Friday, June 1, 2012

போர்க் குற்றங்கள்; இப்போது சார்ள்ஸ் ரெய்லர், அடுத்து ...?

மனிதத்துவத்துக்கு எதிரான மிக மோசமான போர்க் குற்றங்களுக்கு உதவியும் ஊக்குவிப்பும் அளித்த குற்றச்சாட்டில் லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் ரெய்லருக்கு சர்வதேச நீதிமன்றம் 50 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்திருக்கின்றது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் முன்னாள் அரச தலைவர் ஒருவருக்கு சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் இத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றமை பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான புதிய சகாப்தம் உதயமாகியிருப்பதாக மேற்குலக ஊடகங்கள் சில வர்ணித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.


1990 களில் மேற்கு ஆபிரிக்காவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த உள்நாட்டு யுத்த காலத்தில் சட்ட விரோதமாக மரங்களையும் வைரங்களையும் விற்று நிதி உதவி வழங்கியதாகவும் மிகப் பயங்கரமான முறையில் பலரை சிரச்சேதம் செய்து அவயவங்களை வெட்டியும் கொடுமைகள்  புரிவதற்கு இடமளித்ததாகவும் பாலியல் வன்முறைகளை ஊக்குவித்ததாகவும் சிறுவர்களை யுத்தத்துக்கு பயன்படுத்தியதாகவும் சார்ள்ஸ் ரெய்லர் மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு  அவர் கைதாகி 6 வருடங்களுக்குப் பின்னர் ஐ.நா.வின் அனுசரணையில் செயற்படும் தீர்ப்பாயத்திடம் கையளிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.


இந்தத் தண்டனையை எதிர்த்து ரெய்லர் மேன் முறையீடு செய்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வி கண்டால் அவர் நெதர்லாந்திலிருந்து பிரிட்டனிலுள்ள சிறைக்கு இடமாற்றப்படுவார்.64 வயதுடைய இந்த முன்னாள் லைபீரியத் தலைவருக்கு சியாராலியோனுக்கான விசேட நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் கடுமையான தண்டனையானது போர்க்குற்றச் சாட்டுகள் தொடுக்கப்பட்டிருக்கும்  தற்போதைய அரச தலைவர்களுக்கு எத்தகைய செய்தி அனுப்பப்பட்டிருக்கின்றது என்ற வாதப் பிரதிவாதங்களை களம் இறக்கியிருக்கிறது. டார்பரின் மேற்குப் பிராந்தியத்தில் போர்க் குற்றங்களை இழைத்ததாக சூடானின் ஒமர் அல் பாசிருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றது. அத்துடன் ஐவரிகோஸ்டின் லோரன்ட் ஜிபாக் மோ விரைவில் ஹேக் நீதிமன்றில்  விசாரணையை எதிர்நோக்கவுள்ளார். லிபியாவில் கடாபியின் ஆட்சிக் கால உறுப்பினர்கள் மீதும் விசாரணை இடம்பெறுகிறது.


சார்ள்ஸ் ரெய்லருக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நியாயவாதிகள் பாராட்டியிருக்கின்றனர். முன்னாள் அரச தலைவராக அவர் இருக்கின்ற போதிலும் குற்றத்தின் பார தூரத் தன்மையின் அடிப்படையில் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெரால்டின் மட்றியோலி ஹெல்ற்னர் “த இன்டி பென்டன்ட்’ பத்திரிகைக்கு கூறியிருக்கிறார். 


அத்துடன் இவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை சிரியா மற்றும் சூடான் தலைவர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்வார்களென்ற எதிர்பார்ப்பும் அவரிடமிருந்து எழுந்திருக்கிறது. மனிதத்துவத்துக்கு எதிரான குற்றச் செயல்களுக்காக அரசாங்கங்களின் தலைவர்களை தண்டிப்பதற்கான அதிகாரமானது அண்மைக் காலக் கண்டுபிடிப்பாக காணப்படுகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதற்கு உதவியும் ஒத்தாசையும் புரிந்த அரசியல், இராணுவத் தலைவர்கள் சிறப்பு விடுபாட்டு உரிமையுடன் சுதந்திரமாகச் செயற்படும் சாத்தியப்பாடானது சிலியின் சர்வாதிகாரியான அகஸ்டோ பினோசேயுடன் முடிவுக்கு வந்திருந்தது.


1998 இல் அவர் லண்டனுக்குச் சென்று அச்சமயம் பிரதமராக இருந்த மார்கரெட் தட்சருடன் தேநீர் அருந்தலாம் என்று  கொண்டிருந்த திட்டத்திற்கு நியூரம் போர்க் நீதிமன்றம் முன்னுதாரணத்தை உருவாக்கியிருந்தது.அவர் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு பாப்பரசர், ஹென்றி சிங்கர், ஜோர்ஜ் புஷ் (சீனியர்) பிடல் காஸ்ட்ரோ போன்ற உலகத் தலைவர்கள் பிரிட்டனை வலியுறுத்தியிருந்தனர். ஆனால் ரெய்லர் சார்பாக இதுவரை அத்தகைய கோரிக்கைகள் விடுக்கப்படாதமை சர்வதேச நீதிமுறைமை செம்மையாக செயற்படுகின்றது என்பதன் வெளிப்பாடாக கருத முடியும். 


ஆனால் சர்வதேச நீதித்துறைக் கட்டமைப்பானது இன்னமும் மறுசீரமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு துரித நிவாரணம் கிட்டுவதாக அமைவதே சிறப்பானதாக அமையும். ரெய்லரின் வழக்கு விசாரணைக்கு மூன்று வருடங்கள் சென்றன. அதிலும் அவரின் வாக்கு மூலத்தைப் பெறுவதற்கு 7 மாதங்கள் கடந்தன. தீர்ப்பு வழங்குவதற்கு 13 மாதங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அவருக்கு 50 வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. 


இப்போது  அவரின் வயது 64 ஆகும். தண்டனைக் காலத்தை பூர்த்திசெய்யும் போது அவருக்கு 114 வயதாகிவிடும். இது உண்மையில் நியாயமானது அல்ல. ஆனால் சர்வதேச நீதித்துறையில் இருந்துவரும் உண்மையான பிரச்சினையானது பாதுகாப்புச் சபையில் உள்ள இராஜதந்திரிகளும் அரசியல் வாதிகளுமே என்று பிரிட்டனின் ஊடகத்துறை சார்ந்த சட்டத்தை தயாரித்தவர்களில் ஒருவரான ஜியோபெரி ரொபேர்ட்சன் என்ற இராணி வழக்குரைஞர் குறிப்பிட்டிருப்பது உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் நியாயமான கருத்தாக காணப்படுகின்றது. அண்மையில் சிரியாவில் இளம் பாலகர்களை துவக்கு முனையில் அழித்தொழிக்க  உத்தரவிட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப பாதுகாப்புச் சபையிலுள்ள இராஜதந்திரிகளும் அரசியல் வாதிகளும் மறுத்து வருகிறார்களே என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

பல்லாயிரக்கணக்கான “அப்பாவிகள் அல்லல்பட்(டு)  ஆற்றா(து) அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’  என்பதை உணர்ந்து செயற்படுவதே மானிட நேயத்திற்கு செலுத்தும் சிறப்பான பங்களிப்பு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment