Monday, May 7, 2012

காயமடைந்த பெண் போராளிகள் 'விடுங்கோ' எனக் கத்தும் குரல் எனது காதில் கேட்டது அதன் பின்னர் .....?


மே 19, அதிகாலை மூன்று மணி, சில நூறு மீற்றர் தொலைவில் பெண்களின் அழுகைக் குரல்கள் எனது காதில் கேட்கின்றது. காயமடைந்த பெண் போராளிகள் தங்கியிருந்த அந்த இடத்தில் இராணுவத்தினர் நின்றிருந்தனர். அங்கிருந்த பெண் போராளிகள் 'விடுங்கோ' எனக் கத்தும் குரல் எனது காதில் கேட்டது. அதன் பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் போராளிகளின் குரலை என்னால் கேட்க முடியவில்லை. 

[தனது இருபதாவது வயதில் உள்ள இளைஞனான 'குட்டி' சிறிலங்காவில் தீவிரம் பெற்றிருந்த யுத்த காலத்தில் பல்வேறு காயங்களுக்கு உள்ளாகினார். இவர் கிளிநொச்சி, தர்மபுரம், மூங்கிலாறு, புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் போன்ற இடங்களில் செயற்பட்ட வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபோதெல்லாம், இந்த வைத்தியசாலைகள் தொடர்ந்தும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதனால் இந்த வைத்தியாலைகளில் சிகிச்சை பெற்ற காயமடைந்த நோயாளிகள், மற்றும் அவர்களுக்கு உதவியாக நின்ற குடும்ப உறுப்பினர்கள், உதவி புரிந்த வைத்தியர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். யுத்த காலப்பகுதியில், குட்டி தனது தலை, தோள்மூட்டு, அடிவயிறு, சிறுநீரகங்கள் மற்றும் இடது கால் போன்ற இடங்களில் காயமடைந்தார். அத்துடன் இவரது வலது காலின் முழங்காலுக்கு மேல் இவரது காலை அகற்ற வேண்டியிருந்தது. குட்டி தற்போது தற்காலிகமாக தனது இளைய சகோதரிகளுடன் வவுனியாவில் வசித்து வருகிறார். வவுனியாவில் வசிக்கும் குட்டியைத் தேடி இராணுவ புலனாய்வுத் துறையினர் அடிக்கடி வருவார்கள். குட்டி தனது அனுபவத்தை பின்வருமாறு பகிர்ந்து கொள்கிறார்]:

நான் 1987ல் வன்னியில் பிறந்தேன். நான் எனது சிறுபராயத்தை கிளிநொச்சியில் உள்ள திருநகர் எனும் கிராமத்தில் கழித்தேன். 1996ல் இராணுவத்தினர், கிளிநொச்சி நோக்கி படையெடுப்பை மேற்கொண்ட போது நாங்கள் மன்னாருக்கு இடம்பெயர்ந்து, அங்கே நான்கு ஆண்டுகள் வரை தற்காலிக கொட்டகை ஒன்றில் தங்கியிருந்தோம். நாங்கள் எமது உடைமைகள், வீடு, துவிச்சக்கரவண்டிகள் என அனைத்தையும் இழந்தோம். 2000ல் எங்களது குடும்பம் இரண்டாகப் பிரிந்து கிளிநொச்சியிலும், மன்னாரிலும் வாழவேண்டி ஏற்பட்டது. 

அதாவது எனது நான்கு சகோதரிகள் மற்றும் தாய்,தந்தை ஆகியோர் மன்னாரிலும், நான் உள்ளடங்கலாக நான்கு பேரும் கிளிநொச்சியிலிருந்த அம்மாவின் தாயார் அதாவது எமது பாட்டியின் வீட்டில் சென்று வசித்தோம். தரம் எட்டு வரை கல்வி கற்ற நான் அதன் பின்னர் எனது குடும்பத்தவர்களுக்கு வருவாய் ஈட்டிக் கொடுப்பதற்காக கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினேன். முதற் தடவையாக நான் மார்ச் 05, 2008 அன்று காயமடைந்தேன். இராணுவத்தின் எறிகணையின் சிதறல் ஒன்றிலேயே நான் காயமடைந்தேன். அன்றைய நாள் வீசப்பட்ட இராணுவத்தின் எறிகணையில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 
 
இரண்டாவது தடவையாக மே 2008ல் எனது வலது காலில் காயமடைந்தேன். இதன் போது மூன்று வாரங்கள் வரை கிளிநொச்சி வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றேன். இதன் பின் ஒரு மாத காலத்தின் பின்னர், நாங்கள் வசித்த பகுதியில் மேசன் வேலை செய்யத் தொடங்கினேன். கிளிநொச்சியை நோக்கி இராணுவத்தினர் நகர்வை மேற்கொண்;ட போது, நாம் அங்கிருந்து இடம்பெயர வேண்டியிருந்தது. 

நானும் எனது பாட்டியும் எமது உடைமைகளை உழவியந்திரம் ஒன்றில் ஏற்றிக் கொண்டு நின்ற போது, மல்லாவிப் பகுதியிலிருந்து வீசப்பட்ட எறிகணையில் நான் எனது வலது தொடையிலும், காலிலும் காயப்பட்டேன். இதில் பல மக்கள் காயமடைந்தனர். எமக்கு உதவி செய்வதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை. அந்த எறிகணை எனது காலைப் பதம் பார்த்த போது நான் எனது சுயநினைவை இழப்பது போல் உணர்ந்தேன். 

நான் காயமடைந்து ஒரு நாளின் பின்னர் எனது நண்பர்கள் என்னை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கூட்டிச் சென்ற போதும் எனது காலிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. செப்ரெம்பர் 17, 2008 அன்று கிளிநொச்சி வைத்தியசாலை மீது, சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் விமானம் தாக்குதலை நடாத்தியதில், அங்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நான்கு பெண் நோயாளிகள் கொல்லப்பட்டனர். 
 
இதேவேளையில், கிளிநொச்சிக்கு தெற்காக இருபது கிலோமீற்றரில் அமைந்துள்ள முறிகண்டிப் பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் எறிகணைகளை தொடர்ந்தும் வீசிக் கொண்டிருந்தனர். சிறிலங்கா கிபிர் விமானத்தின் தாக்குதலும், எறிகணைத் தாக்குதலும் கிளிநொச்சி வைத்தியசாலை மீது ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக நின்றவர்கள் எனப் பலர் காயமடைந்தனர். 

கிளிநொச்சி வைத்தியாசாலை மீதான விமானத் தாக்குதலில், ஏற்கனவே தொடையில் காயமடைந்திருந்த நான் மீண்டும் அதே இடத்தில் தீவிர காயத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். கட்டிலில் படுத்திருந்த நான் கீழே தூக்கி வீசப்பட்டதால் காயமடைந்திருந்த எனது வலது கால் செயற்பட முடியாது நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 
 
நோயாளர் காவு வண்டியின் மூலம் தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வரை எனக்கு எவ்வித சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை. கிளிநொச்சிப் பகுதியை நோக்கி இராணுவத்தினர் முன்னேறிக் கொண்டிருந்தனர். அடுத்து, தர்மபுரம் பகுதி நோக்கி இராணுவத்தின் முன்னேற்றம் அமைந்திருந்தது. இதனால், இராணுவத்தின் தாக்குதலில் ஏற்கனவே தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இரு மக்கள் கொல்லப்பட்டதுடன், 12 பேர் மீண்டும் காயமடைந்தனர். 

இங்கு வீசப்பட்ட எறிகணைகள் கிளிநொச்சிப் பகுதியிலிருந்தே வீசப்பட்டன. இந்நிலையில் நான் மூங்கிலாறு வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டேன். இங்கே காயமடைந்தவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் வழங்கப்படவில்லை. எனது நண்பன் ஒருவர் கொண்டு வந்த சில மருந்துகள் எனது வலியைக் குறைக்க உதவின. அத்துடன் நித்திரை கொள்ளவும் உதவின. ஒக்ரோபர் 15, 2008 அன்று எனது வலது கால் அகற்றப்பட்டது. இதன் பின்னர் நான் அதிக வலியால் அவதிப்பட்டேன். 

மூங்கிலாறு வைத்தியசாலை நோக்கி எறிகணைகள் வீசப்பட்டதால், 25 மக்கள் கொல்லப்பட்டதுடன், 50 வரையானோர் காயமடைந்தனர். கல்மடுவில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரே எறிகணைகளை வீசினர். இராணுவத்தினர் தொடர்ந்தும் மூங்கிலாறு வைத்தியசாலையை நோக்கி எறிகணைகளை வீசியதால், அடுத்து நவம்பர் 15, 2008 அன்று தேவிபுரம் பகுதிக்கு மாற்றப்பட்டேன். 

தேவிபுரம் செல்லும் வழியில் மக்கள் கொல்லபட்டுக் கிடப்பதை நான் பார்த்தேன். தேவிபுரம் நோக்கி அந்த வீதியால் பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மிக நெருக்கமாக வீதியால் சென்று கொண்டிருந்த மக்களை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். 

மக்கள் வெள்ளம் இந்த வீதியில் நிறைந்திருந்ததால், யாருமே முந்திக் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த வீதியில் உழவியந்திரம் ஒன்றை ஓடிச் சென்றுகொண்டிருந்த எனது நண்பர் ஒருவரின் மீது எறிகணை வீழ்ந்து வெடித்ததால் அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். 

அடுத்து, நான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். பெப்ரவரி 16, 2009 அன்று முல்லைத்தீவு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய இடங்களில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைகளை வீசத் தொடங்கினர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 46 நோயாளிகள் கொல்லப்பட்டனர். அப்போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மட்டுமே இயங்கிக் கொண்டிருந்ததால் காயப்பட்டவர்கள் அனைவரும் இங்கு கொண்டுவரப்பட்டனர்.

பாதுகாப்புக்காக, மக்கள் வைத்தியாசாலைக்கு அருகில் கூடாரங்களை அமைத்து தங்கினர். வைத்தியசாலை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொள்ளமாட்டார்கள் என மக்கள் நம்பினர். இதன் பின்னர் இராணுவத்தினர் மாத்தளனை பாதுகாப்பு வலயம் என அறிவித்ததால், நான் எனது நண்பர்களுடன் இணைந்து மாத்தளன் வைத்தியசாலைக்கு அருகில் கூடாரம் அமைத்து தங்கினோம்.  

மாத்தளன் வைத்தியசாலையைச் சூழ கூடாரங்களை அமைத்து தங்கிய மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் பொஸ்பரஸ் மற்றும் கொத்துக் குண்டுகளை வீசினர். நான் இவ்வாறு வீழ்ந்து வெடித்த பொஸ்பரஸ் மற்றும் கொத்துக் குண்டுகளை நேரில் பார்த்துள்ளேன். பொஸ்பரஸ் குண்டு வெடித்தவுடன் அதிலிருந்து வெளியேறும் வாயு சுவாசிக்க முடியாது மூச்சைத் திணறச் செய்யும். சில குண்டுகள் மக்களின் தோல்களை எரித்துள்ளன. எங்களைச் சூழ வெறும் நிலங்கள் காணப்பட்டதால், என்ன நடக்கின்றது என்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. 

மக்கள் இறந்த உடலங்களை சுமந்து கொண்டு அழுது கொண்டு ஓடினர். எனது மாமாவும் அவரது மகனும் பொஸ்பரஸ் குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டனர். இவர்கள் ஒடுங்கிய பதுங்குகுழிக்கு மேலே அமைக்கப்பட்ட கூடாரத்துக்குள் இருந்தனர். இந்த பொஸ்பரஸ் குண்டுகள் மக்களின் உடலங்களை துண்டு துண்டாகப் பிளந்துவிடும். கஞ்சி வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததால் அங்கு நின்ற சிறார்கள் மற்றும் பெண்கள் என பலதரப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். 

மார்ச் 10, 2009 மாத்தளன் நோக்கி இராணுவத்தினர் படையெடுத்தனர். இதனால் நாங்கள் முள்ளிவாய்க்காலுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. அங்கே உணவோ நீரோ கிடைக்கவில்லை. இதனால் எனது காயத்தை சுத்தப்படுத்துவது கடினமாக இருந்தது. அங்கே வீடொன்றில் வைத்து மாத்தளன் வைத்தியசாலை இயங்கியது. அங்கே உரிய மருந்துகள் காணப்படாததால் நான் செல்லவில்லை. வைத்தியசாலையிலிருந்து தொலைவிலிருந்த கிணறு ஒன்றில் குளித்தேன். இங்கிருந்த போது முல்லைத்தீவு, தேவிபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் எறிகணைகள் வீசுப்பட்டன. இதனால் நான் அந்த இடத்தை விட்டு நகரத் தீர்மானித்தேன். என்னை உந்துருளி ஒன்றில் ஏற்றிச் சென்ற எனது நண்பன் ஒருவன் தலையில் காயப்பட்டு பின் இறந்துவிட்டான். 

இங்கு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் மருத்துவ தாதிகள், வைத்தியர்கள் மற்றும் நோயாளிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். உணவுப் பொருட்களை எமக்காக கொண்டு வந்த கப்பலை இராணுவத்தினர் நிறுத்தினர். இதனால் மேலதிக சிகிச்சைக்காக காயப்பட்டவர்களை அனுப்ப முடியவில்லை. எனது காயம் வலியைக் கொடுத்ததால் என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. அத்துடன் நான் எப்போதும் எறிகணைத் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். மே 13, 2009 நாங்கள் வட்டுவாகலுக்கு சென்றோம். அதிகாலை 4.30 மணியளவில் நானும் எனது நண்பன் ஒருவனும் அங்கு நின்ற லொறி ஒன்றுக்கு கீழே பாதுகாப்புக்காக படுத்திருந்தோம். 

அந்த நேரத்தில், நெடுங்குளத்தில் செயற்பட்ட வைத்தியசாலை கூடாரம் ஒன்றுக்குள் செயற்படுத்தப்பட்டது. இதுவே அங்கு இயங்கிய இறுதி வைத்தியசாலையாகும். காலை ஒன்பது மணியளவில் முள்ளியவளை, புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய முன்று திசைகளிலும் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் எறிகணைகளை செறிவாக வீசத் தொடங்கினர். அப்போது எமக்கருகில் வீழ்ந்து வெடித்த எறிகணையின் துண்டொன்று எனது இடது கால், தோள்மூட்டு மற்றும் தலை என்பவற்றில் காயத்தை ஏற்படுத்தியது. நான் காயப்படுவதற்கு சிறிது நிமிடத்துக்கு முன்னர், காயப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டியின் மீது எறிகணை வீழ்ந்து வெடித்ததால் அது எரிவதை நான் நேரில் பார்த்தேன். அடுத்த ஆறு நாட்களும் நான் சுயநினைவை இழந்திருந்தேன். நான் எதனையும் சாப்பிடவுமில்லை குடிக்கவுமில்லை. 

நான் ஊர்ந்து சென்று புல் நிறைந்த இடம் ஒன்றில் படுத்தேன். இராணுவம் எறிகணைகளை வீசுவதாகவும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாகவும் மக்கள் கூறுவது எனது காதில் கேட்டது. 

மே 15, 2009 நான் அதே இடத்தில் படுத்திருக்கிறேன். என்னால் எழும்ப முடியவில்லை. மக்கள் என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மே 16, எனது நண்பன் ஒருவன் என்னைக் காவிக் கொண்டு வீதியோரத்தில் கிடத்தினான். மே 17 – 18, இராணுவத்தின் எறிகணையில் மக்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். 

மே 19, அதிகாலை மூன்று மணி, சில நூறு மீற்றர் தொலைவில் பெண்களின் அழுகைக் குரல்கள் எனது காதில் கேட்கின்றது. காயமடைந்த பெண் போராளிகள் தங்கியிருந்த அந்த இடத்தில் இராணுவத்தினர் நின்றிருந்தனர். அங்கிருந்த பெண் போராளிகள் 'விடுங்கோ' எனக் கத்தும் குரல் எனது காதில் கேட்டது. அதன் பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அதனைத் தொடர்ந்து அந்தப் பெண் போராளிகளின் குரலை என்னால் கேட்க முடியவில்லை. 

மே 19, காலை எட்டு மணி, நானிருந்த பகுதியை இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டனர்.  நானிருந்த இடத்திலிருந்து 75 மீற்றர் தொலைவில் சீருடை அணிந்த ஆண் புலி உறுப்பினர்கள் இருவர் இராணுவத்தால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதை நான் பார்த்தேன். என்னால் நகர முடியவில்லை. ஆனால் என்னால் பார்க்க முடிந்தது, கேட்க முடிந்தது. 

என்னைக் கண்ட இராணுவத்தினர் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு உடனடியாக இடம்மாற்றினர். இராணுவத்தினர் என்னைக் காவிக் கொண்டு சென்ற போது, ஆறு இராணுவ வீரர்கள் ஒரு பெண்ணைச் சூழ்ந்து நின்றதை நான் பார்த்தேன். அதன் பின்னர் என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. 

புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் கிளிநொச்சி தமிழ்மக்களுக்கு சொந்தமான இடமாக உள்ள போதிலும், அங்கே விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர். இதனை விட நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. இது நியாயமற்றது. நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். தற்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லை. இழப்பது மட்டுமே அவர்களின் வழமையாகி விட்டது.

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment