Monday, March 26, 2012

சிறிலங்கா மீதான ஐநாவின் கண்டிப்பான நிலைப்பாடு - பிரித்தானிய ஊடகம்

பேரவையின் உறுப்பு நாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் எவ்வாறான தீர்வைக் கொண்டுள்ளனர் என்பதையே தற்போது இடம்பெற்ற வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளிக்காட்டி நிற்கின்றன. இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட The Economist ஊடகத்தில் வெளிவந்த செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 அன்று சிறிலங்காவானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பெரும் தோல்வியைச் சந்தித்தது.
சிறிலங்காவின் நீண்ட கால, மிகக் கொடுமையான யுத்தமானது 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது பெருந் தொகையான பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்பளிக்க வேண்டும் என்பதைக் கோரி நிற்கும் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு பேரவையின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இத்தீர்மானத்துக்கு பேரவையின் 24 நாடுகள் ஆதரவாகவும், 15 நாடுகள் எதிர்ப்பாகவும் வாக்களித்துள்ள இந்நிலையில் இத்தீர்மானமானது சிறிலங்கா அரசாங்கம் தனது நாட்டில் தேசிய அளவில் யுத்த கால மீறல்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதுடன், நாட்டில் பரந்தளவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த வாக்கெடுப்பில் பேரவையின் எட்டு உறுப்பு நாடுகள் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளன.
சிறிலங்காவுக்கு ஆதரவாக சீனா, ரஸ்யா மற்றும் ஆசிய நாடுகள் என்பன வாக்களித்துள்ளன. பாக்கு நீரிணைக்கு குறுக்காக, சிறிலங்காவுக்கு மிக அண்மையாக அமைந்துள்ள சிறிலங்காவின் நட்பு நாடாக விளங்கிய இந்தியாவானது இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையானது சிறிலங்காவின் பார்வையில் மிகவும் வேதனையை உண்டுபண்ணும் விடயமாக உள்ளது. இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகிக்கத் திட்டமிட்டிருந்த இந்தியா பின்னர் ஆதரவாக வாக்களித்தது.

இவ்வாக்கெடுப்பின் பெறுபேறு தொடர்பாக சிறிலங்கா பிரதிநிதிகள் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
"இவ்வாக்கெடுப்பின் பெறுபேறானது எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வராது. நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டவாறு செயற்படுவோம்" என சிறிலங்கா அமைச்சரவையின் பிரதம சட்ட ஆலோசகரான மோகன்பீரிஸ், பேரவையை விட்டு வெளியேறும் முன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் இவ்வாக்கெடுப்பின் பெறுபேறு வெளியிடப்பட்டு ஒரு மணித்தியாலங்களின் பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் கிலாரி கிளின்ரனால் வெளியிடப்பட்ட அறிக்கையில், "அடுத்த கட்ட நகர்வு தெளிவாகத் தெரிகிறது. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்துவதுடன், யுத்த கால மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதையும் நாம் எதிர்பார்த்து நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இத்தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பில் அமெரிக்காவானது மிகத் தெளிவான திட்டவரைபை மேற்கொண்டதுடன், குறிப்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் எந்தவொரு முரண்பாடும் ஏற்படாத முறையிலேயே இதனைக் கையாண்டிருந்தது. ஆனால் சிறிலங்கா அதிபரால் தனது நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்த தவறிய சந்தர்ப்பத்திலேயே இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட முடிவு செய்யப்பட்டதால், இதில் மென்போக்கைக் கடைப்பிடித்து சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியவில்லை. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது கருத்தில் எடுக்கப்பட மாட்டாது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

'மனிதாபிமான மீட்கும் நடவடிக்கை' என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களின் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது கவனத்திற் கொள்ளப்படவில்லை என கடந்த ஆண்டில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் தொடர்பாக ஆய்வறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா வல்லுனர் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்த யுத்தத்தின் இறுதிப்பகுதியில் கிட்டத்தட்ட 40,000 வரையிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் என வல்லுனர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி மாதங்களில் வைத்தியசாலைகள், உணவு வழங்கல் நிலையங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து சிறிலங்கா இராணுவத்தால் ஏவப்பட்ட செறிவான எறிகணைத் தாக்குதல்களிலேயே இதில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதாக வல்லுனர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தில் பங்கு கொண்ட சிறிலங்கா அரசாங்கமும், தமிழ்ப் புலிகளும் யுத்த மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்களை மேற்கொண்டதாக வல்லுனர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் 8000 மக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என சிறிலங்கா அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் யுத்த கால மீறல்கள் தொடர்பான விசாரணையானது சிறிலங்கா இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்h அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மைய வாரங்களில் சிறிலங்கா அரசாங்கமானது அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து நாட்டின் முக்கிய நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் மேற்கொண்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் சில இடங்களில் காடைத்தனமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு தமது ஆதரவை வழங்கிய சிறிலங்காவைச் சேர்ந்த ஆர்வலர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை அரச ஊடகமானது புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தியது. ஜெனீவாவுக்கு பயணமாகவிருந்த இரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

சிறிலங்காவை விட்டு ஜெனீவாவுக்கு புறப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக குரல்கள் எழுப்பப்பட்டன. அவர்கள் விமானநிலையத்தை சென்றடையும் வழியில் "ஐ.நா செல்கின்ற தேசத்துரோகிகள் தொடர்பாக விழிப்புடன் இருக்கவும்" என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளைக் கடந்து சென்றனர்.

ஜெனீவாவில், குறிப்பாக மனித உரிமைகள் பேரவைக்குள் சிறிலங்காவைச் சேர்ந்த அரச சாரா அமைப்புக்களின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளால் ஒளிப்படம் பிடிக்கப்பட்டும், வார்த்தைகளால் சித்திரவதைப்படுத்தப்பட்டமை தொடர்பாக பேரவையின் உயர்பீடத்தில் முறைப்பாடு செய்த போதிலும் அவ்வாறான தலையீடுகள் நிறுத்தப்படவில்லை. இதில் ஈடுபட்ட ஒளிப்படப் பிடிப்பாளர்கள் மீது ஐ.நா மனித உரிமைகளிள் உயர் மட்ட அதிகாரி நவி பிள்ளை தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.



"பேரவையில் இடம்பெறும் விவாதத்தில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காவிலிருந்து ஜெனீவாவிற்கு வந்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது சிறிலங்கா அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் உட்பட சிறிலங்கா அரசாங்க ஆதரவாளர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு அச்சுறுத்தல்கள், தொந்தரவுகள் மற்றும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன" என நவி பிள்ளை, வாக்கெடுப்பு இடம்பெற்றதற்கு அடுத்த நாள் அறிவித்தார். இவ்வாறான அச்சுறுத்தல்கள் மற்றும் தலையீடுகளை சிறிலங்காவைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் ஊடகங்களும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2009ல் இடம்பெற்ற பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவுக்கு ஆதரவாகவே ஜெனீவா இராஜதந்திரிகள் அமைப்புக்கள் பணியாற்றின. இந்நிலையில் 2009ல் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து சிறிலங்காவானது தப்பித்துக் கொண்டது. அத்துடன் நாட்டில் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில் தற்போதைய உலக இயங்கு நிலை மாற்றம் பெற்றுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமானது நாட்டில் மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, யுத்த மீறல்களுக்கு பொறுப்பளிக்கப்படும் என வாக்குறுதி அளித்த போதிலும் அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த கால படுகொலைகள் தொடர்பாக சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட ஆவணக்காட்சிகளை அனைத்துலக சமூகம் பார்வையிட்டுள்ளது.

பேரவையின் உறுப்பு நாடுகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் எவ்வாறான தீர்வைக் கொண்டுள்ளனர் என்பதையே தற்போது இடம்பெற்ற வாக்களிப்பின் பெறுபேறுகள் வெளிக்காட்டி நிற்கின்றன. "கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது யுத்தகால மீறல்கள் தொடர்பாக சரியான முறையில் பொறுப்புக் கூறவில்லை என்பது தெளிவான செய்தியாகும். இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது எதனைச் செய்ய வேண்டும் என அனைத்துலக சமூகம் விரும்புகின்றது என்பது தற்போதைய வாக்கெடுப்பின் பெறுபேறு வெளிக்காட்டி நிற்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இயக்குனரான யூலி டீ றிவோரா தெரிவித்துள்ளார்.  

"கடந்த மூன்று ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இது மிக முக்கியமான செய்தியாகும்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'புதினப்பலகை'

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment