Monday, March 19, 2012

"முன்னர் தமிழர்களின் குரலை செவிமடுக்காத அமெரிக்கா" எதற்காக இலங்கைக்கு மீது இத்தனை உறுதியோடு தீர்மானத்தைக் கொண்டு வருகிறது.....?


இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் இலங்கை அரசாங்கத்தைக் கடும் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது. ஒருபக்கத்தில் நட்பு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தவும், இன்னொரு பக்கத்தில் எதிர்த்து நிற்கும் நாடுகளைச் சமாளித்து- அவற்றின் ஆதரவைப் பெறுவதற்கும் கடுமையான இராஜதந்திர முயற்சிகளில் மகிந்த அரசு ஈடுபட்டுள்ளது. கொழும்பு, புதுடெல்லி, ஜெனிவா போன்ற நகரங்களில் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் இந்த இராஜதந்திர யுத்தம் விரிந்து நிற்கிறது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஓய்வு ஒழிச்சலில்லாம் தென்அமெரிக்கா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா என்று உலகெங்கும் பறந்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு சில மாதங்களில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களைப் போல வேறெவரும் மேற்கொண்டிருக்க முடியாது. அந்தளவுக்கு இலங்கை அரசுக்கும் இந்த விவகாரம் கடும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது. 

இன்னொரு பக்கத்தில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஆலயங்களில் வழிபாடுகளையும் அரசாங்கம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையை நினைவூட்டுகின்றன. அப்போது தமிழர் தரப்பு போரை நிறுத்துவதற்கு முயற்சி செய்ததுடன், வன்னியில் சிக்கியிருந்த தமிழர்களுக்கு ஆசி வேண்டி உலகெங்கும் ஆலய வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது தமிழரின் இராஜதந்திரம் வெற்றியைத் தரவில்லை. ஆலயங்களில் செய்த வழிபாடுகளும் கைகொடுக்கவில்லை. எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் 3 இலட்சம் மக்கள் அவலத்துக்குள் சிக்கி மறுஜென்மம் எடுத்தார்கள் என்றால் மிகையில்லை. அப்போது தமிழர்கள் மேற்கொண்ட இராஜதந்திரத்தையும், அதே வழிபாட்டையும் இப்போது அரசாங்கத் தரப்பு கையில் எடுத்துள்ளது. 

இப்போது காட்சி மாறியிருக்கிறது, முன்னர் தமிழர்களின் குரலை செவிமடுக்காத சர்வதேச சமூகம் இப்போது அரசின் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்கிறது. உலகநாடுகளில் ஒரு பகுதி இப்போது இலங்கையைக் கைவிட்டு விடும் நிலை உருவாகியுள்ளது. இந்தநிலை ஏன் உருவானது- அமெரிக்கா எதற்காக இலங்கை மீது இத்தனை உறுதியோடு தீர்மானத்தைக் கொண்டு வருகிறது என்ற கேள்விகள் இன்னும் பலரிடம் இருக்கவே செய்கிறது. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டு இப்போது தான் இரண்டு, மூன்று மாதங்களாகின்றன. அதற்குள் எப்படி பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும், எமக்கு காலஅவகாசம் தாருங்கள் என்று இலங்கை கேட்டுள்ளது. ஒரு பக்கத்தில் இதை நியாயம் என்று கூட சில நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அமெரிக்கா அதை ஏற்கத் தயாரில்லை. அது ஏன் என்பதை இப்போது தான் விளங்கிக் கொள்ள முடிகிறது. அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் தயாரில்லை என்பதே அமெரிக்காவின் இந்த அழுங்குப்பிடிக்கான காரணம். 

ஆணைக்குழுவின் அறிக்கை வெளியான சில நாட்களின் பின்னர், அதை நடைமுறைப்படுத்துவதற்காக என்ன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய போது, அமைச்சரவைப் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல, “அது ஒன்றும் பைபிள் அல்ல வரிக்குவரி படித்து நடைமுறைப்படுத்துவதற்கு” என்று கூறியிருந்தார். அப்போது அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தாது என்ற உண்மை முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்தது. அதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வே சமர்ப்பிப்பார் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அதை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் ஒதுங்கிக் கொண்டார். 

அதற்கும் காரணம் உள்ளது. 

அந்த அறிக்கையை ஜனாதிபதி மகிந்த நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், அதனை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். அத்தகைய வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் கொடுக்க அவர் தயாராக இருக்கவில்லை. அறிக்கை கையளிக்கப்படுவதற்கு முன்னர் அதை நடைமுறைப்படுத்துவோம் என்று துணிச்சலுடன் கூறியது போல, அறிக்கை வெளியான பின்னர் எந்தவோரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி கூறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு உருப்படியான செயற்திட்டத்தையும் இலங்கை கொண்டிருக்கவில்லை என்று அமெரிக்கா தொடர்ச்சியாக கூறிவருகிறது. இராஜத்தந்திர சந்திப்புகளின் மூலம் நன்றாக உறுதி செய்யப்பட்ட பின்னரே அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே மூன்று ஆண்டுகள் கொடுக்கப்பட்டு விட்டது, இனிமேலும் இலங்கைக்கு காலஅவகாசம் கொடுக்க முடியாது என்று அமெரிக்கா முடிவு செய்து விட்டது. இதைவிட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாரில்லை. இதனை அமெரிக்காவோ அல்லது வேறு எந்த மேற்குலக நாடுகளோ சொல்லவில்லை. அரசாங்கத் தரப்பு தான் சொல்லியுள்ளது. 

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கடந்தவாரம் இரண்டு விடயங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். போர் வெற்றியைப் பெற்றுத்தந்த படையினரை ஒருபோதும் நாம் காட்டிக் கொடுக்கவோ, பலி கொடுக்கவோ மாட்டோம் என்பது முதலாவது விடயம். இராணுவ விசாரணை என்பது தவறுகள் இடம்பெற்றதா என்பதைக் கண்டறியவே தவிர தண்டிப்பதற்காக அல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இரண்டாவது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது. பொருத்தமானவற்றை மட்டும், அதுவும் நன்கு ஆராய்ந்த பின்னர் தான் நடைமுறைப்படுத்தப்படும் என்பது. 

இதைக் கூறியது ஒன்றும் கெஹலிய ரம்புக்வெல அல்ல. மகிந்த அரசாங்கத்தில் இப்போதுள்ள மிகமூத்த தலைவர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா தான். இவர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டவர். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற குழுவிலும் இடம்பெற்றவர். ராஜபக்ஸ குடும்பத்துக்கு அடுத்த நிலையில் அரசின் முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற ஒரு சிலரில் அவரும் ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரின் கருத்தை எந்த வகையிலும் புறக்கணிக்க முடியாது. அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையிலான பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவோ, மீறல்களில் ஈடுபட்ட படையினரைத் தண்டிக்கவோ அவர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளவோ அரசாங்கம் தயாராக இல்லை. இதனை நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்துகள் உறுதி செய்கின்றன. இங்கே தான் அமெரிக்காக கொண்டுள்ள சந்தேகத்தின் நியாயம் புரிகிறது. 

அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை வைத்து உலகத்தை நம்பவைத்தது. 

ஆனால் அதே ஆணைக்குழுவை இப்போது முழுமையாக ஏற்க முடியாது என்கிறது. 

இந்த நம்பகமற்ற நிலை தான் சர்வதேச சமூகத்தின் ஆதரவை அரசாங்கம் இழப்பதற்கும்- இன்றைய நெருக்கடிக்கும் காரணமாகியுள்ளது. 

போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் எது தனக்குப் பாதுகாப்பானது என்று கருதியிருந்ததோ அதுவே இப்போது ஆபத்துக்குள் தள்ளி விட்டுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து அரசாங்கம் மீள்வதற்கு உள்ள ஒரே வழி சர்வதேச சமூகத்துடன் ஒன்றித்துப் போவது தான். அதைவிட வேறு வழிகளைத் தேட முனைந்தால், சர்வதேச சமூகத்துடனான பகையும், முரண்பாடுகளும் தான் வளருமே தவிர, இலங்கையை நெருக்கடிகளில் இருந்து ஒருபோதும் மீட்க உதவாது.


தொல்காப்பியன்  இன்போ தமிழ்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment