வரும் செப்ரெம்பர் 08ம் திகதி நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தல் கடும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாணசபைத் தேர்தல் ஒன்றில் குதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், கிழக்கு மாகாணசபைக்கு ஒரே ஒருமுறை தான் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதைய போர்ச்சூழலைக் காரணம் காட்டி கிழக்கு மாகாணசபைக்கான முதலாவது தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. அது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாய்ப்பாகிப் போனது. இந்தநிலையில் இம்முறை, கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- மிரட்டல்கள் போன்ற பல பலத்த சவால்களுக்கு மத்தியில் தான் சந்திக்கிறது.
கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் வேட்பாளர் இடஒதுக்கீட்டுப் பிரச்சினைகளில் முரண்பட்டுக் கொண்டாலும், ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற மனோநிலையில் இருந்தது வரவேற்கத்தக்கது. தமிழ்க்கட்சிகள், முன்னரெல்லாம், வெற்றி பெறுவதற்காக அன்றி - ஒன்றையொன்று வீழ்த்துவதற்காகவே போட்டியில் குதிப்பதுண்டு. அந்த வழக்கத்தை மாற்றிக் கொண்டிருப்பதை ஆரோக்கியமான ஒரு அரசியல் போக்காகக் கருதலாம். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி போதியளவில் ஆசனங்களை ஒதுக்க மறுத்ததான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், எந்தக் கட்சியுமே அதற்காக பிரிந்து போய் தனித்துப் போட்டியிட்டு, குட்டையைக் குழப்ப முனையவில்லை. இத்தனை அவலங்களின் பின்னர், பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் இந்தளவுக்காவது ஒன்றுபட்டிருப்பது வரவேற்கத்தக்கதே.
இம்முறை மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. கிழக்கு மாகாணத்தின் பெரும்பான்மை இனமாக தமிழர்கள் இருந்த போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அங்கு தனித்து ஆட்சியைப் பிடிக்கக் கூடிய நிலை இல்லை என்பது வெளிப்படையானது. அதற்குக் காரணம், கிழக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் கூட, குறிப்பிடத்தக்க தமிழ் வாக்குகளைக் கொண்டுள்ளன. இதைவிட, பிரதேசவாதத்தை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட, முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் கட்சியும் ஆளும் கூட்டணியில் நிற்கிறது. இதனால் தமிழ் வாக்குகள் பிரிந்து போகும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் அது பெரியளவில் இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் மிக்க சக்தியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கை அதன் தலைவர்களுக்கு இருப்பதாகத் தெரிகிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்ற சூழலில்- தேர்தலுக்குப் பின்னர் ஆளும்கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ள நிலையில் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அது சவாலாகவே இருக்கும். இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்து, வெற்றி பெறுவதன் மூலம் கிழக்கு மக்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லை என்ற பிரசாரத்தை மேற்கொள்ளும் திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாக கூறப்படுகிறது. அதை முறியடிக்க வேண்டுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பலத்தை நிரூபித்தாக வேண்டும். அது மிகவும் சிககலானதொன்றாகவே இருக்கும்.
சுமார் 15 இலட்சம் மக்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் 40 வீதத்துக்கும் சற்று அதிகமானவர்கள் தமிழர்கள். கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும், ஆறு இலட்சம் பேர் வரை தமிழர்களாக உள்ள போதும், கடந்த 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெறமுடிந்த வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 1 இலட்சத்து 26 ஆயிரம் மட்டும் தான். அதேவேளை கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில்- மட்டக்களப்பில் பெரும்பாலான சபைகளுக்குத் தேர்தல் நடத்தப்படாத நிலையில், சுமார் 65 ஆயிரம் வாக்குகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெற முடிந்தது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், இதேபோக்கில் மாற்றம் ஏற்படாது போனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான சக்தியாக உருவெடுக்க முடியாது. அதிகளவு மக்கள் வாக்களித்தால், அதாவது 95 வீதமான தமிழ் வாக்காளர்கள் வாக்களித்தால், அதிசயம் நிகழும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அது சாத்தியமாமா என்பது சந்தேகம் தான். ஆனால் கிழக்கில் உள்ள தமிழர்களை பொறுத்தவரையில், பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தவர்கள். அங்கு, 1881ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பில் 59 வீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைந்து, இப்போது 40 வீதத்தில் வந்து நிற்கிறது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் இங்கு தமிழர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். கிழக்கின் இனப்பரம்பலே முற்றாக மாற்றப்பட்டது.
1881ல் 4.66 வீதமாக இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கை, 1981இல் அதாவது, 100 ஆண்டுகளில் 24.99 வீதமாக அதிகரித்தது. கிழக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் 20 இல் ஒரு பங்காக இருந்த சிங்களவர்கள், 100 ஆண்டுகள் கழித்து நான்கில் ஒரு பங்கினராக வளர்ச்சி பெற்றதை இயல்பானதாக கருதமுடியாது. இது ஒரு திடீர் வீக்கம். திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்பரம்பல் மாற்றம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் தான். தமிழர்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களை இழந்தனர். வீடுகள், சொத்துகளை இழந்தனர். உயிர்களை பறிகொடுத்தனர். வடக்கில் மோசமான போர் நிகழ்ந்திருந்தாலும், பேரினவாதிகளால் இனப்பரம்பலில் பெரியளவில் மாற்றத்தைச் செய்ய முடியவில்லை. ஆனால் கிழக்கின் உண்மையான அடிக்கட்டுமானமே மாற்றப்பட்டது. இத்தைகைய சூழலில் தமது பாரம்பரிய நிலத்தின் மீதான உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிகம் கரிசனை கொள்ள வேண்டியவர்களாக இருப்பது கிழக்கிலுள்ள தமிழர்கள் தான்.
அரசாங்கத்துடன் இணைந்துள்ள எந்தவொரு அரசியல் கட்சியாலும், கிழக்கிலுள்ள மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுக்க முடியாது. இந்தநிலையில், கிழக்கிலுள்ள தமிழ்மக்களின் அதிகபட்ச வாக்குகளை தன்வசப்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. அதற்கு கிழக்கு மக்களின் உறுதியான நம்பிக்கையை அவர்கள் வென்றாக வேண்டும். இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான சக்தியாக உருவெடுக்குமானால், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பிறகட்சிகளின் ஆதரவையும் கோரலாம். ஆனால், கிழக்கில் ஆட்சியமைப்பதை விட, முக்கியமானது, கிழக்கில் பலத்தை நிரூபித்து சர்வதேச அளவில் சாதகமானதொரு நிலையை எட்டுவது தான். ஏனென்றால் அதன் மூலம் தான் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கு சர்வதேச ஆதரவைப் பெருக்க முடியும். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை கூடுதல் பொறுப்பு உள்ளது. விருப்பு வாக்குகளுக்கான மோதல்களில் இருந்து விலகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் தனது பலத்தை நிரூபித்தாக வேண்டும். ஏனென்றால் இது தவிர்த்து ஒதுங்கிவிட முடியாத சவால்.
தொல்காப்பியன்

1 கருத்துரைகள்:
தமிழர்கள் ஒன்றுப்பட்டால் மட்டுமே எதிர்காலம் நல்லபடியாக இருக்கும் ! இல்லையாயின் தாழ்வே மிச்சம்
Post a Comment