நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் இந்தளவுக்கு இறுகிப்போக நேரிடும் என்று அரசாங்கம் கனவிலும் நினைத்திருக்காது. அப்படி எதிர்பார்த்திருந்தால், அரசாங்கம் இப்படியொரு ஆணைக்குழுவை நியமிப்பதை விடுத்து வேறு மாற்றுவழி பற்றி யோசித்திருக்கக் கூடும். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர் குழுவை நியமித்த போது, அதன் விசாரணையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக் கொள்ளவே அரசாங்கம் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவை அவசரமாக நியமித்தது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தான் இந்த ஆணைக்குழுவை நியமித்ததற்கான ஒரே காரணம் என்றால், அரசாங்கம் இந்தளவுக்கும் எவ்வளவோ செய்திருக்கலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த போதே, தமது விசாரணைகள் முடிய காலதாமதமாகும் என்பதால், அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது இந்த ஆணைக்குழு. ஆனால் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கூட, இந்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டிருந்த பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சாக்குப் போக்குச் சொல்வது ஆச்சரியமில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை அதனை தாம் நடைமுறைப்படுத்துவோம் என்று கூறி வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்த அறிக்கை வெளியான பின்னர், அதுபற்றித் தெளிவான எந்தப் பிரகடனத்தையும் செய்யவில்லை.
அமைச்சர்கள் தான் அரசின் சார்பில் அதுபற்றிக் கதைக்கின்றனரே தவிர, நாட்டின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கிடைத்த கால அவகாசம் போதாது என்று கூறியது. அதற்குப் பின்னர் ஒன்றரை மாதங்களான நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது தான் அரசாங்கம் எந்தெந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாம் என்று ஆராய்கிறதாம். ஆனால் எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதில் மட்டும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதேவேளை சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரை அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியாக உள்ளது. பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இறுக்கமான போக்கு தற்போது அனைத்துலக மட்டத்தில் வலுவடைந்து வருகிறது. முன்னதாக அமெரிக்கா, போன்ற மேற்குலக நாடுகள் தான் அதனை வலியுறுத்தி வந்தன. ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது இந்தியாவும் இணைந்து கொண்டது. கடந்த வாரம் பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட அறிக்கையிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை கடந்தவாரம் சந்தித்த, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனும் இதுபற்றியே பேசியுள்ளார். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடும் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய நாடாளுமன்றக் குழுவும் இலங்கைக்கு வந்து சென்ற பின்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இதனால் இந்தியாவின் நிலைப்பாடு இப்போது மேலும் இறுக்கமாகியுள்ளது. இவ்வாறாக சர்வதேச அளவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை கூடிய விரைவில் - முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசாங்கமோ இவற்றுக்குப் பிடிகொடுக்காமல் தப்பிக் கொள்ள முனைகிறது. பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் சர்வதேச சமூகத்துக்கும் அரசுக்கும் இடையில் முரண்பட்ட நிலையே உள்ளது.
வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதா என்பது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது தான் வில்லங்கங்கள் வெளிப்படும். வரும் 18ம் திகதி வொசிங்டனில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் கலந்துரையாடவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன்,* ( « ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் தான் ((போரின் இறுதி நாளான மே 18ம் திகதியை நினைவூட்டுவதற்காக)) "ஹிலாரி கிளின்ரன் அமைச்சர் பீரீஸ் சந்திப்பு" திகதியை கொடுத்துள்ள அமெரிக்கா» ) அதற்கு முன்னதாக இந்தியப் பயணத்தை மேற்கொள்வது முக்கியமானது. இந்தப் பயணத்தின் போது இலங்கை விவகாரம் குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கடுத்து மே 18ம் திகதி நடைபெறப்போகும் சந்திப்பில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற முழு அளவிலான விளக்கத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகவும் நெருக்கடியான பணியாகவே அவருக்கு இருக்கும். அமெரிக்கா திருப்தி கொள்ளும் அளவுக்கு வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் விளக்கம் கொடுப்பாரா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அமெரிக்கா ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. இலங்கை இன்னொரு நிலைப்பாட்டில் இருக்கிறது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சந்திக்க வைப்பது கடினமானது. அதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வைக்க முடியாது என்பது அமெரிக்காவுக்குத் தெரியாத விடயமல்ல. இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாரில்லை என்பதை உறுதி செய்து கொண்டுள்ளது அமெரிக்கா. இந்தநிலையில், எனவே உள்ளகப் பொறிமுறை மூலமே அரசுக்குப் பொறிவைக்க அது தயாராகி விட்டது.
ஆரம்பத்தில் தனியாளாக நின்று அதைச் செய்தது. இப்போது ஐ.நா, இந்தியா என்று வலுவான ஆதரவுடன் அதைச் செய்கிறது. வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரித்த அரசினால், இப்போது உள்ளக பொறிமுறையின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறவும் முடியாமல் - அதை நடைமுறைப்படுத்தவும் முடியாத திரிசங்கு நிலைக்கு வந்து நிற்கிறது.
கட்டுரையாளர் ஹரிகரன் இன்போ தமிழ் குழுமம்

1 கருத்துரைகள்:
நல்ல பதிவு ...
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க
தமிழ் DailyLib
அவசியம் logo ஐ இணைத்து கொள்ளுங்கள்
To get the Vote Button and Logo
தமிழ் DailyLib Vote Button
Thanks,
Krishy
Post a Comment