிபட்டதும், இறுதிக்கட்டதில் போராளிகளுக்கும் அரச படைகளிற்கும் இடையே நார்நாராய் கிழிபட்டதும் அவர்கள்தான். ஏறக்குறைய முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட ஒரு நிலையில் கூட்டுத் தண்டனையை அனுபவித்ததும், அனுபவிப்பதும் அவர்கள்தான். யார் யாருடையதோ தீர்கதரிசனமற்ற முடிவுகளால் தலைச்சான் பிள்ளைகளை பலியாடுகளாய் கொடுத்ததும் தலைமுறை தலைமுறையாக சேகரித்த சொத்துக்களையெல்லாம் தெருக்களில் வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் சரணடைந்ததும், தண்டனைக் கைதிகளாய் பிடிக்கப்பட்டதும் அவர்கள் தான்.

  ReplyDelete
 6. எனவே போரைத் தொடர வேண்டும் என்று ஆசைப்படுவோர் முதலில் வன்னி மக்களிடம் சென்று வாக்கெடுப்பு நடத்தட்டும். முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட வன்னிச் சனங்களை ஏனைய அப்பாவித் தமிழர்கள் அன்போடும் ஆதரவோடும் அணைக்கிறார்கள். ஆனால் ஓரளவுக்கு அரசியல் தெரிந்த அல்லது படித்த தமிழர்களில் பெரும் பகுதியினர் இந்த வன்னி அகதிகளுடன் தொலைபேசியில் கதைப்பதற்கே பயந்து நெளிகிறார்கள். வன்னியில் இருந்து வந்தாலே அது புலிகள் தான் என்று அரசாங்கம் மட்டும் நம்பவில்லை. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்கனவே வசித்து வரும் தமிழர்களில் கணிசமான தொகையினரும் அப்படித்தான் நம்புகிறார்கள். வன்னி அகதிகளுடன் கதைக்க அவர்களுடன் நெருங்கி உறவாட அஞ்சுகிறார்கள். ஒரு வன்னி அகதியை சந்தித்து விட்டு வீடு திரும்பும் போது யாரோ என்னை உற்றுப் பார்ப்பது போலவும் என் பின்னால் தொடர்ந்து வருவது போலவும் உயிர் முழுவதும் கூசுகிறது என்று ஒரு படித்த யாழ்ப்பாணத்து நண்பர் என்னிடம் சொன்னார். உண்மைதான். அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் அநேகமானவை இப்பொழுதும் பெருமளவுக்கு அச்சத்தில் உறைந்து போய் உள்ளன. ஒரு தற்காப்பிற்காக அங்குள்ளவர்கள் வன்னி அகதிகளுடன் நெருங்கிப் பழக அஞ்சுவதை புரிந்து கொள்ள முடியும்தான். ஆனால் தனிப்பட்ட உரையாடல்களின்போது பிரபாகரன் சாகவில்லை என்றும், புலிகள் மறுபடியும் வருவார்கள் என்றும் வீராவேசமாக கதைக்கும் பலரும் (சில அரிதான புறநடைகள் தவிர) வன்னி அகதியோடு நெருங்கிப் பழகத் தயங்குவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

  ReplyDelete
 7. அவர்களுக்கு திரு.பிரபாகரன் வேண்டும், வீரம் வேண்டும், தியாகம் வேண்டும், சண்டையும் நடக்கவேண்டும்... ஆனால் அவர்கள் எல்லோருக்குமாக யுத்தம் புரிந்த வன்னி அகதியுடன் நெருங்கிப் பழக மட்டும் அச்சம். எந்த ஒரு ஜனக்கூட்டம் முழுத் தமிழனத்துக்குமாக தியாகம் செய்து பெரும்செயல்களைச் செய்து முடிவில் சாவினால் சப்பித் துப்பப்பட்டு தப்பி வந்ததோ அந்தச் சனங்களுடன் நெருங்கி உறவாட துணிச்சலற்ற பலரும் புலிகளின் வீரத்தைப்பற்றி போற்றும் ஒரு முரணைக் காண முடிகிறது. இது எதைக் காட்டுகிறது? இவர்களுக்கு சண்டை வேண்டும். தமிழ் வீரம் என்று சொல்லி கைதட்டவும் விசிலடிக்கவும் வெடி கொழுத்தி மகிழவும் யுத்தகள வெற்றிகள் வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றிற்குமாக தப்பிச் செல்ல வழியற்றிருந்த ஒரு சிறிய ஜனக்கூட்டமே பீரங்கித் தீனியாக வேண்டும். அவர்களுடைய தலைச்சான் பிள்ளைகளே பலியாடாக வேண்டும். இவர்கள் யாரும் யுத்தத்திற்கு போகமாட்டார்கள். தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்ப மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்ச்சினிமா ஸ்தாபித்து விட்டிருக்கும் ஒரு பார்வையாளர் பண்பாடுதான். யாரோ தியாகம் செய்ய, யாரோ வதைபட இவர்கள் வெடிகொழுத்தி கொண்டாடுவார்களாம். எனவே பிரபாகரனிசத்தை மம்மியாக்கம் செய்து காவும் எல்லோரையும் நோக்கி இக்கட்டுரை ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நீங்கள் யுத்தம் தொடரவேண்டும் என்று விரும்பினால் அதில் முன்னணிப் படையாகப் போகத்தயாரா? பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகமான சூழல்களில் வசித்துக்கொண்டு முழுக்க முழுக்க ராணுவமயப்பட்ட மூடப்பட்ட ஒரு நிலத்தில் வாழும் ஜனங்களின் மீது போரையும் போர்ப்பிரகடனங்களையும் ஏவி விட முயலும் எல்லாருமே அதில் முதல் வீரராகப் போகத் தயாராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த ஜனங்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டும்.

  ReplyDelete
 8. யுத்த இயந்திரத்திற்கு காசை அள்ளி இறைத்த ஒரே காரணத்திற்காக யாருடையதோ தியாகத்தில் குளிர் காய்ந்து விட முடியாது. எனவே திரு.பிரபாகரனை மம்மியாக்கம் செய்து வைத்திருக்கும் எவரும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு போகவிடாது தடுப்பதோடு, வன்னியில் இருந்து சாவினால் உமிந்து விடப்பட்ட ஜனங்களை மேலும் ஆபத்துக்குள்ளாக்குகிறார்கள். இவர்கள் பாதுகாப்பான ஜனநாயகமான ஒரு சூழலில் இருந்து கொண்டு எதையும் கதைக்கலாம். ஆனால் ஜனநாயமற்ற ஒரு சூழலில் வசிக்கும் மக்கள் குறிப்பாக தலைக்குப்பதில் தலை சீவப்படும் ஒரு அரசியல் சூழலில் சிலமாதங்களிற்கு முன்புவரை வசித்து வந்த மக்கள் இவர்களுடைய பிரகடனங்களால் மேலும் வதைபட நேரிடலாம். விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனை கடவுளாக வழிபடும் ஜனநாயக உரிமையை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அந்த வழிபாடானது தோற்கடிக்கப்பட்ட ஒரு ஜனக்கூட்டத்தை தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே உறைந்து கிடக்குமாறு கோருவதை இக்கட்டுரை விமர்சிக்கிறது. இனி இரண்டாவது போக்கை பார்க்கலாம். இது திரு.பிரபாகரனைப் பிசாசு அல்லது பாசிஸ்ட் அல்லது போர்க்குற்றவாளி என்று கூறுவோர் அணி. அவரைப் பாட்டுடைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை ஒரு பாசிஸ்ட் என்று கூறும் ஜனநாயக உரிமையை இக்கட்டுரை மதிக்கிறது, ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதற்காக எல்லாத் தீமைகளிற்கும் அவரே பொறுப்பு என்றும் அதனால் இலங்கை அரசாங்கம் செய்வதெல்லாம் சரி என்றும் கூறுவதை இக்கட்டுரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. முதலில் ஒரு அடிப்படை உண்மையை தெளிவாகப் பார்க்கவேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு காரணம் அல்ல் அது ஒரு விளைவு மட்டுமே.

  ReplyDelete
 9. தீர்க்கப்படாத இன முரண்பாட்டின் விளைவே விடுதலைப்புலிகளும் ஏனைய தமிழ் இயக்கங்களும். விடுதலை இயக்கங்களுடன் கூடப் பிறந்த ஜனநாயக மறுப்பின் விளைவே, விடுதலைப்புலிகளுக்கு எதிரான இயக்கங்களை உயிர் பிழைத்திருப்பதற்கான தங்குநிலை அரசியலை நோக்கித் தள்ளியது. அதாவது விளைவின் விளைவுகள் அவை. எனவே விளைவின் வீழ்ச்சியை வைத்துக் கொண்டு காரணமும் இல்லாமல் போய்விட்டது என்று சொல்லிவிட முடியாது. அரசாங்கத்தின் வெற்றியை பெருந்திரளான தமிழ்மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதவில்லை என்பதால்தான், விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்ச்சிப்பவர்கள் கூட அவர்களிடம் இப்பொழுது கழிவிரக்கம் காட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிக்கும் ஒரு புலம் பெயர்ந்த தமிழர் சொன்னார் 'கடிநாய் என்றாலும் அது ஒரு காவல் நாய்' என்று. இதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். இலங்கை அரசாங்கம் யுத்தத்தில் பெற்ற வெற்றிகளை ஒட்டுமொத்த இறுதிகட்ட அரசியல் வெற்றியாக மாற்ற தயாரற்ற ஒரு போக்கே யுத்தம் முடிந்து ஏழுமாதங்கள் ஆன பின்னரும் இப்பொழுதும் காணப்படுகிறது. அவ்விதம் ராணுவ வெற்றிகளை அரசியல் வெற்றிகளாக மாற்றத் தேவையான தீர்க்க தரிசனமும் திடசங்கற்பமும் ஜனநாயக அடித்தளமும் கொழும்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப்புலிகளும் இதே தவறைத்தான் செய்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்நிலையில் யுத்தத்தின் வெற்றி காரணமாக சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புதிய இன எழுச்சி அலை உருவாகியுள்ளது. அதை மீறிச் செல்லும் தைரியம் இலங்கைத் தீவில் எந்த ஒரு பெருங்கட்சிக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதால்த்தான் ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியானது ஒரு முன்னாள் ராணுவ தளபதியைப் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 10. இத்தகைய ஒரு பகைப்புலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய கௌரவமான ஒரு தீர்வு முன்வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திரு.பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் தான் காரணம் என்று கூறுவது அதாவது அடிப்படைக்காரணம் அப்படியே தொடர்ந்தும் இருக்கும் ஒரு பின்னணியில், விளைவையே காரணமாக மாறாட்டம் செய்வது என்பது பிரச்சினையின் அடியாழ வேர்களை கண்டுபிடிக்கத் தடையாகிவிடும். விடுதலைப் புலிகள் இயக்கம் எனப்படுவது முழுக்க முழுக்க திரு பிரபாகரன் என்ற ஒரு தனிப்பெரும் ஆளுமையின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்புத்தான். அதற்குள் காணப்பட்ட ஏனைய பெரிய ஆளுமைகள் எதுவும் தலைமையை பலப்படுத்திய உப ஆளுமைகளே தவிர திரு.பிரபாகரனுக்கு நிகரானவை அல்ல. அதாவது விடுதலைப்புலிகள் என்றாலே அது பிரபாகரன் தான். பிரபாகரன் என்றாலே அது விடுதலைப்புலிகள் தான். இனிமேல் அவர் இல்லாத வெற்றிடத்தில் யார் வந்தாலும் இயல்பில் அது முன்னைய விடுதலைப்புலிகள் இயக்கமாய் இருக்க முடியாது. எனவே விடுதலைப் புலிகளை விமர்சிப்பது என்பது அதன் பிரயோக நிலையில் பிரபாகரனின் தனி ஆளுமையை விமர்சிப்பது தான். மேலும் விடுதலைப்புலிகளின் அதிகார கட்டமைப்பைப் பொறுத்தவரை அதன் உச்சியில் காணப்பட்ட திரு.பிரபாகரனே எல்லா இறுதி முடிவுகளையும் எடுத்தார். எனவே விடுதலைப்புலிகளை விமர்சிப்பது என்பது அவரை விமர்சிப்பதுதான். ஆனால் அதற்காக அவரை விமர்சிப்பது என்பது அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும், சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் அவரைப் பிரித்தெடுத்து பார்ப்பதாகப் பொருள் படாது. பிரபாகரன் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் வெற்றிடத்தில் இருந்து வரவுமில்லை. அவர் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலின் ஒரு வகை மாதிரி. அவருக்கேயான ஒரு வரலாற்று காலகட்டத்தின் தவிர்க்கப்படமுடியாத ஒரு விளைவு. அவரை எதிரியாகப் பார்க்கும் ஈழத்தமிழர்களில் அநேகர் அவரை தமக்குப் புறத்தியான ஒரு ஆளுமையாகவே பார்க்கிறார்கள்.

  ReplyDelete
 11. ஆனால் பிரபாகரத்தனம் எனப்படுவது அநேகமாக எல்லா ஈழத்தமிழர்களிற்குள்ளும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு இருக்கிறது என்பதே உண்மை. இனமானம் இனப்பெருமை பேசும் எல்லாத் தமிழ் போர் வீரனும் அவருடைய சாயலை உடையவன் தான். சரணடையாமை, எதிரியை மன்னியாமை என்றுவரும் எல்லா இடங்களிலும் அவர் உண்டு. கொலனித்துவ கால பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளால் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ச் சிப்பாய்களிடம் காணப்பட்ட விசுவாசம், உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் கீழ்ப்படிவு போன்ற தமிழ்ச் சிப்பாய்த்தனம் அல்லது தமிழ் இராணுவத்தனம் எனப்படுவது பிரபாகரனை எதிர்ப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டு விட்டது. மேலும் குடும்பத்திற்குள் மற்றவர்களின் அபிப்பிராயங்களைப் பொருட்படுத்தாத குடும்பத் தலைவனையும், பிள்ளைகளை தண்டனைகள் மூலம் வளர்த்தெடுக்கலாம் என்று நம்பும் பெற்றோரையும், பாடசாலைகளில் பிரம்புடன் நிற்கும் ஆசிரியரையும், ஆசிரியரை நிற்கவைத்து கதைக்கும் அதிபரையும், அதிபரை நாட்டாண்மை செய்யும் உயர்அதிகாரியையும், ஆஸ்பத்திரிகளில் எஜமானர்களைப் போல வரும் மருத்துவரையும், அவர் இல்லாத போது ராஜாங்கம் செய்யும் தாதியையும், தாதி இல்லாத இடத்தில் அட்டகாசம் செய்யும் சிற்றூழியரையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளும் அல்லது மௌனமாக சகித்துக்கொள்ளும் ஒரு சமூகம், அரசியலில் திரு.பிரபாகரன் கொண்டு வந்த ஒற்றைப்பரிமாண அணுகு முறையையும் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டுவிட்டது. இக்கருத்தை மேலும் பலப்படுத்த விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படும் ராஜினி திரணகம தன்னுடைய நண்பரான ஒரு மருத்துவ நிபுணரிடம் கேட்ட கேள்வியை இங்கு எடுத்துக்காட்டலாம். 'இந்தப்பிள்ளைகள் இவ்வளவு வன்முறையை எங்கிருந்து பெற்றார்கள். எங்களுடைய வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள், சனசமூக நிலையங்கள், ஒன்றுகூடும் இடங்கள் போன்றவற்றில் இருந்து தானே' என்று. இதுதான் உண்மை. தமிழ் வீரத்தின் மறுபக்கமாயிருந்த மன்னிப்பிற்கு இடமின்மையும், ஜனநாயக மறுப்பும் வெற்றிடத்தில் இருந்து வரவில்லை.

  ReplyDelete
 12. அது ஈழத்தமிழ் சமூகத்தின் கூட்டு உளவியலில் இருந்து அதாவது யுத்தத்தின் வெற்றிக்காக எதையும் தியாகம் செய்யலாம். அல்லது விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற ஒரு கூட்டு மனோநிலையில் இருந்து வந்தவைதான். எனவே திரு.பிரபாகனை விமர்சிப்பது என்பது ஒவ்வொரு ஈழத்தமிழனும் அதோடு அவரை ஆதரிக்கும் ஒவ்வொரு இந்தியத் தமிழனும் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்வதுதான். அவரை அவருக்கேயான தனி விசேசமான வரலாற்றுப் பின்னணியில் இருந்தும் சமூக உளவியற் பின்னணியில் இருந்தும் பிடுங்கியெடுத்து விமர்சிப்பது என்பது அவரை மட்டுமல்ல முழு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியலையும் அதோடு முக்கியமாக இலங்கைத் தீவின் இன யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளத் தடையாகிவிடும். பிரபாகரனை வழிபடுவது என்பது எப்படி ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடையாயிருக்கிறதோ, அது போலவே அவருடைய பாத்திரத்தை அதற்கேயான சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து பிரித்தெடுத்து விமர்சிப்பது என்பதும் ஈழத்தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தடைதான். இனி மூன்றாவது போக்கைப் பார்க்கலாம். இது மேற்சொன்ன ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ நிலைப்பாடுகளுக்கு நடுவே வருகிறது. இதில் வழிபாட்டிற்கும் இடமில்லை, வசை பாடுவதற்கும் இடமில்லை. பதிலாக நிதானமான தீர்கதரிசனத்துடன் கூடிய அறிவுப்பூர்வமான ஒர் அணுகுமுறையே இது. முன்சொன்ன துருவ நிலைப்பாடுகள் இரண்டும் தமிழர்களை இறந்த காலத்திலேயே தேங்கி நின்றுவிடச் செய்பவை. அதாவது திரு.பிரபாகரன் என்ற மையத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இறந்த காலத்துடனேயே நின்று விடுவது. ஆனால் இந்த மூன்றாவது போக்கெனப் படுவது தமிழ் அரசியலைத் திரு.பிரபாகரன் என்ற மையத்தை கடந்து கொண்டுவரவேண்டும் என்று கோருவதாய் இருக்கிறது. அதாவது நிகழ்காலத்திற்கும் வருங்காலத்துக்கும் ஆனது. பிரபாகரன் ஒரு கட்டம். அதில் அவருக்கென்றொரு முற்போக்கான பாத்திரமும் இருந்தது. பிற்போக்கான பாத்திரமும் இருந்தது. இப்பொழுது அது கடந்து செல்லப்படவேண்டிய காலாவதியாகிவிட்ட ஒரு கட்டம்.

  ReplyDelete
 13. இனி அடுத்த கட்டம், அது அவர் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவது அல்ல. மாறாக அவர் தொடாத இடங்களில் இருந்து தொடங்குவது. அவர் ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்ற கேள்விகளில் இருந்து தொடங்குவது. இலங்கைத் தீவிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் பெரும் போக்குகளாக காணப்படும் முன் சொன்ன துருவ நிலைப்பட்ட போக்குகள் தற்பொழுது களத்தில் அதாவது இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் பேரம் பேசும் சக்தியற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் விடுதலைப் புலிகள் என்ற மையத்தை சுற்றியே அவர்களுடைய அரசியல் இருந்து வந்தது. இப்பொழுது அந்த மையம் இல்லை. எனவே ஆதரிப்போருக்கும் பேரம் பேசும் சக்தி இல்லை. எதிர்ப்போருக்கும் இல்லை. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது பேரம் பேசும் சக்தியை மறு சீரமைத்து மீளக்கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட இரு பிரதான போக்குகளையும் சாராது, அதே சமயம் தமது மெய்யான பேரம் பேசும் சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதிலிருந்து தொடங்கினால்தான் இனி ஈழத்தமிழர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு. இப்படிப் பார்த்தால் மூன்றாவது போக்கிற்கே பிரகாசமான அரசியல் எதிர்காலம் உண்டு. ஆயுதப் போராட்டத்தின் சாணக்கியமற்ற தீர்க்க தரிசனமற்ற முடிவுகளால் பல துண்டுகளாக உடைந்து சிந்திச் சிதறி நீர்த்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்கள் மீண்டும் ஒரு சக்தியாக ஒன்று திரண்டெழுவது என்பது இந்த மூன்றாவது போக்கினூடாக மட்டுமே சாத்தியப்படும். விடுதலைப்புலிகள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் எவரும் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கும். அதோடு புலிகளைத் தடைசெய்திருக்கும் நாடுகளில் சட்டச் சிக்கல்களிற்கும் முகங்கொடுக்க வேண்டி வரும். அதே சமயம் புலி எதிர்ப்பையே ஒரு அரசியலாக செய்து வந்தவர்களும் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆகிவிட்ட ஒரு காலச் சூழலில் ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் சக்தி இனியும் நீர்த்து போகக்கூடாது என்ற ஒரு மகத்தான பொது இலட்சியத்தின் கீழ் ஒன்று திரள முன்வரவேண்டும்.

  ReplyDelete
 14. இதற்கு முதலில் செய்யப்படவேண்டியது, இறந்தகாலத்தை வெட்டித்திறந்து பார்ப்பதுதான். அதாவது ஒரு பிரேதப்பரிசோதனை – போஸ்ட்மோட்டம். இறந்தகாலத்தை ஈவிரக்கமின்றி விமர்சிக்கும் ஓர் அரசியல் ஒழுக்கம், ஓர் அறிவியல் ஒழுக்கம், ஒரு கலை இலக்கிய ஒழுக்கம், ஒரு ஊடக ஒழுக்கம். இறந்தகாலத்தை காய்தல் உவத்தல் இன்றி விமர்சித்தால் அன்றி இனி ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலமே கிடையாது. அத்தகைய ஒரு பிரேதப் பரிசோதனைக்குத் தேவையான துணிச்சலற்ற எவரும் ஈழத்தமிழர்களுக்கு தீர்க்கதரிசனம் மிக்கதொரு எதிர்காலத்தை காட்டமுடியாது. பிரேதப் பரிசோதனை என்ற சொல் இங்கு மிகப்பரந்த ஆழமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வரை யுத்தகளத்தில் காட்டப்பட்டதை விடவும் மிக உயர்வான வீரத்தையும் தியாகத்தையும் இது வேண்டி நிற்கிறது. அதாவது பிரேதப் பரிசோதனை செய்யும் ஒருவர் தேவைப்பட்டால் தன்னுடைய தலையையும் வெட்டித் தராசில் வைத்து நிறுக்கத் தயாராக இருக்க வேண்டும். வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த நோய்க்கூறான அம்சங்கள் அனைத்தும் கண்டறியப்படவேண்டும். ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். முழுச் சமூகமுமே தன்னை ஒரு கூட்டுச் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய களங்கள் எல்லாத் துறைகளிலும் எல்லா தளங்களிலும் அரசியல் அறிவியல் கலை இலக்கியம் ஊடகம் போன்ற எல்லாத்துறைகளிலும் திறக்கப்பட வேண்டும். மே 17 -ற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை விமர்சிப்பதை ஓர் அரசியல் ஒழுக்கமாகவோ அல்லது அறிவியல் மற்றும் கலைஇலக்கிய ஒழுக்கமாகவோ கொண்டிருந்த அனைவரும் அணி தோல்விகள் அற்ற ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான விமர்சனவெளியாக அதை விரிவுபடுத்த வேண்டும். அச்சத்தின் காரணமாகவோ அல்லது யுத்தத்தின் வெற்றிக்காக தியாகம் செய்யப்படும் ஒன்றாகவோ வெளிப்படையாக அபிப்பிராயம் கூறா ஓரியல்பு ஆயுதப்போராட்டம் நெடுகிலும் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் அதாவது மே 17-ற்குப் பின்னரும் யாராவது வன்னி அகதி ஒருவர் தன்னுடைய கசப்பான அனுபவங்களில் இருந்து கதைக்கும் போது ஏனைய தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அதை வரவேற்பதில்லை. முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியோடு நொந்து போயிருக்கும் ஒர் அரசியற் சூழலில் இது போன்ற விமர்சனங்கள் எதிர்த்தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கே உதவக் கூடும் என்று ஓர் அபிப்பிராயம் படித்த தமிழர்களில் ஒரு பிரிவினரிடம் காணப்படுகிறது. இது வரை இருந்ததோடு சேர்த்து இன்னும் சிறிது காலத்திற்கு மௌனமாக இருந்தால் என்ன என்றும் கேட்கப்படுகிறது.

  ReplyDelete
 15. குறிப்பாக இப்படி அபிப்பிராயப்படுவோரில் அநேகர் மே 17-ற்கு முன்புவரை விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதை இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பெரும் போக்கே நிலவுகிறது. விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முடியாது போனதால் வந்த குற்றவுணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கழிவிரக்கமே இதுவென்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் ஈழம் மறுபடியும் தமிழகச் சந்தைகளில் பண்டமாக விற்கப்படுகிறது என்கிறார்கள். எதுவோ எதன் காரணமாக ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ அதைக்குறித்த வாதப்பிரதிவாதங்களிற்கான ஒரு பகிரங்க அரங்கு பெருந்திரள் ஜனப்பரப்பில் இதுவரையிலும் திறக்கப்படாதிருப்பது மிகவும் மோசமானது. இப்படியே போனால் ஈழத்தமிழர்கள் தங்களுடைய தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்பது எப்போது? விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தோன்றியிருக்கும் கழிவிரக்கம்; கைவிடப்பட்டதான உணர்வு; எதிர்த்தரப்பிற்கு மேலும் வெற்றிகள் கிடைத்து விடக்கூடாது என்ற தவிப்பு போன்றவைகள் காரணமாக கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக சமூகத்தின் மீது கவிந்து படிந்திருக்கும் ஒரு கனத்த மௌனம் மேலும் தொடரப்படும் ஓர் ஆபத்து தென்படுகிறது. தமிழ்ச்சான்றோர், ஆய்வாளர்கள், கலை இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் ஊடகக் காரர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு இந்த மௌனத்தை உடைத்தெறியவேண்டும். உலகையே வியக்கவைத்த தமிழ்வீரமும், தியாகமும் ஏன் காலாவதியாகின, ஏன் வீணாயின என்ற கேள்விக்கு விடை காணப்படவேண்டும். இந்த கால்நூற்றாண்டுக்கு மேலான மௌனம் உடைக்கப்படாத படியால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் துலக்கமற்று காணப்படுகிறது. எனவே ஈழத்தமிழர்கள் இனியும் மௌனமாயிருக்க கூடாது. இப்போது நிலவும் இடைமாறு காலகட்டத்தை சுயவிசாரணைக் காலமாக, சுயவிமர்சனக் காலமாக மாற்றி இறந்தகாலத்தை வெட்டித்திறக்கவேண்டும்.

  ReplyDelete
 16. இறந்த காலத்தில் வாழ்தல் அல்லது மம்மியாக்கம் செய்யப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்தல் என்பது ஒரு சமூகத்தை அந்த இறந்து போன நம்பிக்கைகளோடு சேர்த்து அழுகச் செய்துவிடும். இறந்தகாலத்தில் வாழ்தல் என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை தோல்வியில் வாழ்தல்தான். தோல்விக்கு காரணமான கிருமிகளுடன் சேர்ந்து வாழ்தல்தான். எனவே இறந்தகாலத்தை சரியானபடி எடை போடவேண்டும் அப்படி செய்தால்தான் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் திட்டமிடலாம். அதற்கு முதலில் துணிந்து பிரேதப் பரிசோதனையில் இறங்கவேண்டும். இறந்து போனவர்களை மறந்து போகாமலிருக்கவும் இதை உடனடியாக செய்யவேண்டும். இறந்து போனவர்களுக்கு வரலாற்றில் உரிய இடத்தையும் உரிய கௌரவத்தையும் கொடுப்பதற்காகவும் இறந்தகாலத்தை சரியானபடி எடைபோடவேண்டும். தற்பெருமைமிக்க எல்லாச்சிறிய இனங்களிடமும் உள்ளதுபோல ஈழத்தமிழர்களிடமும் ஒரு வியாதி உண்டு. அதாவது வெற்றிகளிற்கெல்லாம் உள்ளேயிருக்கும் சக்திகள் போற்றப்படும். அதே சமயம் தோல்விகளிற்கெல்லாம் புறச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும் அல்லது புறச்சக்திகளின் கைக்கூலிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்படும் அகச்சக்திகள் திட்டித் தீர்க்கப்படும். இந்த இடத்தில் ஈழத்தமிழர்கள் ஒன்றை மனந்திறந்து ஒப்புக்கொள்ளவேண்டும். வீழ்ச்சிகளிற்கெல்லாம் காரணம் புறச்சக்திகள் என்பதை விடவும் புறச்சக்திகளால் தோற்கடிக்கப்படும் அளவிற்கு அகச்சக்திகள் தீர்க்க தரிசனமற்றும் சாணக்கியமற்றும் நெகிழ்ச்சியற்றும் மூடுண்டும் காணப்பட்டன என்பதே. எனவே ஒரு முழு அளவிலான மனந்திறந்த துணிச்சலான பிரேதப் பரிசோதனையே இப்போதுள்ள உடனடித் தேவை. இனியும் இறந்தகாலத்தை ஒரு இராணுவ ரகசியம் போல மூடிவைத்திருக்க முடியாது. குறிப்பாக ஒப்பீட்டளவில் ஜனநாயகச் சூழலில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களும், தமிழ்நாட்டு சான்றோரும் அதை உடனடியாகத் தொடங்கலாம். தமிழ்ச்சக்தி சிதறிக்கிடக்கிறது. தமிழ்ப்பலம் சிதறுண்டு கிடக்கிறது. தமிழர்கள் தங்களை புத்திசாலிகள் என்றும் தீரர்கள் என்றும் சுழியர்கள் என்றும் தந்திரசாலிகள் என்றும் தற்பெருமை பேசியதெல்லாம் வீண். எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை. அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே. வீரதீர சாகசங்களின் காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. விளைவுகளே வழிவகைகளை நியாயப்படுத்தி விடும் என்ற வாதமும் தோற்றுப் போய்விட்டது. இது அறிவின் யுகம். இப்பொழுது அறிவுதான் எல்லாமும். உயிரை ஆயுதமாகப் பாவித்த ஒரு சிறிய இனம் இனி அறிவை ஆயுதமாகப் பாவிக்கவேண்டும். அறிவுதான் ஆயுதம் அறிவுதான் சக்தி அறிவுதான் பலம் அறிவுதான் நிரந்தரம் புத்திமான் பலவான் -
  நிலாந்தன

  ReplyDelete
 17. ' எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் தன்பலத்தை இப்படி சிந்திச் சிதறியதில்லை. எந்தவொரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி கூறுபட்டுக் கிடந்ததில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் சகோதரர்களைப் பகைத்ததுமில்லை அயலவர்களைப் பிழையாகக் கையாண்டதுமில்லை. எந்த ஒரு புத்திசாலியான சிறிய இனமும் இப்படி இறந்தகாலத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்ததும் இல்லை. அறிவற்ற வீரம் என்றைக்குமே வென்றதில்லை. தன்பலம் எதுவென்று தெரியாத எந்த ஓரினமும் விடுதலைக்கு தகுதியற்றதே'

  உண்மை சகோதரரே.

  புலிகளின் பிழை புலம் பெயர்ந்தும் பீடித்துக் கொண்டிருக்கிறது.

  இந்திய மண்ணில் அவர்கள் செய்தது பெரும் பிழை. இதுவே இவர்கள் அயலவர்களை பிழையாய்க் கையாண்டமைக்கு ஒரு உதாரணம். ஆனால் இதுவரை புலியார் யாரும் இதை ஒத்துக் கொண்டதில்லை ஆனால் மற்றோர் இதனை மறப்பதில்லையெனினும் பேசத் துணிவதில்லை.

  இது நம் இனத்தின் சாபக்கேடாய் அமைந்திட்டது மிக வருந்தத் தக்கதே.

  ReplyDelete