![]() |
தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.
தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்” என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா - கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 24ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று.
கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், 'நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை' என பதிவு செய்துள்ளார்.
'விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்' - கப்டன் வாணன்’
புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று.



Blogger Comment
Facebook Comment