பிரபாகரனின் மரணம்: கேள்வி எழுப்பும் புதிய ஆவணப்படம் - பிரித்தானிய நாளேடு

முதலாவது சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவன் பாலச்சந்திரன் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் போது – சுட்டவர் சிறுவனுக்கு மேலே நின்றவாறே தாக்குதல் நடத்தியுள்ளார். ஆகவே இது ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை" இவ்வாறு சனல்4 வெளியிடவுள்ள புதிய காணொலி தொடர்பாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் நாளேட்டில்  எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

12 வயதேயான சிறுவன் ஒருவன் தரையில் கிடக்கிறான், அவனது இடுப்பில் சுடப்பட்டுள்ளது, அவனது மார்பில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. 

இந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் ஆவார். 

இச்சிறுவன் கொலை செய்யப்பட்ட, அதிர்ச்சி தரும் இக்காட்சியானது, இவ்வாரம் திரையிடப்படவுள்ள 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஜோன் ஸ்னோ தயாரித்த 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற ஆவணப்படம் சனல்- 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர், சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்தகால மீறல்களின் மேலதிக பதிவுகள் மற்றும் காட்சிகளுடனும் 'சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. 

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு யார் பொறுப்பாளிகள் என்பதை ஆராய்ந்து, அவற்றுடன் தொடர்புபட்ட ஆனால் மறைக்கப்பட்ட, இன்னமும் வெளிவராத பல புதிய காட்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இவ் ஆவணப்படத்தில், இதன் தொகுப்பாளரான ஸ்னோ நான்கு விடயங்களை முக்கியப்படுத்தியுள்ளார். 

அதாவது யுத்தகால மீறல்களை நேரில் பார்த்த சாட்சியங்கள், அவை தொடர்பான ஒளிப்படங்கள், இவை தொடர்பாக வெளிவந்துள்ள ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள், கானொலிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஸ்னோ இப்புதிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளார். 

இப்புதிய ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப் பயங்கரமான காட்சிகளுள்இ துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் 12 வயது நிரம்பிய மகனான பாலச்சந்திரன் பிரபாகரனின் இறந்த உடலமும் ஒன்றாகும். 

ஐந்து தடவைகள் வரை இந்தச் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதைஇ டுன்டே பல்கலைக்கழகத்தின் தடயவியல் வல்லுனரான பேராசிரியர் டெறிக் பௌண்டர் உறுதிப்படுத்தியுள்ளார். 

"இந்தச் சிறுவனின் மார்பில் உள்ள பொட்டுப் போன்ற பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் காணப்படுகின்றது. 

இதனால் இந்தச் சிறுவனின் மார்பிலிருந்து இரண்டு அல்லது மூன்று அல்லது அதற்குக் குறைவான அடி தூரத்திலேயே, சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது" என பேராசிரியர் டெறிக் பௌண்டர் உறுதிப்படுத்துகிறார். 

"இதனால் இந்தச் சிறுவன் தன்னை நோக்கி நீட்டப்பட்டிருந்த துப்பாக்கியைத் தொடும் நேரத்தில், இவன் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டிருக்கலாம். 

முதலாவது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இந்தச் சிறுவன் பின்புறமாக விழுந்திருக்கலாம். அதன் பின்னர் அச்சிறுவன் மீது மேலும் இரு துப்பாக்கி வேட்டுக்கள் சுடப்பட்டிருக்கலாம்" எனவும் தடயவியல் வல்லுனரான பேராசிரியர் டெறிக் பௌண்டர் மேலும் தெரிவித்துள்ளார். 

"முதலாவது சூடு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இச்சிறுவன் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்க்கும் போது இவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் இச்சிறுவனுக்கு மேலே நின்றவாறே தாக்குதலை நடத்தியுள்ளார். 

ஆகவே இது ஒரு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை" எனவும் பேராசிரியர் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். 

சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை அனைத்துலக சட்ட விதிமுறைகளுக்கேற்ப சிறிலங்கா வெளிக்கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்கா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ள நிலையிலேயே சனல் 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தை திரையிடவுள்ளது. 

"சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை வெளிக்கொண்டு வருவதற்கான புதிய சாட்சியங்களை இந்தத் தடயவியல் விசாரணையானது வெளிப்படுத்தி நிற்கின்றது" என ஸ்னோ தெரிவித்துள்ளார். 

"ஆனால் இவ் ஆவணப்படமானது சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டிய நிலையிலுள்ள, அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள் யாரென்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. 

அத்துடன் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமாக இருந்த இரத்தக் கறைபடிந்த இராணுவத் தாக்குதல்களை வழிநடாத்திய இரணுவத் தளபதிகள் தொடக்கம் நாட்டின் அதிபர் மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலர் வரை அவர்கள் எவ்வகையில் பொறுப்புக் கூறவேண்டும் என்பதையும், உண்மையில் இவர்கள் மீது இன்னமும் சரியான, முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது" எனவும் ஸ்னோ மேலும் தெரிவித்துள்ளார். 

"இவ்வாறான சாட்சியங்களை வெளிக்கொண்டு வரவேண்டியது ஊடகவியலாளர்களாகிய எமக்கான கடமையாகும். 

இந்த வகையில் இப் புதிய சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு உரிய விசாரணைகளை மேற்கொள்வதுடன், தமது வாழ்வை இழந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பு ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்திற்குரியதாகும். 

இதேபோன்ற சிரியப் படுகொலைகள் தொடர்பாக நாம் ஆவணக் காட்சிகளைத் தயாரிக்கும் போது அது எமக்கான முக்கிய பணியாக உள்ளது" எனவும் ஸ்னோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கைகள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆடைகள் களையப்பட்டு தலையின் பின்புறமாகச் சுடப்பட்டவர்கள் போன்ற காட்சிகளை உள்ளடக்கிய கானொலியைப் பார்க்கும் போது, சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இனப்படுகொலை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். 

"சிறிலங்கா இராணுவத்தின் அதியுச்ச அதிகாரத்தை அதிபர் ராஜபக்சவே கொண்டுள்ளார்" என அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய நிகழ்ச்சித் திட்ட இயக்குனர் சாம் சரீப் தெரிவித்துள்ளார். 

"ராஜபக்ச சிறிலங்கா இராணுவத்தின் பிரதம தளபதியாக உள்ளார். அத்துடன் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச தான் எவ்வாறு இராணுவ மூலோபாயங்களை வகுப்பதில் பங்கேற்றுக் கொள்கிறேன் என்பதை பெருமையுடன் பகிரங்கப்படுத்தி வருகிறார். 

'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் தொடர்பாக ஐ.நா வால் வெளியிடப்பட்ட நம்பகமான அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களையும் ஸ்னோ தான் தொகுத்துள்ள புதிய ஆவணப்படத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அத்துடன் இறுதி யுத்தத்தின் போது அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீது உணவுத்தடையைப் போடுவதற்காகவே சிறிலங்கா அரசாங்கம் அந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து அறிவித்ததாக கொழும்பிலிருந்த அமெரிக்கத் தூதரகத்தின் இரகசியத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

யுத்த வலயத்திற்குள் இருந்த பொதுமக்கள் திட்டமிட்ட ரீதியில் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக ஐ.நா வால் ஆராயப்பட்ட செய்மதி மூலம் பெறப்பட்ட ஒளிப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

அதேவேளைஇ சனல் 4 தொலைக்காட்சி வெளியிடும் 'மிகக் கொடிய யுத்தக் குற்றங்களை' தாம் அடியோடு நிராகரிப்பதாக பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா உயர்ஆணையகம் தெரிவித்துள்ளது. 

சனல் 4 தொலைக்காட்சி தொடர்ந்தும் சிறிலங்கா விவகாரம் தொடர்பில் போலியான, விரோதமான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், சிறிலங்கா அரசாங்கத்தின் ஆட்சி பீடத்திலுள்ள உள்ளவர்களையும் இராணுவத் தளபதிகளையும் குற்றம்சாட்டும் பாணியில் தொடர்ந்தும் பொய்யான, ஏற்றுக் கொள்ள முடியாத சாட்சியங்களை முன்வைப்பதாகவும், சிறிலங்கா உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது. 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

6 கருத்துரைகள் :

  1. சா்வதேச சதியை மக்களுக்கு புரிய வையுங்கள்: கஜேந்திரன்!

    தலைவா் பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிடும் சா்வதேச சக்திகள் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கருத்துக்களையும் விசமாக விதைத்தே வருகின்றது. யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடையும் நிலைவந்துவிட்டது என்பதனை அறிந்து கொண்ட அனைத்துப் போராளிகளும் தாம் முன்னா் போராளிகளாக இருந்தனா் என்பதனை எவ்வளவுக்கு மறைக்கமுடியுமோ அவ்வாளவுக்கு மறைத்துக் கொண்டே இராணுவக கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனா் என்பதனை முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேவந்த பொது மக்களிடம் இருந்து தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

    இந்நிலையில் போராட்டமே அழிந்து எதிரியிடம் சரணடையும்போது பாலச்சந்திரனுடன் ஐந்துபோ் மெய்ப்பாதுகாவலா்களாக சென்றிருப்பார்கள் என்பது திட்டமிட்டு கேவலப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் கதையாகவே நான் கருதுகின்றேன். அதுபோன்று தலைவா் சரணடைந்தார் என்பதற்கோ அல்லது அதன் பின்னா் கொல்லப்பட்டதாக கூறுப்படுவதனை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. அவ்வாறு வித்தி போன்ற நயவஞ்சகா்களதும் அரசதரப்பினதும் கட்டுக்கதைகளைக்கொண்டு வெறும் ஊகத்தினடிப்படையில் குறித்த சில சா்வதேச சக்திகள் தயாரிக்கும் கதைகளை வைத்து சில தமிழ் இணையங்களும் அக்கதைகளை உண்மைபோனறு எழுதுகின்றன.

    சா்வதேச சக்திகள் செய்யும் சதிகளை தயவு செய்து அப்பலப்படுத்துங்கள். இன்று ஐநாவில் இலங்கை அரசும் மேற்குநாடுகளும் ஆடும் நாடகத்தினை உண்மை என்று நம்பி 30 ஆண்டுகால தியாங்கங்களை கொச்சைப்படுத்தவே இந்த சா்வதேச ஊடகங்கள் இவ்வாறான கதைகளை வெளியிடுகின்றன என்பதனை தயவு செய்து மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். இவா்களால் வெளியிடப்பட்ட எனைய அனைத்துக் காட்சிகளும் உண்மையானவையாக இருப்பதனால் அதனைத் தொடா்ந்து இவா்கள் இந்தப் பொய்களை கூறினால் மக்கள் முழுமையாக நம்புவார்கள்.

    இதனால் பேராட்டத்தில் தியாங்கள் என்பதனை புனிதமாகக் கருதி மதித்த அதே மக்களே அந்தப் போராட்டத்தை நிராகரித்து டக்களஸ் கருணா பிள்ளையான் போன்றவா்களுக்குப் பின்னால் மக்கள் தாமாகவே விரும்பிச் செல்லும் நிலையை உருவாக்கவே மேறகுலகம் முயற்சி்க்கின்றது.

    தயவு செய்து மக்களை விழிப்படைய செய்யுங்கள். உங்களிடம் சிரம்தாழ்ந்து வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  2. தலைவரின் இருப்பை அறியும் முயற்சி - ஏகன்

    இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.
    அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.

    இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.
    மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

    இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.
    இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.
    இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

    அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.

    இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

    நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?

    ReplyDelete
  3. உணர்வைச் சிதைத்து உளவியல் தாக்கம் ஏற்படுத்தும் துரோக அரசியல் - போராளியின் மடல்

    தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுத்துவரும் உரிமைப் போராட்டத்தை வலுவடையச் செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை எந்தவொரு உணர்வுள்ள தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

    குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இரத்தம் சிந்தி முன்னெடுக்கப்பட்டுவந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவோ, அல்லது அப்போராட்டத்தை முன்னின்று வழி நடத்திய உலகத் தமிழர்களின் ஒரே சொத்தான தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களைக் குறை கூறவோ, அன்றி மண்மீட்புப் போரில் விடுதலைக்கு உரம் சேர்த்து வித்தாகிப் போன மாவீரர்களை விமர்சிக்கவோ எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் அனுமதிக்க முடியாது.



    இந்த நிலையில் சனல் 4 தொலைக்காட்சியில் தமிழீழ மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் தேசியத் தலைவர் தொடர்பான பிழையான செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கசிந்துவரும் செய்திகளால் தமிழர்கள் எல்லோரும் கொதித்துப்போய் உள்ளனர்.

    சனல் 4 தொலைக்காட்சியானது என்றுமே தமிழ்ர்களுக்கு ஆதரவாகவோ அல்லது அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்னையை வெளிப்படுத்தியோ செய்திகளை வெளியிடவில்லை. மாறாக அவர்களுக்கு சிறீலங்காவில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவும், இரண்டு ஊடக வியலாளர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னணியிலுமே சிறீலங்கா அரசிற்கு எதிரான தனது செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது.

    தமிழர்களின் பலமான ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின் தமிழர் தாயகத்தில் நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரவலமும், அதன் பின்னரான சிங்கள பேரினவாதத்தின் இனவழிப்பு நடவடிக்கைளும் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துபோன நிலையில் உளரீதியான தாக்கத்தில் அனைவரும் உறைந்துபோயிருந்த வேளையே சன்ல் 4 தொலைக்காட்சியில் முதன் முதல் வெளியான சிறீலங்கா அரச இயந்திரத்தின் தமிழர் மீதான கொடுமைகளெ சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தியிருந்தது.

    சர்வதேசத்தின் கண்களை சற்று திறக்க வைத்த இவ்விடையமானது தமிழர்களுக்கும் சிறு உத்வேகத்தை கொடுக்கவே சனல் 4 தொலைக்காட்சிக்கு தமது நன்றிகளை தெரிவித்த அதேவேளை அவர்களுக்குத் தேவையான வேறு சான்றுகளையும் கையளித்து சனல் 4 தொலைக்காட்சியின் உதவியுடனும், தமது திட்டமிட்ட நேர்த்தியான செயற்பாடுகளூடாகவும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும், இனவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தேடியும் சர்வதேச மட்டத்திலான பரப்புரைகளையும், இராஜதந்திர நகர்வுகளையும் தமிழர்களும், தமிழ் அமைப்புக்களும் முன்னெடுத்தன.

    ஆனால் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றிருந்த சன்ல் 4 தொலைக்காட்சி நாளை வெளியிடவுள்ளதாகக் கூறப்படும் "இலங்கை கொலைக்களங்கள் பாகம்-2, தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" ஆவணப் பகுதியில் தேசியத் தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரியதும், தமிழ்ர்களால் ஏற்றுக்கொள்லமுடியாததுமான காட்சிகள் வெளிவரும் நிலையில், தமிழர்களை சிதைத்துவிடுமோ என்கின்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது இவ்வாறு இருக்க சனல் 4 தொலைக்காட்சியில் எந்த விபரங்களும் வெளியிடுமுன்னரே காலம் பாத்துக் காத்திருந்த சில பச்சோத்திக் கோடாரிக் காம்புகள் தமது ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமது குடும்பத்தினர் சகிதம் இராணுவத்திடம் சரணடைத்ததாகவும், சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்டதாகவும் செய்திகளை பிரசுரித்துள்ளன.

    எனவே இந்த செயற்பாடானது இக்காலத்திலும் எவராலும் மன்னிக்க முடியாததாகும். ஏனெனில் தேசியத் தலைவர் அவர்கள் எப்போதும் தனது குடும்பம், தனது வாழ்க்கை என்று சிறு வட்டத்துக்குள் வாழ்ந்தவர் அல்ல. மாறாக தனது நாடு, தனது மக்கள், தனது மொழி, என்று வாழ்ந்தவர். அதனால் தான் அவர் தமிழீழத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல உலக தமிழர்கள் மத்தியிலும் மதிப்போடு போற்றப்படும் தேசியத் தலைவராக தமிழர்களின் காவல் தெய்வமாக மதிக்கப்படுகின்றார்.

    பச்சோந்திகளாக தாம் பிறந்த நாட்டிற்கும், தமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் தமிழர்களின் எதிர்கால சந்ததிக்கும் துரோகம் இழைக்க முன்னின்று செயற்படும் ஊடகங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

    ReplyDelete
  4. 1987 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அமைதிபடை என்ற போர்வையில் எமது தாயகத்தில் வந்திறங்கிய இந்திய இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் தீவிரம் அடைந்த நாள் முதல் இந்திய இராணுவம் எமது தாயகத்தை விட்டு வெளியேறும் வரை எங்கு சென்றாலும் தனது கையில் 5 லீற்றர் பெற்றோலுடன் சென்றுவந்தவர்.

    ஏனெனில் தனக்கு மரணம் எப்போதும் வரலாம். ஆனால் தான் இறந்த பின்னும் தன்னை இனம் காணக்கூடாது. அதுமட்டுமல்ல முழுமையாக தனது உடல் கிடைக்கக்கூடாது என்பதற்காக கழுத்தில் நஞ்சுக் குப்பியும், மார்போடு குண்டும், கையில் பெற்ரோலுடனும் காடுகள் எங்கும் அலைந்து திரிந்தவர். அதற்கும் மேலாக 1988 ஆம் ஆண்டு முற்பகுதியில் தென்மராட்சிப் பகுதியில் அப்போது தென்மராட்சிக் கோட்டப் பொறுப்பாளராக இருந்த பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் கண்காணிப்பில் மறைந்து வசித்துவந்த தனது மனைவியையும், பிள்ளையையும் காட்டுப்பகுதிக்கு அழைத்துவரும்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களையே நேரடியாக எம் தேசியத் தலைவர் அனுப்பிவைத்திருந்தார்.

    அத்தோடு அவர்களை அழைத்து வரும் வழியில் இராணுவத்தினரிடம் மாட்ட நேரிட்டால் சைனட் அருத்தி உயிரைத் துறக்கச்சொல்லுபடியும், சைனட் அருந்தும் வாய்ப்பு தவறும் பட்சத்தில் இராணுவத்தினரிடம் சிக்கவிடாது சுட்டுக்கொல்லும்படியும் தனது பிஸ்டலையே கொடுத்து கட்டளையிட்டிருந்தார்.

    அப்படிப்பட்ட எம் தேசியத் தலைவரை இப்போது குடும்பத்தினருடன் சரணடைந்ததாக கூறும் உங்களைப் போன்ற அற்பர்களின் கூற்று எம்மைச் சுட்டெரிக்கின்றது. இக்கருத்தை சிறு குழந்தைகூட ஏற்றுக்கொள்ளாது.

    தலைவர் அவர்கள் நினைத்திருந்தால் தனது குடும்பத்தை பாதுகாப்பாக வெளினாடுகளில் தங்கவைத்திருக்க முடியும். எத்தனையோ சட்ட திட்டங்கள், பாதுகாப்புக்களையும் தாண்டி வெளிநாட்டிற்கு தனது பிள்ளைகளை அனுப்பியும் அவர் தனது நாட்டிற்காகவே அவர்களை படிப்பித்து ஆளாக்கி மீண்டும் தாயகம் வரவளைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்தவர்.

    முப்படை அமைத்து முழு உலகிற்குமே எடுத்துக்காட்டாகவும், தமிழர்களின் காலக் குறியீடாகவும், வரலாற்றின் வழிகாட்டியாகவும் விளங்கும் எம் தலைவரை பிழையாக சித்தரிப்பது என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாது.

    மக்கள் மத்தியில் விசக்கருத்துக்களைத் தூவி கடந்தகால போராட்டத்தையும், போராளிகளையும் தவறாக எடுத்துரைத்து போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுனிலையை விரிசலடைய வைத்து துரோக அரசியலில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். குமுறும் வேதனைகளின் வெளிப்பாடுகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு சர்வதேசப் பரப்புகளில் கட்டளைக்காக ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சக போராளிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பார்கள் என நம்புகின்றேன்.

    நண்பர்களையும் பகைவர்களாக மாற்றக்கூடியதே தேசியத் தலைவர் தொடர்பாக எழும் பிழையான தகவல்கள். உங்களின் இந்த செயற்பாட்டால் எமது சமுதாயமே சீர்குலைந்து சின்னாபின்னமாகப் போகும் நிலையை நீங்கள் ஏன் உணரவில்லையோ தெரியாது. தயவு செய்து நீங்கள் உண்மையான தமிழர்களாக இருந்தால் இவ்வாறான செயல்களை உடன் நிறுத்துங்கள். தவறுக்கு மன்னிப்புக் கோருங்கள். எமது தமிழும், தமிழீழ மண்னும் செழித்து வளர பாடுபடுங்கள். அதுவே உண்மையாக நீங்கள் செய்யும் நல்ல செயற்பாடாக அமையும். மரணித்துப் போன மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நீங்கள் செலுத்தும் உண்மையான காணிக்கையாக அமையும்.

    எனவே இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். நான் எழுதியிருக்கும் விடையங்கள் சிலரை பாதித்திருக்கலாம். இருப்பினும் இக் கருத்துக்களின் ஆளம் அவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.

    சில வேளை சிலர் அல்லது சில ஊடகங்கள் என்னை தாக்கி எழுத முற்படுவர். என்னைப் பொறுத்தவரை இக்கருத்துக்களுக்காக என்மீது தாக்கி வசைபாடுபவர்கள் நிச்சயமாக நான் மேற்குறிப்பிட்டது போன்று காலம் பாத்துக் காத்திருந்த பச்சோத்திக் கோடாரிக் காம்புகளாகவே இருப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவர்களே இதுவரை காலமும் முகமூடி மனிதர்களாக தமிழர்கள் மத்தியில் நடமாடி தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க சிங்கள பேரினவாதிகளோடு மட்டுமன்றி தமிழினத் துரோகிகளோடு கூட்டாக செயற்பட்டவ்அர்கள் என்பதும் உலகத் தமிழர்களுக்கும் புரியும்.

    "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
    நன்றி
    உள்ளக் குமுறல்களுடன்...
    போராளி - முகிலன்

    ReplyDelete
  5. சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தும் சனல்4 ஆதாரங்கள்!

    ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைத் தீவு தொடர்பான அக்கறை கூர்மையடைந்துள்ள காலகட்டத்தில், அமெரிக்காவின் தலைமையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
    இப்பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது, தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ்மக்கள்;, பிரேரணை தொடர்பாக மிகுந்த நம்பிக்கையும், அக்கறையும் கொண்டவர்களாக காணப்பட்டனர்.

    எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இப்பிரேரணை, இலங்கை அரசினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை அமுல்படுத்தக் கோருவதாகவே அமைந்துள்ளது.

    அதுமட்டுமல்லாது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் விடயங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொறுப்புக் கூறல் தொடர்பாக ஓரு உள்ளகப் பொறிமுறையை உருவாக்கி ஐ.நாவின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

    இன்னொரு வகையில் கூறுவதாயின், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில், போர்க் குற்றம் மேற்கொண்ட குற்றவாளிகளாக ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை அரசு, தான் செய்த குற்றங்கள் தொடர்பாக தானாகவே ஓர் விசாரணை நடாத்தி, தானே அதில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புக்கூறும் வேடிக்கையான நிலைக்கு அங்கீகாரமளிப்பதாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட மேற்படி பிரேரணை அமைந்துள்ளமை துரதிஸ்டவசமானது என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

    பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களிடமே, நீதி விசாரணையை மேற்கொள்ளச் கோரும் இச் செயலானது, நீதியை குழிதோண்டிப் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது.

    இச்செயற்பாடுகள், தமிழ்மக்களுக்கு ஆழமான ஏமாற்றத்தையும், மிகுந்த கவலையும் ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சி ஊடாக 14-03-2012 அன்று ஒளிபரப்புச் செய்யப்பட்ட இலங்கையின் போர்க்குற்றம் 2: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் தமிழ்மக்கள் மீதான படுகொலை சம்பவங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

    ஊடக நெறிமுறையை பின்பற்றி தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களில் நான்கை வெளிக்கொண்டுள்ளது.

    • இலங்கையில் தமிழர்களுடைய பிரதேசத்தில், “பாதுகாப்பு வலயம்” என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களையும், மருத்துவமனைகளையும் திட்டமிட்டு இலக்கு வைத்து ஆட்டிலறி மற்றும் ஏனைய கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டு படுகொலைசெய்தது.

    ReplyDelete
  6. • பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, சட்டத்துக்கு முரணான வகையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் அரசு தடைசெய்தது.

    • காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடாத்தி மக்களை படுகொலைசெய்தது.

    • சரணடைந்த கைதிகளை சர்வதேச சட்டங்களுக்கு மாறாக காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக்கொன்றமை.

    போன்ற குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

    இதற்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் - 01 ஆவணப்படத்தில காண்பிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்காது அவற்றை நிராகரிக்கும் வகையிலேயே இலங்கை அரசின் செயற்பாடுகள் அமைந்திருந்து. அந்த வகையில், பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மீது எத்தகைய நம்பிக்கையும் வைத்திருக்க முடியாதென்பதை சனல் 4 வெளிப்படுத்தியுள்ளது.

    மேலும், சனல் 4 ன் இலங்கை கொலைக்களங்கள் ஆவணப்படம் பாகம் ஒன்றில் காண்பிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவை என்று ஐ.நா நிபுணர் குழு ஏற்றுக்கொண்டிருந்தது. அவ்வாறான நிலையிலும் கூட, அதனை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. இச்செயற்பாடு, இலங்கை அரசு தனக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கோ, குற்றவாளிகளை தண்டிப்பதற்கோ ஒரு போதும் தயாராக இல்லை என்பதனை இக்காணொளி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

    இவ்வாறான பின்னணியிலேயே, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோருவதனை மையப்படுத்திய பிரேரணை அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் 2- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் ஆவணப்படமானது, முள்ளிவாய்க்காலிலும் அதற்குப் பின்னரும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை ஆதரபூர்வமாக வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது.

    தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகள் பற்றிய மேலதிக ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள சூழலில், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை, ஓர் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையாக வலியுறுத்தும் வகையிலான பிரேரணையாக மாற்றியமைத்து, அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டிக்கொள்கிறது.

    செ.கஜேந்திரன்
    பொதுச் செயலாளர்
    தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
    skajendren@yahoo.com

    ReplyDelete