Saturday, March 31, 2012

ஜெனிவா வாக்களிப்பு: பிராந்திய அரசியலில் புதிய அணுகுமுறையை வகுக்கின்றதா இந்தியா?


இந்தியாவானது தனக்கு தெற்கே அமைந்துள்ள சிறிலங்காவுடன் நட்பைப் பேணவேண்டிய நிலையிலும், தனது பிராந்திய ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டும் என்கின்ற இருதலைக் கொள்ளி நிலையில் இந்தியா மாட்டிக்கொண்டது. இவ்வாறு Global Spin வலைத்தளத்தில் AMANTHA PERERA எழுதியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் அதாவது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் கடமையாற்றிய சிறிலங்கா இராஜதந்திரிகள் கொழும்புடன் தீவிர தொலைபேசி தொடர்பாடல்களை மேற்கொண்டனர். 

தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடைமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தமது அதிருப்திகளை வெளியிட்டு வருவதுடன் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஒருதலைப்பட்ச நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சிறிலங்கா அதிபரை நேரடியாக எச்சரிக்கும் பாணியில் தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டதாக மூத்த சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தும் மமதையிலிருந்த ராஜபக்ச அரசாங்கம், ஐ.நா வில் பணியாற்றிய சிறிலங்கா இராஜதந்திரிகளால் விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையை ஒரு பொருட்டாக கருதவில்லை. 

சிறிலங்கா விடயத்தில் காண்பிக்கப்படும் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடுகளையும் இந்திய மத்திய அரசாங்கம் எதிர்த்து நிற்கும் என சிறிலங்காவின் பழைய விசுவாசியும் கூட்டாளியுமான இந்தியா அறிவித்திருந்தது. மே 2009 நடுப்பகுதியில், அதாவது ஐ.நா தலைமையகத்திலிருந்து தொடர்ச்சியான அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு சில மாதங்களின் பின்னர், சிறிலங்காவில் யுத்தம் நிறைவுக்கு வந்ததுடன், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர். 

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம், ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு நீண்ட காலமாக மிகப் பலமான ஆதரவை வழங்கி வந்த சிறிலங்காவின் அயல் நாடான இந்தியா, அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. 

அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்களை விசாரணை செய்து சிறிலங்கா அதிபரிடம் நவம்பர் 2011ல் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்திருந்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்காகக் கொண்டே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்புக்கள் மார்ச் 22 அன்று இடம்பெற்றது. இவ்வாக்கெடுப்பில் இத்தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகளும் எதிர்த்து 15 நாடுகள் வாக்களித்ததுடன், எட்டு நாடுகள் இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 

இவ்வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்கா அதிபர் ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் "பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் நோக்கத்தில் சமநிலையைப் பேணி அதனை முன்வைப்பதற்கான முயற்சிகளைக் கூட இந்தியா கைக்கொண்டது" என குறிப்பிட்டிருந்தார். 

இருப்பினும், இந்தியாவானது தனக்கு தெற்கே அமைந்துள்ள சிறிலங்காவுடன் நட்பைப் பேணவேண்டிய நிலையிலும், தனது பிராந்திய ஆதிக்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கவேண்டும் என்கின்ற இருதலைக் கொள்ளி நிலையில் இந்தியா மாட்டிக்கொண்டது. 

இந்நிலையில் "இந்தியாவானது மோசமான இராஜதந்திரத் தவறைச் செய்துள்ளது" என Macquarie பல்கலைக்கழகத்தில் கொள்கைத் திட்டமிடல், நுண்ணறிவு மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல் என்பவற்றுக்கான விரிவுரையாளராகக் கடமையாற்றும் சானக ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

ஜெனீவாவில் இந்தியா வாக்களிப்பதற்கு முன்னர், இதன் தென் மாநிலமான தமிழ்நாட்டை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழர் விவகாரத்தில் ஒரே தீர்வைக் கொண்டிருந்ததுடன் மத்தியில் ஆட்சி செய்த சிங் அரசாங்கம் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன. 

அண்மையில் இந்தியாவில் இடம்பெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், இந்திய மத்திய அரசாங்கமானது தனது முக்கிய கூட்டணியுடன் விரோதத்தை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை சந்திக்க விரும்பவில்லை என ஜெயசேகர தெரிவித்துள்ளார். 

மறுபுறத்தில் இந்தியாவானது தனது நீண்ட நாள் நண்பனுடன் பகைமையை ஏற்படுத்திக் கொண்டதை முக்கிய இராஜதந்திர நகர்வாக வேறு பல அரசியல் அவதானிகள் பார்க்கின்றனர். 

அதாவது தற்போது இந்தியாவானது தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததன் மூலம், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்கின்ற இந்திய மத்திய அரசின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு மன்மோகன் சிங் அரசாங்கம் சமிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக, 1990 களின் ஆரம்பத்தில் சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகளுக்கான புலனாய்வுத் துறைக்கான முன்னாள் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர். ஹரிகரன் தெரிவித்துள்ளார். 

"ராஜபக்சவால் மழுப்பி பேசப்பட்ட விடயத்துக்கு இந்திய அரசாங்கம் தருணம் பார்த்து பதிலடி கொடுத்து விட்டதாகவே நான் கருதுகிறேன். இந்தியாவில் இப்பதிலடி மூலம் ராஜபக்ச தான் இந்தியாவிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது விட முடியாது என்பதை மீளவும் நினைவுபடுத்துவதாக உள்ளது" என ஹரிகரன் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் இத்தீர்மானமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் இரு வல்லரசுகளுக்கு இடையில் மேலும் முரண்பாடுகள் வலுப்பெறும் என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்த போதிலும் கூட, சீனாவானது ராஜபக்ச அரசாங்கத்துக்கான தனது ஆதரவை வழங்குவதில் எந்தவொரு தளர்வையும் காண்பிக்கவில்லை. இதேபோன்று ஜெனீவாவில் அமெரிக்கா ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சீனாவானது விமர்சித்ததுடன் அதனை எதிர்த்து வாக்களித்தது. 

இந்நிலையில் சீனாவானது சிறிலங்காவுக்கான அரசியல் ஆதரவை மட்டும் வழங்கும் நாடாக இருக்கவில்லை. கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு நிதி வழங்கிய நாடுகளில் சீனா முதன்மை இடத்தை வகிக்கின்றது. அதாவது போருக்குப் பின்னான அபிவிருத்தி நடவடிக்கைகள் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த ஆண்டு சீனாவானது 790 மில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவில் முதலிட்டிருந்தது. ஆனால் இதேகாலப்பகுதியில் இந்தியாவானது சீனாவின் முதலீட்டின் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான தொகையையே வழங்கியிருந்தது. 

2009ம் ஆண்டிலிருந்து சீனாவானது சிறிலங்காவின் கட்டுமானத் திட்டங்களுக்காக 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக, லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஆய்வு அமைப்பான Safeworld  வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதும் சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கானது இராணுவ மற்றும் அரசியல் அதிகாரத்தை விட பொருளாதார நடைமுறைகளை மையப்படுத்தியே பிரயோகிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் உள்ள இந்து சமுத்திரத்தின் ஊடாக சீனாவின் 60 சதவீதமான வல்லுனர்களும், 90 சதவீதமான அதிகார வலுவும் நகர்த்தப்பட்டதாக Safeworld அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பின் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்த வேண்டிய நடைமுறைத் தேவை சீனாவுக்கு இருக்கலாம் என்றும் ஆனால் இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள அதிகாரத்தையும் செல்வாக்கையும் குலைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

"சீனா தனது செல்வாக்கை உயர்த்துவதற்கான தருணம் கனிந்திருக்கலாம். சீனர்கள் யதார்த்தமாக சிந்திப்பவர்கள். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள செல்வாக்கை முற்றுமுழுதாக தோற்கடிப்பதற்கான திட்டத்தை சீனர்கள் கொண்டிருக்கலாம் என நான் எண்ணுகிறேன்" என ஹரிகரன் மேலும் தெரிவித்துள்ளார். 

தற்போது சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானமானது சிறிலங்காவில் குறிப்பிட்ட ஓரிரவில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் எனக் கருதமுடியாது. இதனை அரசாங்கம் எதிர்த்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் இதனை எதிர்த்திருக்கா விட்டாலும் கூட, அடுத்த ஆண்டின் ஆரம்பத்திலேயே இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆகவே அதுவரை சிறிலங்கா இது தொடர்பில் பேரவைக்கு பதிலளிக்க தேவையில்லை. 

"இத்தீர்மானத்தின் விளைவானது குறியீடாக காணப்படுகின்றது" என தேசிய மனித உரிமைகள் அமைப்பான சட்டம் மற்றும் சமூக நிதியத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். "சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவதையே இத்தீர்மானம் எடுத்துக் காட்டுகின்றது. இது எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி நிலவுகின்றது" என றுக்கி பெர்னான்டோ மேலும் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னகர்வுகள் காலந் தாழ்த்தப்பட்டு மேற்கொள்ளப்படுமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. சிறிலங்காவானது தனது உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலந்தாழ்த்தாது நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட திட்ட வரைபின் படி தனது நகர்வுகளை மேற்கொள்வதுடன், அனைத்துல மனித உரிமைகள் மற்றும் யுத்தச் சட்டங்களை மீறி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை விசாரணை செய்து பொறுப்பளிப்பதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. 

இந்த விடயத்தில் ராஜபக்ச விரைவாக செயற்பட வேண்டும் எனக் கருதினாலும் கூட, யுத்தத்துக்கு பின்னர் தற்போது மீளெழுந்து வரும் சிறிலங்காவானது தற்போது சந்திக்கும் சவால்கள் ராஜபக்சவுக்கு தடையாக இருக்கும். சிறிலங்காவின் பொருளாதாரமானது தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக சரிவடைந்துள்ளது. இதனால் ராஜபக்ச அரசியல் ரீதியான ஆபத்துக்களை, சவால்களை சந்திப்பதில் தயக்கம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

"தற்போது சிறிலங்காவில் பெற்றோலிய வளத்தின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. சிறிலங்கா அதிபர் நாட்டில் அதிகாரப் பகிர்வை அறிமுகப்படுத்துவதற்கான அரசியல் மூலதனத்தை கொண்டிருக்காது இருக்கலாம்" என விரிவுரையாளர் ஜெயசேகர தெரிவித்துள்ளார். "யுத்தம் முடிவடைந்தவுடன் இதற்கான சந்தர்ப்பம் அதிகம் இருந்தது" எனவும் விரிவுரையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினப்பலகை

தமிழ்த் தேசியப்பற்றோடு வாழ்ந்த, மகத்தான மனிதர் வணசிங்கா ஐயா, - இன்று அவரின் நினைவு நாள்,தலை சாய்த்து, வணங்கி நினைவில்கொள்வோம்.


தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ மண் தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் பலரைப்பெற்றிருக்கின்றது. இவர்களுடைய வாழ்வில்,இவர்கள் மேற்கொண்ட இனப்பற்றோடு இணைந்த மக்களுக்கான சேவைகளை பதிவாக வரலாற்றில் கொண்டுவர வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் இத் தொடரை எழுத முனைகின்றோம்.
24 ஆண்டுகளுக்கு முன் தமிழீழ மண் இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தவேளையில் மக்கள் குரல்வளை நசுக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழீழம் சார்ந்த செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்கி, அழிப்பதற்கு இந்தியப் படையினரும், தமிழ்த் தேசத் துரோகிகளும் முயன்று கொண்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் வெளிக்கொண்டுவர அறிவாற்றல் மிக்க சிலர் துணிந்து செயல்பட்டனர்.
தமிழீழமெங்கும் பல அறிவாளர்கள் தேசிய விடுதலை இயக்ககத்திற்கு ஆதரவு வழங்கியதோடு, இந்தியப்படையினரின் ஆக்கிரமிப்புக்கெதிராகச் செயல்பட்டு தங்களை அர்ப்பணித்ததையும் தமிழீழ மண் மறக்கவில்லை.
இந்தவகையில் மட்டக்களப்பில் வணசிங்கா ஐயா அவர்களுடைய தமிழ்த் தேசியப்பற்றோடு இணைந்த மக்கள் சேவையையும் நினைவு கூர்வது பொருத்தமான ஒன்றாகும்.
ஆண்டுகள் பல கடந்தாலும் அறிவாற்றல் மிக்க வணசிங்கா ஐயா போன்றவர்களை மட்டக்களப்பு மக்களும், கல்விசார் சமூகமும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றது. இவரைப்பற்றி எழுத எண்ணுகின்றபோது மட்டக்களப்பின் மண்வாசனையையும், மண்ணோடு இணைந்த விடுதலைசார்ந்த அரசியல் நிகழ்வுகளையும் கல்விசார் பணிகளையும் எழுதவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
முள்ளிவாய்க்காலில் எமது தேசிய விடுதலை இயக்கத்தின் போர்க்கருவிகள் மௌனிக்கப்பட்ட நிலையில் விடுதலை இயக்கம் சார்ந்த பதிவுகளை பலரும், பல்வேறு கால கட்டங்களை முன்வைக்கின்ற இவ்வேளையில் தங்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்த்த அறிவாளர்களின் செயல்திறன் பற்றிய பதிவுகளைக் கொண்டதான வரலாற்றில் வணசிங்கா ஐயா அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் மட்டக்களப்பில் முக்கியத்துவம் பெற்றதாகவும், தற்கால தமிழ்ச் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
மட்டக்களப்பில் கல்விமான்களில் ஒருவரான வணசிங்கா ஐயா அனைவராலும், மதிக்கப்பெற்ற மகத்தான மனிதர் என்பதனை அவருடைய தன்னலமற்ற தமிழ்த் தேசியப் பணிகளிலும், மக்கள் நலன்சார்ந்த பணிகளிலுமிருந்தும் அறியமுடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை என்னும் ஊரில்13 . 01 . 1926 ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் தந்தையை இழந்ததனால் மட்டக்களப்பு புனித மரியநாயகி பள்ளிக்கூடத்தில் தங்கி கல்வி கற்றார். பின்பு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று 1948 ம் ஆண்டு வெளியேறினார்.
13 . 01 .1949 ம்ஆண்டு கொழும்பு மத்துகம புனித மேரிஸ் ஆங்கிலக் கல்லூரியில் உதவி ஆசிரியராக முதல்பணி நியமனம் பெற்றார். பின்பு பத்து ஆண்டுகள் மலையகம் ஹட்டன் புனித ஜோன் போஸ்கோ கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இவருக்கு 1968 ம் ஆண்டு ஐந்தாம் தர பாடசாலை அதிபர் பதவியும், 1973 ம் ஆண்டு மூன்றாம் தர பாடசாலை அதிபர் பதவியும் கிடைத்தது.
15 .01 .1975 ம்ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் ஆரம்பக்கல்வி பயின்ற மட்டக்களப்பு அரசடி மகாவித்தியாலயத்தின் அதிபரானார். .அரசியல் பழிவாங்கல் காரணமாக கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் பாடசாலைக்கு 18 . 05 . 1979 ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டார். 02 . 03 .1982 ம் ஆண்டு தொடக்கம் 10 . 01 .1986 ம்ஆண்டு பதவிக்கால ஒய்வு பெறும்வரை மீண்டும் அரசடி மகா வித்தியாலய அதிபராக பணிபுரிந்தார்.
1969 ம் ஆண்டு அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கத் தலைவரானார். அகில இலங்கைத் தமிழாசிரியர் சங்கமும்,அரசினர் பாடசாலை தமிழாசிரியர் சங்கமும் இணைந்து உருவாக்கிய இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முதலாவது தலைவராக 1974 ம்ஆண்டு தெரிவு செயப்பட்டார். ஓய்வு பெறும்வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து தலைவராக இருந்தார்.
சீனாவில் நடைபெற்ற கல்விசார் தொழிற்சங்க சம்மேளன மகாநாட்டில் 1965 ம் ஆண்டிலும், சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்க சம்மேளன மகாநாட்டில் 1979 ம் ஆண்டிலும், பம்பாய்க்கு அருகிலுள்ள ``கொள்காப்பூர் ``என்னுமிடத்தில் நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களினதும், கல்லூரிகளினதும்,ஆசிரியர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்கில் 1981ம்ஆண்டிலும், மேற்கு ஜெர்மனி ``பிராங்போர்ட்`` என்னும் இடத்தில் நடைபெற்ற ஆசிய பிராந்திய தொழிலாளர் கல்வி என்னும் பொருள் பற்றிய மகாநாட்டில் 1983 ம் ஆண்டிலும், பிரான்சிலுள்ள ``மார்க் செயின் `` என்னுமிடத்தில் நடந்த சர்வதேச சுதந்திர ஆசிரியர் சங்கத் சம்மேளன மகா நாட்டில்1985 ம் ஆண்டிலும் கலந்துகொண்டு தமிழருக்கும், தொழில் சங்கப்பணிகளுக்கும் பெருமைசேர்த்தார். அத்துடன் ஜெனீவாவில் உள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் மத்திய அலுவலகத்துக்கு சென்று அலுவலகம் இயங்கும் முறைகளை அவதானித்து திரும்பியிருந்தார்.
தாய் மொழியான தமிழிலும், அயல் மொழியான சிங்களத்திலும், அனைத்துலக மொழியான ஆங்கிலத்திலும் தேர்ச்சிபெற்றவர், இம் மொழிகள்மூலம் மேடையில் பேசுவதிலும் வல்லவராகவிருந்தார்.
மட்டக்களப்புத் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியில் தங்களை இணைத்துக் கொண்டு அதன்வழியில் செயல்படத் தொடங்கியகாலம் 1956 ம் ஆண்டிலிருந்து என்பதனை நாம் அறிந்தவரையில் குறிப்பிடக் கூடியதாக இருக்கின்றது. அதற்கு முன்பு படித்தவர்கள், பணக்காரர்கள், அதிகராமிக்கவர்கள் என்ற சுயநலப் போர்வையில் மூழ்கிக்கிடந்த மட்டக்களப்பு தமிழ் சமூகத்தை 1956 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் புரட்சி புரட்டிப் போட்டதனால் தமிழ்மக்களின் விடுதலையோடு இணைந்ததாக அரசியல் மாறியது.
இந்த அரசியலுடான விடுதலைப் பயணத்தில் கால்பதித்த வணசிங்கா ஐயா தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிரான போராட்டங்களிலும்,1961 ம் ஆண்டில் நடந்த தமிழர் உரிமைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் முன்னின்று ஈடுபட்டார்.
இவருடைய அரசியல் விடுதலைப் பயணம் 1976 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் மட்டும் தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலையோடு அமைந்தாக இருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ம் ஆண்டு பொதுத் தேர்தலில்``தமிழீழம் `` என்பதை தேர்தல் கொள்கையாகக் கொண்டு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது.
இத் தேர்தலில் தமிழர் ஆசிரியர் சங்கம் எடுத்த தீர்மானத்தின்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தமது பூரண ஆதரவை தெரிவித்ததோடு, தேர்தல் மேடைகளில் சங்க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியுமிருந்தனர். இத் தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவு தமிழீழக் கோரிக்கைக்கு கிடைத்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியப்பற்றோடு, தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தையும், தேசிய விடுதலை இயக்கத்தையும் தமது இறுதிக்காலம் வரை ஆதரித்தவர்களில் வணசிங்கா ஐயா அவர்களை முதன்மையாக குறிப்பிடமுடியும்,
1977 ம் ஆண்டுத் தேர்தலின் பின்பு தமிழ் மக்களின் அரசியல் எழுச்சியோடு இளைஞர்களின் எழுச்சியும் விடுதலைப் போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்ததாக இருந்தன. இக் காலத்தில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட முதல் மாவீரர் லெப் . ராஜா (பரமதேவா) அவர்களுடைய தொடர்பு வணசிங்கா ஐயாவுக்கு நெருக்கமாக இருந்ததனால் இவ்வாறான இளைஞர்களின் மதிப்புக்குரியவராகவும் இருந்தார்.
மட்டக்களப்பு நகரை மையப்படுத்தி பல தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் நின்றபோதும், தேர்தல் நோக்கமில்லாத இவரைப் போன்றவர்களின் ஆதரவு மட்டும்தான் தமிழ் இளைஞர்களுக்கு இருந்ததை இந்தியப்படையினர் எமது மண்ணில் நிலைகொண்டிருந்தபோது அறியமுடிந்தது.
தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதறடித்து, தமிழ்மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்க வேண்டுமென்ற செயலில், இந்தியப் படையினர் தமிழ்த் தேசத்துரோகிகளோடு இணைந்து செயல்படுகின்ற வேளையில் எழுந்த அனைத்து அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்கொண்ட ஒரு சிலரில் வணசிங்கா ஐயா அவர்களை குறிப்பிடமுடியும்.
தமிழ் மக்களுக்குகெதிரான அடக்குமுறைகளை மக்கள்குழு ஊடாக வெளிக்கொண்டு வருவதிலும். இந்தியப் படையினராலும்,தமிழ்த் தேசத் துரோகிகளாலும் நடத்தப்படும் அட்டூழியங்களை அவர்களிடமே தட்டிக் கேட்பதிலும் வணசிங்கா ஐயா அவர்கள் பின் நிற்கவில்லை, அத்தோடு கைது செய்யப்பட்ட இளைஞர்களை இந்திய படை முகாமுக்குச் சென்று படையினருடன் வாதாடி மீட்டு வருவதிலும் இவருடைய பங்கு அதிகமாக இருந்தது.
போலியான தீர்வுடனும், அடக்குமுறையிலும் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்பிய இந்தியப்படையினர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைக் கழகம்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளை இணைத்து ஒரு கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையில் உருவாக்கி 1989 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தது.
இந்த நிகழ்வு தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு மிகவும் மனவேதனையைக் கொடுத்தது. இத் தேர்தலில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு தமிழ்த் தேசியத்தின் சார்பில் மேற்கூறப்பட்ட கூட்டணியை எதிர்த்து தமிழர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டது. யுத்தம் நிறுத்தப் படவேண்டும், விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்பவற்றை முன் நிறுத்தி சுயேச்சையாக போட்டியிட்ட இவர்களுக்கு தமிழ்த் தேசியப் பற்றாளர்களான கல்விமான்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மடக்களப்பு மாவட்டத்தில் ஈழ புரட்சிகர மாணவர் அமைப்புக்கு ஆதரவாக வணசிங்கா ஐயா அவர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக ஆதரவு வழங்கினார். அடக்குமுறைக்கும், அடாவடித்தனங்களுக்கும், நேர்மையற்ற செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாக திகழ்ந்த இத் தேர்தலில் மட்டக்களப்பு நகரை மையப்படுத்திய வேட்பாளர்களான பிரின்ஸ் காசிநாதர் , யோசேப் பரராஜசிங்கம், சாம் தம்பிமுத்து இவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் உட்பட்டதான இந்தியப் படையினரின் ஆதரவு பெற்றவர்களாக தேர்தலில் போட்டியிட்டனர்.
ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு சார்பான சுயேட்சைக் குழுவுக்கு அன்றைய அரசடி மகா வித்தியாலய அதிபர் சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.இத் தேர்தல் முடிவுகளின்படி மாவட்டத்தில் 55 , 131 வாக்குகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், 46 , 419 வாக்குகள் சுயேச்சை குழுவுக்கும் கிடைத்தது. தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது மட்டக்களப்புத் தொகுதியில் சுயேட்சைக் குழுவினருக்கு கூட்டணியைவிட அதிகபடியான வாக்குகள் கிடைத்திருந்தன.
கள்ள வாக்குகளின் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதும், அமிர்தலிங்கம் , யோசேப் பரராஜசிங்கம் போன்றவர்கள் தெரிவுசெய்யப்படவில்லை. இத் தேர்தல் முடிவின்படி மக்கள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நின்று தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததையும் குறிப்பிட முடியும்.  ஏனெனில் திருகோணமலையில் இரண்டு தமிழர் தரப்பு ஆசனங்களையும், யாழ் மாவட்டத்தில் பெரும்பான்மை ஆசனங்களையும் பெற்று ஈழ புரட்சிகர மாணவர் அமைப்பு (சுயேட்சைக் குழு)  மூலம் தமிழ் மக்கள் தங்களுடைய விருப்பத்தை இந்திய அரசுக்கு தெரிவித்தனர்.
1977 ம் ஆண்டுக்குப்பின் நடந்த அடுத்த தேர்தலிலும், தமிழ் மக்கள் தங்களது ஆணையை தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர். வெறும் சொல்லாகவும்,தேர்தல் அரசியலாகவும் இருந்த ``தமிழீழம்` என்பதை இலட்சியமாக வரிந்துகட்டி களத்தில் பயணித்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. மக்களும் அவர்களோடு பயணித்தார்கள் என்பதை வணசிங்கா ஐயா போன்ற அறிவாளர்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
லெப் ராஜா (பரமதேவா)அவர்களின் விடுதலைப் பயணம் விடுதலைப் புலிகளோடு சங்கமித்து தொடந்தது. பரமதேவா என்ற தமிழ் இளைஞன் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடன் இணைந்து கொண்டதன் பின்பு வணசிங்கா ஐயா, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தலைவராக ஏற்றுக் கொண்டார்.
நாம் முன்பு குறிப்பிட்டது போல் தேசியத் தலைவர் ஆரம்பக்கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தின் அதிபராக பணிபுரிந்த அவரின் தேசியப் பற்று தன்னலமற்றதாக இருந்ததை எப்போதும் எம்மால் சொல்லிக்கொண்டிருக்க முடியும். காலம் இவ்வாறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தது.
மட்டக்களப்பு _ அம்பாறை மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ் அவர்களின் மதிப்புக்குரியவராக வணசிங்கா ஐயா அவர்கள் இருந்தார். தமிழ்த் தேசியத்தையும், தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் ஆழமாக நேசித்த வணசிங்கா ஐயா அவர்களின் வீட்டுக்கு ஆரம்பகாலப் போராளிகள் சென்று வருவது வழக்கமாகவிருந்தது. போராளிகளை அன்பாக உபசரித்து, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதையும், தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
1988 ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி உருவாக்கத்திலும், அன்னை பூபதி அவர்களின் அறப்போரிலும் தனது முழுமையான பங்களிப்பை செய்தார்.
மட்டக்களப்பு மக்கள் குழு மிகவும் பலம்பொருந்திய, நீதிக்கான குழுவாக செயல்பட்டதற்கும், பல்வேறுபட்ட அரச இயந்திரங்கள்,அரசியல் கட்சிகள் உட்பட்ட, இராணுவப்பிரிவுகளும் மக்கள் குழுவின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய நிலையில் அப்போது இருந்ததற்கும் மக்கள் குழுவின் பொறுப்பு வாய்ந்த பதவியில் வணசிங்கா ஐயா போன்றவர்கள் அமர்ந்திருந்தது ஒரு காரணமாகும். ஏனெனில் இவர்களின் மறைவுக்குப் பின்பு மக்கள் குழு பலம்பொருந்திய அமைப்பாக இயங்கவில்லை என்பதை அவதானிக்க முடிந்தது.
நிமிர்ந்த நடையும், நேரிய பார்வையும், அகன்ற முகத்தில் அழகான மீசையும், ஆணித்தரமாக பதில்களை கூட்டங்களில் முன்வைக்கும் கம்பீரமான குரலும், ஆக்கிரமிப்பு வாதிகளின் தமிழின அழிப்புக்கு தடையாக இருந்தது.
1986 ம் ஆண்டில் அதிபர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற வணசிங்கா ஐயா அரசடி மகா வித்தியாலய அதிபர் விடுதியிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு கல்முனை வீதியில் அரசடிச்சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இக் காலத்தில் மட்டக்களப்பு நகரில் அரசியலில் ஈடுபட்ட சிலர் இந்தியப் படையினருடான உறவை மிகநெருக்கமாகப் பேணிவந்தனர். தமிழ்த் தேசியத்தின் பற்றோடு செயல்படுகின்ற அறிவாளர்களை அழிப்பதன் மூலம் அடக்குமுறைக்குள், திணிக்கப்பட்ட தீர்வுக்குள், சிங்களத்திற்கு ஆதரவாக தமிழ்மக்களை வழிநடத்தமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக விருந்தனர்.
இந்த அடிப்படையில் மட்டக்களப்பில் நடந்த அறிவாளர் அழிப்பில் வணசிங்கா ஐயா அவர்களையும் இணைத்துக்கொண்டனர்.
31 . 01 .1989 அன்று மாலை வேளையில் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த வணசிங்கா ஐயா அவர்களை சந்திப்பதற்கென வந்திருந்த தமிழ் இளைஞர் இருவரையும் நாற்காலியில் அமருமாறு கூறிவிட்டு தனது இருக்கையில் அமருகின்றபோது வந்த இருவரில் ஒருவர் கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்தில் அவர் சாவடைந்துவிட்டார்.
இன்று இவரை நினைவில் கொள்ளுகின்ற வேளையில்,அன்று இவரின் இழப்பு மட்டக்களப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாக விருந்ததையும் எண்ணிப்பார்க்க முடிகின்றது. உணர்வுள்ள தமிழர்களின் உள்ளங்களில் என்றும் அவர் நினைவாக வீற்றிருப்பார்.
எமது மண்ணில், எமது மக்களின் விடுதலைக்காக நாம் இழந்தது அதிகம்.
ஒவ்வொரு இழப்பிலும்,உணர்வை இழக்காமல், உரிமைக்காக உறுதியுடன் பயணித்தோம். எமது பயணம் இன்னும் தொடர்கின்றது. இலட்சியத்தின் எல்லையை நோக்கி ..............

என்றும் எழுகதிர் . 


தலைவர்கள் பிறக்கிறார்களா? உருவாக்கப்படுகிறார்களா?

அண்ணல் மகாத்மா காந்தியை கோட்சே என்பவன் சுட்டுக் கொன்றான். காந்தியின் மறைவு தொடர்பில் உலகம் முழுவதிலும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. சீன அறிஞர் ஒருவர் தனது இரங்கல் செய்தியில்,‘ மகாத்மா காந்தி என்றொரு மனிதர் இந்த உலகில் வாழ்ந்தது உண்மையா?என்று எதிர்கால சமூகம் கேட்கும்’ என்றார். ஒரு தலைவன்-தியாகி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காந்தி நல்ல எடுத்துக்காட்டு. எங்களிடமும் தந்தை செல்வநாயகம் ஈழத்தின் காந்தியாகப் போற்றப்பட்டார்.

அத்தகைய பெருந்தகையின் பிறந்த நாள் இன்று. அந்தத் தியாகியின் - தன்னலமற்ற பெரும் தலைவனின் பிறந்தநாளில் அவர் எப்படி வாழ்ந் தார்? என்ன செய்தார்? என்பதை மீட்டுப் பார்ப்பது காலவிரயம். மாறாக தந்தை செல்வநாயகம் போன்ற தலைவர்கள் எங்களுக்கு கிடைப்பார்களா? என்பது பற்றி அவரின் பிறந்த நாளில் சிந்திப்பதே பொருத்துடையதாகும். ஈழத் தமிழ் இனம் அரசியல் பலவீனம் உடைய சமூகமன்று.

அரசியலுக்காகஇ தமிழ் இனத்தின் உரிமைக்காக, தங்கள் உயிரையும் தியாகம் செய்தவர்கள் வாழ்ந்த பூமி இது. ஆனால் இன்று அரசியல் என்றாலே அது வெறுப்புக்குரியதாகி விட்டது.அதற்குக் காரணம் என்ன? தலைவர்களிடம் தியாகம் இல்லை.நேர்மை இல்லை.நீதி இல்லை. அப்படியானால் எப்படித்தான் சிறந்த தலைவனாகுவது? இப்போதுகூட தந்தை செல்வநாயகத்தின் உருவப்படத்தை தேர்தல் பிரசாரத்தின் மூலக் கருவியாக எடுத்துக் கொள்கிறார்கள். தந்தை செல்வநாயகத்தின் உருவப்படத்தை தேர்தல் பிரசாரத்தில் முதன்மைப்படுத்துவதன் மூலம் அவரின் கொள்கையில், அவரின் பக்குவத்தில், அவரின் அர்ப்பணிப்பில் நாமும் பயணிக்கின்றோம் என்பது பொருள்.

ஆனால்இ தந்தை செல்வாவின் உருவப்படத்தை தேர்தல் காலங்களில் பிரசாரத்தின் கருவியாகப் பயன்படுத்துவோர் தங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும். அந்த தந்தையின் வழியில் நாம் இயங்குகிறோம் என்று. இல்லவே இல்லை.எல்லாம் சுயநலம். பதவிமோகம், நடிப்பு போலி வேடம் இப்படி ஒரு நிலைமை இருக்கையில், எங்களுக்கு எப்படி விடிவு சாத்தியமாகும்? தலைவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்ற சமகாலக் கருத்தியலுக்கு யாம் ஒரு போதும் உடன்பாடில்லை. உண்மையில் சிறந்த தலைவர்கள் பிறக்கிறார்கள். அப்படியான தலைவர்கள் எங்கள் மண்ணிலும் பிறக்க வேண்டும் என்று தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று பிரார்த்திப்போமாக.

வலம்புரி

முஸ்லிம் சகோதரர்களை அரவணைத்து தந்தை செல்வா வழியாக ஒற்றுமையாகச் செல்வோம்


சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மலேசியாவின் ஈப்போ நகரில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி அவதரித்தார். இன்று அவரது 114 ஆவது பிறந்த நாள். தந்தை செல்வா நடந்து வந்த பாதையினை திரும்பி பார்க்கின்றோம். வாகனத்தில் அமர்ந்திருக்கும் தந்தை செல்வா இந்த ஈழத்தைப் பார்க்கின்றார். அகிம்சை வழி வந்தவருக்கு இரத்த ஆறு கண்டு மயக்கம் வந்தது. கண் கலங்கி நிற்கின்றார். தான் அரவணைத்து ஒருங்கிணைத்த முஸ்லிம் சகோதரர்களைப் பார்க்கின்றார். அவர்கள் பட்ட துன்பம் கண்டு பதை பதைக்கின்றார்.

தந்தை செல்வா வந்த வரலாற்றுப் படியை மறந்து விட்டோம். வழியும் தெரியாதவரானோம். வெளிச்சம் ஏற்றினாலும் புரியாதவராக நிற்கின்றோம்.தந்தை செல்வா பிறந்த தினமான இன்று அவர் முஸ்லிம் சகோதரர்களை ஒருங்கிணைத்து அணைத்து வந்த வரலாற்றைப் பார்த்திடுவோம்.

தமிழ்மொழி பேசும் மக்களில் முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்றார்கள். தமிழ்மொழிக்கு அளப்பரிய சேவை செய்கின்றார்கள்.இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பெரும் தலைவர்கள் இருந்தார்கள். ஜீ.ஜீ.பொன்னம்பலம் தமிழ் காங்கிரஸ் தலைவராகவும் தந்தை செல்வா தமிழரசுக் கட்சித் தலைவராகவும் பேராசிரியர் சுந்தரலிங்கம் அடங்காத் தமிழ்க் கட்சிக்கு தலைவராகவும் இருந்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் திருகோணமலைத் தொகுதியுடன் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டார்.

1952 ஆம் ஆண்டு வரையும் மட்டக்களப்பு மாவட்டம், தற்பொழுது இருக்கும் அம்பாறை மாவட்டத்தையும் உள்வாங்கி இருந்தது. அம்மாவட்டத்திலிருந்த எத்தொகுதிகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் போட்டியிடவேயில்லை. கிழக்கு மாகாண முஸ்லிம்களை தமிழ் காங்கிரஸ் இணைத்துக்கொள்ளவே இல்லை.பேராசிரியர் சுந்தரலிங்கத்தின் அரசியல் செல்வாக்கு வவுனியாவுடன் நிறைவு பெற்றது. தந்தை செல்வாதான் முஸ்லிம் சகோதரர்களை தமிழ் மக்களுடன் இணைப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.

1956 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. எம்.எஸ்.காரியப்பர் தமிழரசுக் கட்சியின் பெயரில் கல்முனைத் தொகுதிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவ்வாறே பொத்துவில் தொகுதிக்கு எம்.எம்.முஸ்தப்பா 1956 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார். சி.ஏ.அஹமது, எம்.ஈ.எச்.முஹம்மது அலி அவர்களையும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கினார்.

கல்முனை தந்தை பெரும் மகன் மசூர் மௌலானாவை தமிழரசுக் கட்சி மேடைகளில் ஏற்றி அவர் மூலம் பல ஆண்டுகளாக கிழக்கின் முஸ்லிம் சகோதரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடன் இணைத்த பெருமை தந்தை செல்வாவிற்கே சேரும். மசூர் மௌலானாவை சேனேட்டராக நியமித்து கிழக்கின் முஸ்லிம் மக்களுக்கு பெருமை கொடுத்தவர் தந்தை செல்வாவே ஆவார்.

மட்டக்களப்பு தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாகும். ஒரு தமிழ் ஒரு முஸ்லிம் பிரதிநிதியை பாராளுமன்றிற்கு தெரிவு செய்யும் தொகுதியாகும். மட்டக்களப்பு தொகுதியில் முஸ்லிம் சகோதரர்களுக்கு கொடுத்த உரிமையை பறிப்பதற்கோ எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கோ துணை போக ஒரு காலமும் முயற்சிக்கவே இல்லை தந்தை செல்வா.

ஆனால், 1977 ஆம் ஆண்டு தேர்தலில் நடந்த கதை கேளீர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் இராஜதுரை மட்டக்களப்பு தொகுதிக்கு தேர்தலில் நிற்கின்றார். அன்றைய கூட்டணி தலைமைக்கு இராசதுரையைப் பிடிக்காது. அதனால், கவிஞர் காசி ஆனந்தன் தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் நிற்பாட்டப்பட்டார். முதலாவதாக இராசதுரை 26,648 வாக்குகளைப் பெற்றார். இரண்டாவதாக ஐ.தே.கட்சியின் அஹமட் பறீத் 25,345 வாக்குகளைப் பெற்றார். மூன்றாவதாக காசி ஆனந்தன் 22,443 வாக்குகளைப் பெற்றார். சிறுதொகை வாக்குகளினால் மூன்றாவது இடத்திற்கு காசி ஆனந்தன் தள்ளப்பட்டார். காசி ஆனந்தன் இரண்டாவதாக வெற்றி பெற்றிருந்தால் முஸ்லிம் மக்களின் இடம் பறி போயிருக்கும். இத்தவறை எக்காரணம் கொண்டும் தந்தை செல்வா செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினரான பின்பு தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி ஆளும் கட்சி மாறின. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் அவ்வாறு மாறிய பொழுதும் அவர் மீதோ அல்லது முஸ்லிம் சமூகத்தின் மீதோ வசைபாடவில்லை.குற்றம் கூறவில்லை. குறை சொன்னதில்லை. ஒரு சுடு சொற்கூட கூறாத பெருந்தகை தந்தை செல்வா. எக்காலத்திலும் அவர்களை அரவணைத்தே சென்றார்.

நிந்தவூர் தொகுதி 

1959 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற எல்லை நிர்ணயம் செய்ய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிசனத்தின் பிரகாரம் தமிழ் மக்களுக்கு 53ஃ4 வீதமும் முஸ்லிம்களுக்கு 41ஃ4 வீதமும் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகள் வழங்க வேண்டியிருந்தது. முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க நிந்தவூரை முஸ்லிம்களுக்கான தொகுதியாக உருவாக்குவதற்கு தந்தை செல்வா சம்மதித்தார்.

பண்டாசெல்வா உடன்படிக்கை

1956 ஆண்டு பண்டாசெல்வா உடன்படிக்கை கைச்சாத்தானது. அவ்வுடன்படிக்கையின் படி கிழக்கு மாகாணத்திற்கு குறைந்தது இரண்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. தமிழர்களுக்கு ஒன்று, முஸ்லிம்களுக்கு மற்றொன்றாகும். இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லிம்களுக்கு ஒரு தேசிய இனமாகக் கணிக்கப்பட்டு அவர்களுக்கென ஒரு தனியான பிரதேச சபையும் வழங்கப்பட்டது.

அதனால்தான், முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் தந்தை செல்வாவை தனது பாவால் மலர் மாலை சூட்டுகின்றார்.

"திருமலை தமிழரசு மாநாட்டில் 
வடகிழக்கில் ஈரரசு, ஓரரசில் 
தமிழ் மணக்கும், மறு அரசில்
இஸ்லாம் இனிக்கும், என நாங்கள்
ஒருங்கிணைய, வழி சமைத்த பெருந்தலைவா!
நீ நடந்த அந்தப் பாதையிலே நாம் நடந்தால் தான்
விடிவு உண்டு, எம் கரங்கள் இறுகினனே, எம் கால்கள் 
விரைந்தனவே உன் பாதை அது எம்பாதை
ஒருங்கிணைந்தே இங்கு வந்துள்ளோம்'

தந்தை செல்வா நடந்து வந்த பாதையிலே மீண்டும் நடந்திடுவோம். முஸ்லிம் சகோதரர்களை ஒருங்கிணைத்து ஒற்றுமையாகவே சென்றிடுவோம். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை களைத்திடுவோம். தமிழ் பேசும் மக்கள் ஒருங்கிணைய வழி சமைத்திடுவோம்.

சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன்

ஜெனிவாவின் முடிவுக்கு இலங்கை கட்டுப்படாது அரசின் நிலைப்பாட்டை நாடாளுமன்றில் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார் பீரிஸ்


ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு உடன்படாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மீண்டும் தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானத்துக்குத் தமது அரசு ஒருபோதும் கட்டுப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

இரண்டு நாள்களுக்கு முன்னர் கொழும்பில் அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலும் இதே கருத்தை அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அது அவரது "தனிப்பட்ட கருத்தே தவிர அரசின் கருத்து அல்ல" என்று அமைச்சரவைப் பதில் பேச்சாளரும் ஊடகத்துறை பதில் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்திருந்தார். 

அமைச்சர் யாப்பாவின் கருத்து வெளியாகி ஒருநாள் கடப்பதற்கிடையில், ஜெனிவா தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 
நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான விவாத்திற்குப் பதிலளித்துப் பேசிய போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். ஜெனிவாத் தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 3,4ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும் பீரிஸ் தெரிவித்தார். 

ஜெனிவா மனித உரிமைகள் சபை கள்வர்களின் குகை என்றும் அரசியல் நயவஞ்சகம் நிறைந்த ஒருதலைப்பட்சமான சபை என்றும் அங்கு நியாயம் கிடைக்காது என்றும் அமெரிக்கா மற்றும் ரஷ்ய ஆகியன ஏற்கனவே இந்தச் சபை பற்றித் தெரிவித்து இருக்கின்றன என்றும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் பீரிஸ். 

"தீர்மானத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்தால் இணைந்து செயற்பட முன்வருவீர்களா என்று இந்தியாவும் அமெரிக்காவும் எம்மிடம் கேட்டன. ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு ஆரம்பம் முதலே நாம் கடும் எதிர்ப்பைக் காட்டி வந்த நிலையில் அதற்கு உடன்பட மறுத்துவிட்டோம். எந்த மாற்றத்தைச் செய்தாலும் உடன்பட மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டோம். அப்படி உடன்படுவது நாட்டுக்குச் செய்யும் துரோகம். அப்படிப்பட்ட எந்த அச்சுறுத்தலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்" என்றார் அமைச்சர் பீரிஸ். 

ஜெனிவாத் தீர்மானத்தை அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "ஏற்கனவே திட்டமிடப்பட்ட எமது நிகழ்ச்சி நிரலின்படி வேலைத் திட்டங்கள் தொடரும். இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசு உள்ளது. எமது நிர்வாகத்தை ஜெனிவாவிடம் ஒப்படைக்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். 

ஜெனிவாத் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவித்த பீரிஸ், அதைப் பற்றித் அரசு அலட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறினார். "அந்நியத் தலையீட்டுக்கு இடமளிக்க முடியாது; அடிபணியவும் முடியாது" என்று அவர் மீண்டும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

Friday, March 30, 2012

தென்னாசியப் பிராந்தியத்தில் ஆழமாக கால்பதிக்கும் அமெரிக்கா!


அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு திட்டத்தின் ஒர் அங்கமாக, அவுஸ்ரேலியாவுக்குச் சொந்தமான கோக்கோஸ் தீவில் பாரிய கடற்படைத்தளத்தினை அமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய, பிரமாண்டமாக  அமைக்கப்படவுள்ள இந்தக் கடற்படை தளத்துக்கான அனுமதியை அமெரிக்காவின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் டார்வின் தீவிலும் அமெரிக்கப்படைகளை நிலைநிறுத்துவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவின் கோக்கோஸ் தீவில் இந்தப் பாரிய படைத்தளம் உருவாகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் ஒபாமாவின் அவுஸ்திரேலிய பயணத்தின் போது இருநாடுகளிடையே இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் கண்காணிக்கக் கூடிய வகையில் அமெரிக்காவின் இந்த நகர்வு சீனாவுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மூலோபாய திட்டத்துக்கு ஏற்கனவே சீனா தனது கடும் எதிர்பினைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனா உரிமைகோரி வரும் எண்ணெய்வளம் மிக்க தென்சீனக் கடலை எளிதில் கண்காணிக்கக் கூடிய கோக்கோஸ் தீவில் கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்திருப்பது சீனாவிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தென்சீனக் கடலில் ஏராளமான தீவுகளுக்கு ஆசிய நாடுகளான புருனே, பிலிப்பைன்ஸ், மலேசியா,வியட்நாம் போன்றவை உரிமை கொண்டாடி வருகின்றன. வியட்நாம் அரசின் ஒத்துழைப்புடன் தென்சீனக் கடலில் இந்தியா எண்ணெய் அகழாய்வுப் பணியில் ஈடுபட, தொடர்ந்து சீனா எச்சரித்து வரும் நிலையில் அமெரிக்காவும் தென்சீனக் கடலை முற்றுகையிட்டு நிற்க உள்ளது. மேலும் வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள் கொண்டுவரப்படும் மிக முக்கியமான மலாக்கா ஜலசந்தியை கோக்கோஸ் தீவிலிருந்து போர்க் கப்பல்கள் எளிதில் சென்றுவிட முடியும். 

இதேவேளை அமெரிக்கா தற்போது முகாமிட உள்ள கோக்கோஸ் தீவு இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு சற்று கீழே உள்ளவைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோக்கோஸ் தீவில் முகாமிடுவதன் மூலம் இந்தியா,சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா வேவு பார்க்கும். எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே ஒரு போர் அல்லது பதற்ற நிலை உருவானால் மலாக்கா ஜலசந்தியை போர்க்கப்பல்கள் வழி மறிக்கும் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமெரிக்கா நிலை கொள்ள முனைந்திருப்பது தென்னாசிப் பிராந்தியத்தின் எதிர்கால அரசியலில் பல மாற்றங்களை நிகழ்த்த வல்லதோடு இலங்கைத்தீவிலும் இது எதிரொலிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.


video


நன்றி நாதம் 



தமிழர்கள் கொல்லப்படக் காரணமாகி விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியும்...........

புலிகளைத் தண்டிப்பதாக நினைத்து- தமிழர்கள் கொல்லப்படக் காரணமாகி விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியும் காங்கிரசின் தமிழகத் தலைவர்களை வாட்டியது. இதனால், காங்கிரசின் தலைவர்கள் கூட மத்திய அரசுடன் மல்லுக்கட்டத் தொடங்கினர். இதனால், இந்திய அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தயாராகி விட்டது என்பதை ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியும், நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியும் வெளியிட்ட கருத்துகள் குறிப்புணர்த்தியதை அடுத்து- தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் தீவிரம் பெற்றன. எந்தக் கருத்தையும் கூறாமல் முதலில் தீர்மானம் வரட்டும் பார்க்கலாம் என்ற எஸ்.எம். கிருஸ்ணாவின் பாணியில் கூறியிருந்தால் கூட இந்தியா தப்பியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் கொள்கை விளக்கம் கொடுக்கப் போய் தான் வசமாக மாட்டிக் கொண்டது. எந்த நாட்டுக்கும் எதிரான தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே தமது கொள்கை என்று இந்தியா கூறிய நியாயம் தவறானது. ஏற்கனவே இந்தியா இத்தகைய தீர்மானங்களை ஆதரித்தற்கான உதாரணங்கள் உள்ளன.இந்தியாவின் இந்த முடிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டும் கொடுக்கவில்லை, தீர்மானத்தைத் தோற்கடிக்கும் அதன் முயற்சியிலும் பாரிய தடைக்கல்லையும் ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த முடிவு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே இருநாடுகளும் கூறுகின்றன. இந்த முடிவை மதிப்பதாக இலங்கை கூறினாலும் கூட அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்தியா தனது முடிவை நியாயப்படுத்த எத்தகைய காரணங்களைக் கூறினாலும், அது இலங்கையை முழுமையாகத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம் தான்.

இந்தியா எடுத்த முடிவை இலங்கை அரசு ஏற்குமா?


ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானம் இந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியிருக்கவில்லை. வழக்கம் போலவே மதில் மேல் பூனையாக இருந்து இலங்கையைக் காப்பாற்றி விடலாம் என்றே அது நம்பியிருந்தது. ஆனால் இந்தியாவின் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகிப் போனது. 2009 மே மாதம்- போரின் இறுதிக் கட்டத்தில், இந்தியா தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைப் புறக்கணித்த இந்திய அரசு இப்போது, பணிந்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டில் முன்னர் இருக்கவில்லை என்பதே உண்மை. 

ஆனால் அதை இந்தியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தவில்லை. மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு எந்தக் கருத்தையும் வெளியிடாமல் பார்த்துக் கொண்டது. எவ்வாறாயினும் இலங்கையைக் கைவிடும் திட்டத்தை இந்தியா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கமான, ஆனால் சிக்கலான ஒரு உறவு- இலங்கையை காப்பாற்றும் முடிவையே இந்தியா எடுக்கும்- எடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தியிருந்தது. ஜெனிவா தீர்மான விடயத்தில், இந்தியா இரண்டு விடயங்களுக்காக இலங்கையைக் காப்பாற்ற முனைந்தது.இரண்டுமே இலங்கை மீதான பற்றுணர்வினால் அல்ல. இந்தியாவின் நலன்களுக்காகவே அவ்வாறு முனைந்தது. 

முதலாவது,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதான மீறல்கள் பற்றிய விசாரிக்கப்படும் போது, அந்தப் போரில் இந்தியாவின் பங்கு தொடர்பாக தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடுமே என்ற அச்சம். 

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, இந்தியாவின் தார்மீக ஆதரவை இலங்கை பெற்றிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் கிரமமான தொடர்புகளின் மூலம்- நெருக்கமான உறவுகள் பேணப்பட்டன. இதன் மூலம் தான் இலங்கையால் போரில் வெல்ல முடிந்தது. சீனாவும், பாகிஸ்தானும், கொடுத்த ஆயுதங்கள் போரில் புலிகளைத் தோற்கடிப்பதில் எந்தளவுக்கு பங்களித்தனவோ, அதற்கு சமமாகவே இந்தியாவின் தார்மீக ஆதரவும் சில இராணுவ உதவிகளும் அமைந்திருந்தன. இந்தளவுக்கும் சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கும்- இந்தியாவுக்கும் இடையில் போட்டியும், பூசலும் உள்ளது. துருவங்களாக இருந்த இந்த அணிகளை ஒன்றிணைத்து புலிகளைத் தோற்கடிப்பதில் இலங்கை அரசாங்கம் வெற்றி கண்டது. இப்போது ஐ.நா விசாரணைகள் என்று வந்தால் அதில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வியும் ஒரு கட்டத்தில் வரலாம். இலங்கைப் போரில் இந்தியாவின் பங்கு என்ன என்ற கேள்வி எந்தச் சந்தர்ப்பத்திலும் வருவதை இந்தியா விரும்பவில்லை. அதனால் சர்வதேச தலையீடுகளில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற முனைந்தது- முனைகிறது. 

இரண்டாவது

சீனாவின் தலையீடுகள் பற்றிய கவலை. 

போருக்குப் பின்னரான பொருளாதார உதவிகளை இந்தியா கொடுத்தாலும், இலங்கை அரசை தனது பிடிக்குள் வளைத்துப் போடுவதில் சீனா வெற்றி பெற்றே வருகிறது. ஜெனிவாவில் இந்தியா கைவிட்டால் அது சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தை அதிகப்படுத்தி விடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. இந்தியாவின் இந்த அச்சத்தை ஜெனிவா கூட்டம் நிரூபித்தும் விட்டது. இந்தியாவின் முடிவு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், கடைசி நேரத்தில் இலங்கையைக் காப்பாற்றும் நடவடிக்கையில் சீனா மிகத் தீவிரமான அக்கறை காண்பித்தது. வெளிப்படையாகவே இலங்கைக்கு ஆதரவு திரட்டி அதன் நம்பிக்கையை சம்பாதித்தும் கொண்டது. இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தான் இந்தியா விரும்பவில்லை. இதற்காகவே அது நழுவி வந்தது. எவ்வாறாயினும் இந்தியாவின் எண்ணம் தீர்மானத்தை எதிர்ப்பது அல்லது அது முடியாமல் போனால் நடுநிலை வகிப்பது என்பதாகவே இருந்தது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் பேசிய இந்தியப் பிரதிநிதி, நாடுகள் தொடர்பான தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பது இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை தொடர்பான தீர்மானத்தை மனதில் வைத்தே அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார். இதே கருத்தை கடந்தவாரம் இந்திய நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூட கூறியிருந்தார். எனவே, இந்தியா இலங்கையைக் காப்பாற்றும் முடிவில் தான் இருந்தது. கடைசி சில தினங்களில் தான் அதன் முடிவு மாற்றமடைந்தது. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தயாராகி விட்டது என்பதை ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியும், நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியும் வெளியிட்ட கருத்துகள் குறிப்புணர்த்தியதை அடுத்து- தமிழ்நாட்டில் இருந்து அழுத்தங்கள் தீவிரம் பெற்றன. எந்தக் கருத்தையும் கூறாமல் முதலில் தீர்மானம் வரட்டும் பார்க்கலாம் என்ற எஸ்.எம். கிருஸ்ணாவின் பாணியில் கூறியிருந்தால் கூட இந்தியா தப்பியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் கொள்கை விளக்கம் கொடுக்கப் போய் தான் வசமாக மாட்டிக் கொண்டது. 

எந்த நாட்டுக்கும் எதிரான தனிப்பட்ட தீர்மானங்களை ஆதரிப்பதில்லை என்பதே தமது கொள்கை என்று இந்தியா கூறிய நியாயம் தவறானது. 

ஏற்கனவே இந்தியா இத்தகைய தீர்மானங்களை ஆதரித்தற்கான உதாரணங்கள் உள்ளன. 

காசாவில் இஸ்ரேலின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் 2009ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால் இலங்கை என்று வந்த போது அதன் நிலை தடுமாற்றமாக அமைந்தது. தமிழ்நாட்டில் இருந்து எழுந்த குரல்கள் இம்முறை தீவிரமாக இருந்தன. 

2009 இல் நடத்தப்பட்ட போராட்டங்கள், போரில் சிக்கிய தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையிலானது. அப்போது புலிகள் விவகாரமும் சேர்ந்திருந்ததால், தமிழ்நாட்டுக் கட்சிகள் ஒன்றிணையவில்லை. இம்முறை அது வேறு வடிவத்தில் வந்தது. போர்க்குற்ற ஆதாரங்கள் பல வெளியாகி, நீதி கேட்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருந்தது. அதனால், இலங்கை அரசைத் தண்டிக்க வேண்டும் என்ற வகையில், இந்தப் போராட்டங்கள் உருவெடுத்தன. இதற்கு மறுப்புக் கூற யாராலும் முடியவில்லை.  புலிகளைத் தண்டிப்பதாக நினைத்து- தமிழர்கள் கொல்லப்படக் காரணமாகி விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியும் காங்கிரசின் தமிழகத் தலைவர்களை வாட்டியது. இதனால், காங்கிரசின் தலைவர்கள் கூட மத்திய அரசுடன் மல்லுக்கட்டத் தொடங்கினர். இதனால், இந்திய அரசுக்கு வேறு வழியிருக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. 
  
தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுபற்றி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதத்துக்கு மேல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தார். திமுகவோ, இன்னொரு பக்கத்தில் மத்திய அரசில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டியது. எல்லாப் பக்கங்களில் இருந்தும் வந்த உள்ளக அழுத்தங்கள், இந்தியாவின் வெளிவிவகாரம் பற்றிய நிலைப்பாட்டை மாற்றியமைக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தி விட்டது. இந்தியா இப்படிச் செயற்பட்டிருப்பது அபூர்வமான ஒன்று தான். உள்ளக அரசியல் வேறு. வெளிவிவகாரக் கொள்கை வேறு என்ற தொனியிலேயே அது இதுவரை இருந்து வந்தது. இப்போது இந்தியா, உள்ளக அரசியல் சூழலுக்கேற்ப, வெளிவிவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படலாம் என்ற உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுவாக, புதுடெல்லியில் ‘சவுத்புளொக்‘ எனப்படும் அதிகாரபீடம் தான் ஆட்சியாளர்களின் கொள்கையைத் தீர்மானிப்பதாக கூறப்படுவதுண்டு. அது உண்மையும் கூட. சவுத் புளொக்கின் இந்த வழக்கத்தை இந்தியாவின் சவுத் (தெற்கு) மாநிலமான தமிழ்நாடு உடைத்துப் போடக் காரணமாகியுள்ளது. பலமுனை அழுத்தங்களுக்கு அடிபணிந்தே இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கும் விருப்பில் இந்தியா இருப்பதாக அறிவித்தார். இது நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவே தவிர, மன்மோகன்சிங் குறிப்பிட்டவாறு விருப்பின் பேரில் எடுக்கப்பட்ட முடிவல்ல. 

மன்மோகன்சிங் குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தவறானவை. 

முதலாவது,

தீர்மான வரைபு இன்னமும் கையில் கிடைக்கவில்லை என்று கூறியது. 

தீர்மான வரைபை அமெரிக்கா இந்த மாதத் தொடக்கத்திலேயே உறுப்பு நாடுகளுக்குக் கொடுத்து விட்டது. அதைவிட தீர்மானத்தை வடிவமைக்க முன்னர், அமெரிக்கா, இதுபற்றி இந்தியாவுடன் தான் முதலில் கலந்துரையாடியது. இந்தநிலையில், பொறுப்பு வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு கூறியிருக்கக் கூடாது. 

இரண்டாவது,

தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விருப்பம் கொண்டுள்ளது என்பது. 

தமிழ்நாட்டின் விருப்பங்களை புறக்கணிப்பதால், ஏற்படக் கூடிய பல தொடர்ச்சியான விளைவுகளின் ஆபத்தை உணர்ந்தே இந்த முடிவை இந்தியா எடுத்தது. இதனை வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நெரடியாகவே கூறியுள்ளார்.   இந்தியாவின் இந்த முடிவு இலங்கைக்கு பெரும் ஏமாற்றத்தை மட்டும் கொடுக்கவில்லை, தீர்மானத்தைத் தோற்கடிக்கும் அதன் முயற்சியிலும் பாரிய தடைக்கல்லையும் ஏற்படுத்தியது. இந்தியாவின் இந்த முடிவு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றே இருநாடுகளும் கூறுகின்றன. இந்த முடிவை மதிப்பதாக இலங்கை கூறினாலும் கூட அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்தியா தனது முடிவை நியாயப்படுத்த எத்தகைய காரணங்களைக் கூறினாலும், அது இலங்கையை முழுமையாகத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகம் தான்.  

இந்தநிலையில் கடைசி நேரத்தில் தன்னைக் காப்பாற்றாமல் கைகழுவிய இந்தியாவையும், கடைசி நேரம் வரை தன்னைக் காப்பாற்றப் போராடிய சீனாவையும், ஒரே தராசில் இலங்கை எடைபோடும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

நன்றி இன்போதமிழ்

மனித உரிமை பாதுகாவலர்களை ஜெனீவாவில் அச்சுறுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


சுனில அபேயசேகர, கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து, கலாநிதி. நிமல்கா பெர்னாண்டோ மற்றும் சுனந்த தேசப்பிரிய ஆகிய மனித உரிமைகள் பாதுகாவலர்களை ஜெனீவாவில் பயமுறுத்தி தொந்தரவு செய்த இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கும், அதேபோல் அவர்கள் தொடர்பாக அவதூறான அறிக்கைகளை விடுத்து அச்சுறுத்தியுள்ள அமைச்சர்களுக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கனடா சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கான கண்காணிப்பகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

பிரதமர் டி.எம்.ஜயரட்ண, தகவல் மற்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பிரியந்த ஆர்.பி. பெரேரா, உள்ளிட்டோருக்கும் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இலங்கையில் சட்டத்தையும் சட்ட ஒழுங்கையும் பின்பற்ற வைப்பதற்காக வாதிடும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட மனித உரிமைகள் பாதுகாவலர்களை இலங்கை அரசாங்க அதிகாரிகள் பயமுறுத்தி தொந்தரவு செய்து, அச்சுறுத்தியிருப்பது தொடர்பாக கனடா சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கான கண்காணிப்பகம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

குறிப்பாக பயமுறுத்தல், தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட சுனில அபேயசேகர, கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து, கலாநிதி. நிமல்கா பெர்னாண்டோ மற்றும் சுனந்த தேசப்பிரிய ஆகியோரின் பாதுகாப்பு குறித்து நாம் கவலைப்படுகிறோம்.  ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் கடந்த 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கத்தையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் ஊக்குவித்தல் தீர்மானத்துக்கு அவர்கள் ஆதரவளித்திருந்தமை காரணமாக களங்கம் ஏற்படுத்தும் பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கமானது அதனது சொந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுடனும் சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்ட ஏற்பாடுகளுடனும் இணங்கிச் செல்ல வேண்டும் என்றே அந்த தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் முதலாவதாக இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்களை ஜெனீவாவில் பயமுறுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாது இலங்கை அரசாங்க முகவர்கள் அமர்வுகளை கண்காணிப்பதுடன் புகைப்படங்கள் எடுப்பதாகவும் கனடா சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கான கண்காணிப்பக பிரதிநிதிகளால் ஐ.நா. அதிகாரிகளுக்கு முறைப்பாடொன்றும் செய்யப்பட்டது.

அத்துடன், தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், காண்காணிப்பு நடத்தப்பட்டமையை கடுமையாக கண்டித்து அறிக்கையொன்றை விடுத்திருந்த மனித உரிமைகள் விவகாரங்களுக்கு பொறுப்பான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, விவாதங்களில் கலந்து கொள்ள ஜெனீவா வந்திருந்த இலங்கை செயற்பாட்டாளர்கள் மீது முன்னொரு போதும் இருந்திராத வகையிலும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத மட்டத்திலுமான பயமுறுத்தல், தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும், இலங்கை அரசாங்க அதிகாரிகளின் தூதுக்குழுவினராலும் இது மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாது இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராக பழிவாங்கல்கள் இருக்கக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த எச்சரிக்கைகளுக்கு எதிரான வகையில் மேற்படி இலங்கை பிரஜைகளுக்கு எதிராக மேலும் கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் மனித உரிமைகள் சட்டவாதிகளாக சர்வதேச ரீதியில் மதிக்கப்படுவார்கள்.

சுனில அபேயசேகர, பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ மற்றும் சுனந்த தேசப்பிரிய ஆகியோரை துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, அவர்கள் இலங்கையில் கால்வைத்தால் அவர்களது கை, கால்களை உடைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.அத்துடன், ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்கள் இலங்கையில் இலவச கல்வியையும் சுகாதார சேவைகளையும் அனுபவித்து விட்டு டொலர்களுக்காக தாய்நாட்டை காட்டிக் கொடுத்து விட்டதாகவும் அவர்கள் வெளிநாட்டு சக்திகளை விட மோசமானவர்கள் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருப்பதாக அரச பத்திரிகையான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.
அரச தொலைக்காட்சி சேவையொன்று மேற்படி நால்வரினதும் புகைப்படங்களையும் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்று காட்டியுள்ளது.

ஜெனீவா மற்றும் கனடாவில் சுனில அபேயசேகர, பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்ணான்டோ மற்றும் சுனந்த தேசப்பிரிய ஆகியோரின் புகழ் பற்றி கனடா சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கான கண்காணிப்பகம் நன்கு அறிந்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாவலர்கள் பற்றிய ஐ.நா. பிரகடனத்தில், மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் அதேபோல் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் அடிப்படை சுதந்திரங்களுக்கும் தனிப்பட்ட ரீதியிலும் ஏனையோருடன் இணைந்தும் ஊக்குவிக்கவும் பாடுபடவும் சகலருக்கும் உரிமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை கனடா சட்டத்தரணிகள் உரிமைகளுக்கான கண்காணிப்பகம் உங்களுக்கு நினைவூட்டுகிறது.

மனித உரிமை மீறல்கள் தவிர்ப்பு மற்றும் மீள் மத்தியஸ்தம் தொடர்பாக வாதிடுவதற்கும் கரிசனைக்குரிய விவகாரங்கள் தொடர்பாக பொது விவாதத்தில் ஈடுபடுவதற்கும் அந்த விவகாரங்கள் தொடர்பான தகவலை பரவச் செய்வதற்கும் சுனில அபேயசேகர, பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்ணான்டோ மற்றும் சுனந்த தேசப்பிரிய போன்ற நபர்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் பாதுகாப்பதற்காகவே குறிப்பாக இந்த பிரகடனம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

யுத்தம் மற்றும் யுத்தத்துக்கு பின்னரான காலங்களில் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பான விமர்சனங்கள் உட்பட இந்த பணிகளும் பொறுப்புகளும் பிரகடனத்தின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

ஜெனீவாவில் இலங்கை அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பயமுறுத்தல்களும் அதேபோல் உங்களது அமைச்சரவை உறுப்பினர்கள் விடுத்துள்ள அச்சுறுத்தல்களும் அவதூறு அறிக்கைகளும் சுனிலா அபேயசேகர, பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ, சுனந்த தேசப்பிரிய மற்றும் ஏனைய மனித உரிமைகள் பாதுகாவலர்களினதும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அது மட்டுமல்லாது இந்த நடவடிக்கையானது பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான உங்களது அரசாங்கத்தின் கடமையையும் மனித உரிமைகள் பாதுகாலர்கள் பொது விவாதங்களில் ஈடுபடுவதற்கான கடமை மற்றும் உரிமையையும் மீறும் செயலாகும்.

ஆகையால், அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரினால் விடுக்கப்பட்ட அவதூறு அறிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் மறுதலித்து அறிக்கையொன்றை விடுக்குமாறும், பெயர் குறிப்பிட்ட நால்வரையும் பயமுறுத்தல், தொந்தரவு மற்றும் பழிவாங்கல்களில் இருந்து விடுவிக்குமாறும், ஜெனீவாவில் நடத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் அமைச்சர்களினால் விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணையை உறுதி செய்யுமாறும், இனிமேலும் அச்சுறுத்தல்கள் தொடர்வதை தடுக்கும் வகையில் அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும், பெயர் குறிப்பிட்ட நால்வரது பாதுகாப்பை உறுதி செய்ய அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறியத் தருமாறும், பெயர் குறிப்பிட்ட மனித உரிமைகள் பாதுகாவலர்களினதும் இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாட்டுக்காகவும் நீதிக்காவும் வாதிடும் ஏனையவர்களினதும் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதி செய்வதற்கான ஏனைய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

தினக்குரல்