1970களின் பிற்பகுதியில் சீனாவிற்குள் அமெரிக்கா பிரவேசித்ததிலிருந்தும், 1980களின் ஆரம்பத்தில் இருந்து உலகளாவிய ஏகாதிபத்திய பாதையில் சீனா பிரவேசித்ததிலிருந்தும் உலக மயமாக்கல் ஒரு பெரும் பரிமாணத்தைப் பெற்றது. சீனாவிற்குள் அமெரிக்காவின் பிரவேசமும், உலக சந்தைக்குள் சீனாவின் பிரவேசமும் இணைந்து சீனாவை ஏகாதிபத்தியத்தினதும், உலகமயமாக்கலினதும் பிரதான பங்காளி ஆக்கியது. சீனா உலகமயமாக்கலுக்கு முதலில் உட்படத் தொடங்கிய மிகக் குறுங்காலத்திற்குள்ளேயே தன்னை உலகமயமாக்கலின் பங்காளியுமாக்கிக் கொண்டது.
டெங்ஷியாவோபங் தலைமையிலான சீனாவின் நால்வகை நவீனமயமாக்கல்கள் சீனாவை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய உதவியது. இந்த நவீனமயமாக்கலால் ஏற்பட்ட ஏகாதிபத்திய பாதையிலான சீனாவின் உலகளாவிய வர்த்தகப் படர்ச்சியும், தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் இந்தியாவை அதிர்ச்சிக்கும், தாக்கத்திற்கும் உள்ளாக்கியது.
இதனால் இந்தியா கூட்டு (Collaboration) உற்பத்திக்கான பாதையில் கால்வைத்து, யப்பானுடன் கூட்டுச் சேர்ந்தது. அதன் மூலம் தன்னையும் உலகமயமாக்கலில் ஒரு நேரடிப் பங்காளி ஆக்கிக் கொண்டது. இத்தகைய
கூட்டு உற்பத்தி முறைமூலம் இந்தியா தொழில்நுட்ப ரீதியாக சீனாவின் நால்வகை நவீனமயமாக்கலுடன் போட்டியில் ஈடுபடக் கூடியதாய் அமைந்தது.
இந்த வகையில் இரு பெரும் சனத்தொகைமிக்க நாடுகளான சீனாவும், இந்தியாவும் உலகமயமாக்கலிலும், அதனது ஏகாதிபத்திய பொருளாதாரத்தினதும் நேரடிப் பங்காளிகள் ஆகின. அதைத் தொடர்ந்து உலக அரசியல் ஒரு புதிய கட்டத்தை அடைந்தது. அதாவது இருபெரும் ஆசிய நாடுகளினதும் அரசியல் பொருளாதார
மாற்றமும் இவ்விரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார, அரசியல் மற்றும் ஆயுதப் போட்டிகளும் இணைந்து உலக அரசியற் போக்கில் துலாம்பரமான மாற்றத்தை ஏற்படுத்தின.
இந்த மாற்றம்தான் 21ஆம் நூற்றாண்டிற்கான உலக அரசியல் போக்கின் பிரதான அடித்தளமாகும். அமெரிக்க பொருளாதார முறையின் மீது சீனா மோகம் கொள்ளத் தொடங்கிய நிலையில், சீனப்பெரும் சுவரைத் தகர்த்து சீனாவிற்குள் நுழைவதற்கான ஒரு பாதையை அமெரிக்கா உருவாக்கியது. ஆனால் அந்த நுழைவாயிலுக்கு ஊடாக சீனா வெளியே பாய்ந்து உலகம் முழுவதற்கும் தன்னை விரிவாக்கத் தொடங்கியது.
அமெரிக்காவால் திறந்து வழி\மைக்கப்பட்ட பரந்த உலகமயமாக்கற் பாதையில் சீனா வீறுநடை போட்டது. ஆதலால்தான் உலகமயமாக்கலுக்கு சவாலாக இருந்த சதாம் ஹூசைனின், பின்லேடன் என்போருக்கு எதிரான போர்களின் போதெல்லாம் சீனா குறைகளையோ, அன்றி விமர்சனங்களையோ கூறியதாயினும் அவற்றைத் தடுப்பதற்கு எதிராகச் செயற்படவில்லை.
மேற்கூறிய போர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக் கூடிய எந்தவொரு இடத்திலும், சீனா அதனைப் பயன்படுத்தியதில்லை. வாயால் விமர்சனங்களைக் கூறினாலும் நடைமுறையில் மேற்படி போர்களுக்கு ஆதரவாகவே சீனா செயற்பட்டது. செயலில் அமெரிக்கா தன் கையில் இரத்தங்களை பூசிக்கொண்டவேளை, சீனா அதன் பயனாக தன் கையில் பணத்தை அள்ளத் தவறவில்லை.
இதில் சீன இராஜதந்திரம் இரட்டிப்பு வெற்றியைப் பெற்றது. ஒரு புதிய பாதையை திறக்கும் முயற்சியில் அமெரிக்கா ஓரளவாவது விலை கொடுக்கிறது. ஆனால் சீனாவோ தான் சிறிதும் நட்டம் அடையாமல் அந்தப்
பாதையில் பயணித்து இலாபம் அடைகிறது.
இந்த வகையில் அமெரிக்கா முன்னின்று உருவாக்கிய சர்வதேச ஏகாதிபத்திய வர்த்தகப் பாதைக்கூடாக அந்த சர்வதேச அரசியல் வர்த்தக பொருளாதார சட்டங்களுக்கு ஊடாக சீனா உலகளாவிய பரப்பில் தனக்கான பொருளாதார உருவாக்கத்தில் ஈடுபடலாயிற்று.
சீனாவின் இந்தப் பொருளாதார விரிவாக்கமும், அதற்கான அரசியல் இராணுவ வியூகங்களும், அமெரிக்க சீன உறவில் பெரும் போட்டிகளைத் தோற்றுவித்துள்ளன. இப்போட்டியில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஒரு பாத்திரமாகியுள்ளது.
"சர்வதேச பயங்கரவாதம்' ஒடுக்கப்படும்வரை வளர்ந்து வந்த இப்போட்டி இரண்டாம் பட்சமானதாக இருந்தது. ஆனால் பின்லேடனின் சாம்ராச்சியம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் கவனம் சீனாவை நோக்கித் திரும்பியது.
சீனா தனது உலகளாவிய விரிவாக்கத்திற்கு இந்து சமுத்திரத்தை இலக்காக்கிக் கொண்டது. இதில் இலங்கைத் தீவு மையப் புள்ளியில் அமைந்துள்ளதால் இலங்கையின் மீது தனது பிடியை வலுவாக்குவதன் மூலம் தனது ஆதிக்கத்திற்கான இந்துசமுத்திர வியூகத்தை சீனா வகுத்துள்ளது.
அமெரிக்கா முன்னின்று திறந்துவிட்டுள்ள சர்வதேச வர்த்தக ஒழுங்குப் பாதையைப் பயன்படுத்தி, இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர சீனா திட்டம் வரைந்தது. தமக்கு சாதகமான ஓர் அரசு இலங்கைத்தீவில்
அமையுமிடத்து எத்தகைய இராணுவ வழிகளுமின்றி, உலகமயமாக்கலுக்கான சர்வதேச சட்ட விதிகளின் கீழ் இலங்கை அரசுடன் செய்துகொள்ளக் கூடிய சட்டபூர்வ ஓப்பந்தங்களின் மூலம், சீனா தன்னை இலங்கையில் நிலைநிறுத்திக் கொள்ளவும், அதன்வழி பிராந்திய அளவில் தேவையான ஆதிக்கத்தைப் பெறவும் முடியும்.
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுடனான சீனாவிற்கான எண்ணை விநியோகப் பாதையின் மையத்தில் இலங்கைத்தீவு அமைந்துள்ளது. வர்த்தகம், மூலப்பொருள் விநியோகம், எண்ணை விநியோகம், இராணுவ நகர்வுகள் ஆகிய அனைத்திற்கும் இலங்கை ஒரு மையப்புள்ளி. பொருளாதார நலன்களுக்கான ஒப்பந்தங்களைச் செய்வதற்கான ஒரு திறவுகோலாக அரசியல் இராணுவ ஆதிக்கம் அமைந்துவிடுகிறது.
அதேவேளை பொருளாதார ஆதிக்கம் அரசியல், இராணுவ ஆதிக்கங்களைப் பெறுவதற்கான ஒரு களமாக அமைந்து விடுகிறது. இங்கு ஒன்றுக்கு இன்னொன்று உறுதுணையாகிறது. இந்த வகையில் தனக்குச் சாதமான ஓர் அரசு இலங்கையில் அமையுமிடத்து தனக்குத் தேவையான ஒப்பந்தங்களை சாதாரண சர்வதேச சட்டவிதிகளின் கீழ் ஏற்படுத்தி இலங்கையில் தனக்கான அரசியல் பொருளாதார மற்றும் தேவைப்படும் இடத்து இராணுவ விரிவாக்கங்களை செய்ய சீனா தயாரானது.
எனவே ராஜபக்ஷவைப் பதவிக்கு கொண்டு வருவதன் மூலம் இதற்கான வியூகத்தை சீனா அமைக்கத் தொடங்கியது. இதற்கெதிரான மாற்று வியூகத்தை அமெரிக்கா அமைத்துக் கொண்டது.
இனப்பிரச்சினைப் போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி சீனா தனக்கான வியூகத்தை வடிவமைத்துக் கொண்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் மூலம் இவ்வியூக அமைப்பில் சீனா வெற்றி பெற்றது, பொன்சேகா வெற்றிபெறாமல் போனதன் ஊடாக அமெரிக்கா தோல்வியடைந்தது.
மேற்படி ஜனாதிபதி தேர்தலின்போது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தேர்தல் புறக்கணிப்பானது ராஜபக்ஷவின் வெற்றிக்கு சாதகமான காரணியாய் அமைந்ததென எண்ணும் அமெரிக்கா, அதற்காக விடுதலைப் புலிகள் மீது சீற்றம் கொள்ளலாயிற்று. ரணில் அரசாங்கத்துடனான ஒஸ்லோ பிரகடனத்தில் இருந்து புலிகள் பின்வாங்கி விட்டதாகக் கருதிய அமெரிக்கா அதன் நிமித்தம் புலிகளுக்கு சில எச்சரிக்கை சமிக்ஞைகளைக் காட்டத் தொடங்கியது. ஆனால் புலிகளோ அந்த எச்சரிக்கை சமிக்ஞைகளை மேற்குலகத்துடன் ஒத்துப்போக முடியாததற்கான காரணிகளாக்கிக் கொண்டனர்.
மேற்படி தேர்தல் புறக்கணிப்புடன் மேற்குலகம் தெளிவான புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டது. அரையும், குறையுமாக பயங்கரவாதிகள் எனக் கூறிவந்த நிலைமாறி சொல்லிலும், செயலிலும் முழு அளவில் புலிகளை மேற்குலகம் பயங்கரவாதிகள் என்ற வகைப்பாட்டில் கையாளத் தொடங்கியது.
"புலிகளை ராஜபக்ஷ பார்த்துக்கொள்ளட்டும் ராஜபக்ஷவை நாங்கள் பார்த்துக்கொள்வோம்'' என்ற முடிவிற்கு மேற்குலகம் வந்தது. இந்த வகையில் புலிகளுக்கு எதிரான ராஜபக்ஷவின் போரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மேற்குலகம் எடுத்துக் கொண்டது. இனப் போரின் பெயரால் இலங்கையில் சீனா அடையும் வேகமான வளர்ச்சியைத் தடுப்பதற்கு முதலில் போரை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என மேற்குலகம் கருதியது.
இதற்காக மேற்குலகு ராஜபக்ஷவிற்கு உறுதுணையாகச் செயற்படும் முதல் நிலை முடிவை எடுத்தது. புலிகளின் ஐந்து ஆயுதக் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்து உதவியதாக ராஜபக்ஷ பின்னாளில் வெளிப்படையாகக் கூறினார். அதாவது இலங்கையின் இராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை அமெரிக்க அரசு விசாரணைக்கு உட்படுத்த எத்தனித்த நிலையில் அதனைக் கைவிடச் செய்வதற்காக ராஜபக்ஷ மேற்படி அமெரிக்காவால் புலிகளின் ஐந்து ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்ட இரகசியத்தை வெளியிட்டார்.
தமக்குச் சாதகமான ராஜபக்ஷவை பதவியில் அமர்த்துவதன் மூலமே இலங்கையை மையமாகக் கொண்ட தமது இந்துசமுத்திர வியூகத்தை வடிவமைக்கலாமென சீனா எண்ணியது. இதற்கு இலங்கையின் இனமுரண்பாட்டு போரை ஊன்றுகோலாகப் பயன்படுத்தி உயரம் தாண்டும் பாய்ச்சலில் சீனா வெற்றி பெற்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்ஷவிற்குத் தன்னையும், தனது குடும்ப ஆதிக்கத்தையும், இன ஆதிக்கத்தையும் நிலை நிறுத்த போர் வெற்றி அவசியப்பட்டது. ஆதலால் ராஜபக்ஷக்களுக்கும் போர் ஒரு தெரிவானது. புலிகளைத் தோற்கடிப்பதற்கேற்ற பலமான முழுநீள உதவியை வழங்குவதன் மூலம் சிங்கள மக்களிடம் நற்பெயரைப் பெற்று இலங்கையில் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளச் சீனாவிற்கும் போர் ஒரு பிரதான தெரிவானது.
சிங்கள மக்களின் மனப்பாங்கு என்பது எப்போதும் இந்தியாவுக்கு எதிர்ப்பானதாகவே இருந்து வந்துள்ளமை, இங்கு சீனாவிற்கு ஒரு சாதகமான புள்ளியாக மாறுகிறது.
ராஜபக்ஷக்கள் போர் விருப்புப் கொண்டிருந்ததால் அதைப் பயன்படுத்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கொல்லவோ, அந்தச் சக்திகளை அரசியல் அரங்கிலிருந்து அகற்றவோ போர் உதவும் என்று இந்திய அரசும் கருதியதால் இந்தியாவின் தெரிவாகவும் போர்
அமைந்தது.
சீனசார்பு அரசு பதவிக்குவர புலிகளின் தேர்தல் புறக்கணிப்பு உதவியதென்பதாலும், புலிகளை கட்டுப்படுத்த போர் தேவையென மேற்குலகம் கருதியதாலும், மேற்குலகின் தெரிவாகவும் போரே அமைந்தது. புலிகளை அழிப்பதற்கான போரை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம், சிங்கள இனவாத அரசியலில் தாம் முன்னரங்கிற்கு வந்துவிடலாமென ஜே.வி.பி. கருதியதால் அதன் தெரிவும் போராகவே இருந்தது..
தன்னைத் தோற்கடிக்க புலிகளின் தேர்தல் புறக்கணிப்பே பிரதான காரணமாக அமைந்ததென ரணில் விக்கிரசிங்க கருதியதால் அதன் மீதான ஆத்திரத்தை தீவிர போர் ஆதரவாக அவரும் ஆக்கிக் கொண்டார்.
அதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவும் போராகவே அமைந்தது. தமக்குக் கிடைக்க ஏற்பாடாகி இருந்த போதியளவு ஆயுதக் கப்பல்கள் பற்றிய எதிர்பார்க்கை, புலிகளுக்கு போர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆதலால் புலிகளின் தெரிவும் போராகவே அமைந்தது.
மேற்கூறிய ஒவ்வொரு தரப்பினரும், தத்தம் நிகழ்ச்சி நிரலுக்குள் ஏனையோர் அடங்குவதாகக் கணக்குப்போட்டனர். ஆனால் இறுதி அர்த்தத்தில் சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்தான் அனைத்து தரப்பினரும் அடங்கினர். தேர்தல், போருக்கு முன்னான போர் அரசியல், போரின் போதான போர் அரசியல் ஆகிய மூன்றையும் சீனா தனது அரசியல் சதுரங்கத்திற்கான வெற்றிக்காய்கள் ஆக்கியது.
அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் நீண்டகால அடிப்படையிலான பூகோள அரசியல் பொருளாதார ஆதிக்கப் போட்டி, இந்தியசீன பராந்திய நலன்கள் என்பன இலங்கைத்தீவின் உள்நாட்டுக் காரணிகளுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் போராக வெடித்தது. சிங்கள பேரினவாத நலனும், ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் ஆதிக்க நலனும் போர் வடிவம் கொண்டன. ராஜபக்ஷக்கள், தமது குடும்ப ஆதிக்க நலனை இனப்பிரச்சினையின் வடிவான போருடனும், உலகப் பெரு வல்லரசுகளான அமெரிக்கா, சீனா, மற்றும் பிராந்திய வல்லரசான இந்தியா என்பனவற்றின் தேவைகளுடனும் ஒரு நேர்கோட்டில் இணைப்பதில் வெற்றி பெற்றனர்.
நன்றி: பொங்குதமிழ்


.jpg)


