Tuesday, June 19, 2012

போர் வெற்றியின் அர்த்தம் என்னவாக இருக்கும்? - மனிதஉரிமை செயற்பாட்டாளர் கேள்வி


சிறிலங்கா மீது இந்தியாவானது பாரிய செல்வாக்கைச் செலுத்தும் ஒரு நாடாகும். சிறிலங்காவில் வாழும் எல்லா சமூகத்தினரும் நீதியுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் எடுப்பதற்கு இந்தியாவானது தனது அழுத்தத்தை வழங்க வேண்டும். இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட Hindustan Times ஊடகத்தில் மனிதஉரிமை கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் Meenakshi Ganguly* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். 


"30 ஆண்டுகளின் பின்னர், தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள விடிவானது எமது நாட்டை மிகப் பிரகாசமான எதிர்காலம் நோக்கி கொண்டு செல்கின்றது' என மே 20 அன்று, இடம்பெற்ற யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு நிகழ்வின் போதே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு அறிவித்திருந்தார். 



இந்நிகழ்வில் 12,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் இராணுவ அணிவகுப்பில் ஈடுபட்டனர். சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால யுத்தமானது தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததைத் தொடர்ந்து 2009 மே மாதத்தில் நிறைவுற்றது. 



இந்த யுத்தத்துக்காக சிறிலங்கர்கள் கொடுத்த விலை என்பது மிகப் பெறுமதியானது. 100,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டனர். அத்துடன் கிட்டத்தட்ட 40,000 வரையானவர்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சிறிலங்காவில் வாழும் மக்கள் பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு வெற்றி மமதையை அறிவிக்கும் அறிக்கைகளை விட இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. 



சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பின் படி, இந்த யுத்தத்தில் 24,000 சிறிலங்கா இராணுவத்தினர் தமது உயிர்களை இழந்துள்ளதுடன், பெருமளவானவர்கள் காயமடைந்தும், தமது உறுப்புக்களை இழந்தும் வாழ்கின்றனர். 



அரை மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்கள் யுத்த நடவடிக்கைகள் காரணமாகவும், இனஅழிப்பு காரணமாகவும் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர். இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு இவர்கள் புலம்பெயர்ந்தனர். 



யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கப் படைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பல்வேறு மீறல்களை மேற்கொண்ட போதிலும் இவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இலக்கு வைக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல்கள், புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் போன்றன அடிக்கடி மேற்கொள்ளப்பட்டன. 



சிறிலங்கா அரசாங்கமானது பல ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்களை கைதுசெய்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளடங்கலாக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். எந்தவொரு விசாரணைகளுமின்றி பல ஆண்டுகளாக தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் எந்தவொரு முடிவின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காணாமற்போயுள்ளனர். தற்போதும் இவை தொடர்கின்றன. 



காணாமற் போனோர் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சரியான தகவலை வழங்காததானது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித இழப்புக்களுக்கான பொறுப்பை ஏற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவருகின்றது. சிறிலங்காப் படைகள் மக்கள் செறிந்து வாழ்ந்த இடங்கள் மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், சரணடைந்த கைதிகளைத் துன்புறுத்தி கொலை செய்தமை மற்றும் வேறு ஏனைய யுத்தக் குற்றங்களை மேற்கொண்டன. 



இந்தியாவானது, சிறிலங்காவின் இந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பதிலளிக்குமாறு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்துவருகிறது. சிறிலங்கா மீதான இந்தியாவின் நிலைப்பாடானது வேறுபட்டது. அதாவது 1987-90 காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு இந்தியாவானது தனது அமைதி காக்கும் படையை அனுப்பியிருந்தது. ஆனால் இது வெற்றியளிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி, புலிகள் அமைப்பால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வாறான நிலைப்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகக்கு இந்தியா தனது ஆதரவை வழங்க காரணமாக இருந்தன. 



யுத்தம் முடிவுற்ற பின்னர், சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையில் மீளிணக்கப்பாட்டை உருவாக்கி, சிதைந்து போயுள்ள வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தகால மீறல்களுக்கு பதிலளிக்க வேண்டும் என இந்திய மத்திய அரசு தொடர்ந்தும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. 



அனைத்துலக அழுத்தத்தின் காரணமாக, சிறிலங்காவானது நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான சில நல்லெண்ண சமிக்கைகளை ஏற்படுத்திய போதிலும், தற்போதும் நீதி மற்றும் மீளிணக்கப்பாடு என்பன வெறும் கனவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக, புலிகள் அமைப்பாலும், சிறிலங்கா அரசாங்கத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் துன்பத்திலேயே வாழ்கின்றனர். 



இவ்வாறான மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கமானது உரிய பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்துவதற்கு பதிலாக சிறிலங்கா மீது பாரிய முதலீடுகளை மேற்கொண்டுள்ள உலக நாடுகள் சிலவற்றின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைகள் சபை ஆகியவற்றில் சிறிலங்காவுக்கு சார்பாக இந்நாடுகள் தமது ஆதரவை வழங்கியுள்ளன. 



கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கமானது அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தது. இதற்குப் பதிலடியாக சிறிலங்கா அதிபர் ராஜபக்ச, அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்த இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள அரசியற் கட்சிகளையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் விமர்சித்தார். அத்துடன் இந்தியாவின் சொந்த மனித உரிமைப் பதிவுகள் தொடர்பிலும் ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்திருந்தார். 



முன்னர் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் தற்போது அதிகளவில் குவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் அங்கு வாழும் தமிழ் மக்களையும், முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களையும் துன்புறுத்திவருகின்றனர். காணாமற் போன தமது அன்புக்குரியவர்கள் தொடர்பாக செய்திகளைப் பெறுவதற்காக சிறிலங்கா இராணுவத்திடம் செல்கின்ற இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தின் துன்புறுத்தல்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள உள்ளுர் செயற்பாட்டாளர்கள் தாம் அச்சுறுத்தப்படுவதாகவும், ஆபத்தான சூழலில் தமது பணியைத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர். 



இந்தியாவானது சிறிலங்காவில் மீளிணக்கப்பாடு உருவாவதற்காக தொடர்ந்தும் தனது அழுத்தத்தை வழங்கிவருகின்றது. அண்மையில் இந்திய நாடாளுமன்றைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு சென்றதுடன், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி மீளிணக்கப்பாட்டை உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாக மீண்டும் வலியுறுத்தியிருந்தனர். இருந்தும் சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளைப் புறக்கணித்து அவர்கள் நீதி, சுயமதிப்பு, கௌரவம் மற்றும் சமத்துவம் போன்றவற்றுடன் வாழ்வதற்கான வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கத் தவறியுள்ளது. 



சிறிலங்கா மீது இந்தியாவானது பாரிய செல்வாக்கைச் செலுத்தும் ஒரு நாடாகும். சிறிலங்காவில் வாழும் எல்லா சமூகத்தினரும் நீதியுடன் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் எடுப்பதற்கு இந்தியாவானது தனது அழுத்தத்தை வழங்க வேண்டும். 



இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்கா அரசாங்கமானது தனது யுத்த கால மீறல்களுக்குப் பதிலளிப்பதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு தனது அறிக்கையில் கோரியிருந்தது. இந்தியா இதற்கு தனது ஆதரவை வழங்க வேண்டும். சிறிலங்காவில் வாழும் சமூகத்தவர் நீதியான முறையில் அவர்களது உரிமைகள் மதிக்கப்படும் போதே பிரகாசமான எதிர்காலம் ஒன்று உருவாக்கப்பட முடியும் என்பதில் சிறிலங்கர்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

மொழியாக்கம் - நித்தியபாரதி. 

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment