Thursday, March 22, 2012

அமெரிக்க தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காக்க கடுமையாக முயலும் சீனா


ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாம். ஆனால் உண்மையில் சீனாவின் நோக்கம் வேறு என்று கூறப்படுகிறது. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இப்படி மெனக்கெடுவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலியக்க வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளதாம் சீனா.

சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாக இதுவரை இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கை இதுவரை உறுதிபடத் தெரிவிக்கப்படவில்லை. கடைசியாக கிடைத்த தகவலின்படி இலங்கைக்கு 7 அல்லது 9 நாடுகளின் ஆதரவே இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை இப்படி பல்வேறு வழிகளிலும் தந்தியடித்தபடி இருந்தாலும கூட அமெரிக்கத் தரப்பு பெருத்த நம்பிக்கையுடன் உள்ளது. தீர்மானம் நிறைவேறத் தேவையான 24 உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், கூடுதலாகவே தங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று அமெரிக்க தரப்பு நம்பிக்கையுடன் உள்ளதாம்.
தற்போது இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா தானாக முன்வந்து இலங்கைக்கு உதவிகளைச் செய்து வருகிறதாம். இந்த இக்கட்டான நிலையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றி விட்டால், பின்னர் தான் சொல்கிறபடி இலங்கை செயல்படும் என்பது சீனாவின் எண்ணமாகும். அபப்டி நடந்து விட்டால், இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும். அதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போடுகிறதாம். இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை. இப்போது இலங்கை மூலமாக சீனா என்ன மாதிரியான குறளி வித்தையைக் காட்டப் போகிறது என்பது தெரியவில்லை. 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment