Sunday, May 27, 2012

ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணங்கிப் போகப்போகிறதா இலங்கை?


ஜெனிவாவுக்கான தூதுவராக இருக்கும் தாமரா குணநாயகம் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இடமாற்றத்தை தாமரா குணநாயகம் விரும்பவில்லை. அது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிக்கத் தவறியதற்கான தண்டனையாக கருதப்படும் என்றும்இ தமிழர் என்பதால்இ இனவேறுபாடு காட்டப்படுவதாக வதந்திகள் பரவும் என்றும் கூறித் தனது இடமாற்றத்தை தடுக்க முனைந்தார் அவர். ஆனாலும் அவரால் அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 

மூன்று ஆண்டுகளுக்குள் ஜெனிவாவுக்கான தூதுவர்களாக இருந்த நான்கு பேர் மாற்றப்பட்டுள்ளனர். அதுவும் தாமரா குணநாயகத்தினால் அங்கு 9 மாதங்கள் தான் நிலைக்க முடிந்தது. இப்போது ஜெனிவாவுக்கான தூதுவராக ரவிநாத் ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தாமரா போன்று அரசியல் செல்வாக்கில் தூதுவராக வந்தவர் அல்ல. துறைசார் இராஜதந்திரி - கூட்டாகப் பணியாற்றும் இயல்புடையவர். இவரது நியமனம்,ஜெனிவாவுடனான அணுகுமுறைகளை மாற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சியே என்ற கருத்து உள்ளது. 

கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்த இலங்கை- இப்போது இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சில விடயங்களை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வெளிப்படையாக தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறினாலும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடனான உறவுகளை சீர்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் நாட்டம் காட்டுவதாகவே தெரிகிறது. ஏனென்றால் அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடனும், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருடனும் கடுமையாகவே மோதி விட்டது. இதன் விளைவுகள் சாதகமாக அமையாத நிலையில், அரசாங்கம் தனது முரண்போக்கை மாற்றிக் கொள்ள முனைவதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டமே தாமரா குணநாயகத்தின் இடமாற்றமாக பார்க்கப்படுகிறது. தாமரா குணநாயகம்- ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தவர். அதிலும் நவநீதம்பிள்ளையை அவர் தனிப்பட்ட ரீதியாகவே தாக்கியிருந்தார். பாரபட்சமாக நடப்பதாகவும், ஐ.நாவின் ஆணையையும் ஐ.நா சாசனத்தையும் மீறிச் செயற்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் தாமரா குணநாயகம் இடமாற்றப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக ஒர் தகவல் ஊடகங்களில் வெளியானது. நவநீதம்பிள்ளையும் அவரது செயலக அதிகாரிகளும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஐ.நாவின் சாசனங்களுக்கு முரணாக செயற்படுவதாகவும், இலங்கை அரசாங்கம் முறைப்படியான எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளதாக அந்தச் செய்தி கூறியது. இது தொடர்பான கடிதத்தை வரையும் பணியை ஜெனிவாவில் தாமரா குணநாயகம் மேற்கொள்ளவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தாமராவின் இடமாற்றத்தை அடுத்து அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரவிநாத் ஆரியசிங்க ஜெனிவா சென்றதும் அவரின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

வரும் நவம்பர் முதலாம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான மீளாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் இந்த மீளாய்வும் இலங்கைக்கு ஒரு கண்டம் தான். அதற்குப் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் - அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் தேவைகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதா என்பது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் ஆணையாளரே சமர்ப்பிக்கவுள்ளார். இதுகுறித்து அரசாங்கத்துக்கு அச்சம் இருந்தாலும், அதற்குள் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் முடிந்து விடும் என்ற நப்பாசையும் இருக்கத் தான் செய்தது. 

நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதிபதி. அவர் இந்தப் பதவிக்கு வந்தபோதே அதனை இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. அவர் விடுதலைப் புலிகளின் சார்பில் செயற்படக் கூடும் என்று எச்சரித்தது. இன்று வரை அவருக்கு எதிரான போக்கை அரசாங்கம் கைவிடவில்லை. நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையப் போகிறது. இந்தநிலையில் அவரது பதவிக்காலத்தை நீடிக்க ஐ.நா பொதுச்செயலர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்ற கருத்து நிலவியது. காரணம் சில விடயங்களில் அவர் ஐ.நா பொதுச்செயலருடன் முரண்பட்டிருந்தார். இலங்கையில் போர்க்குற்றங்களை விசாரிக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் வெளியிட்ட கருத்தும் அதில் ஒன்று. இதுபோன்ற காரணங்களால் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிக்கலாம் என்ற கருத்து நியுயோர்க்கில் பரவலாக இருந்து வந்தது. ஆனால் கடந்தவாரம் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக பொதுச்சபையிடம் அனுமதி கோரியுள்ளார் பான் கீ மூன். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசின் நிம்மதி கெட்டுப் போயுள்ளது. நவநீதம்பிள்ளை இந்த ஆண்டுடன் போய்விடுவார், புதிதாக வருபவரை சற்று மாறுபட்ட கோணத்தில் அணுகலாம் என்ற நினைப்பில் இருந்த அரசாங்கத்துக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு ஐ.நா பொதுச்சபை தான் அனுமதி கொடுக்க வேண்டும். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 2010 ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட நவநீதம்பிள்ளையின் பதவிக் காலம் இவ்வாண்டு இறுதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்துஇ மீண்டும் அவரையே தலைவராக நியமிப்பதற்கான அனுமதியை ஐ. நா. பொதுச் சபையிடம் ஐ. நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கோரியிருந்தார். இதனையடுத்து, இது தொடர்பாக நேற்று முன்தினம் ஐ. நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் நவநீதம்பிள்ளை ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பொதுச்சபையில் இதற்கென நடக்கப் போகும் வாக்கெடுப்பில் இலங்கை அரசு நவநீதம்பிள்ளைக்கு ஆதரவாக வாக்களிக்குமா என்பது முக்கியமான கேள்வி. முன்னைய நிலைப்பாட்டிலேயே இலங்கை இருக்கிறது என்றால் நிச்சயமாக அவரை எதிர்க்கும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினால், நவநீதம்பிள்ளையை ஆதரிக்க வேண்டும். இந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் மாறியுள்ளதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும் நவநீதம்பிள்ளை மீண்டும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளராக வருவதை அரசாங்கம் விரும்பாது. இதனால் அவரைத் தோற்கடிக்கும் முயற்சிகளில் இறங்கலாம். அதற்கு சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் உதவக் கூடும். இந்தக் கட்டத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் முரண்போக்கை விட்டு விட்டு ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருந்தால் அரசாங்கம் நவநீதம்பிள்ளை விடயத்தில் இணங்கிப் போக வேண்டியிருக்கும். அது கசப்பானதாக இருந்தாலும் கூட, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அவரே- இலங்கை தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் சற்று இறங்கிப் போவதை விட வேறு வழி அரசுக்கு இருக்காது.

தொல்காப்பியன்

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment