Wednesday, March 21, 2012

மீறல்கள் குறித்த சுதந்திர விசாரணைகளை வரவேற்கும் கொழும்பு வல்லுனர்கள் குழு


சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது மட்டுமன்றி, நியாயமான ஒன்றாகவும் இருப்பதாக கொழும்பிலுள்ள வல்லுனர்கள் குழுவொன்று கருத்து வெளியிட்டுள்ளது. 

'தற்போதைய நவீன உலகில் சிறிலங்கா அதிபர், பேரரசாக நினைத்து நாட்டில் அதிகார ஆட்சியை மேற்கொள்ள முடியாது' என முன்னணி எழுத்தாளரான காமினி வியன்கொட தெரிவித்துள்ளார். 

'அனைத்துலக சமூகத்தில் பிரதிநிதியாக இருக்க விரும்புகின்ற எந்தவொரு அரசாங்கங்களும் அதற்கு பொறுப்புக்கூறத் தக்க வகையில் நடந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. 

இந்தவகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துரையாட விரும்பாவிட்டால், அவர் உடனடியாக அதிலிருந்து முதலில் விலகிக் கொள்ள வேண்டும்' என வியன்கொட தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டுள்ள சில ஊடகவியலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை தேசத்துரோகிகள் எனத் தெரிவித்துள்ள அரச ஊடகத்தை பத்திரிகையாளர் அமைப்புக்கள் சில விமர்சித்துள்ளன. 

'மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அரச ஊடகம் பரப்புரை நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது' என சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்கள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாது அவை மூடிமறைக்கப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

அரச ஊடகத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பரப்புரை நடவடிக்கையில் இலக்கு வைக்கப்பட்டுள்ள மனிதஉரிமை செயற்பாட்டாளர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளதாக சிறிலங்கா பத்திரிகையாளர் செயற்பாட்டு அமைப்பின் பொதுச்செயலாளர் லசந்த றுகுனேஜ் தெரிவித்துள்ளார். 

வழிமூலம்- பிபிசி,  

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment