Wednesday, March 21, 2012

'தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவில்': உள்ளூர் மீனவர்கள் விசனம்


இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம், செம்மலை பகுதியில் உள்ளுர் மீனவர்களின் விருப்பத்திற்கு மாறாக, தென்பகுதியிலிருந்து மீனவர்கள் தொழில் செய்வதற்காக அதிகாரிகளினால் அழைத்து வரப்பட்டுள்ளதாக செம்மலை பகுதி மீனவர்கள் முறையிட்டிருக்கின்றார்கள்.
தற்காலிகமாக தொழில் செய்வதற்காக தென்பகுதி மீனவர்கள் அழைத்துவரப்பட்டுள்ள நடவடிக்கையால் தமது வாழ்வாதார பிரதேசம் பாதிப்புக்கு உள்ளாகலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து உள்ளூர் மீனவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக, 30 மீனவர்களே தென்பகுதியில் இருந்து அழைத்து வரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர்.இரண்டு தினங்களுக்கு முன்னர் மீனவர் சங்கப் பிரதிநிதிகள், மீன்பிடித்துறை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உயர் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில், தென்பகுதியில் இருந்து மீனவர்கள் 200 பேர் தொழில் செய்வதற்காக தமது பகுதிக்கு அழைத்துவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதாக செம்மலை மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுக்கமைய, அடுத்த நாளே 30 படகுகளுடன் மீனவர்கள் தமது பகுதியில் வந்து இறங்கியதாகவும், பின்னர் மீண்டும் புதன்கிழமை காலை மேலும் 40 படகுகளுடன் மீனவர்களும் குடும்பங்களுடன் செம்மலை கடற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து உள்ளுர்வாசிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விடயம் தொடர்பாகத் தமக்கு செம்மலைவாசிகள் முறையிட்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இது குறித்து மீன்பிடித்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
'செம்மலை என்பது ஒரு தமிழ்க் கிராமம். அங்கு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டால் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் உருவாகும் என்பதால் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளவர்களைத் திருப்பி அனுப்புவதற்கும் இந்த விடயத்தில் இராணுவத்தினர் தலையிடுவதைத் தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அமைச்சரிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பகுதியில் வசிப்பதற்கான ஆவணங்கள் இன்றி எவரும் அங்கு குடியேற்றப்படமாட்டார்கள் என்று அமைச்சர் தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
மூலம் - பி பி சி

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment