Wednesday, February 29, 2012

அமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்தில்; இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றுவதில் மேற்குலகம் கங்கணம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்கக் கொழும்பு பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட உயர் மட்ட இராஜதந்திரக் குழுவொன்று நேற்று ஜெனிவாவில் களமிறக்கியுள்ளது. இந்தக் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த 15 உயர் இராஜதந்திரிகளும், பிரிட்டனைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுக்கு மேலாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிக மூத்த அதிகாரியான மரியா ஒரேரோவையும் வோஷிங்ரன், ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கவுள்ளது. ஒரேரோ, இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலராகப் பணியாற்றி வருகிறார். ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அவரைக் கொழும்புக்கு அனுப்பி வைத்திருந்தது அமெரிக்கா. இலங்கை விவகாரத்தில் வோஷிங்ரன் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் கொழும்பில் விளக்கியிருந்தார். 
எதிர்வரும் முதலாம் திகதி அவர் ஜெனிவாவில் இலங்கை விவகாரம் குறித்து உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. தனக்கு எதிரான பிரேரணை குறித்து இலங்கை அரசு மேற்கு நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் எதிராகக் காட்டும் வெளிப்பாடுகள் குறித்து வோஷிங்ரன் ஆத்திரமுற்றுள்ளதாக வெளியாகும் தகவல்களின் பின்னணியிலேயே ஒரேரோவின் ஜெனிவாப் பயணமும் இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
இதற்குப் பதிலடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முதல் உலக நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி ஊடாக நேரடியாகத் தொடர்புகொண்டு இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்கான உறுதி மொழியைப் பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தமது நாடுகள் எதிர்க்கும் என்ற உறுதிமொழியைத் தலைவர்கள் வழங்கியுள்ளனர். அத்துடன், குறித்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ள அரச குழுவிடம் இதே உறுதிமொழியை வழங்கியிருக்கின்றனர் என ஜெனிவாவிலுள்ள பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பிரேரணையை எதிர்ப்பதாக கட்டார், சவூதி அரேபியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தம்மிடம் உறுதியளித்தன எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவருவதனால் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பல அமெரிக்க சார்புப்போக்கையே இறுதி வேளையில் கடைப்பிடிக்கக்கூடும் என்ற தமது எதிர்பார்ப்பை அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார். தனது பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்று அவர் நிபந்தனை விதித்தார். 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவே முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 5ஆம் திகதி குறித்த பிரேரணை முன்வைக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட அந்தப் பிரமுகர், அமெரிக்காவே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுவதால் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவான தமது கொள்கையை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஆதரிக்கவுள்ளன என்பதை உறுதிபடச் சுட்டிக்காட்டிய அவர், எனினும் இதுவரை இலங்கைக்கு எதிரான போக்கு எல்லை மீறவில்லை என்றும் தெரிவித்தார்

நன்றி உதயன்

தமிழ்மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை


ஈழத்தமிழ் மக்களின் அவலத்தை வெளி உலகுக்குத் தெரியப்படுத்துவதில் புலம்பெயர் தமிழ் மக்களின் வகிபங்கு மிகவும் காத்திரமானது. அதிலும் நாடுகடந்த அரசை சார்ந்தவர்கள் வெளிநாடுகளில் வேகமாக மேற்கொண்டு வரும் பிரசார நடவடிக்கைகளின் பலனாகவே, ஐ.நா. மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவிருக்கின்றது. இதற்கு வெளிநாட்டு ஊடகங்களின் வகிபாகமும் காரணமாகும்.

எனினும் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட இருப்பதற்கு ‘தாமே காரணம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைகள் சில கூறிக்கொள்கின்றன. ஆனால் அது மெய்யல்ல. வெறும் பொய். எங்களிடம் இருக்கக் கூடிய அரசியல் தலைமைகள் முதலில் உண்மைப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். உண்மையைக் கூறத் தவறும்போது அதனால் எங்கள் இனத்துக்கு கிடைக்கக் கூடிய கிடைப்பனவுகள் இல்லாது போய்விடும்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமை பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோரும் என்பது நிறுத்திட்டமான உண்மை. இவ்வாறு உரிமை கோருவதன் ஊடாக தமிழ் மக்களின் ஏகத்தலைமை தாங்களே என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். இது தமிழ் மக்களின் பக்கமாக இருக்க, அரச பக்கத்திற்கும் தாங்கள் நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதற்காக ‘உங்களுக்காகவே நாங்கள் ஜெனிவாவுக்குச் செல்லவில்லை.’சர்வதேச சமூகம் எடுத்த தீர்மானத்துக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறிக் கொள்வார்கள். ஆக ஜெனிவாவுக்குப் போகாததன் மூலம் அரசையும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் வருதனூடாக இதற்கான முழு ஏற்பாடும் தாங்களே என்று தமிழ் மக்களுக்கும் கூறி தங்கள் இருப்பை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தக்க வைத்துக்கொள்ள முற்படும்.

எனினும் இப்போது தமிழ் மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். அவர்களைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் தலைமை இல்லை என்பதே மிகப்பெரும் குறைபாடு என சுட்டிக்காட்டுகின்றனர். ஆக, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய நேர்மையான-விலை போகாத அரசியல் தலைமை உடனடியாகத் தேவைப்படுகின்றது. இத்தகையதோர் அரசியல் தலைமையை உருவாக்க தமிழ் சிவில் சமூகம் முன்வர வேண்டும். நேர்மையான, அறிவு பூர்வமான தமிழனப்பற்றுடைய எத்தனையோ சான்றோர்கள் இங்கு உள்ளனர். அவர்களை அரசியலில் நிறுத்தினால் மட்டுமே தமிழினத்துக்கு உயர்வு உண்டாகும்.

நன்றி வலம்புரி

வட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்


சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புக்கள் உக்கிரமடையத் தொடங்கிய பின்னர், குறிப்பாக 1980களின் பிற்பகுதியில் இருந்து, எந்தநேரத்திலும் எங்கும் குண்டு விழலாம், ஒரு உயிர் சாதாரணமாகப் பலிகொள்ளப்படலாம் என்ற நிலைதான் தமிழர் தாயகத்தில் நிலவியது. உறக்கத்தில் கூட உயிர் பறிக்கப்படலாம். உணவு உண்ணும்போது அடுத்த கவளம் தொண்டைக்குழியில் இறங்கும் வரை உயிர் இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத ஒரு வாழ்க்கை. அவ்வாறான காலகட்டத்தில், 28.02.1991 அன்று, வட்டக்கச்சியில், சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவுக் கோப்பையில், தசைத்துண்டங்களாகச் சிதறிவிழுந்த அவல சம்பவத்தை நிகழ்த்தியது சிறிலங்காவின் விமானப்படை. 

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள நான்கு கிராமப்பிரிவுகளை உள்ளடக்கியது வட்டக்கச்சி. வருடம் முழுமைக்கும் வற்றாத நீர்வளமும் பசுமையும் செழுமையும் உள்ள கிராமம். விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டது. இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தில் இரண்டுபோகங்கள் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதால், வயல்வெளிகள் எப்போதும் பசுமையாகவே இருக்கும். தென்னந்தோப்புக்கள், மா , பலா, வாழை என பழத்தோட்டங்கள்,   வீதிகளிலும் வெளிகளிலும் சுற்றி வரும் கால்நடைகள், சல சலத்து ஒடும் நீரோடைகள் என வட்டக்கச்சியின் வனப்பு கொட்டிக்கிடக்கும்.

இப்பிரதேசத்தில் “அரச நெற்பண்ணை” என்னும் பெயரில் அரசுக்குச் சொந்தமான நெல்வயல்கள் உள்ளன. இங்கு வேலை செய்பவர்கள், தங்கியிருந்து வேலை செய்வதற்காக வட்டக்கச்சி மூன்றாம் வாய்க்காற் பகுதியில் அரச நெற்பண்ணை விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடும்பமாகத் தங்கியிருந்து வயல்வேலை செய்து வந்தனர். 1991ஆம் ஆண்டு மாசி மாதம் இருபத்தெட்டாம் திகதி காலை 7.00 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக விவசாயிகள் விடுதிகளில் காலை உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில், சிறிலங்கா விமானப்படையின் இரண்டு “பொம்பர்” விமானங்கள் வட்டக்கச்சிப் பிரதேசத்தை மையப்படுத்தி வான்பரப்பில் வட்டமிட்டன. 

விமானத்தின் இரைச்சல்கேட்டு, குழிகளிலும் குன்றுகளிலும் ஓடி ஒழிவதற்கிடையில் மூன்று குண்டுகளை வீசிவிட்டுச் சென்றுவிட்டன. இதில் ஒரு குண்டு விடுதிக்குள் விழுந்து வெடிக்க மற்றைய இரண்டும் வயல்வெளிகளில் வீழ்ந்து வெடித்தன. இதில் ஒன்பது பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். உயிரிழந்த ஒன்பது பேரில் ஆறு பேரின் உடல்கள் சிதறுண்டு உருக்குலைந்துபோக ஏனைய மூன்று பேரின் உடல்களையும் காயப்பட்ட மூவரையும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள். இறந்தபோனவர்களின் உடல்களும், குண்டுவீச்சில் கொல்லப்பட்ட ஆடு, மாடு, கோழிகளும் ஒன்றாக ஒரேகுழியில் போட்டு மூடப்பட்டன.

இந்தச் சம்பவத்தை அடுத்து, தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்த நிலையில், சிதைந்த போயிருந்த அந்த விடுதிகளில் வாழ்வதற்கு அச்சமடைந்து எஞ்சியிருந்த குடும்பங்கள் விடுதிகளை விட்டு வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றன. ”வியர்வை சிந்தி நாங்கள் உழைத்த நெல்வயல்களில் எங்கள் உறவுகள் சிந்திய குருதி கலந்திருக்கின்றது” என்று இன்று வரை அச்சம்பவத்தை மறக்கமுடியாமல் கண்ணீருடன் அவர்கள் கூறியது கனமாக வலித்தது. ஒரே நாளில் , சில நொடிப்பொழுதுகளில் ஒன்பது உறவுகளை ஒன்றாகப் புதைத்துவிட்டு, உறவாடி வாழ்ந்த மண்ணைவிட்டு வெளியேறிய அவர்களின் வேதனைகளை ஆறறுப்படுத்துவதற்கு வழி தெரியவில்லை, வார்த்தைகள் இருக்கவில்லை.

இச்சம்பவத்தின் போது சம்பவ இடத்திலிருந்த இராமையா பரமசுந்தரம் அவர்கள் கூறும்போது,“நான் நெற்பண்ணையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவேளை இரண்டு பொம்மர் விமானங்கள் வந்து குண்டு போட்டன. இந்தச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள். மூன்று பேர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு போய் காப்பாற்றிவிட்டோம். இறந்தவர்கள் அனைவரையும் ஒரே குழியில் போட்டுப் புதைத்தோம். இச்சம்பவத்தில் பண்ணையிலிருந்த, கிட்டத்தட்ட நாற்பது ஆடுகள், இருபது கோழிகளும் இறந்தன. அவற்றையும் மனித உடல்களுடன் ஒரே குழியில் போட்டுப் புதைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் திரும்பவும் புக்காரா வந்து குண்டுபோடுமோ என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வந்து பார்வையிட்டுச் சென்றது. மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்த இடத்தில் குண்டுபோட்டதாக நான் கருதுகிறேன். ஏனென்றால் காலையில் தொழிலுக்குப் போகமுன் வந்து குண்டு போட்டால் எல்லோரும் இறப்பார்கள் என்ற திட்டம்தான். இன்று நேற்றல்ல 1990ம் ஆண்டிலிருந்தே சிறிலங்கா இராணுவம் தமிழ் மக்களை கொலை செய்து கொண்டுதான் இருக்கிறது.” என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். 

குண்டு வீச்சில் பலிகொள்ளப்பட்டவர்கள்
  1. இராசேந்திரம் சித்திரம்மா 
  2. ஆறுமுகம் இராசேந்திரன்
  3. நாகமுத்து ஆறுமுகம் 
  4. ஆறுமுகம் கமலாதேவி
  5. முனியாண்டி செல்வம் 
  6. ஆறுமுகம் விஜயலட்சுமி
  7. முருகையா சுமதி 
  8. சின்னத்தம்பி உமாதேவி
  9. முருகையா சித்திரா
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

Monday, February 27, 2012

பூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை


பொதுமக்களின் அழிவைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டுமென தமிழ்நாடும் புலம்பெயர் உலகமும் குரல் கொடுத்த போது இந்தியாவின் மத்திய அரசு அமைதி காத்தது.
  
போரில் அழிவுகள் நாளும்பொழுதும் அதிகரித்து அவலக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது மனிதாபிமானப் போரை நடத்துவதாக அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.
 
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா? இலங்கைக்கு வெகு பொருத்தமான கேள்வி இது.
 
போரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்ற தீர்மானத்துடன் வெளிநாடுளில் உலகப் பயங்கரவாத ஒழிப்புடன் இலங்கைப் பயங்கரவாதத்தையும் முடிச்சுப் போட்டு சகல உதவிகளையும் பெற்றுக் கொண்டு வன்னியில் இலங்கை அரசு போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமானதே. வன்னியிலிருந்த உலக நாடுளின் தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜக்கிய நாடுகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என வெளிநாட்டவர் அனைவரையும் அரசு வெளியேற்றியது. போரில் அரச படைகள் குதித்தன.

அரச படைகள் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்த பிரதேசங்களை மீட்ட செய்திகளே வெளிவந்து கொண்டிருந்தன. எறிகணை வீச்சுக்கள் கண் மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டு வந்த தகவல்களும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கு மிங்கும் பாதுகாப்புத் தேடி அலைந்து திரிவதையும் ஊடகங்கள் காண்பித்தன.
 
காயமடைந்த பொதுமக்கள் பற்றியும் மருத்துவமனைகள் சில எறிகணை வீச்சுக்களாலும்  குண்டுவீச்சுக்களாலும் பாதிக்கப்பட்ட செய்திகளும் மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் அவஸ்தைப் படுவதையும் ஊடகங்கள் மூலம் அங்கு கடமையாற்றிய மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களால் ஒரளவு அறிந்து கொள்ள முடிந்தது. ஏறிகணை வீச்சுக்களில் மாண்டவர்கள் பற்றியும் இடையிடையே தகவல்கள் வெளிவந்தன.
 
சில இடங்களைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாகப் படைத்தரப்பு அறிவிக்கும் செய்திகள் இலங்கை வானொலியில் வெளிவரும். பாதுகாப்பு வலயங்கள்  மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்து உயிர்ப்பலி ஏற்பட்ட செய்திகளும் வெளிவரும். போர் அழிவுகள்  நாளும்பொழுதும் அதிகரித்து அவலக்குரல்கள்  ஒலித்துக் கொண்டிருக்கையில் மனிதாபிமானப் போரை நடத்துவதாக அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.
 
பொதுமக்களின் அழிவைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டுமென தமிழ்நாடும்  புலம்பெயர் உலகமும் குரல் கொடுத்த போது  இந்தியாவின் மத்திய அரசு அமைதி காத்தது.
 
தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி அரசு மத்திய அரசின் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணனுடன் சேர்ந்து நாடகமாடியது. இதன் விளைவை அடுத்துவந்த பொழுது தேர்தலில் கருணாநிதியின் தி.மு. கழக ஆட்சி அறிந்து கொண்டது.
 
இப்பொழுது பூலோகம் விழித்துக் கொண்டது; பூனை அங்குமிங்கும் அலைந்து தனக்கு வந்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்கவே ஆதரவு தேடுகிறது. பால் வார்த்த இந்தியா போர்க்காலத்திலும் அதன் பின் ஜ.நா.விலும் உதவியது போல இப்பொழுதும் இலங்கையை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் உதவக்கூடும்.
 
ஆனால் இலங்கை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்பதையும் தமிழர்கள் தமது உரிமையைப் பெற்று தன்மானத்துடன் வாழ்வதற்கான தளம் அமைக்கப்படும் வரை எத்தனை அழிவுகள் இழப்புக்கள் நேர்ந்தாலும் வியந்து விட மாட்டார்கள் என்பதை இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டி போடுபவர்களும் தமிழர்கள் மீது சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் இழைத்த அநீதிகளால் உயிரையும் உடமைகளையும் நிலத்தைப் பறிகொடுத்தும் மனோபலமும் கொண்டு இன்றும் போராடுகின்றனர்.
 
1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்களை ஒடுக்கி  அடக்கும் கூட்டங்களும் செயல்களுமே ஆட்சிக்கு வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
 
இந்தியா சுதந்திரம் பெறும் நேரத்தில் இந்தியாவைப் பிரிந்து பாகிஸ்தானை உருவாக்கித் தருமாறு முகமமதலி ஜின்னா கேட்டுப்பெற்றது போல இலங்கையில் அன்றிருந்த தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை.
 
சட்டங்களை உருவாக்கப்போகும் நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலுக்கு பெரும்பான்மைச் சமுகத்தவர் கேட்கும் தொகுதி வாரிப் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினரை நசுக்க வாய்ப்பளிக்கும் ஆதலால் இனவாதப் பிரதிநிதித்துவ முறையே வேண்டுமென்று தமிழ்த் தலைவர்கள் கேட்டனர்.
 
சுதந்திர இலங்கையில் அமையவிருக்கும் நாடாளளுமன்றத்தில் நூறுதொகுதிகளில்  ஜம்பது தொகுதிகள் சிங்களவர்களுக்கும் மீதி ஜம்பது தொகுதிகள் தமிழர்கள் இஸ்லாமியர்கள், பறங்கியர்கள் என சிறுபான்மையினருக்குப் பிரித்து ஒதுக்கப்பட வேண்டுமென்று ஜி.ஜி. பொன்னம்பலம் சமபலப் பிரதிநிதித்துவம் கோரினார்.
 
இக் கோரிக்கையின் மீது ஜி.ஜி பொன்னம்பலம் ஆணைக்குழு முன்னிலையில் எட்டு மணி நேரம் வாதாடினார். ஆனாலும் ஆணைக்குழு இதனை நிராகரித்தது. இலங்கை சுதந்திரமடைந்த பத்தாண்டுகளின் பின் அதாவது 1958 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக தூண்டிவிடப்பட்ட இனக் கலகத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அறிந்து இலங்கை அரசியல் யாப்பிணை உருவாக்கிய சேர்.ஜவர் தென்னி தாம் பெரும் தவறு செய்துவிட்டதாக லண்டனிலிருந்து சொன்னார்.
 
1956 இல் ஒத்திகை பார்த்து 1958 இல் தொடங்கி 1977, 1983 வரை தமிழ் மக்களுக்கு கலகங்களைத் தொடங்கி இன அழிப்பு நீடித்தது. 
 
பயங்கர வாத ஒழிப்பு என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டில் மாண்ட தமிழர்களின் தொகை பற்றி இன்னும் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை ஆனால் பயங்கரவாதிகள்  அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
போராளிகளும் பொதுமக்களும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக கருணா என்ற இன்றைய பிரதியமைச்சர் முரளிதரன் கூறுகிறார். ஆனாலும் புலிகள் பற்றி இப்போது புலம்பெயர்ந்த புலிகள் பற்றியும் கூட்டமைப்பினரும் கூட புலிகள் போன்றே நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.
 
இனப்பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண்பதற்கான முயற்சி எதையும் காணோம். 13 வது திருத்தம் அதற்கும் கூடியதான செயல் என்றெல்லாம் பேசப்படுகின்றது.  நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இப்பொழுது  நிற்கிறது. இன்றுள்ள உடனடிப் பிரச்சினை இம் மாத இறுதியில் கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம்தான். இதன் முடிவில்தான் இனப்பிரச்சனையின் தலைவிதியும் தங்கியிருக்கிறது.
 
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றைப் போல இங்கும் கிளர்ச்சிகளுக்கு முயற்சி தொடங்குகிறது. விதைத்தது எப்படி முடிகிறதென்று.

நன்றி - உதயன்

அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?


இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் தான், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகம் நகர்வுகளை மேற்கொள்கிறது. இந்த வகையில் பார்க்கும் போது இதையிட்டு இலங்கை அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானத்தினால் உடனடியாக பாரிய பிரச்சினைகள் ஏதும் வந்து விடப் போவதில்லை. இந்தத் தீர்மானத்துக்குப் பின்னரும் மசிந்து கொடுக்காது போனால் தான் அடுத்தடுத்த கட்டங்கள் ஆபத்தாக அமையும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் தேவை என்று மகிந்த அரசாங்கம் கூறினாலும், அதற்காகத் தானே இந்தத் தீர்மானம் என்று மேற்குலகம் அதன் வாயை அடைத்து விடும். இத்தோடு இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கினால் தான் ஆபத்து, விரைவில் சூழ்ந்து கொள்ளும். ஏனென்றால் இலங்கையை அழுத்திப் பணிய வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. அதற்கான காரணம் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது, அதுதான் உண்மை. இந்தநிலையில் மேற்குலகின் தீர்மானத்தை இலங்கை தோற்கடிக்குமேயானால் அடுத்து ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தாக அமையலாம். ஏனென்றால் அமெரிக்கா மாற்று வழிகளின் ஊடாக இலங்கை மீது கைவைப்பதற்கு அது இலகுவான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தநிலையில் அரசாங்கம் ஜெனிவாவில் தொடுத்த இராஜதந்திரப் போர் எந்தளவுக்கு காத்திரமானது என்ற கேள்வி எழுவது இயல்பு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஜெனிவா என்பது வெறுமனே கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் மோதும் களமாக இருக்காது. அது கண்ணுக்குப் புலப்படாதவர்களுடன் மோதுகின்ற, ஒன்றை அவிழ்க்க இன்னொரு முடிச்சைப் போடுகின்ற களமாகத் தான் இருக்கப் போகிறது. இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?


இலங்கைக்கு எதிரான தீர்மானம் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துமா?


ஜெனிவாவில் இன்று தொடங்கப் போகிறது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர். இதில் பங்கேற்பதற்காக ஒரு வாரம் முன்னதாகவே, கடந்த 20ம் திகதி அதிகாலை ஜெனிவாவுக்கு வந்தடைந்தார் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். அவருடனும், அவரைத் தொடர்ந்தும் இலங்கை அரசைப் பிரதிநிதித்துவம் செய்யும் 52 பேர் கொண்ட பெரியதொரு குழு ஜெனிவா வந்தடைந்துள்ளது . ஜெனிவாவுக்கு கடந்த 20ம் திகதியே வந்தடைந்து விட்ட வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான இராஜதந்திரப் போரைத் தொடங்கியுள்ளதாக மறுநாளே ஊடகவியலாளர்களிடம் கூறினார். உண்மையில் ஜெனிவா ஒரு இராஜதந்திரப் போர்க்களமாகவே காட்சியளிக்கிறது, காட்சியளிக்கப் போகிறது. மற்றைய நாடுகளின் விவகாரங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், இலங்கை விவகாரத்தில் ஜெனிவா கூட்டத்தொடரும் அதை முன்னிறுத்திய நகர்வுகளும் ஒரு பெரும் போரை ஒத்தவையாகவே காட்சியளிக்கின்றன. 

இலங்கை அரசு மீது அழுத்தங்களைக் கொண்டு வரும் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. அதனை முறியடிப்பதற்கான முன்னகர்வுகளில் இலங்கை அரசு மிகத்தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இந்த இராஜதந்திரப் போர்க்களத்தில் வெற்றியைப் பெறப் போவது யார் என்ற கேள்வி, இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை பற்றிய தீர்மானம் வாக்கெடுப்புக்கு செல்லும் வரை இருக்கத் தான் போகிறது. இந்தத் தீர்மானத்தின் பின்புலத்தில் அமெரிக்காவே இருந்து கொண்டிருக்கிறது. அதனை வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் இலங்கை அரசிடம் அமெரிக்கா அறிவித்தும் விட்டது. ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கும். அதைவிட மேலும் பல நாடுகளின் ஆதரவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது. 



47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், பெரும்பான்மை வாக்குகளால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இருக்காது. 

அதேவேளை, இந்தத் தீர்மானத்தை வெற்றி பெற வைப்பதுவும் மேற்குலகிற்கு சுலபமாக இருக்காது. 

இந்த ஒரு விடயம் தான் இலங்கை அரசுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. 

லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா என்று ஐந்து வகைப்பட்ட நாடுகளின் கையில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளது. 

இதில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு மட்டும் தலா 13 வீதம் 26 உறுப்பு நாடுகள் உள்ளன. 

இந்த நாடுகளை வளைத்துப் போட்டாலே போதும் இலங்கையால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்.

அதைப் பயன்படுத்தித் தான் இம்முறை அரசாங்கம் லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகளின் பக்கம் பிரசாரத்தை முன்னிறுத்தியது. அது எந்தளவுக்கு பயன்பட்டுள்ளது என்பது போகப் போகத் தான் தெரியவரும். 

ஜெனிவாவில் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே இந்த நாடுகளை வளைத்துப் போடும் பயணங்களை அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் திருப்தியில்லாமல் தான், முன்கூட்டியே ஜெனிவா சென்று இறுதிநேர இராஜதந்திரப் போரைத் தொடர்ந்தார் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ். இந்த இராஜதந்திரப் போரின் ஒரு கட்டமாக இலங்கையும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர அனுசரணையாக இருக்கவுள்ளது. பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிதி மற்றும் நிர்வாக விடயங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வர அது முயற்சிக்கிறது. 



கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், ஐ.நாவுக்கான தூதுவர் தாமரா குணநாயகமும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் நவநீதம்பிள்ளை கண்ணீர் விட்டதும் குறிப்பிடத்தக்கது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முறியடிக்க, வெளிப்படைத்தன்மை, பக்கச்சார்பு ஆகிய ஆயுதங்களை அரசாங்கம் கையாண்டிருந்தது. இந்தநிலை இம்முறை மேலும் மோசமடைவதற்கான அறிகுறியாகவே, தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக முழுவீச்சில் வேலை செய்வது இலங்கை தான். ஏட்டிக்குப் போட்டியான தீர்மானங்களின் ஊடாக அரசாங்கம் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவே கருதப்படுகிறது. இந்தத் தீர்மானத்தினால் பாதிப்பு ஏதும் வராது என்று இப்போது அமெரிக்கா கூறுவதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க முடியாது என்றும், இந்தத் தீர்மானம் இலங்கை விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தி விடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார். 

இந்த விவகாரம் சர்வதேச மயப்படுத்தப்படுவதை தவிர்க்கவே அரசாங்கம் முனைகிறது. 

அதற்காகவே, இராஜதந்திரப் போரைத் தொடுத்துள்ளது.

இந்த இராஜதந்திரப் போரின் அச்சாணியாக இருக்கப் போவது போர்க்குற்றங்களும், அதற்குப் பொறுப்புக் கூறுவதற்கான பொறிமுறையும் தான். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் தான், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகம் நகர்வுகளை மேற்கொள்கிறது. இந்த வகையில் பார்க்கும் போது இதையிட்டு இலங்கை அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானத்தினால் உடனடியாக பாரிய பிரச்சினைகள் ஏதும் வந்து விடப் போவதில்லை. இந்தத் தீர்மானத்துக்குப் பின்னரும் மசிந்து கொடுக்காது போனால் தான் அடுத்தடுத்த கட்டங்கள் ஆபத்தாக அமையும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த காலஅவகாசம் தேவை என்று மகிந்த அரசாங்கம் கூறினாலும், அதற்காகத் தானே இந்தத் தீர்மானம் என்று மேற்குலகம் அதன் வாயை அடைத்து விடும். இத்தோடு இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லை. அரசாங்கம் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கினால் தான் ஆபத்து, விரைவில் சூழ்ந்து கொள்ளும். ஏனென்றால் இலங்கையை அழுத்திப் பணிய வைப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. 

அதற்கான காரணம் என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். 

அமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது, அதுதான் உண்மை. 

இந்தநிலையில் மேற்குலகின் தீர்மானத்தை இலங்கை தோற்கடிக்குமேயானால் அடுத்து ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தாக அமையலாம். ஏனென்றால் அமெரிக்கா மாற்று வழிகளின் ஊடாக இலங்கை மீது கைவைப்பதற்கு அது இலகுவான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தநிலையில் அரசாங்கம் ஜெனிவாவில் தொடுத்த இராஜதந்திரப் போர் எந்தளவுக்கு காத்திரமானது என்ற கேள்வி எழுவது இயல்பு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஜெனிவா என்பது வெறுமனே கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளுடன் மோதும் களமாக இருக்காது. அது கண்ணுக்குப் புலப்படாதவர்களுடன் மோதுகின்ற, ஒன்றை அவிழ்க்க இன்னொரு முடிச்சைப் போடுகின்ற களமாகத் தான் இருக்கப் போகிறது. இதிலிருந்து எப்படி இலங்கை தப்பிக்கப் போகிறது?


கட்டுரையாளர் தொல்காப்பியன்

தசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு


ஐ.நா. மனிதவுரிமை ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகிவிட்டன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப் பதில் அமெரிக்கா திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேநேரம் தமக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேறுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசு பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இந் நிலையில் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கையயான்றை வெளியிட்டுள்ளார். இதில் ஜெனிவா கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமைக்குத் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘... தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடருமேயானால் அது வன்முறைக்கு வித்திடலாம். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சுகிறது. தற்போதைய சூழ்நிலையில் அமைதிகாக்கப்படுவதும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதும் அவசியமான செயற்பாடுகள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. எனவே இந்தக் காரணங்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பிரசன்னமாகியிருக்க மாட்டாது.’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சம்பந்தன் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் என்னவென்று ஆராய்ந்தால்இ தற்போது நாட்டின் நிலைமை சரியாக இல்லை. ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறினால்-அந்தக் கூட் டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங் கேற்றிருந்தால் நாட்டில் கலவரம் ஏற்படும் என்று சம்பந்தன் அஞ்சுகிறாராம்.

வன்னியில் மிக மோசமான போர் நடந்த போது இந்தியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த என்.கே.நாராயணனைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த சம்பந்தனுக்கு வன்னியில் நடந்த வன் யுத்தம்-அழிவு தெரியவில்லை. ஆனால்இ இப்போது வன்முறை வெடிக்கும் என்று அச்சமாம். அப்படியானால் எங்களுக்காக வெளிநாடுகள் ஏதாவது செய்யட்டும். நாம் ஒதுங்கிக் கொள்வோம் என்பது கூட்டமைப்பின் முடிபு. இதுதான் முடிபாக இருந்தால் நீங்கள் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அப்போதுதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டுவரும் போது தமிழர்கள் தரப்பில் கருத்து கூறுவதற்கு கூட அங்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்று பேசப்படும். ஆனால் நீங்களோ! ஆ! கடவுளே! இப்படியயாரு முடிபா? கூனியை இனங்காணாத தசரதனும் உங்களை புரிந்துகொள்ள முடியாத ஈழத்தமிழ் மக்களும் மிகப்பெரும் பாவங்கள். ஆனாலும் அடுத்த தேர்தலிலும் நீங்கள்தான் தாயகக் கோட்பாட்டின் காவலர்கள். என் செய்வோம் இறைவா!

நன்றி - வலம்புரி

தொடர்புபட்ட செய்திகள் பிபிசி

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு: சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு
ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.


ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழ்க் கூட்டமைப்பு பங்கு கொள்ளாது'


ததேகூ தலைவர் இரா.சம்பந்தன்

ஐநாவின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடர் அமர்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் கூட்டத்தொடரில் நடைபெறும் விடயங்கள் குறித்தும் சர்வதேச சமூகம் எடுக்கின்ற நடவடிக்கைகள் குறித்தும் தமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான விடயங்கள் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த மாநாட்டில் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார்.
இலங்கைப் போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் ஐநா தலைமைச் செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களும் ஜெனீவா கூட்டத்தில் ஆராயப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் குறித்து சர்வதேச ரீதியாக தமது கட்சி விளக்கமளித்துள்ளதாகவும் அவை குறித்து சர்வதேச சமூகம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு அரசாங்கம் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோருவதாகவும் சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேலும் கூறினார்.


Sunday, February 26, 2012

ஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு?



ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோவைக் கொண்டு தடுத்து விடும் என்ற வகையில் கூட செய்திகள் வெளியாகின்றன.ஜெனிவாவில் அடுத்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 23 ஆம் திகதி வரை தொடரப்போகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல நாடுகளின் விவகாரங்கள் குறித்த முக்கியமான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இடம்பெறப் போகிறது. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும். குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு எது என்பது தெளிவாகத் தெரியாது போனாலும் தீர்மானம் வரப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. 


அண்மையில் கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளும், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தமது நாடு ஆதரிக்கும் என்று அறிவித்திருந்தனர். அமெரிக்காவின் பின்புலத்துடன் ஒரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது என்பது உறுதி. ஆனால் அதை யார் கொண்டு வரப்போவது என்று தெரியவில்லை. இந்தக் கேள்வி இலங்கை அரசையும் குழப்புவதாகவே தெரிகிறது. முன்னதாக அமெரிக்காவே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று அரசாங்கம் நம்பியது. ஆனால் அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவே கூறியுள்ளனர். எனவே அமெரிக்கா அல்லாத இன்னொரு நாடு தான் இதனைக் கொண்டுவரப் போகிறது என்று தெளிவாகியுள்ளது. அந்த நாடு எது என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னொரு கட்டத்தில் கனடா இந்த முயற்சிகளில் இறங்கலாம் என்ற கருத்தும் உள்ளது. காரணம்இ ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் நடந்த கூட்டத்தொடரில் கனடா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றது. ஆனால் அதற்குப் போதியளவு ஆதரவு கிடைக்காமல் போக, தீர்மானத்தைக் கொண்டு வருவதில் இருந்து நழுவிக் கொண்டது. எனவே கனடா இம்முறை அந்த முயற்சியைத் தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் அமெரிக்காவோஇ கனடாவோ இந்த முயற்சியில் இறங்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பலமாக உள்ளது. ஏனென்றல் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இந்த முயற்சியில் இறங்கினால் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் குழம்பிப் போய் தீர்மானத்தை எதிர்த்து விடும் என்ற பயம் அமெரிக்காவுக்கு உள்ளது. 


எனவே மற்றொரு நாட்டின் மூலம் தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா முனைவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இலங்கை அரசாங்கம் தனது பக்கம் உள்ளதாகக் கூறும் அணிசேரா அமைப்பிலுள்ள ஆபிரிக்க நாடு ஒன்றைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்றும் கருதப்படுகிறது. இதற்கிடையில் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் ஐரோப்பிய யூனியன் இந்தத் தீர்மானத்தை நேரடியாகக் கொண்டு வர முடியாது. ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அது ஒரு உறுப்பு நாடு அல்ல. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஏதாவது ஒரு நாட்டின் மூலம் வேண்டுமானால் அதைச் செய்யலாம். இரு வாரங்களுக்கு முன்னதாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே இந்த முயற்சியில் ஐரோப்பிய யூனியன் ஈடுபடலாம் என்ற கருத்து வலுவடைந்தது. ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு, ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சுவீடன் கொண்டு வந்தது. அப்போது போரின்போது எந்த மீறல்களும் நடக்கவில்லை என்று இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபாஇபோன்ற நாடுகள் அடித்துக் கூறின. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்து ஆதரவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதற்குப் பின்னர் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் எப்போது தொடங்கினாலும் இலங்கைக்கு நெருக்கடிகள் வருவது போல இருந்தன. ஆனால் கடைசியில் அவை விலகிக் கொண்டன. 


கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்தது. இம்முறை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி விட்டது. அதன் மீதான நடவடிக்கை அதாவது, பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை வைத்தே இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தக் கோரியும் பொறுப்புக் கூறுவதற்கு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் இந்தத் தீர்மானம் வலியுறுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆனால், எத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் அதனை முறியடித்து விடுவோம் என்கிறது அரசாங்கம். நட்பு நாடுகளின் பக்கபலம் இருப்பதாகவும் அரசாங்கம் சொல்லிக் கொள்கிறது. இந்தமுறை அரசாங்கம் தென் அமெரிக்க நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் மத்திய கிழக்கு நாடுகளையும் வளைத்துப் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. இந்த முயற்சியில் அவ்வளவாக பலன் கிட்டவில்லை என்று தகவல்கள் வெளியான போதும் அது எந்தளவுக்கு உண்மை என்பதை ஜெனீவா கூட்டத்தொடரின் போது தான் உணர முடியும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும் வீட்டோவைக் கொண்டு தடுத்து விடும் என்ற வகையில் கூட செய்திகள் வெளியாகின்றன. 


ஐ.நா பாதுகாப்பு சபையில் தான் வீட்டோ அதிகாரம் உள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எந்த நாடுமே நிரந்தர உறுப்பு நாடு அல்ல. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் மாறிக் கொண்டிருக்கும். ஒரே நாடு அடுத்தடுத்து இரண்டு முறை உறுப்புரிமை பெற முடியாது. இதற்கு அமெரிக்காஇ ரஷ்யா, சீனா போன்ற பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் கூட விதிவிலக்கல்ல. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் குறைவு என்றே கூறலாம். இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் மீது 32 தடவைகள் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வீட்டோ அதிகாரம் இருந்திருந்தால் அமெரிக்காஇ பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இஸ்ரேலை காப்பாற்றியிருக்கும். ரஷ்யா, சீனா, கியூபாவின் ஆதிக்கத்தில் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உள்ளது என்பதையும் கவனித்தாக வேண்டும். ஏற்கனவே மனிதஉரிமைகள் அமைப்புகள் இந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. இதனால் தான் வடகொரியா, கம்போடியா, சூடான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. 


47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை, சீனா, ரஷ்யாவின் கையில் சிக்கியிருப்பதற்குக் காரணம், ஆபிரிக்க, தென் அமெரிக்கஇ ஆசிய நாடுகளிடம் உள்ள அதிகளவு உறுப்புரிமைதான். ஆபிரிக்காவுக்கு 13 இடங்களும் ஆசியாவுக்கு 13 இடங்களும் லத்தீன் அமெரிக்காவுக்கு 8 இடங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 இடங்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 7 இடங்களும் மனிதஉரிமைகள் பேரவையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும்பாலானவை ரஷ்யாவை அல்லது சீனாவை சார்ந்திருப்பவை. இந்தப் பகுதி நாடுகள் பலவற்றுக்கு அமெரிக்காவையோ மேற்குலகையோ பிடிக்காது. எனவே தமது நலனுக்காக சீன, ரஷ்ய சார்பு நிலையை பேணிக் கொள்கின்றன. இவற்றை வைத்துக் கொண்டு தான் இலங்கை அரசாங்கமும் இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்க முனைகிறது. 


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டும் மேற்குலக நாடுகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பலமான நிலையில் இருப்பதாக கூறமுடியாது. இதனால் தான் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தப் போதிய காலஅவகாசம் இல்லை என்றும்இ பொறுப்புக்கூறுவதற்காக இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் மட்டக்குழுவொன்றை நியமித்துள்ளதாகவும், ஜெனிவாவில் அரசாங்கம் வாதங்களை முன்வைக்கவுள்ளது. இது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று கூறமுடியாது. ஆனால், ஒன்று இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் தோற்கடிக்கப்பட்டாலும் கூட மேற்குலக அழுத்தங்கள் குறையப் போவதில்லை. ஜெனிவாவில் இந்த நாடுகள் தோல்வி காணுமாக இருந்தால் இலங்கை மீதான அழுத்தங்களைப் பிரயோகிக்க மேற்குநாடுகள் மாற்று உபாயங்களைக் கடைப்பிடிக்கும். அவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கண்டனத் தீர்மானத்தை விடவும் கடுமையானதாகவும் இருக்கலாம்.


கட்டுரையாளர் கே.சஞ்சயன் 
நன்றி தமிழ் மிரோர்

Saturday, February 25, 2012

சரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்றுக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் விஜய் நம்பியார்


போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார்.சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்குப் பதிலளித்த நம்பியார், “இனப்படுகொலையில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுவது உங்களில் உள்ள பிரச்சினை. 

இந்த விவகாரத்தில் மேரி கொல்வின் தொடர்புபட்டிருந்தார். தற்போது அவர் மரணமாகி விட்டார். எனது நிலையை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 

சிரியாவின் கடந்தவாரம் கொல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின், சிறிலங்காவில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்த போது என்னுடன் தொடர்பு கொண்டார். 

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சிலர் சரணடைவதற்கு தரகராக செயற்பட அவர் முனைந்தார். அவர் என்னுடன் பேசினார் என்பது உங்களுக்குத் தெரியும்.“ என்றார். 

அதையடுத்து இன்னர்சிற்றி பிரஸ், “சரணடைவதற்கு சாட்சியாக செல்லும்படி உங்களை கொல்வின் வலியுறுத்தினார் அல்லவா?“ என்று கேட்டது. அதற்கு அவர், ஆம் என்றார்.

“அங்கு போகும்படி கேட்கப்பட்டேன். இரண்டுமுறை நான் அமெரிக்க இராஜதந்திரி பொப் பிளேக்குடன் தொடர்பு கொண்டேன். நாம் இருவரும் அங்கு போகத் திட்டமிட்டிருந்தோம்.

கடல் வழியாக அனைத்துலுக செஞ்சிலுவைக் குழுவால் அங்கு போக முடியவில்லை. 

சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அனுமதி மறுத்து விட்டது. எம்மால் கட்டாயப்படுத்த முடியவில்லை. அங்கே எமக்கு வேறு வழி இல்லை.“ என்றார் நம்பியார். 

“சரணடைய முயன்றவர்கள் சாட்சிகளின்றிக் கொல்லப்பட்டது குறித்து வெளியில் ஏன் நீங்கள் பேசவில்லை?” என்று இன்னர்சிற்றி பிரஸ் அவரிடம் கேள்வி எழுப்பியது. 

“அன்று நள்ளிரவு நேரம் மேரி என்னை அழைத்தார். இரண்டு பேர் – அவர்களின் பெயர்களை நான் மறந்து விட்டேன், ஒருவர், சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர் - சரணடைய விரும்புவதாக சொன்னார். 

சுதந்திரமாக சென்று சரணடைவதற்கான உறுதிப்பாட்டைப் பெறுத்தர வேண்டும் என்று கோரினார். நான் சரி என்று சொன்னேன். 

என்னால் அதைச் செய்ய முடியும். அதை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், அதிபர் ஆகியோரிடம் எடுத்துச் சென்றேன். 

சரணடையும் எவரையும் தாம் விரும்புவதாக அவர்கள் கூறினர். அதன்பின்னர் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.“ என்றார் நம்பியார்.

“உறுதிமொழியை நீங்கள் பெற்றுக் கொடுத்திருந்தால், அப்போது சாட்சியாக செல்வதற்கு தடுக்கப்பட்டது, நீங்கள் உறுதிமொழி பெற்றுக் கொடுத்தவர்கள் கொல்லப்பட்டது குறித்து ஏன் நீங்கள் வெளியே பேசவில்லை?“ என்று கேள்வி எழுப்பியது இன்னர்சிற்றி பிரஸ். 

“பின்னர் அவர்களின் ஆட்களாலேயே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொன்னார்கள். 

தடங்கல் ஏற்படும் என்று நான் எந்த ஊகத்தையும் கொண்டிருக்கவில்லை. பசில் ராஜபக்ச கூட அதனைச் சொன்னார். கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் அது முக்கியமானதாக இருந்தது. 

அப்போதைய சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலித கொஹன்னவுடனும் பேசியிருந்தேன்“ என்று கூறியுள்ளார் நம்பியார்.

சிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை


ராஜபக்ச பொது நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தாமல், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பில் சீன நாட்டின் நிதி ஆதரவுடன் மாதகலில் இரகசியமாக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு TruthDive இணையத்தில் வெளிவந்துள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாசியா மீதான சீனாவின் மூலோபாயத் திட்டமிடலில் சிறிலங்கா நான்காவது இடத்தில் உள்ளது. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமான மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான 50 சதவீத நிதி சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றது. 

தென்னாசியாவில் உறுதியான தளத்தை அமைத்துக் கொள்வதுடன், நீண்ட கால மூலோபாய நலன்களையும் குறிக்கோள்களையும் அடைந்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள சீனாவானது அதன் ஒரு கட்டமாக சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத் திட்டங்களுக்கான தனது நிதி ஆதரவை வழங்கிவருகின்றது. 

சிறிலங்கா அரசாங்கமானது, தமது சொந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க மறுத்து, அவர்களைத் தனிமைப்படுத்துவது மட்டுமல்லாது, சீனத் திட்டங்களை தனது நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றது. 

சிறிலங்கா அரசாங்கமானது தற்போது சீனாவால் வழங்கப்பட்டுள்ள திட்டத்திற்கேற்ப அனைத்துலக தரத்தைக் கொண்ட விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக பெருமளவான நிலப்பரப்பை கையகப்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.சிறீதரன் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் பலாலி விமானத்தளம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்தியாவால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை சமன் செய்வதற்காகவே தற்போது அனைத்துலக தரத்தைக் கொண்ட விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக சீனாவை அழைக்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது. 

வன்னியை யாழ் குடாநாட்டுடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே பூநகரி அமைந்துள்ளது. இதன் ஒருபக்கம் பாக்கு நீரிணையுடனும், மறுபக்கம் யாழ் கடல்நீரேரியுடனும் தொடர்புபட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டு கரையோரத்தில் அமைந்துள்ள இராமேஸ்வரம் மற்றும் தொண்டி ஆகியவற்றுக்கு அண்மையாகவும் அமைந்துள்ளது. 

தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது இந்தியாவிலிருந்தோ 'எதிரிகள் தாக்குதல்களை' மேற்கொள்கின்றனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு உகந்த இடமாக பூநகரி அமைந்துள்ளதாலேயே சீனா இங்கே விமான நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

கொழும்பின் கொலனித்துவ நலன்களைப் பேணுவதில் சிறிலங்கா அதிபரின் மகனும், சிறிலங்கா கடற்படை அதிகாரியுமான ஜொசித ராஜபக்ச முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளையில், யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவுக் கரையோரத்தில், பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவு மற்றும் இராமேஸ்வத்துக்கு அருகாக சுற்றுலா விடுதி ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையை சீனா ஏற்றுக் கொண்டுள்ளது. 

இதற்கும் மேலாக, திரு.ராஜபக்ச பொது நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தாமல், சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்பில் சீன நாட்டின் நிதி ஆதரவுடன் மாதகலில் இரகசியமாக திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவடிநிலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் காற்றாலைகள் மற்றும் சூரிய கலங்கள் ஆகியவற்றை நிறுவுவதை நோக்காகக் கொண்டே மாதகலில் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

சீனாவுடன் மலேசிய பிரதமர் மேற்கொண்ட 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருளாதார ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, சிறிலங்காவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒக்ரோபர் 2011ல் மலேசிய நிறுவனமான KLS Energy China Machinery and Engineering Corporation    உடன்  கைச்சாத்திடப்பட்டது.

சீனத் தொடர்பைக் கொண்ட இம் மலேசிய நிறுவனமானது மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான காற்றாலைகள் மற்றும் சூரிய கலங்களை, பனைமரங்களால் நிரம்பியுள்ளயாழ் குடாநாட்டின் கரையோரங்களில் நிறுவுவதுடன், அவற்றை அந்த மக்களுக்கு 'விற்பதை' நோக்காக் கொண்டுள்ளது. உண்மையில் யாழ் குடாநாட்டின் கரையோரங்கள் தற்போது பனைமரங்களால் நிரம்பியுள்ளன. 

யாழ்ப்பாணத்தின் வட கரையோரம் முழுவதையும் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான மிகக் கெட்டித்தனமான திட்டமாகவே இது உள்ளது. ஏற்கனவே இக்கரையோரமானது சிறிலங்கா இராணுவத்தின் தளங்களால் நிரம்பிக் காணப்படுவதுடன், சிங்கள 'பாதயாத்திரிகளுக்கான' மையங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மலேசிய நிறுவனமானது தனது திட்டத்தை மேற்கொள்வதற்காக தற்போது யாழ்ப்பாணத்தின் வட கரையோரம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்மக்களுக்குச் சொந்தமான இப்பிரதேசங்கள் காலப்போக்கில் முற்றுமுழுதாக சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவதற்கான அபாயம் நிலவுகின்றது.

நன்றி- புதினப்பலகை

சிறிலங்கா மீது இறுகிவரும் மேற்குலக அழுத்தம்


சிறிலங்காவுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில பலமான பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் பின்பற்றவில்லை என்று அமெரிக்கா மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது என ஏ.எவ்.பி செய்திநிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது என்பது குறித்த எந்தவொரு உறுதியான நடவடிக்கைத் திட்டத்தையும் சிறிலங்கா அரசிடம் இன்றுவரை காணமுடியவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதியான அடியெடுத்து முன்னோக்கிச் செல்வதற்கு சிறிலங்கா அரசை நாம் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.
அதேவேளை, நல்லிணக்கத்துக்கான முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை ஜெனிவாவில் கொண்டு வருவதற்கும் நாம் எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம எனவும் அவர் தெரிவித்துள்ளதாக ஏ.எவ்.பி செய்திநிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா நோக்கிய வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சிறிலங்காவில் இனமுரண்பாட்டுக்கு மூலகாரணமான தமிழ்மக்களின் உண்மையான குறைகளை தீர்ப்பதில் கடந்தகால அரசாங்கங்கள் தவறியுள்ளன என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் கருத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்கிறது என தெரிவித்துள்ள ஒன்றிய அறிக்கை, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை திறம்பட நடைமுறைப்படுத்தினால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்றுபடுத்துவதற்கான நடவடிக்கையில் முக்கியமான பங்களிப்பை செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
குழுக்கள், மற்றும் சமூகங்களிடையேயும் உண்மையான நல்லிணக்கம் அவசியம். அதை அடைவதற்கு கடந்தகால சம்பவங்கள் குறித்த நீதி விசாரணையும், பொறுப்புக் கூறுவதும் முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பல கேள்விகளை நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவில் புறக்கணித்திருப்பது வருத்தத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளது.
ஐ.நா நிபணர் குழு அறிக்கை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை ஆகியன தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர், மற்றும் பொருத்தமான ஐ.நா அமைப்புகளுடன் இணங்கிச் செயற்பட ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் சிறிலங்காவை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - நாதம்